Jul 25, 2019

அரசுப்பள்ளிகளை மூடுவது...

மணிகண்டன் அவர்களுக்கு ., 

பள்ளிகளை மூடும் மூடும் அறிவிப்பிற்கு தங்களுடைய ஆதங்கம் புரிகிறது. நீங்கள் சொல்லும் ஆயிரம் காரணங்கள் செயல்படுத்த இருக்கலாம். ஆனால், இவை நடைமுறையில் தோற்க என்ன காரணம் என்பதை உணர வேண்டும்.

ஆசிரியர்களே மிக முக்கியக் காரணம். வேறு எந்த காரணமும் இல்லை. சம்பளம் என்பது வேறு விஷயம் ஆனால் இவர்களுக்கு வேலையின் மீது கூட எந்த  கடமையுணர்ச்சியும் இல்லை; பொறுப்பும் இல்லை; பதில் சொல்வதும்  இல்லை.  திறமை இல்லாத / தவறு செய்யும் ஆசிரியர்களைத் தண்டிக்கவும் முடியாது. இவர்களது கூட்டமைப்பு (Union) காக்கும். பலமான கட்டமைப்பு மூலமாக மிகப் பெரிய மாபியா (mafia)வாக தமிழ்நாட்டில் உருவெடுத்து உள்ளார்கள்-  ஒரு அரசாங்கத்தைக் கூட பயமுறுத்தும் அளவிற்கு.

இவர்கள் எந்த வகையான மாற்றத்திற்கும் தயாராக இல்லை. சிறு மாற்றத்தை கொண்டுவந்தால் கூட மறுபடியும் போராட்டத்தைவைத்து மிரட்டுகிறார்கள்.

இதற்குத் தீர்வாக  உள்ளூர் நிர்வாகத்தைக்( local governance)கொண்டு வரலாம். ஒரு நகராட்சி பள்ளியை நடத்தும் உரிமையை அந்தந்த ஊரில் உள்ளவர்களை தலைமையாகக் கொண்டு நிர்வாகிக்கும் ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டு தலைமை ஆசிரியர் , பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் , municipality தலைவர் , lions / rotary சங்க தலைவர் , போன்றோர் கொண்ட  குழு. இந்தக் குழு மட்டுமே ஆசிரியரை நியமிக்கும் மற்றும் வேலையை விட்டு அனுப்பும் உரிமை உள்ள குழுவாக இருக்க வேண்டும். சம்பளத்தையும் அந்தக் குழு தான் நியமிக்கும். Performance அடிப்படையில் சம்பள உயர்வு அல்லது வேலை நீக்கம் என்பதையும் அந்த குழு தான் முடிவு செய்யும். இப்படியொரு குழு வந்தால் எல்லாமே ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் சரியாகி விடும்.

செய்ய விடுவார்களா இந்த ஆசிரியர்கள்? நீங்களே சொல்லுங்க- நிர்வாக மாற்றத்திற்கு ஆசிரியர்கள் ஒத்துக்கொள்வாரகளா? உடனே போராட்ட அறிவிப்பு வரும்.

இங்கு பிரச்சனையே ஆசிரியர்கள் தான். இவர்களை வைத்து கொண்டு எந்த சிறு மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. இதற்கு தீர்வு பள்ளிகளை மூடுவதா என்றால் தவறு தான் ஆனால்  இதையும் மீறி மாற்றத்தை கொண்டு வர கூடிய  முடிவுகளை எடுக்க இங்கு எந்த தலைவரும் இல்லை.

இப்போது கூட அரசாங்கம் ஆசிரியர்களைத்தான் காக்கிறது; பள்ளிகளை அல்ல. பள்ளிகளை மூடி, வேலையை காக்கிறது.

BSNL திவால் நிலையை அடைந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த பிரச்சனை மிக பெரிதாக உருவெடுக்கும். இன்னும் சில வருடங்களில் மின் துறைக்கும், போக்குவரத்து துறைக்கும் இதே நிலை தான்.

தமிழக அரசாங்கம் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் இருக்கிறது. மிக வேகமாக திவால் நிலையை நோக்கிச் செல்கிறது. இப்போதைக்கு  பிரச்சனை தீராது இனி இந்த பிரச்னை வருங்காலங்களில் தீவிரமாகும்.

