Jul 15, 2019

ஊரோடிகள்

திருச்சிதான் என்று நினைத்தோம். ஆனால் மதிய உணவைத்தான் திருச்சியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். உணவை முடித்துக் கொண்டு அங்கேயிருந்து சென்றோம், சென்றோம்- சென்று கொண்டேயிருந்தோம். இயற்கை சார்ந்த செயல்பாடுக்கு என இப்படி நண்பர்களுடன் வெளியூருக்கெல்லாம் சென்றதில்லை. பெரும்பாலும் தனியாகச் செல்வேன். பேருந்தில் அல்லது தொடரூர்தியில் சென்றுவிடுவேன். இந்த முறை ஆனந்த், அரசு தாமஸ் மற்றும் நான் உட்பட மூன்று பேர் கிளம்பினோம். விக்னேஸ்வரன் கரூரில் வந்து இணைந்து கொள்வதாகச் சொன்னார். மொத்தம் நான்கு பேர்கள். அதனால் கார் எடுத்துக் கொண்டோம். நான் தான் உருட்டினேன். எப்பொழுதுமே எண்பதுக்கு மேல் வண்டியை ஓட்ட மாட்டேன். இவர்கள் எங்கே அதைப் புரிந்து கொள்கிறார்கள்? ஓட்டுவதற்கு ஒருவன் கிடைத்தால் உருட்டுவதை வைத்துக் கூட ஓட்டுகிற உலகம் இது.

திருச்சியிலிருந்து லால்குடி தாண்டி, அரியலூர் செல்லுகிற வழியில் ஒரு சிற்றூர். அந்த ஊரில்தான் அழைத்திருந்தார்கள். சமுதாயக் கூடம் ஒன்றில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். சிறார்கள், இளைஞர்கள், பெண்கள், மூத்தவர்கள் என சற்றேறக்குறைய எழுபது பேர்கள் இருக்கக் கூடும். அவ்வளவு கூட்டம் சேர்வது என்பதே ஆச்சரியம்தான். எங்களுக்குப் பொன்னாடையெல்லாம் போர்த்தினார்கள். பேசுவதைக் கேட்டு அவ்வப்பொழுது கை கூடத் தட்டினார்கள். 


வேமாண்டம்பாளையம் குளத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றியது, கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் தூர் வாரியது குறித்தான அனுபவங்கள்- இத்தகைய காரியங்களைச் செய்யும் போது முக்கோண விதி முக்கியம். முதற்புள்ளி அரசாங்க ஒத்துழைப்பு, இரண்டாம்புள்ளி ஊர் பொதுமக்கள், மூன்றாம் புள்ளி காரியத்தை முன்னெடுத்துச் செய்யும் தன்னார்வக் குழு- இந்த மூன்றும் இணைந்துதான் வெற்றியைத் தர முடியும். ஒன்று சொதப்பினாலும் கூட சமாளித்துவிடலாம் என்பதெல்லாம் குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த கதைதான். எங்கே கால் தவறி விழுவோம் என்று தெரியாது. மூன்றிலுமே அனுபவப்பட்டிருக்கிறோம். அதைச் சொன்னேன்.

ஆனந்த் இதுவரையிலும் பதினைந்து வனங்களை உருவாக்கியிருக்கிறார். மண்ணை எப்படி வளப்படுத்துவது, செடிகளைத் தேர்ந்தெடுத்தல், அவை எங்கே கிடைக்கும், எப்படி நடுவது என தமது அனுபவங்களையெல்லாம் பவர்பாய்ண்ட்டாகத் தயாரித்து எடுத்து வந்திருந்தார். இருவரும் பேசுவதற்கு முன்பாக அறிமுகப்படுத்தி, பேசி முடித்த பிறகு தொகுத்து ஆசிரியர் அரசு தாமஸ் உதவினார். விக்னேஸ் களத்தில் பணியிருந்தால் வெறித்தனமாகச் செய்வார்- மேடையில் பேசுவதாக இருந்தால் பேசுகிறவர்களை வேடிக்கை பார்ப்பார். அதைச் செவ்வனே செய்தார். 

மருத்துவர் மட்டுமில்லாமல் அங்கேயிருக்கும் சில இளைஞர்களும் பெரியவர்களும் சேர்ந்து கிராம மேம்பாட்டை முன்னெடுக்கிறார்கள். டால்மியாபுரம் சிமெண்ட் ஆலையின் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஊர் அது. ஊரில் நிலத்தடி நீர் இருக்கிறது. ஆனால் வேளாண்மைக்கு ஏற்றதாக இல்லாமல் உவர்ப்பு ஏறியிருக்கிறது. எந்தப் பயிர் வைத்தாலும் விளைச்சல் இல்லாத பூமியாகிவிட்டது என்றார்கள்.வானம் பார்த்த பூமி. சிற்றூரில் ஏற்கனவே சில நூறு செடிகளை நட்டு வளர்க்கிறார்கள். இனி அடுத்தடுத்த சில காரியங்களை மேற்கொள்ளவிருக்கிறார்கள். அதற்காக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லி அழைத்திருந்தார்கள். 

