Jun 6, 2019

விஷம் கலந்திருக்கா?

சென்னையில் அவ்வப்போது வேலை இருக்கும். அவ்வப்போது என்றால் இரண்டு மாதங்களுக்கு முன்பாக வந்தேன். அதன் பிறகு இப்பொழுதுதான். வந்தால் போனால் தங்க ஓரிடம் வேண்டுமல்லவா? மொட்டை மாடியில் முன்பக்கமாக கூரை வேய்ந்த ஒற்றை அறை வேண்டும் எனக் கனவு கொண்டிருந்தேன். ‘போடா டேய்! அதெல்லாம் சென்னையிலேயே இல்லை’ என்று துரத்தியடித்துவிட்டார்கள். எங்கேயாச்சும் கால் நீட்டிக்க இடம் தேடிக் கொண்டிருந்த போது சரவணன் ‘நீங்க சாவி வாங்கிக்குங்க மணி’ என்றார். தி.நகரில் ஓர் அறை இருக்கிறது. அறையில் என்னைத் தவிர யாருமே இருக்கமாட்டார்கள். ஜன்னலைத் திறந்துவைத்துக் கொண்டு கால் இரண்டையும் வின்னர் வடிவேலு கணக்காக வைத்துப் படுத்தால் தூக்கம் கண்களைச் சொக்கிக் கொண்டு வரும். வாடகை எதுவுமில்லை. துக்கினியூண்டு அறைக்கு மூன்று மின்விசிறிகள், நான்கு ட்யூப்லைட்டுகள் என்று எனக்காக ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருக்கிறார்.  இரண்டொரு நாளில் சென்னை வேலை முடிந்தவுடன் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவேன். திரும்பவும் நான் திறக்கும் வரை அப்படியேதான் கிடக்கும்.

நேற்று வந்து குழாயைத் திறந்தால் தண்ணீரில் பெட்ரோல் வாசம். பெட்ரோலா மண்ணெண்ணெயா என்று துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால் என்னவோ இருக்கிறது. ஒருவேளை உளவுத்துறைதான் என்னைக் காலி செய்யப் போகிறதோ என்று கூட யோசித்தேன். ‘ஏண்டா...உளவுத்துறைக்குன்னு ஒரு தகுதி தராதரம் இருக்குல்ல?’ என்று மனசாட்சி கேட்டதால் குளியலறையை விட்டு வெளியே வந்து அமர்ந்து எதிரிகளைக் கணக்கிடத் தொடங்கினேன்.

சென்னையில் எனக்கு பெரிய எதிரிகள் இல்லை. திருமணத்திற்குப் பிறகான ஜீவகரிகாலன் மாதிரி ஒரு சிலர் இருந்தாலும் தங்கியிருக்கும் இடத்தை ஒசாமா பின் லேடன் போல மிக ரகசியமாக வைத்திருக்கிறேன். வேறு யார்தான் எதிரி? கடந்த முறை அந்த வளாகத்தின் வாட்ச்மேன் தேநீர் குடிக்கக் காசு கேட்டார். என்னைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமல்லவா? மூன்று மாதங்களுக்கு முன்பாக நூறு ரூபாய் கொடுத்திருந்தேன். மறுபடியும் இருபது ரூபாயா என்று எதிர்கேள்வியை எனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டு ‘சாயந்திரம் வரும் போது ஏ.டி.எம்மில்’ எடுத்து வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். ‘இருபது ரூபாய்க்கு ஏ.டி.எம் போறானாமா..சில்ரப்பயல்’ என்று கூட அவர் நினைத்துவிட்டுப் போகட்டும். ஆனால் மாலையில் அறைக்கே செல்லாமல் அப்படியே பேருந்து பிடித்து ஊருக்கு வந்துவிட்டேன். ஒருவேளை அந்தக் கடுப்பில் கூட அவர் இருந்திருக்கலாம்.

இருபது ரூபாய் தரவில்லை என்பதற்காகவெல்லாம் உயிர்க்கொலை நடக்குமா? நடந்தாலும் நடக்கும். 

பரிசோதனைகளைச் செய்து பார்த்துவிடலாம் என்று ஒரு சிறு குடுவையில் கொஞ்சம் நீரைப் பிடித்து முகத்தை தூரமாக நகர்த்திக் கொண்டு அதற்குள் தீக்குச்சியை உரசி வீசினேன். குப்பென்று எரியும் என்று எதிர்பார்த்தால் சொய்ய்ங் என்று அணைந்துவிட்டது. நிச்சயமாக எரிபொருள் இல்லை. ஒருவேளை விஷமாக இருக்கக் கூடும் என்று ஒரு கரப்பான் பூச்சி மீது ஊற்றினால் அதுவும் குடுகுடுவென்று துள்ளி ஓடிவிட்டது. வேறு என்னவாக இருக்கும்? மெல்லக் கொல்லும் விஷமாகக் கூட இருக்கலாம். பாட்டில் நீரில் முகத்தைக் கழுவிக் கொண்டு- மேக்கப் ஒன்றுதான் கேடா? மேக்கப் என்றவுடன்தான் நினைவுக்கு வருகிறது. இன்ஸ்டாகிராமில் காஜல் அகர்வால் படங்களைப் பார்த்தீர்களா? எப்படியெல்லாம் என்னையும், என்னைப் போன்றவர்களையும் ஏமாற்றியிருக்கிறாள்? கிராதகி.


