Jul 26, 2019

Unconditional Love

‘கொன்னுட்டேன்’ - அவளுக்கு வழங்கப்பட்ட காபியில் ஒரு மிடறு உறிஞ்சியபடி சொன்னாள். எனக்கு முன்பாக இருந்த தேநீரை இன்னமும் உறிஞ்சத் தொடங்காமல் வைத்திருந்தேன். அந்தச் சொல்லை, மிக இயல்பாக- கண்ணாடிக் குடுவை ஒன்றைக் கை தவறி சிதறடிக்கும் போது இருக்கும் பதற்றம் கூட அவள் வார்த்தைகளில் இல்லை. 

வடபழனி சிக்னலில் இருக்கும் இந்த தேநீர் கடையில் அரை மணி நேரமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு வருடத்திற்கு முன்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துணிப்பையை எடுத்துக் கொண்டு வேகமாக வந்தவளைக் கடைசியாகப் பார்த்தது. அப்பொழுதும் கூட அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை. சிரித்து, சில கணங்கள் நல விசாரிப்புக்குப் பிறகு அதே புன்னகையுடன் விலகிக் கொண்டோம். அதன் பிறகு இன்றுதான் - அவளாகவே அழைத்திருந்தாள். குழந்தையின் படிப்பு, கணவனின் வேலை பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். அவளும் வேலைக்குச் செல்கிறாளாம். அது எனக்கு புதிய செய்தி.

‘என்கிட்ட  என்னவோ சொல்லணும்ன்னு சொன்ன?’ என்று ஆரம்பித்தேன். 

‘மனசு நிறைய இருக்கு...ஏதேதோ சொல்லணும்ன்னு நினைச்சேன்...ஆனா ஒண்ணுமில்ல...’ என்று சொல்லிவிட்டுத்தான் மற்றவற்றைப் பேசிக் கொண்டிருந்தாள். பெண்கள் பேச விரும்பவில்லையெனில் கிளறாமல் விட்டுவிடுவதுதான் சரி. பெண்களாகவே எல்லைக் கோடுகளை அழித்து மாற்றி மாற்றி வரைய அனுமதிக்க வேண்டும் என்று ஏதோவொரு புத்தகத்தில் வாசித்திருக்கிறேன். அதுவுமில்லாமல் அவளுக்கும் எனக்கும் பெரிய பந்தம் எதுவுமில்லை. சில ஆண்டுகளாக அறிமுகம் உண்டு. ஏதோவொரு ஈர்ப்பு என்பதைத் தாண்டி எதுவுமில்லாத தொடர்பு. சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறாள். அவை முக்கியமான விஷயங்கள் என்று நம்பியிருக்கிறேன். 

மனம் உணர்ச்சிகளால் நீர் நிறைந்த பலூனைப் போல ததும்பிக் கொண்டிருக்கையில் ஏதோ ஒரு கை நீண்டு அதில் ஊசியால் குத்திவிட வேண்டும் என நினைப்பதுதானே மனித இயல்பு? எல்லாவற்றையும் எல்லாக் காலத்திலும் சுமந்து கொண்டே திரிய முடிவதில்லை. அப்படித்தான் அவள் இன்று என்னை அழைத்திருக்க வேண்டும்.

திடீரென ‘ஏமாத்திட்டான்...’ என்றாள். திருமணமான பெண்ணொருத்தி அப்படிச் சொல்லும் போது கணவனை நினைப்பதுதானே இயல்பு.

அந்தத் தருணத்தில் அவளிடம் என்ன சொல்ல வேண்டுமென உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை. அவளது கண்களை மட்டும் பார்த்தபடியே தேநீரை எடுத்து உறிஞ்ச எத்தனித்தேன். கண்கள் கசிந்திருந்தன. அழுகையை மறைத்துக் கொள்ள முயற்சித்தாள். போலியாகப் புன்னகைத்தாள். கைகள் அவசரமாக டிஸ்யூ பேப்பரை எடுத்தன. கீழ் இமைகளில் ஓரமாக ஒத்தியெடுத்தாள்.

‘பொண்ணு எப்படி இருக்கா?’

‘நல்லா இருக்கா..பாட்டி வீட்ல’

‘ஹஸ்பெண்டா ஏமாத்தினது?’

‘இல்ல...அவர் ஊர்ல இருக்காரு....’

‘........’

‘அண்டர்ஸ்டேண்டிங் இல்ல...நிறைய சந்தேகம்..வெளிய கூடப் போகக் கூடாதுன்னு’

‘அப்போ...ஏமாத்திட்டான்னு சொன்னது?’

