Jul 24, 2019

தண்டுவன்

அய்யனுக்கு கோவணம்தான் உடுப்பு. அய்யனை நீங்களும் பார்த்திருக்க முடியாது. நானும் பார்த்திருக்க முடியாது. நாற்பது வருடங்களுக்கு முன்பாகவே மண்டையை போட்டுவிட்டார். தொட்டகுறை விட்டகுறையாக தவிட்டுக்கார ஆயா சொன்ன கதையை உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதென்ன தொட்டகுறை என்று நீங்கள் கேட்கக் கூடும்.  அந்த ஆயா வயதுக்கு எல்லாவற்றையுமா என்னிடம் சொல்ல முடியும்? தனிக்கட்டையாக குடிசையில் சாய்ந்து கிடந்த அந்தக் கிழவிக்கு பேச்சுத் துணைக்கு கூட யாருமில்லை. பேச வாய்த்தவனிடம் இலைமறை காயாகச்  சொன்னதை வைத்து, புரிந்ததைக் கொண்டு இட்டுக்கட்டி சொல்வதில்தானே கதை சொல்வதன் சுவாரசியம் இருக்கிறது? அப்படியான கதைதான் அய்யனின் கதையும்.

அய்யனுக்கு திருமணம் ஆகவில்லை- செய்து கொள்ளவில்லை. அப்பனும் அம்மாவும் சிறுவயதிலேயே போய்விட, தண்டுவனாகத் திரியத் தொடங்கிய ருசி கண்ட பூனை அது. அந்தக் காலத்தில் ஊருக்கு ஒருத்தராவது இப்படித் தண்டுவனாகத் திரிந்தார்கள். வட்டல் கண்ட பக்கம் வாய் வைத்தபடி ஊருக்குள் திரிந்தால் அப்படியொரு பெயர் வந்துவிடும். வட்டலில் மட்டுமா வாய் வைத்தார்கள்? மாட்டுச் சாலை, வாய்க்கால் கரையோரம், ஏரித் தடம், மாடு மேய்க்க போகையில், கிணற்று மேட்டில் என கண்டபக்கமும் கையைப் பிடித்து இழுத்த வரலாறுகள் அய்யனைப் போன்ற தண்டுவனுங்களுக்கு உண்டு. வாட்ஸாப்பும் ஃபேஸ்புக்குமில்லாத காலத்தில் காதும் காதும் வைத்த மாதிரி மண்ணைத் தட்டிவிட்டு, கொசுவத்தைச் சரி செய்தவர்களும் உண்டு. ‘இந்த வேலையெல்லாம் தொண்டு முண்டைங்ககிட்ட வெச்சுக்க...என்ரகிட்ட வந்து உன்ர கோவணத்தை அவுத்தீன்னா இழுத்து வெச்சு அறுத்துப் போடுவம் பார்த்துக்கோ....ஆருன்னு நினைச்ச?’ என்று சண்டைக்கு நின்ற பெண்களும் உண்டு. 

அய்யனிடம் ஒன்றரை ஏக்கர் நிலமிருந்தது. தோட்டத்து வேலையில் துளி சுணக்கம் இருக்காது. ஒன்றரை ஏக்கர் பண்ணையமும் அவருடையதுதான். ஒத்தாசைக்கு கூட யாரையும் கால் வைக்க விட மாட்டார். மாடு பூட்டி உழவு ஓட்டுவதிலிருந்து கதிர் அறுத்து போர் போடுவது வரையும் ஒத்தை ஆள் பண்ணையம் என்பதால் உடம்பு முறுக்கேறிக் கிடந்தது.  காலையில் குடித்த ஒரு சட்டி பழைய சோறுதான் சாயந்திரம் வரைக்கும். பொழுது சாயும் நேரத்தில் கோவணத்தோடு அமர்ந்து ஆட்டுக்கல்லில் மிளகு ஆட்ட ஆரம்பித்துவிடுவார். தினமும் கறிதான். காடையும், கவுதாரியும், தோட்டத்தில் மேயும் நாட்டுக் கோழியும், முயலும், ஆடும் என்று அன்றைய தினம் நாக்கு எது கேட்கிறதோ அந்தக் கவிச்சை - நாலு சொம்பு கள்ளையும் குடித்துவிட்டு வெறி ஏறி கட்டிலில் விழுந்தால் இடியே இறங்கினாலும் தெரியாமல் தூங்குவார்.