Regards.,
Prabhu
prabhu2052@gmail.com


நண்பர் பிரபு அவர்களின் புரிதலை ஏற்றுக் கொள்கிறேன். அவரவருக்கு தம்முடைய தொடர்புகளுக்கு ஏற்ப, செய்திகளைச் சேகரிக்கும் ஆர்வத்துக்கு ஏற்ப தகவல்களும் தரவுகளும் கிடைக்கின்றன. பெரும்பாலானவர்கள் செவி வழிச் செய்திகளையும், சில மேம்போக்கான தகவல் பரிமாற்றங்களையும் வைத்து ‘இது இப்படித்தான்’ என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். பிரபுவின் புரிதலைக் குறை சொல்லவில்லை. ஆனால் போதாமை இருக்கிறது.

இயக்குநர் ஷங்கரின் படங்களைப் போல ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்றிவிடலாம் என்று கருதுகிறார் போலிருக்கிறது. 

ஓர் உதாரணத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  ஓர் அரசு உதவி பெறும் பள்ளியில் சத்துணவு ஆயாவுக்கான பணியிடம் காலியாகியிருந்தது. பொதுவாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியிடங்களுக்கு தகுதியுள்ள, தமக்கு பொருத்தமான ஆட்களை பள்ளி மேலாண்மையே நியமித்துக் கொள்ளலாம். அதுதான் காலங்காலமாக பின்பற்றுகிற வழமை. ஏனென்றால் மேலாண்மையின் சட்டவிதிகளுக்கு, அவர்களுக்கு அடங்கிய ஆட்களாக இருந்தால்தான் பள்ளியை அவர்களால் திறம்பட நியமிக்க முடியும். ஆனால் இப்பொழுது மேலாண்மை கல்வி நிறுவனங்களின் பணி நியமனத்திலும் அநியாயக் கொள்ளை நடக்கிறது. மேற்சொன்ன பள்ளியின் சத்துணவு ஆயா நியமனத்திற்கு  உள்ளூர் கட்சிக்காரர் ஒருவர் நான்கு லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டார். அநேகமாக அவர் ஊராட்சி செயலாளராக இருக்கக் கூடும். ஆட்சியில் இருக்கும் கட்சி தமது கட்சிக்காரர் ஒருவர் சம்பாதிக்க உருவாக்கிக் கொடுக்கும் வழிகளில் இதுவொன்று. நாளைக்கு கட்சிக்கான செலவு என்று வந்தால் அந்தக் கட்சிக்காரர் கூசாமல் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

பணம் வாங்கிக் கொண்ட கட்சிக்காரர் பள்ளித் தலைமையாசிரியரிடம் தாம் சொல்லும் பெண்மணிக்குத்தான் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என நெருக்க, பள்ளித் தலைமையாசிரியரோ ‘மேனேஜ்மெண்ட்டை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது’ என மறுக்கிறார். விடுவார்களா? ஊராட்சிச் செயலாளர் அமைச்சரிடம் போட்டுக் கொடுத்துவிட்டார். அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் அமைச்சரிடமிருந்து அலைபேசி அழைப்பு தலைமையாசிரியருக்கு வருகிறது.

தலைமை ஆசிரியர் சொன்னதில் நினைவிலிருந்து அப்படியே எழுதுகிறேன்.

‘அய்யா உங்க கூட அமைச்சர் பேசணும்ன்னு சொல்லுறாரு’

‘குடுங்க’

அமைச்சர் கைகளுக்கு அலைபேசி மாறுகிறது.

‘வணக்கங்கய்யா’ - தலைமையாசிரியர் பவ்யமாகச் சொல்கிறார்.

‘அய்யாவாவது நொய்யாவாவது...நடக்கிறது யார் கவர்ண்மெண்ட் தெரியும்ல? ஒரே நாள்ல எல்லாத்தையும் மாத்திடுவேன்...சொல்லுற பேச்சைக் கேட்டுட்டு நடக்கிறதுன்னா நடந்துக்க.... இல்லைன்னா நடக்கிறதே வேற’- முப்பதாண்டு காலம் ஒரு பள்ளியில் ஆசிரியராக, தலைமையாசிரியராக இருந்தவரிடம் உள்ளூர் கட்சிக்காரர்கள் முன்னிலையில் அமைச்சர் பேசினால் அந்த ஆசிரியரின் மனம் எவ்வளவு குமுறும்?