‘எங்க ரெண்டு பேருக்கும் அண்டர்ஸ்டேண்டிங் இல்லன்னு அவனுக்குத் தெரியும்’

‘வேற ஒருத்தனா?’ என்று வெளிப்படையாகக் கேட்கத் தேவையிருக்கவில்லை.

‘பொண்ணு உடையுற போதெல்லாம் அவளுக்கு சாஞ்சுக்க ஒரு தோள் தேவைப்படுது...பெரும்பாலும் தோள் கொடுக்கிறவனுக்கு அவ உடம்புதான் தேவைப்படுது’- இப்பொழுது தேநீரை உறிஞ்சியிருந்தால் புரை ஏறியிருக்கும். அதே மாதிரியொரு தோளை எதிர்பார்த்துத்தான் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறாள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

வழக்கமான ‘ஆல் பர்ப்பஸ் அங்கிள்’ ஒருத்தனின் கதையாகத்தான் அது இருந்தது. அவனுக்கு இவள் ஒருத்தி மட்டுமில்லை- பல தோழிகள். அதை இவள் புரிந்து கொள்ளும் போது நிலைமை கை மீறியிருக்கிறது. 

‘எனக்கு அவனின் காதல் தேவையாக இருந்தது...Unconditional Love...எனக்கு மட்டுமேயான காதல்’- சலிப்பேற்றக் கூடிய இந்த வசனத்தை அவள் சொல்ல, இனி இந்த உரையாடலை முடித்துக் கொள்ள வேண்டும் என நான் நினைத்துக் கொண்டிருந்த போதுதான் ‘கொன்னுட்டேன்’ என்றாள்.

ஒரு வினாடி உலகமே ஸ்தம்பித்துப் போனதாக உணர்ந்தேன். காதல், காமம், கொலை என எல்லாமே எவ்வளவு எளிதாகிவிட்டது? அதை தைரியமாக என்னை வேறு அழைத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். காவல்துறையினர் விசாரிக்கும் போது ‘இவன்கிட்ட எல்லாத்தையும் எப்பவோ சொல்லிட்டேன்’ என்று கை நீட்டினால் என் கையை முறித்து தோளில் தொட்டில் கட்டிவிடுவார்கள். 

அதற்குமேல் அவளிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. அவள் இத்தோடு நிறுத்திக் கொண்டால் போதும் என்றுதான் கடவுளையும் வேண்டிக் கொண்டிருந்தேன்.  அவளாகப் பேசி முடிக்கும் வரைக்கும் குறுக்குக் கேள்வி கூட கேட்காமல், அதே சமயத்தில்  எந்தவிதத்திலும் வார்த்தைகளைச் சிந்திவிடாமல் கவனமாக உரையாடலை முடித்துவிட்டு உடனே கிளம்பிவிட வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது.

அவளது அவனது விவகாரங்கள் தெரிந்த பிறகு, ஒன்றிரண்டு சண்டைகளுக்குப் பிறகு, காதலை முறித்துக் கொண்ட பிறகு, தனது செல்போன் எண்ணை மாற்றிக் கொண்ட பிறகு, இப்படி பல பிறகுகளுக்குப் பிறகு, ஃபேஸ்புக், ட்விட்டர் என சகலத்திலும் அவனை ப்ளாக் செய்து வைத்திருந்தாள். போலியான கணக்குகளைத் தொடங்கி அவனைக் கண்காணித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கணக்குப்படி நூற்றி நாற்பத்து ஏழு நாட்கள். மனம் கொந்தளித்துக் கொண்டேயிருந்தது. அவனது லீலைகள் தொடர்ந்தபடியேதான் இருந்தன. நூற்றி நாற்பத்தியேழாவது நாள் ஆடி கிருத்திகை நட்சத்திரத்துக்கு முந்தைய நாள் அவளைத் தேடி அலுவலகத்துக்கு வந்துவிட்டான். அவன் மீதான வஞ்சகம் தலை முழுவதும் நிறைந்திருந்தது. இடைப்பட்ட காலத்தில் அவன் தன்னை நோக்கி வருவான் என்றும், வரும் போது கொன்றுவிட வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தாள். அதற்கான திட்டமிடலையும் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அத்தனை நாட்களுக்குப் பிறகாக அவனைப் பார்த்த போது எந்த பதற்றமுமில்லை. சாலையின் முனையில் ஒரு மரத்தடியில் நின்று கொண்டார்கள்.