அக்கம்பக்கத்து ஊர்களிலும் இப்படி தினவெடுத்த ஆம்பளை ஒருத்தனும் இல்லை. ஆறேகால் அடி உயரமும், திமில் காளையைப் போன்ற தோள்களும், கருகருவென நெஞ்சு முழுவதும் பரவிக் கிடந்த சுருள் முடியும் ‘கருமாந்திரம் புடிச்சவன் மேல ஒரு துண்டை போட்டாத்தான் என்னவாம்?’ என்று உள்ளுக்குள் எண்ண வைத்துவிடுகிற முரட்டுக்காளையாகத் திரிந்தார் அய்யன்.  ஆனால் அதையெல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளாதது போல மாரியம்மன் கோவில் வேப்பமரத்தடி நிழலில் வலது உள்ளங்கை மீது இடது உள்ளங்கையை வைத்து தலைக்கு அணையாகக் கொடுத்து கால் மீது காலைப் போட்டு அப்படியும் இப்படியுமாக அசைத்துக் கொண்டு படுத்துக் கிடக்கும் அய்யன். அப்பொழுதும் கோவணம்தான்.

‘அய்யனுக்கு ஊர் பொம்பளைங்க ஒவ்வொருத்தி மேலவும் கண்ணு..’ என்று ஆயா சொல்லிக் கொண்டிருந்த போது ‘உனக்கு?’ என்று  கேட்டிருக்கக் கூடாது. நாக்குத் துடுக்கில் கேட்டுவிட்டேன். அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் முடித்துக் கொண்டது. அந்தக் காலத்தில் உள்ளூரில் அய்யனை எதிர்த்துப் பேச ஒருத்தருக்கும் தெம்பில்லை. உடம்பும் அதன் விறைப்பும் மட்டுமே காரணமில்லை. அக்கம்பக்கத்தில் எந்தக் கருப்பராயன் கோவிலில் ‘கருமான் குத்து’ நடந்தாலும் விழாவில் பன்றியைக் குத்தில் வயிற்றுக்குள் வாழைபழங்களைப் போட்டு ரத்தத்தோடு குழைத்து அய்யன் உண்பார். அந்தச் சமயங்களில் அய்யனின் கண்களில் தெறிக்கும் ரத்தத் சிவப்பும் நெஞ்சில் வடியும் ரத்தமுமாகப் பார்த்தவர்கள் எந்தக் காலத்திலும் பயத்தை விடமாட்டார்கள்.  

‘அய்யன் மனுஷனே இல்ல’ என்றுதான் ஊரில் பல ஆண்களும் நினைத்திருந்தார்கள். 

பொம்பளை வாசம் பிடிப்பராகவே கடைசி வரைக்கும் இருந்த அய்யனிடம் அதைத் தாண்டி வேறொரு திறமையும் இருந்தது. அது முட்சிலம்பு. கருவேல முட்களை முறித்து இரண்டு கைகளிலும் பிடித்துச் சுழற்றினால் தன் மீது ஒரு கீறல் படாமல் எதிராளியைச் சிதைத்துத் தொங்கவிட்டுவிடும். அதை எப்படி பழகினார் என்று தெரியவில்லை. ஆனால் அதுவொரு பெரும் கலை. யார் வந்து கேட்டாலும் ‘காலம் வரட்டும் சொல்லித் தர்றேன்’ என்று சொல்வதோடு சரி. நள்ளிரவில் கள்ளர்களை விரட்டியதாகவும், அயலூர்காரர்களுடனான சண்டையில் ஒற்றை ஆளாக முள்ளை வைத்துச் சுழற்றியதாகவும் பேச்சு உண்டு. அதனை வெகு சிலர் கண்ணாலும் பார்த்திருக்கிறார்கள். கருப்பராயனே வந்து விசிறியதாகக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்களாம். 