ஆனால் அமைச்சரின் சொல்தான் அம்பலம் ஏறியது. நான்கு லட்ச ரூபாய் கப்பம் கட்டிவிட்டு வந்த ஆயா அந்த நான்கு லட்சத்தையும் சம்பாதிக்க முடிவு செய்தால் குழந்தைகளின் தட்டுகளில்தானே கையை வைப்பார்? சரியாக இருந்த நியமன முறையில் ஒரு குளறுபடியைச் செய்வதற்கான இடத்தைக் கண்டறிந்து கை வைக்கிறார்கள்.

இதை எதற்காகச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது என்றால், நண்பர் பிரபு சொல்வது போல  உள்ளூர் கமிட்டி நியமித்தால், அதில்தான் ஆயிரத்தெட்டு குளறுபடிகள் நடக்கும். உள்ளூர் கட்சிக்காரர்கள் தடியெடுத்துத் தண்டல்காரர்கள் ஆவார்கள். இன்றைக்கும் கூட பெற்றோர் ஆசிரியர் சங்கங்களில் கரைவேட்டிகளின் தலையீடுதான் அதிகம். வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் சுருட்டுவதற்கும் தம்முடைய அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்குமான இடங்களாகப் பயன்படுத்துவார்கள். 

கூட்டுறவு சங்கங்களை உதாரணங்களாக எடுத்துக் கொள்ளலாம். உள்ளூர் குழுவினர்தான் நிர்வாகம் செய்கிறார்கள். அதில் நடக்கும் ஊழல் பற்றியெல்லாம் தெரியுமல்லவா? இல்லையெனில் உள்ளூரில் விசாரித்துப் பார்க்கவும்.

அரசிலும், அரசின் செயல்பாடுகளிலும் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுவிட்டு புதியதாக ஒன்றைக் கொண்டு வந்தால் எல்லாமே சரியாகிவிடும் என்பது மிகப்பெரிய மூட நம்பிக்கை. ஐம்பது அல்லது அறுபதாண்டுகளாக ஒவ்வொன்றையும் சிறுகச் சிறுக மாற்றித்தான் இன்றைய வடிவத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதில் புதியதாக உருவாகியிருக்கும் திருட்டுத்தனங்களையும், தில்லாலங்கடி வேலைகளையும்தான் சரி செய்ய வேண்டுமே தவிர அனைத்தையும் அடியோடு தோண்டி வீசக் கூடாது. பெரிய விருட்சமொன்றை வேரடி மண்ணோடு பிடுங்கி எறிந்துவிட்டு புதிய நாற்று ஒன்றை நட்டுகிறேன் என்பது போலத்தான் அது. 

பிரபு அவர்கள் இன்னொன்றைக் குறிப்பிட்டிருக்கிறார்- ஆசிரியர் சங்கங்கள் அரசாங்கத்தை மிரட்டுகின்றன என்று சொல்வதும் கூட myth தான். சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம். இன்றைக்கு சங்கங்களும், சங்க நிர்வாகிகளும் கல்வியமைச்சரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் தனது சுண்டுவிரல் அசைவில் ஆசிரியர் சங்கங்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம். தெரிந்த, அக்கம்பக்கத்து ஆசிரியர்கள் யாரேனும் சங்கச் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தால் அவரிடம் பேசுங்கள். அவர்களின் கதறலைக் கேட்டுவிட்டு இந்த மின்னஞ்சலுக்கு பதில் எழுதுங்கள்.

அரசாங்கம் என்பது மிகப்பெரிய டைனோசர். அதன் முன்பாக ஆசிரியர்கள், சங்கங்கள் என்பவையெல்லாம் சுண்டெலிகள். அரசாங்கம் மனது வைத்தால் எல்லாவற்றையும் சில மாதங்களில் ஒழுங்குக்குக் கொண்டு வந்துவிட முடியும். ஆனால் அதை அரசாங்கம் செய்யவே செய்யாது. ஏன் செய்யாது என்பதற்கான பதில்தான் என்னுடைய முந்தைய பதிவு.

நன்றி.

5 எதிர் சப்தங்கள்:

Maanava Nanban said...

