Jun 30, 2019

மின்னல் வெட்டு

‘கங்கா ஹாஸ்பிட்டல்லதான் இருக்காங்க’ என்றுதான் தகவல் வந்தது. காளிதாஸுக்கு சமீபத்தில்தான் திருமணமாகியிருக்கிறது. சமீபம் என்றால் ஒன்றரை வருடங்கள் இருக்கக்கூடும். ஆறு மாதத்தில் ஒரு கைக்குழந்தை. குழந்தைக்கு மூன்று மாதங்கள் ஆகியிருந்த போது பைக்கில் சென்றவர் கீழே விழுந்து காலிலும் தலையிலும் அடி. தலையில் ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார்கள். அப்பொழுது பிரச்சினை எதுவுமில்லை என்று காலில் மட்டும் அறுவை சிகிச்சை செய்துவிட்டார்கள். மூன்று லட்ச ரூபாய் செலவு பிடித்திருக்கிறது. அவர் பைக்கில் இருந்து விழக் காரணமே அவரது இருதயத்தில் உள்ள பிரச்சினைதான் என்றார்கள். வலுவில்லாத இருதயம்; ரத்த அழுத்தப் பிரச்சினைகள் அவரை விழச் செய்திருக்கிறது. காளிதாஸின் தந்தை தச்சுத் தொழிலாளி. காளிதாஸ் தனியார் பள்ளியொன்றில் பணியாற்றுகிறார். சொற்ப வருமானம். அப்பா காலத்திலிருந்து சேர்த்து வைத்த மொத்த வருமானமும் கரைந்து போனது.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்றிருந்தவருக்கு தலையிலும் ஒரு பிரச்சினை வந்து சேர்ந்துவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக கை கால்கள் செயலிழக்க அவசரமாக மருத்துவமனைக்குத் தூக்கி வந்து பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி. அரசு மருத்துவமனைக்குத்தான் சென்றிருக்கிறார்கள். ஆனால் இருதயமும் பலவீனம் என்பதால் அங்கேயே தயங்கியிருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் தனியார் மருத்துவமனைக்கு மாற்றியிருக்கிறார்கள். தலையில் சிறு கட்டி போல இருந்திருக்கிறது. அதை எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பி, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து முடித்து மீண்டுமொரு இரண்டு லட்ச ரூபாய் செலவு. கடந்த அறுவை சிகிச்சைக்கே இருந்ததையெல்லாம் சுரண்டிக் கொடுத்தவர்கள் இந்த முறை கடன் வாங்கியிருக்கிறார்கள். உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் பணம் புரட்டித் தந்திருக்கிறார்கள். பள்ளியும் உதவியிருக்கிறது. அப்படியிருந்தும்  போதவில்லை. அதன் பிறகுதான் தகவல் அனுப்பினார்கள். 

இருபத்தைந்தாயிரம் ரூபாய் கொடுத்துவிடலாம் என்பதுதான் என் திட்டம். சில நண்பர்களிடம் வீட்டைப் போய் பார்த்துவரச் சொல்லியிருந்தேன். உள்ளூரில் விசாரித்த வகையில் எல்லாம் பரிதாபமாகத்தான் சொன்னார்கள். காசோலைப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு காலையிலேயே கிளம்பி கங்கா மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருத்துவர்கள் யாருமில்லை. மருத்துவமனை நிர்வாகிகளும் இல்லை. இதுவரைக்குமான கட்டண விவரங்களைக் கேட்ட போது செவிலியர்கள் கொடுத்தார்கள். இன்னமும் ஐம்பதாயிரம் ரூபாய் கட்ட வேண்டும்.

காளிதாஸின் அண்ணன் மருத்துவமனையில் இருந்தார். அவரும் தச்சுத் தொழிலாளி.  ‘பத்து நாளா வேலைக்குப் போகலைங்க..’ என்றார். அவர் சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம். நேற்றே அவர்கள் மருத்துவமனையிலிருந்து கிளம்பியிருக்க வேண்டியது. ஆனால் மருத்துவமனையில் கட்டுவதற்குப் பணம் இல்லாததால் மருத்துவமனையிலேயே தங்கிவிட்டார்கள். 

காளிதாஸின் அண்ணனிடம் ‘கையில எவ்வளவு வெச்சிருக்கீங்க?’ என்றேன். ஏழாயிரத்துச் சொச்சம் இருந்தது.