திருமணமான காலத்திலிருந்து அவளுக்காகச் சில்லரைகளை சிதறவிட்டுக் கொண்டிருக்கிறேன். வேணியிடம் கூட ‘நான் வேணும்ன்னா காஜலைக் கட்டிக்கிறேன்’ என்று சொல்லிக் கடுப்பேற்றியிருக்கிறேன். ‘ஸ்ரீதேவி காலத்திலிருந்து சொட்டை விழுந்த நாற்பது வயது ஆட்களுக்கு இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்படும் நாயகிகள் அதிகம் தெரியுமா என்று கேட்டு லோலாயம் செய்திருக்கிறேன்’. ‘நீ கட்டிக்குவ...அவ உன்னைக் கட்டிக்குவாளா?’ என்று அவளுக்குத் திரும்பக் கேட்டு பல்பு கொடுக்கத் தெரியாது என்பதுதான் என் பெரும்பலம். அத்தனை கனவுகளிலும் ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கி ஒரே போடாகப் போட்டுவிட்டாள் காஜல். இனி காஜலை விட்டுவிட்டு வேறு ஒரு நல்ல அழகியாகத் தேட வேண்டும். காஜல் இருக்கட்டும். வாட்ச்மேன் கதைக்கு வருகிறேன்.

ஜெயந்தி என்றொரு வீடு பார்த்துத் தரும் தரகர் இருக்கிறார். அவரை அழைத்து ‘எனக்கு ஒரு வீடு பார்த்துக் கொடுங்க’ என்றேன். ‘இப்படித்தான் சார் சொல்லுவீங்க...நான் மண்டை காஞ்சு தேடி வைப்பேன்..அப்புறம் நீங்க கோயமுத்தூர் போய்ட்டேன்னு சொல்லுவீங்க...நீங்க வேற புரோக்கர் பார்த்துக்குங்க’ என்றார். எனக்குத் தெரிந்த ஒரே இனாவானா புரோக்கர் ஜெயந்திதான். 

பொதுவாக மற்ற புரோக்கர்களிடம் நடக்கும் எனது உரையாடல் இதுதான்.

‘எவ்வளவு பேர் சார்?’ 

‘நான் ஒருத்தன் மட்டும்தாங்க..வந்தா போனா தங்க ஒரு ரூம் வேணும்’

‘என்ன பட்ஜெட்டு?’

‘எவ்வளவுல கிடைக்கும்ன்னு நீங்களே சொல்லுங்க..சென்னைக்கு நான் புதுசு’

‘பத்தாயிரத்துல ஒண்ணு இருக்கு...பார்க்குறீங்களா? பத்து மாச வாடகை அட்வான்ஸ்’

மனம் கணக்குப் போடும். ‘ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ், பத்தாயிரம் புரோக்கர் கமிஷன். அநியாமா இருக்கே’ என்று நினைத்துக் கொள்வேன்.

‘இல்ல சார்..நான் ஒருத்தன் தான்...எப்பவாச்சும் தங்கறதுக்கு எதுக்கு பத்தாயிரம்ன்னு யோசிக்கறேன்’

‘அப்படின்னா அஞ்சாயிரம் ரூபாய்க்கு ஒண்ணு இருக்கு..ஆனா ஆஸ்பெஸ்டாஸ் சீட்..ஓகேவா?’

‘ஆஸ்பெஸ்டாஸா? வேண்டாங்க?’

‘சரி சார்...வேற ஏதாச்சும் இருந்தா சொல்லுறேன்’ - நடுவில் ஏழாயிரம், எட்டாயிரம் இருப்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியவே தெரியாது.

அவ்வளவுதான். புரோக்கர்களுடனான உரையாடல் முடிந்துவிடும். அதன் பிறகு அழைத்தால் எடுக்கவே மாட்டார்கள். அநேகமாக ‘சாவுகிராக்கி 43’ என்று பதிவு செய்து வைத்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன். அது என்ன 43? என்னை மாதிரியே இந்த ஊரில் 42 சாவுகிராக்கிகளாவது இருப்பார்கள் என்னும் நம்பிக்கைதான்.