‘மகாதேவ மலைக்கு கிளம்பிட்டு இருக்கேன்...’

‘அது எங்க இருக்கு?’

‘குடியாத்தம் பக்கம்’

‘நானும் வரலாமா?’

‘ஒண்ணும் பிரச்சினையில்லையே’

‘ம்ம்...உனக்காக’

‘நாலு மாசம் என்னைத் தெரியலையா?’

‘தெரிஞ்சுது’

‘மத்தவங்க சலிச்சு போய்ட்டாங்களா?’

அவன் பதிலேதும் சொல்லவில்லை. 

‘ஆறேகால் மணிக்குக் கிளம்புவோம். உன் ஃபோன் வேணும்’ என்றாள்.

‘ஃபோன் எதுக்கு?’ என்று கேட்க விரும்பினான். வெகு நாட்களுக்குப் பிறகான சந்திப்பு அது. அவள் துரத்திவிடுவாள் என்றுதான் நினைத்து வந்திருக்கக் கூடும். அவள் தன்னோடு வர அனுமதித்ததை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அத்தனை ஆப்களும் பயோமெட்ரிக் லாக் செய்யப்பட்டிருக்கிறது. நம்பிக் கொடுத்தான். 

வாங்கியவள் ‘கோயம்பேட்டுல பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள். அவனுக்கு எதுவும் புரியவில்லை. ‘ஆறேகால்...வேலூர் வண்டி நிக்குற இடம்’. 

சாலை திரும்பியவுடன் அவன் மறைந்து போனான். மெட்ரோ ரயிலில் ஏறியவள் கிண்டியில் அவனது செல்போனை அணைத்தாள். நங்கநல்லூர் சாலையில் இறங்கி ஏதோவொரு சாக்கடையில் வீசிவிட்டுத் திரும்பவும் மெட்ரோவில் கோயம்பேடு வந்து நின்றாள்.

ஆறேகாலுக்கு அவனும் அங்கிருந்தான். அவன் கையில் பை எதுவுமில்லை.

‘வீட்ல சொல்லல..துணி கூட எடுத்துக்கல...என் ஃபோன் எங்க?’

‘ஆபிஸ்ல வெச்சுட்டு வந்துட்டேன்....என்கிட்டவும் ஃபோன் இல்ல..ரெண்டு நாளைக்கு அதைப் பத்தி யோசிக்காத...எனக்கே எனக்காக ரெண்டு நாளைக் கொடு...அது போதும்’ அவனுக்கு கை முறிந்தது போலிருந்தது. 

வேலூரை அடைந்த போது மகாதேவமலைக்கு செல்லும் பேருந்து நின்று கொண்டிருந்தது.

‘ஊர் பேரே புதுசா இருக்கு...என்ன மாதிரியான ஊரு அது? தங்க இடம் இருக்கா?’

‘கோவில்தான்...அங்கேயே படுத்துக்கலாம்’

‘என்னை பக்திமான் ஆக்கப் போறியா?’ அவள் சிரித்து வைத்தாள்.

நேற்றிரவு மழை பெய்திருக்கிறது. இரவு பத்தே முக்கால் மணிக்கு மலையை அடைந்தார்கள். விடிந்தால் ஆடி கிருத்திகைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அங்கங்கே ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

இருவரும் ஆள் அரவமற்ற இடமொன்றைத் தேடி அமர்ந்தார்கள். என்னென்னவோ பேச வேண்டும் என அவளுக்குத் தோன்றியது. எதுவும் பேசவில்லை. பேசுவதில் அர்த்தமில்லை என்கிற முடிவுக்கு வந்திருந்தாள். 

‘இப்படி உம்முன்னு இருக்கத்தான் கூட்டிட்டு வந்தியா?’

‘உன் பர்ஸைக் கொடு...பையில் வெச்சுக்கலாம்’- பதில் பேசாமல் கொடுத்தான். அவனிடம் வேறு எதுவும் அடையாளமிருப்பதாகத் தெரியவில்லை. கருப்பு டீஷர்ட், ஜீன்ஸ் அணிந்திருந்தான். 

ஒரு பெண் தான் செய்த கொலையை விவரிப்பதை கேட்கும் சூழ்நிலை எந்த ஆணுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என உங்களுக்காக பிரார்த்திக்கிறேன். அவள் சொல்லச் சொல்ல, அவளது திட்டமிடலும் நேர்த்தியும் என்னை சில்லிடச் செய்திருந்தன. எனது கண்கள் நிலைகுத்தியிருந்தன.

‘தள்ளிவிட்டுட்டேன்’ என்றாள். 