‘ஐம்பதாயிரம் ரூபாய் கட்டச் சொல்லுறாங்க..’ என்றேன். அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. நேற்று கூட மருந்து வாங்க வேண்டும் என்பதற்காக எங்கேயோ சென்று தெரிந்த நண்பர்கள் இருவரிடம் ஆளுக்கு ஐந்தாயிரம் வாங்கி வந்திருக்கிறார். அவரிடம் பணத்தைக் கட்டச் சொல்வதில் அர்த்தமில்லை.

சில மருத்துவ நண்பர்களை அழைத்து ‘கங்கா மருத்துவமனையில் யாரையாவது தெரியுமா?’ என்று விசாரித்ததில் பெரிய பலனில்லை. அவரவர் தரப்பில் முயற்சித்துவிட்டு ‘முடியாது’ என்றார்கள்.

மருத்துவமனையில் நாமே பேசிவிடலாம் என்று முயற்சித்தேன். ஆரம்பத்தில் ‘குறைக்க வாய்ப்பில்லை’என்றார்கள். பொதுவாக தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் தரப்பிலிருந்து பேசினால் அப்படித்தான் சொல்வார்கள். அனுபவமிருக்கிறது. ஆனால் பேசுகிற விதத்தில் பேசினால் குறைந்தபட்சமாவது தள்ளுபடி செய்வார்கள். 

கங்கா மருத்துவமனையில் ஹரிஹரசுதன் என்றொரு நிர்வாகி இருந்தார். ‘சார், எனக்கும் இவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..அறக்கட்டளையிலிருந்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்தான் கொடுக்கிறதா இருக்கோம்...மீதிப் பணத்தை அவங்களால கட்ட முடியாது சார்...நீங்களே விசாரிச்சுப் பாருங்க’ என்றேன். அவர்களது வீட்டைப் பார்த்து வந்ததையெல்லாம் சொன்னதைப் புரிந்து கொண்டார். அவரிடம் அறக்கட்டளை குறித்து இன்னமும் கொஞ்சம் விரிவாகச் சொன்னேன். 

கடைசியில் ‘ட்ரஸ்ட்ல பணம் இருக்கு சார்..ஆனா ஒவ்வொரு பத்தாயிரமும் ஒரு காலேஜ் படிக்கிற பையனுக்கு ஒரு வருஷத்துக் கட்டணம்...அதுதான் எனக்குத் தயக்கமா இருக்கு..நான் கொஞ்சம் சேர்த்துத் தர்றேன்..நீங்க கொஞ்சம் குறைச்சுக்குங்க’ என்ற போது தன்னால் முடிவெடுக்க முடியாது என்றும் தம்முடைய மேலதிகாரிகளிடம் பேசுவதாகச் சொன்னார். அதன் பிறகு காளிதாஸின் அண்ணனிடமும் தாயாரிடமும் பேசினேன்.  ‘தைரியமா இருங்க...இன்னைக்கு நீங்க கிளம்பிடலாம்’ என்றேன். 

ஹரி தமது மேலதிகாரிகளிடம் பேசிவிட்டு ‘நீங்க முப்பத்தைந்தாயிரம் ரூபாய் கொடுங்க சார்..மீதி பதினைந்தாயிரத்தைத் தள்ளுபடி செய்துவிடுகிறோம்’ என்றார். அதுவே பெரிய தொகைதான். ஹரி மிகப்பெரிய உதவியைச் செய்திருக்கிறார். காளிதாஸின் அம்மாவை அழைத்து மருத்துவமனையின் தரப்பில் இதைச் சொன்னார்கள். அவரும் இருதய நோயாளிதான். முன்பு எப்பொழுதோ அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். தமது மகனை கவனித்துக் கொள்வதற்காக மருத்துவமனையில் தங்கியிருக்கிறார். கிளம்பிவிடலாம் என்று சொன்னது அவருக்கு அது மிகப்பெரிய ஆசுவாசம். தனது இரு கரங்களையும் கூப்பினார். அந்த அம்மாவின் வயதில் இருப்பவர்கள் கையெடுக்கும் போதும் சங்கடமாக இருக்கும். கிளம்புவதாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். 

