Jun 4, 2019

முதல் நாள் கொண்டாட்டம்

நேற்று பெரும்பாலான பள்ளிகள் தொடங்கிவிட்டன. அரசுப்பள்ளிகளை எவ்வளவு பேர் கவனித்தார்கள் எனத் தெரியவில்லை. பல பள்ளிகள் குழந்தைகளின் முதல் நாள் வருகையை பெரும் கொண்டாட்டமாக மாற்றியிருக்கிறார்கள். முதன் முதலாகப் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய ஆளுமைகளுக்குக் கொடுக்கும் வரவேற்பைப் பல பள்ளிகள் கொடுத்திருக்கின்றன. 

சந்தோஷப்பட வேண்டிய செயல்பாடு இது.

கொங்கர்பாளையம் என்றொரு ஊர். சத்தியமங்கலம் பக்கத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட வனத்தை ஒட்டிய கிராமம். நாதஸ்வரம், மேளம் தாளம் முழங்க மாணவ மாணவிகளை வரவேற்றிருக்கிறார்கள். வாட்ஸாப்பில் அனுப்பி வைத்திருந்தார்கள். சலனப்படத்தை பார்க்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது? 


மாணவ மாணவிகளின் தலைகளில் கிரீடம் அணிவித்து, பலூன்களை வழங்கி, கைதட்டி, பன்னீர் தெளித்து, பூச்செண்டு கொடுத்து, வாழ்த்தி என விதவிதமான கொண்டாட்டங்களை அரசுப்பள்ளிகள் முன்னெடுத்திருக்கின்றன. அரசுப்பள்ளிகளின் ஆசிரியர்களும் தலைமையாசிரியர்களும் தன்னெழுச்சியாக இப்படியான நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

போகிற போக்கில் ‘அரசுப்பள்ளி ஆசிரியர்களைப் பற்றித் தெரியாதா?’ என்று மண்ணை அள்ளித் தூற்றிச் செல்கிற நிறையப் பேர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குச் சுட்டிக்காட்டவே இதை எழுத வேண்டியிருக்கிறது. பெரும்பாலான  இன்னும் ஒரு படி போய் ‘இதெல்லாம் நூத்துல ஒரு பள்ளிக்கூடத்துலதான் செய்வாங்க’ என்பார்கள். எனக்குத் தெரிந்து கோபி சுற்றுவட்டாரத்தில் பல பள்ளிகளில்- ஏதாவதொரு வகையில் மாணவர்களைச் சந்தோஷப்படுத்தும்படியாக முதல் நாள் கொண்டாட்டம் அமைந்திருக்கிறது. நிழற்படங்கள் யாவும் வெவ்வேறு பள்ளிகளில் எடுக்கப்பட்டவை.
அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து கொண்டேயிருக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசாங்கம் தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும்படிதான் பல முன்னெடுப்புகளைச் செய்து கொண்டிருக்கிறது. விரிவாகப் பேசலாம். ஆனால் அதெல்லாம் அரசியல். தனியாகப் பேசிக் கொள்ளலாம். இத்தகைய சூழலில்தான் பெரும்பாலான பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களே பல காரியங்களைச் செய்கிறார்கள். பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்துவது தொடங்கி, நோட்டீஸ் அச்சடிப்பது, மே மாதத்தில் பெற்றோர்களைச் சந்தித்து மாணவர்கள் சேர்க்கை வரை மிகக் கடுமையாக உழைக்கிறார்கள். அதைப்போலவே பல ஊர்களில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் ஆசிரியர்களுக்கு மிக்க உறுதுணையாக இருக்கின்றன. 

அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விரும்புவதுண்டு. ஓர் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் தமக்கு அருகாமையில் இருக்கும் அரசுப்பள்ளியைப் பார்த்து பொறாமைப்படவே கூடாது. ‘ஒண்ணா இங்க சேரட்டும்; இல்லைன்னா அந்த அரசுப்பள்ளியில் சேரட்டும்’ என்ற மனநிலையில்தான் இருக்க வேண்டும். உள்ளூர் கல்வி அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக பக்கத்து அரசுப்பள்ளியைப் பார்த்து பொறாமைப்பட்டால் அது எந்தவிதத்திலும் பலனளிக்காது. அரசு ஆசிரியர்கள் பொறாமைப்பட வேண்டியதும் போட்டியாகக் கருத வேண்டியதும் தமது சுற்றுவட்டாரத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளைத்தான். அவர்கள்தான் மிகப்பெரிய பூதமாக எழுந்து நிற்கிறார்கள். அவர்கள் அனைத்து அரசுப் பள்ளிகளைக் கபளீகரம் செய்வதற்கும் தயாராக இருப்பதையும் அதற்கு அரசாங்கமே ஒரு வகையில் துணை போவதையும்தான் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உணர வேண்டும்.

ஆசிரியர்களுக்குள்ளாக ஒருங்கிணைப்பு உருவாவதைப் போலவே ‘ப்ராண்டிங்’ என்பதும் மிக அவசியம். 

‘அரசுப்பள்ளி என்றாலே மோசம்’ என்ற பிம்பத்தை மிக வலுவாகக் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். அதை உடைப்பதற்கு முறையான திட்டமிடலும், சரியான விளம்பரப்படுத்துதலும் மிக அவசியம். சேர்க்கையில் கவனம் செலுத்துவதைப் போலவே தமது பள்ளியின் ஒவ்வொரு சாதனைகளையும் விளம்பரப்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கிறது. வெறுமனே வாட்ஸாப் குழுமங்களிலும், ஃபேஸ்புக்கில் மட்டுமில்லாமல் உள்ளூர் பெரியவர்களிடமும், பத்திரிக்கைகளிலும் தமது சாதனைகளைக் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. வாய்வழி சொற்களால் உருவாக்கப்படும் விளம்பரங்கள் கிராமப்பகுதிகளில் மிகச் சிறப்பாக எடுபடும். இப்படியாக,  அரசுப்பள்ளிகள் பரவலாக, ஒருங்கிணைந்து இப்படியொரு பிம்பத்தை கட்டமைப்பின் வழியாகவே தம்மை மீள் உருவாக்கம் செய்து கொள்ள முடிய்ம். 

இளம் அரசு ஆசிரியர்கள் பரவலாகவே கடுமையாக உழைக்கிறார்கள். வித்தியாசமாகச் சிந்திக்கிறார்கள். பள்ளிகளின் வசதிகள் மேம்படுத்துதல், சேர்க்கை எண்ணிக்கையை அதிகரித்தல், முதல் நாள் கொண்டாட்டங்கள் என எல்லாமே அரசுப்பள்ளிகள் சரியான திசையை நோக்கி அதன் ஆசிரியர்களால் நகர்கின்றன என்பதற்கான அடையாளம்தான். இத்தகைய ஆரோக்கியமான சூழல் பரவலாவதும் தொடர்வதும் அரசுப்பள்ளிகள் குறித்தான நல்லதொரு நம்பிக்கையை இன்னமும் சில ஆண்டுகளில் உருவாக்கக் கூடும். அந்தவொரு தருணத்திற்காக காத்திருக்கலாம்.

1 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

They add a touch of elegance to your closet.