‘எல்லா ஆம்பள மேலயும் ஆச வந்துடுமா?’ என்று வெகு நாள் கழித்து ஆயா கேட்டது. எப்பொழுதோ கேட்ட கேள்விக்கு அது பதிலுமில்லை.

‘அய்யனை எந்த பொம்பளைக்குத்தான் புடிக்காது? ஆனா ஒருத்தியும் வெளிய காட்டிக்கமாட்டாளுக’  என்ற போது ஆயாவின் கண்களில் வெளிச்சம் மின்னியது.

ஆயா தனிக்கட்டையாகவேதான் எப்பொழுதும் வாழ்ந்திருக்கிறது.  பெரிய வாய்க்கால் ஓரமாகவேதான் கடைசி வரைக்கும் நீரின் சலசலப்போடு வாழ்ந்து கிடந்தது கிழவி. திருமணம் ஆனதா? குழந்தைகள் இருக்கிறார்களா? எங்கே போனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. அய்யனுக்கும் ஆயாவுக்குமான உறவின் பின்னல்கள் இந்தக் காலத்து மனிதர்கள் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் காலத்து மனிதர்களுக்கும் கூடத் தெரியுமா என்று தெரியவில்லை. 

‘அது ஆயிப்போச்சு நாப்பது வருஷம்...இன்னக்கு வரைக்கும் ஆரு பண்ணுனாங்கன்னு தெரில..கள்ளுக்குடிச்சுட்டு படுத்துட்டு இருந்த அய்யனைக் கட்டலோட தூக்கிட்டு வந்து இங்க போட்டு கல்லைத் தாங்கி தலைல போட்டுட்டாங்க’ ஆயாவின் வார்த்தைகளில் இன்னமும் அன்றைய தினத்தின் ரத்தவாடை இருந்தது. 

‘கருப்பராயனாவே இருந்த அந்த மனுஷனைக் கொன்னவங்க சாதரண ஆளுங்களா இருக்க முடியாது’ என்று கிழவி நம்பிக் கொண்டிருந்தாள்.

சத்தம் கேட்டுத் தூக்கத்திலிருந்து திட்டுக்கிட்டு எழுந்த ஆயா, கூரையில் செருகியிருந்த அரிவாளைத் தூக்கி ஓடி வந்து பார்த்துவிட்டு ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனாள். கோவணமும் உடற்கட்டும் அய்யனின் அடையாளத்தைக் காட்டிவிட என்ன செய்வதெனத் தெரியாமல் தலையோடு அய்யனைத் தாங்கி எடுத்து மடியில் படுக்க வைத்தாள். அய்யன் உடல் துடித்துக் கொண்டிருந்தது. தலையைத் தொடும் போது கை கொழ கொழவென நுழைந்தது. அய்யனின் குரல் வளையை உடைத்துக் கொண்டு வரும் கதறல் அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்தது. வாய்க்கால் கரையோரம் அந்த இருளில் யாரும் வரப் போவதில்லை. ஆயா பதறிப் போனவளாக அணைத்துக் கொண்டாள். கோடையின் வெம்மையில் வியர்த்திருந்த அவளது மார்பு முழுவதும் ரத்தப் பிசுபிசுப்பு விரவியது. அடுத்த சில கணங்களில் அய்யன் துடித்து அடங்கிய போதும் நெஞ்சோடு அணைத்துப் பிடித்திருந்தாள். 

