அவ்வப்பொழுது யாராவது சிலர் அழைத்து ‘குளம் தூர்வாருகிறோம்’ என்றும் ‘அடர்வனம் அமைப்பது பற்றிய தகவல்கள் வேண்டும்’ என்றும் கேட்பது வழக்கம். அலைபேசியில் எவ்வளவு சொல்ல முடியும்? முடிந்தவரை சொல்லிவிடுகிறேன். இத்தகைய செயல்பாடுகளில் நேரடியாகச் சென்று பார்த்துவருவதுதான் உண்மையிலேயே பலனளிக்கும். தனியொரு மனிதனால் செய்ய முடியாத காரியங்கள் இவை. ஆகவே தமக்கு முன்பாகச் செய்தவர்கள் எப்படி ஆட்களைத் திரட்டினார்கள், என்னவெல்லாம் சிக்கல்களை எதிர்கொண்டார்கள் என்பதையும், அவர்களின் அனுபவங்களையும் நேரடியாகக் களத்திலேயே சென்று பார்த்துவிட வேண்டும். பார்ப்பதோடு அல்லாமல் சூட்டோடு சூடாக காரியத்தைத் தொடங்கியும் விட வேண்டும். இந்த இரண்டில் எது தாமதமானாலும் அதன் பிறகு நாம் எல்லாவற்றையும் முதலிலிருந்தே தொடங்க வேண்டியிருக்கும்.
பத்தியின் முதலில் சொன்ன கேள்விகளை என்னிடம் கேட்டவர்கள்- மிகைப்படுத்திச் சொல்லவில்லை- குறைந்தது நூறு பேராவது கேட்டிருப்பார்கள். ஆனால் அதன் பிறகு அவர்களில் எத்தனை பேர்கள் குளத்தைத் தூர் வாரினார்கள் என்பதும் அடர்வனம் அமைத்தார்கள் என்பதும் தெரியாது. உண்மையிலேயே வருத்தம்தான். குற்றம் சுமத்துவதாகக் கருத வேண்டாம். தமிழகத்தில் மிகு ஆர்வம் கொண்டவர்கள்தான் நிறைய இருப்பதாகத் தோன்றுகிறது. செய்து முடிப்பதைவிடவும் செய்வது குறித்தான தகவல்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்; இருக்கிறார்கள்.
மென்பொருள் துறையில் இருப்பவர்கள், பெருநகரங்களில் பணியாற்றுகிறவர்களுக்கெல்லாம் தமது உள்ளூர் குறித்து ஆசை இருக்கும். அங்கு எதையாவது செய்துவிட வேண்டும் என்று ஆர்வமிருக்கும். ஆனால் அதெல்லாம் அவ்வளவு எளிய காரியமில்லை. உள்ளூரில்தான் துரும்பைக் கூட அசைக்க முடியாது. டெல்லியிலும் சென்னையிலும் கூட காரியம் சாதித்துவிடலாம் ஆனால் கரட்டடிபாளையத்தில் என்னால் பத்து மரங்களை நட்டு வளர்த்துவிட முடியும் என்கிற நம்பிக்கையில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாக எழுத வேண்டியதில்லை. அதுதான் நிதர்சனம். இத்தகைய ஆர்வமிக்கவர்கள் அலைபேசியில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசத் தயாராக இருக்கிறார்கள். ஒரு நண்பர் தமது ஊரில் காடு அமைக்க விரும்புவதாக நாற்பது நிமிடங்கள் பேசினார். மண்ணை வளப்படுத்துவது தொடங்கி, என்ன செடிகளைத் தேர்ந்தெடுப்பது, வேலி அமைப்பது, நீர் வசதி என சகலமும் பேசி முடித்த போது தொண்டைத் தண்ணீர் வற்றிவிட்டது. ஆனால் அதன் பிறகு சத்தமேயில்லை.
ஏன் செய்ய முடியாமல் போகிறது என்பதும் ஆரம்பத்திலேயே நமக்குத் தெரிந்துவிடும். ‘இதை சரி செய்யுங்க’ என்று சொல்லியிருந்தாலும் கூட அவர்களால் முடிந்திருக்காது. இப்படி பத்துப் பேர் நம்மை ராவி விட்டால் பதினோராவது ஆள் உண்மையிலேயே களமிறங்கத் தயாரானவர் என்றால் நாம் காட்டுகிற சலிப்பு அவரைச் சோர்வடையைச் செய்துவிடும் என்கிற பயம் வராமல் இல்லை. வேறு சிலர் இருக்கிறார்கள். வாட்ஸாப், ஃபேஸ்புக் என்று தூள் கிளப்புவார்கள். இயற்கையைக் காப்போம் என்று அவர்கள் கதறுவதைப் பார்த்தால் அடுத்தவர்களுக்கு நாடி நரம்பெல்லாம் முறுக்கேறும். ஆனால் வீட்டை விட்டு வெளியில் வரமாட்டார்கள். விடுமுறை நாள், மாலை நேரமாகத்தான் இருக்கும்- ‘வாங்க ஒரு சின்ன வேலை இருக்கு’ என்று அழைத்தால் வருவதாகச் சொல்லிவிட்டு டிமிக்கி கொடுத்துவிடுவார்கள். பல பேர் இப்படியிருக்கிறார்கள்.