துரியோதனன்கள் கண்களுக்கு எல்லோருமே அயோக்கியர்களாக மட்டுமே தெரிவர்.யுதிஸ்டிரன்களின் கண்களுக்கு மட்டுமே நல்லவர்களும் தெரிவர். நண்பர் பிரபு அவர்கள் தனது பார்வையை மாற்றிக் கொள்வது நல்லது. நானும் அரசுப் பள்ளி ஆசிரியர் தான். அவர் நினைப்பதுபோல இல்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அத்தனை பேரும். எல்லா துறைகளிலும் சில புல்லுருவிகள் இருப்பது போல இங்கும் உண்டு. எனது பள்ளியிலும் சிலர் அப்படி இருக்கிறார்கள். ஆனால் பலர் உண்மையிலேயே உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள் என்பதுதான் நிஜம். வெளியிலிருந்து பொத்தாம் பொதுவாகப் பேசிவிடலாம். பாவம்.. அவர் அப்படி எண்ணும் அளவிற்கு பொதுபுத்தியே ஹிப்னாட்டிசம் செய்யப்பட்டாற் போல ஆசிரியர்களுக்கு எதிரான மனநிலைக்கு கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் ஊடகங்களின் பங்கு அதிகம். தவிரவும் அரசுப் பள்ளியில் படித்து ஆசிரியர்களுக்குக் கட்டுப்பட்டு நடந்து முன்னேறி ஒரு நிலைக்கு வந்திருப்பார்கள் அல்லவா ஒவ்வொரு காலகட்டத்திலும்.. அவர்களைக் கேளுங்கள் ... அவர்கள் சொல்வார்கள் தமது ஆசிரியர்களின் பெருமைகள் பற்றி... ஒரு வேளை நண்பர் பிரபுவுக்கு நான் சொன்ன புல்லுருவிகள் போல் ஆசிரியர்கள் வாய்த்திருந்தால் அது அவரது தனிப்பட்ட
துர்அதிர்ஷ்டம்தான். ஒரு வேளை பிரபு ஒரு பெற்றோராக இருந்து அவர் தனது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைத்துக் கொண்டு இருப்பவராய் இருந்தால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பற்றி அவர் குறைகள் கூறத் தகுதியற்றவர் .அவர் தனது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைத்திருப்பவராய் இருந்தால் நிச்சயம் அந்தப் பள்ளியின் பத்து ஆசிரியர்களுள் ஆறு அல்லது எட்டு ஆசிரியர்களின் கடின உழைப்பு இவரது கவனத்திற்கு வந்திருக்கும் .எனவே மேற்கண்ட கருத்தை எழுதியிருக்க மாட்டார். ஆனால் மணிகண்டன் சார்.. அவருக்கான உங்கள் பதில் நிதர்சனம்.. சரியான நெற்றியடி.. ஆசிரியர்கள் மீதான பொது ஜன புத்திக்கு சரியான சவுக்கடி ...
நிற்க.. நானெல்லாம் இதுவரை எந்த ஆசிரியர் சங்கத்திலும் இல்லை. எந்த ஆசிரியர் சங்கத்திற்கும் இப்பொழுதெல்லாம் உயிரே இல்லை. எல்லாம் செத்துப் போய் நாளாயிற்று. ஒரு வேளை அப்படி இருந்தால் அவை பொறையை சாப்பிட்டு வாலாட்டிக் கொண்டிருக்கும்.
மற்றபடி உமது இந்தப் பதிவை எனது பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறேன். எனது ஆசிரிய நண்பர்கள் பார்வைக்கு.

KRISHNAKUMAR said...

எல்லாம் சரி தான்.... ஆனால் ... அரசு பள்ளி ஆசிரியர்கள் தம் குழைந்தகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் எண்ணமே வர மாட்டேங்குதே.... அதே அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் தங்கள் குழைந்தகளை சேர்த்து , உயர் கல்விக்கு அரசு கல்லூரி வேண்டும் இருக்கிறார்கள்....????

Anonymous said...

Your purithal also has pothamai.. Will you agree. Will you approve this comment to be posted?

Anonymous said...

As usual pseudo justification

ஜீவி said...

அரசு பள்ளிகளில் இன்னொரு விஷயம். தனியார் பள்ளியில் வேலைக்கு விருப்பம் போல எடுக்கிறார்கள். பணி எதிர்பார்த்த அளவுக்கு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்க முடியும். அரசு பள்ளிகளில் சிலர் ஒதுக்கீட்டையே கேடயமாக வைத்து கொள்வது சகஜம். ஒன்றும் செய்ய முடியாது.ஏதோ பிரச்சனை இல்லாமல் ஓடினால் போதும் என்ற மனநிலைக்கு நிர்வாகம் பல இடங்களில் வந்து விடுகிறது