சமீபத்தில் ஒரு நேர்காணலில் ‘ஓர் உதவியைச் செய்துவிட்ட பிறகு துல்லியமாக உங்கள் மனம் எப்படி உணரும்’ என்று கேட்டார்கள். பதிலே சொல்ல முடியாத கேள்வி அது. இன்றைய சம்பவத்தை இப்பொழுது வாசிக்கும் போது உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? காளிதாஸின் குடும்பத்தைத் கை கொடுத்துத் தூக்கி விட்டிருக்கிறோம். அது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் அவரது ஆறு மாதக் குழந்தை, காளிதாஸின் மனைவி, காளிதாஸின் பலவீனமான  இருதயம் என எல்லாமும் சேர்த்துக் கலங்கடிக்கிறது. எவ்வளவு காலம் அடுத்தவர்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டேயிருப்பார்கள்? காளிதாஸ் மாதிரி இன்னமும் எத்தனை ஆயிரம் பேர்கள் தினசரி போராடிக் கொண்டிருக்கிறார்கள்? எல்லாமும்தான் நினைவில் வந்து போகிறது. கலங்கலாகத்தான் இருக்கிறது மனம். எல்லாவற்றையும் தாண்டி  ‘இன்னைக்கு நீங்க வீட்டுக்குப் போயிடலாம்...பணம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை’ என்று சொன்ன போது வெறும் மஞ்சள் கயிறை மட்டும் கழுத்தில் ஆபரணமாக அணிந்திருந்த காளிதாஸின் அம்மாவின் முகத்தில் ஒரு கணம் வந்து வெட்டிவிட்டுப் போன மின்னல் இருக்கிறதல்லவா? அத்தனை சுமைகளையும் தாண்டிய ஒரு சிறு புன்னகைக் கீறல்- அதை மனதில் பதித்துக் கொள்வேன். அதுதான் மனம் உணரும் துல்லியமான சந்தோஷம். 

6 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//அதுதான் மனம் உணரும் துல்லியமான சந்தோஷம்//

D. Sankar said...

அந்த தாயின் முகத்தில் மட்டுமல்ல புன்னகை, இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்கள் மனதிலும் மனிதம் பற்றிய நம்பிக்கையை பூக்கத்தான் செய்யும்..

Anonymous said...

It is not easy to talk or console
people going through these kind of struggle
Let God give you immense inner strength to
deal with these situations
- Somesh

கந்தசாமி ஆசிரியர் said...

கண் கண்ட தெய்வம் நீங்கள்


Raja said...

நேற்று இரவு வண்ண நிலவனின் "பின்நகர்ந்த காலம்" படித்து கொண்டு இருந்தேன். மனிதர்கள் எவ்வளவு இயல்பாய் மற்றவர்க்கு உதவி செய்து வாழ்ந்து இருக்கிறார்கள்! தற்செயலாக நண்பனின் தங்கையை அவரின் கணவனுடன் ஹோட்டலில் சந்திக்கிறார். இவரின் கஷ்டம் அறிந்து அவர்கள் வீட்டிலேயே சாப்பிட சொல்கிறார்கள். போக போக அங்கேயே தங்குவதும் சாப்பிடுவதும் என்று அந்த கஷ்ட காலத்தில் மிகவும் உதவியாக இருந்தது என்று குறிப்பிடுகிறார். அதே போல அனந்து சார், ருத்ரய்யா, சுந்தர ராமசாமி, பாலகுமாரன் என்று எத்தனையோ மனிதர்கள் இயல்பாக உதவி செய்கிறார்கள். வேலை இன்றி இருப்பவனை குற்றவாளி போல் பார்க்கும் இன்றைய சமூக நிலையை என்னவென்று சொல்வது! அடுத்தவர்க்கு தங்க இடம் அளிப்பதும் உணவு அளிப்பதும் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும், அத்தனை இயல்பாக செய்த மனிதர்கள் வாழ்ந்த காலத்தை நினைத்து பார்த்தேன். இன்று எவ்வளவு குறுகிய மனநிலையில் மனிதர்கள் தான், தன் வீடு, குடும்பம் என்று இருக்கிறார்கள்!! அமெரிக்காவிலும் இந்தியர்கள் இப்படித்தான். பிழைப்பதை தவிர எதுவும் தெரியாது. சுவரில் படரும் நிழல்கள் போல் இருக்கும் வாழ்க்கையில், கோடிக்கணக்கான வருட வரலாற்றில் கண் மூடி கண் திறப்பதற்குள் கரையும் வயதில் ஏன் இத்தனை இறுக்கமாக பிடித்து தொங்குகிறார்கள்... என்னென்னமோ யோசித்து கொண்டு இருந்தேன்.

அப்போது தற்செயலாக இந்த பதிவும் உங்கள் முகமும் நியாபகத்தில் வந்தது. மனம் சாந்தம் ஆகியது. உங்கள் கேள்விக்கு இதுதான் பதில்.

சேக்காளி said...

//அமெரிக்காவிலும் இந்தியர்கள் இப்படித்தான்//
அவர்கள் வாழ்க்கை முறையை நோக்கி தானே நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்