இயற்கை சார்ந்த காரியங்களில் முதலில் நம் இருக்கையை விட்டு எழ வேண்டும். உடல் சற்றேனும் அசைவுற வேண்டும். எதுவும் நம்மிடம் வந்து சேராது; நாம்தான் அவற்றை நோக்கி நகர வேண்டும். அதற்குத் தயாரில்லை என்றால் துரும்பைக் கூட அசைக்க முடியாது. சத்தியம் அடித்து வேண்டுமானாலும் இதைச் சொல்லலாம்.
கடந்த மாதம் சொல்லி வைத்தாற் போல இரண்டு வெவ்வேறு நண்பர்கள் அழைத்தார்கள். இப்படித்தான் எதையோ கேட்டார்கள். பொறுமையாகச் சொல்லிவிட்டு ‘திருச்சி போறோம்...நான் குளம் தூர் வாரியதைப் பற்றிப் பேசறேன்; ஆனந்த் காடு வளர்ப்பதைப் பத்தி பேசறாரு...வர முடியுமா?’ என்று கேட்டேன். இத்தனைக்கும் திருச்சியைச் சுற்றி இருக்கும் ஊர்களைச் சார்ந்தவர்கள்தான். அதன் பிறகு சத்தமே இல்லை. குறைந்தபட்சம் ‘வர முடியவில்லை’ என்றாவது சொல்வதுதானே சரி? அதைக் கூடச் செய்வதில்லை. இதுதான் ஆச்சரியமாக இருக்கிறது- வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு முப்பத்தைந்து நிமிடங்களாவது பேசியிருப்பேன். அவர்களின் நேர விரயத்துக்கு நம்மை ஊறுகாய் ஆக்கிக் கொள்கிறார்களோ என்று ஆயாசமாகிவிடுகிறது.
சரி போகட்டும்.
நாளை மதியம் திருச்சி- லால்குடி பக்கத்தில் ஒரு கிராமம். பெரிய கூட்டமெல்லாம் இல்லை. பதினைந்து அல்லது இருபது பேர்கள் இருந்தால் போதும் என்றுதான் சொல்லியிருக்கிறோம். மருத்துவர் ஒருவர் அழைத்தார். இதுவரைக்கும் மேலே குறிப்பிட்டது போல அலைபேசியில் அழைத்துக் கேட்கிறவர்கள்தான் அதிகம். முதன்முறையாக ‘எங்கள் ஊர்க்காரர்களிடம் பேசுங்க’ என்கிறார். ஒத்துக் கொண்ட பிறகு அவரது ஊரிலிருந்து இன்னொரு நண்பர் பேசினார். இருவரும்தான் ஒருங்கிணைக்கிறார்கள். சில முன் தயாரிப்புகளோடு நானும் ஆனந்தும் கிளம்புகிறோம். ஆசிரியர் அரசு தாமஸூம் உடன் வருகிறார். மதியம் 2 மணிக்கு ஆரம்பித்து 5 மணி வரைக்கும் பேசிவிட்டு ஊர் திரும்ப வேண்டும்.
ஒருவேளை கலந்து கொள்ளலாம் என நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
7 எதிர் சப்தங்கள்:
சமூக சேவை ல இதெல்லாம் சகஜமப்பா
maduri pkam la vara matinkal ah
எதுவும் நம்மிடம் வந்து சேராது; நாம்தான் அவற்றை நோக்கி நகர வேண்டும். அதற்குத் தயாரில்லை என்றால் துரும்பைக் கூட அசைக்க முடியாது. சத்தியம் அடித்து வேண்டுமானாலும் இதைச் சொல்லலாம்.
super super
உங்களுக்கு தளறாத மனம் என்றும் அமையட்டும். வாழ்க வளமுடன்.
இப்படி பத்துப் பேர் நம்மை ராவி விட்டால் பதினோராவது ஆள் 😳 அந்த 11 வது
(அ)பாக்கியசாலி நாங்கதான்.
Arputhamana vivarippu... 😀
உங்கள் தகவலுக்கு ...
கிராமத்தில் ஐந்து ஏரிகள் தூர்வாருதல் முடிந்தது ... பல உதவி கைகளின் முயற்சியிலிருந்து ...
After the visit...
Thanks,
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி
Post a Comment