சென்று வந்து இரண்டு நாள் ஆகிவிட்டது. இன்று காலையில் அம்மா ‘திருச்சிக்கு ஆபிஸ் வேலையா போகலயா?’ என்றார். அலுவல்ரீதியில் சென்று வந்தேன் என நம்பியிருக்கிறார் போலிருக்கிறது. ‘திருச்சிக்குப் பக்கத்துல ஒரு கிராமத்துல இருந்து கூப்பிட்டு இருந்தாங்க’ என்றேன். ‘அதுக்கு எதுக்கு வண்டி எடுத்து, பெட்ரோல் போட்டு, செலவு செஞ்சுட்டு போன?’என்கிறார். எதிர்பார்த்த கேள்விதான். ஆனால் என்ன பதில் சொன்னாலும் குறுக்குக் கேள்வி வரும் என்பதால் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. 

எங்களை அழைத்திருந்த மருத்துவரின் வாகனத்துக்கு ஓர் ஓட்டுநர் இருந்தார். அவரது வேகத்துக்கு நம்மால் ஓட்ட முடியுமா? அநேகமாக அவர் முன்பக்கமாக வரும் வண்டிகளைப் பார்த்ததை விட பின்பக்கக் கண்ணாடியில் ‘இவன் வர்றானா? இல்லையா?’ என்றுதான் அதிகம் பார்த்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். ‘அவன் வண்டிக்கு முன்னால் என்னை வண்டி ஓட்டச் சொல்லுறதா இருந்தா என்னையை வேலையை விட்டுத் தூக்கிடுங்க டாக்டர்’ என்று சொல்லியிருக்கக் கூடும். வண்டியை விட்டு இறங்கியவுடன் மருத்துவர் நாசூக்காக ‘போகும் போது வேணும்ன்னா இங்க இருந்து ஒரு ட்ரைவரை கூட்டிக்கலாம்’ என்று சொன்னபோதே புரிந்து கொண்டேன். 

காலையிலேயே உரையாடலை நடத்துவதாகத் தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால் மதியம் மூன்று மணிக்கு மேல்தான் காட்டு வேலைக்குச் செல்கிறவர்கள் வருவார்கள் என்று சொல்லிவிட்டார்கள். உரையாடலைத் தொடங்கவே மாலை நான்கு மணி ஆகிவிட்டது. பேசி முடித்து, சந்தேகங்களை விவாதித்து திரும்ப திருச்சி வந்து சேர்ந்தோம். அங்கு மருத்துவரிடம் பேசிவிட்டுக் கிளம்ப கிளம்ப ஆறரை மணி ஆகிவிட்டது. கிளம்பும் போதே உடல்நிலை சரியில்லாமல் போவதற்கான தென்பட்டன. ஆனாலும் விடாக்கண்டனாய் வண்டியை உருட்டிக் கொண்டேயிருந்தேன். வீடு வந்து சேர இரவு பதினோரு மணி ஆகியிருந்தது.

எவ்வளவு அலைச்சல் இருந்தாலும் பரவாயில்லை- அங்கே ஒரு குழு பணிகளை வேகமெடுத்துச் செயலாற்றத் தயாராகிவிட்டது என்பதை நேரடியாகப் பார்ப்பதுதான் ஆகப்பெரிய சந்தோஷம் எங்களுக்கு. அதைத்தான் திரும்ப வரும் போது அரசு தாமஸ் சொன்னார். ‘இங்க ஒரு நல்ல டீம் அமைஞ்சிருக்கு’ என்றார். அவரது கணிப்பு தவறுவதில்லை. 

சொல்ல மறந்துவிட்டேன். உரையாடல் முடிந்து திருச்சி வந்த பிறகு மருத்துவர்- திருச்சியில் முக்கியப் பிரமுகர் அவர்- பெயரைக் குறிப்பிடுவதை விரும்புவாரா எனத் தெரியவில்லை. காசோலையில் ஒரு லட்ச ரூபாய் என தொகையை நிரப்பித் தந்தார். காசோலையில் பெயர் எதுவும் எழுதவில்லை. க்ராஸ் செய்யவில்லை. வெறும் தொகையை மட்டும் நிரப்பியிருந்தார்.

‘நிசப்தம் அறக்கட்டளை’ என்று எழுதி இனிமேல்தான் வங்கியில் செலுத்த வேண்டும். இந்த நம்பிக்கை மட்டுமே நம்மை தொடர்ந்து இயங்கச் செய்யும். அம்மாவின் கேள்விக்கும் கூட இதுதான் பதில் என நினைக்கிறேன்.

3 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Nambiyur account allavaa athaan Nambi koduthirukaaru!!!

Anonymous said...

It's truly a great and useful piece of info. I am glad that you shared this helpful information with
us. Please stay us informed like this. Thank you for sharing.

Dr. K. Kalaiselvi said...

Great job sir.. i missed😑😑