நம் நேரம் கெட்டுக் கிடந்தால் புள்ளப்பூச்சிக்குக் கூட கொடுக்கு முளைத்துவிடும். ஜெயந்திக்கும் முளைத்துவிட்டது. பாட்டில் நீரில் வாய் கொப்புளித்துவிட்டு, நாற்பது ரூபாய் கொடுத்து மினரல் வாட்டர் கேனில் நனைந்தும் நனையாமலும் குளித்துவிட்டு- ‘குளிக்க மினரல் வாட்டர் கொடுக்காததால் கோபித்துக் கொண்ட நடிகை’ என்ற தினத்தந்தி செய்தியெல்லாம் நினைவில் வந்து போனது. அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

சென்னையில் எந்த நீரில் குளித்தாலும் வந்து சேரும் போது வியர்வையில் குளித்துவிடுகிறோம். தனியாக குளியல் எதற்கு?

அலுவலகப்பணியாளரிடம் ‘வேற ரூம் ஏதாச்சும் இருக்காங்க?’ என்றேன். விவரங்களையும் சொன்னேன். ‘என்னது பெட்ரோலா? ஆழமா போர்  போட்டு தண்ணிக்கு பதிலா பெட்ரோல் வந்துடுச்சா?’ என்றார். மொக்கையான ஜோக்தான் என்றாலும் யோசிக்க வேண்டிய விஷயம்தான். நாள் முழுவதும் குழப்பத்திலேயேதான் ஓடியது. மாலை திரும்பும் போது இருபது ரூபாய் எடுத்து பத்திரமாக வைத்துக் கொண்டேன். வாட்ச்மேன் மட்டுமே சரணாகதி. ஆளைக் காணவில்லை. அவர் வரும் வரைக்கும் அமர்ந்திருந்து ‘டீக்கு வெச்சுக்குங்க’ என்றேன். 

முறைத்தார். வழிந்தேன்.

‘என்னங்க தண்ணில பெட்ரோல் வாசமடிக்குது?’

கிணற்றுக்கு அருகில் குழாயைத் திருகி நீரைப் பிடித்து வாயில் வைத்துப் பார்த்துவிட்டு ‘இதுவா? மருந்து’ என்றார்.

‘கிணத்துல தண்ணி அதிகமா இருந்தா வாசம் தெரியாது...கம்மியா இருக்குது..அதான்’ என்றார்.

கிணற்றை எட்டிப் பார்த்தேன். ஒன்றரை வாளி அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. அநேகமாக இந்த ஒன்றரை வாளிக்கு ஒரு பாட்டிலை ஊற்றியிருப்பார் போலிருக்கிறது. ஒன்றரை வாளியும் வற்றிவிட்டால் அவ்வளவுதான். என்ன மருந்தோ தெரியவில்லை. குளிக்கலாமா என்று கேட்டதற்கு ‘குடித்தாலும் ஒன்றும் ஆகாது’ என்றார். சதாம் உசேன் மாதிரிதான் நானும். மினரல் குடிநீர் போத்தலில் கூட ஊசி வழியாக மருந்து செலுத்தியிருப்பார்களோ என்று சந்தேகப்படுவேன்.

‘நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?’ என்று யாரும் தயவு செய்து கேட்க வேண்டாம். பொமரேனியன் கூட என்னை மதிப்பதில்லை என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். குறைந்தபட்சம் நானாவது அப்படி நினைத்துக் கொள்கிறேனே!

6 எதிர் சப்தங்கள்:

இமேஜ் நெஸ்ட் ஷிவா said...

கூடுவாஞ்சேரி தாண்டி ட்ரை பண்ணா நல்ல வீடா கிடைக்க வாய்ப்பிருக்கு. சென்னைக்கு வாக்கபில் டிஸ்டன்ஸ்தான்.

சேக்காளி said...

//உளவுத்துறைக்குன்னு ஒரு தகுதி தராதரம் இருக்குல்ல?//
அப்டியா?

dhana said...

So..
அப்ப சென்னைல உங்களுக்கு ஒரு வீடு இருக்குன்னு சொல்லுங்க ......

vinu said...

//Blogger dhana said...
So..
அப்ப சென்னைல உங்களுக்கு ஒரு வீடு இருக்குன்னு சொல்லுங்க ......//

athu veedu illey sir, "chinna" veedu...... mani sirkku ovvoru ooruleyum chinna veedu irrukum poleyeee...? ;)

சூனிய விகடன் said...

ரொம்பவும் wayward ஆன பதிவு.

Muralidharan said...

Why don't you try OYO or similar service just for specific days and near by your office? it wont be costlier if you are not going to stay morethan a week. Atleast you will get better water and other services.