எந்தச் சத்தமுமில்லாமல் விழுந்தான். அதே இடத்தில் வெகுநேரம் அமர்ந்திருந்தாள். நள்ளிரவு நெருங்க நெருங்க காவடியோடு ஆட்கள்  மலை மீது ஏறிக் கொண்டிருந்தார்கள். இருள் செறிந்து கிடந்தது. கீழே குனிந்து பார்த்தாள்.  சலனமற்று அமர்ந்திருந்தாள். நள்ளிரவு கடந்து மழை பெய்தது. யாரோ ஒரு பெண்  ‘மழையில நனையாத..கோயிலுக்குள்ள போய்டு’ என்றாள். அவளுக்கு அவ்விடத்தை விட்டு நகரத் தோன்றவில்லை. கோவிலை விட்டு வெளியே வந்தாள். அதிகாலையில் முதல் பேருந்து கோவிலை விட்டுக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தது. முதல் பூஜை முடிந்திருக்க வேண்டும். பேருந்தில் கூட்டம் நிறைந்து. 

‘இதை என்கிட்ட எதுக்கு சொன்ன?’ என்றேன்.

அவள் எதுவும் சொல்லவில்லை. 

வீட்டுக்குக் கிளம்பினோம். மனம் படபடத்துக் கொண்டேயிருந்தது. அறைக்கு வந்து சேர்ந்த போது ‘தேங்க்ஸ்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். பதில் எழுதாமல் அவளது எண்ணை ப்ளாக் செய்துவிட்டேன். 

பல நாட்களாக எனக்குத் தூக்கமில்லை. மகாதேவமலையில் ஏதேனும் பிணம் கிடைத்ததா என்றோ சென்னையில் காணாமல் போன ஆள் ஒருவனைப் பற்றி ஏதேனும் விசாரிக்கிறார்களா என்றோ செய்திகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

(மின்னல் கதைகள்)

11 எதிர் சப்தங்கள்:

sethu said...

அண்ணா இது உண்மையா? இல்லை உங்களுக்கு வந்த செய்தியா?

Mohan Suresh said...

எனக்கும் அதே சந்தேகம் தான். இது உண்மையா? இல்லை உங்களுக்கு வந்த செய்தியா?

Vaa.Manikandan said...

எல்லாரும் இப்படியே கேட்டு குடியாத்தம் போலீஸ்கிட்டவும் போட்டுக் கொடுங்க :)

இன்னைக்கு Facebook-ல் Unconditional Loveன்னு ஆளாளுக்கு எழுதிட்டு இருந்தாங்க...ஆடி கிருத்திகை வேறையா! எல்லாத்தையும் இணைச்சு எழுதியாச்சு..யாரும் சொல்லாத புது இடமா இருக்கட்டுமேன்னு மகாதேவமலை..அவ்வளவுதான் சாமீ..டிசம்பருக்குள் 25 கதை எழுதினால் அடுத்த மின்னல்கதைகள் வரும்.

Saro said...

அருமை. எப்போதாவது இப்படி கதை எழுதுனா எல்லோரும் இப்படித்தான் கேள்வி கேப்பாங்க :)
"அண்ணா இது உண்மையா?"
.....
சீக்கிரம் அடுத்த கதைத்தொகுப்பு வெளிவிடவும். உங்களுக்கு சிறுகதையை விட நாவல் நன்றாக வருகிறது என நான் நினைக்கிறேன். அந்த மூன்றாம் நதி நன்றாக இருந்தது.
இப்படிக்கு - உங்களின் ஒருசில வாசகர்களில் ஒருவன்

Dev said...

கதைதானே?!

Dev said...

பகவானே...

ரேவா said...

கதையை கதைன்னு சொல்ல முடியாத அளவுக்கான சுவாரஸ்யத்தை கடைசி வரை பார்க்கமுடிஞ்சது..

நல்லாயிருக்கு..

Rajesh said...

கதை கதையா மட்டும் இருக்கணும்னு கடவுளை வேண்டிகிறேங்க.🙄🙄

Selvaraj said...

உண்மை கதை போலவே இருக்கு.

சேக்காளி said...

//செய்திகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.//
வரும். வர்றணும்.
அதே பாத்ரூம்
அதே வழுக்கல்
அதே மாவுக் கட்டு

Anonymous said...

நல்லா பீதிய கிளப்பி விடுறிங்கையா....

இதைப் படித்து எத்தனை தோழிகள் கழுத்தறுக்க பிளான் பண்ணிருக்காங்களோ...