நிலவின் வெளிச்சத்தில் அய்யனின் உடல் ரத்தத்தில் மினுமினுத்தது. குடிசைக்குள்ளிருந்த ஈயப்பாத்திரம் ஒன்றை எடுத்து வந்து வாய்க்க்கால் நீரில் உடல் முழுக்கவும் தொட்டுத் துடைத்து ரத்தக் கறையெல்லாம் கழுவினாள். அய்யனின் முகம் கோரமாக இருந்தது. மாராப்பைக் கிழித்து முகத்தை மறைத்த பிறகு பயம் எதுவுமில்லை. விடிய இன்னமும் வெகு நேரமிருந்தது. என்றைக்குமில்லாமல் அன்றைக்கு அவளது கைகளுக்கு அதீத சுதந்திரம் கிடைத்திருந்தது. அன்று அவள் தான் முழுமையடைந்ததாக உணர்ந்தாள். 

அய்யனைப் பற்றிப் பேசிய போதெல்லாம் அய்யனின் உடலைப் பற்றி மட்டுமேதான் கிழவி பேசிக் கொண்டிருந்தாள் அல்லது அவளையும் மீறி அது பிரவாகமெடுத்துக் கொண்டிருந்தது. 

காமம், காதல் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கத் தெரியாமல் கடைசி வரைக்கும் ஏதோவொரு ரகசியத்தைப் புதைத்து வைத்துக் கொண்ட தவிட்டுக்கார ஆயாவின் கடைசிக் கணங்களில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இன்னமும் சில கணங்கள்தான். அவள் திணறிக் கொண்டிருந்தாள். அய்யனின் அணைப்பில் அவள் திமிறுவதாகத் தோன்றியது. சுற்றிலும் நின்றவர்கள் முதலில் நீர் ஊற்றினார்கள். பின்னர் பால் ஊற்றினார்கள். கிழவியின் மூச்சு அடங்கவில்லை. மண்ணாசை இருக்கும் என்று மண்ணைக் கரைத்து ஊற்றினார்கள். அப்பொழுதும் இழுத்துக் கொண்டிருந்தாள். அடுத்து ஒற்றை ரூபாயை நீருக்குள் போட்டு ஊற்ற ஆயத்தமானார்கள். மேலும் பார்க்க மனமில்லை. குடிசைக்கு வெளியில் வந்து நின்ற போது வாய்க்கால் நீர் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. ஆயாவின் காமத்தைப் போலவோ அல்லது அவளது மனதுக்குள் அலையடித்த அய்யனின் நினைவுகளைப் போலவோ.

(புனைவு)

6 எதிர் சப்தங்கள்:

பழனிவேல் said...

அண்ணா... மிக அருமை.
இயல்பான இனிமை....

செல்வேந்திரன் said...

காமத்தை வெறுக்கும் காதல் என்ற ஒன்று இல்லை உலகில்.மெல்லிய சோகம்.அருமையான புனைவு.

madu said...

உங்களது சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று‌‌. ஒரு நாவாலாகவோ/குறுநாவலாகவோ
இதை எழுதலாம்.

கார்த்தி பழனிச்சாமி said...

இன்னோரு ௧ள்ளி௧்௧ாட்டு இதிகாசம்.. மேலும் எழுதுங்கள்

சேக்காளி said...

//ஆயாவின் காமத்தைப் போலவோ அல்லது அவளது மனதுக்குள் அலையடித்த அய்யனின் நினைவுகளைப் போலவோ//
இந்த புனைவு அவ்வப்போது அலையை உண்டாக்கி விட்டு தான் செல்லும்.
முந்தைய "வேட்டைக் காடு" எனும் புனைவை போல

சேக்காளி said...

தவிட்டுக்கார ஆயா ,அவளின் தனிமை பற்றிய விவரிப்பு
அய்யன் பற்றிய விவரிப்பு
அய்யன் கொலைக்கான பிண்ணனி
இவற்றை சுவராசியமான சம்பவங்களுடன் இணைத்தால்
நாவலாகி விடும்