நல்ல மனிதர்களின் தொடர்புகளைச் சம்பாதிப்பதுதான் வாழ்க்கையில் நாம் செய்யக் கூடிய மிகப்பெரிய காரியம். அப்படியான ஒரு கல்லூரி மாணவன் அபிஷேக். முன்பின் பார்த்ததில்லை. அமெரிக்காவில் நான்காம் ஆண்டு பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார். University of California Berkeley. அபிஷேக்கின் தந்தை சோழன் நிசப்தம் வாசிக்கிறவர். சில மாதங்களுக்கு முன்பாக அபிஷேக் பற்றிப் பேசினார். தமது கல்லூரி, படிப்பு போக மிச்சமிருக்கும் நேரத்தில் உள்ளூரில் சிரியா நாட்டின் அகதிக் குழந்தைகளுக்கு பாடம் எடுப்பது மாதிரியான காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறவர் அபிஷேக்.
‘இந்தியாவில் ஏதாவது அப்படிச் செய்ய முடியுமா?’ என்று கேட்டார் சோழன். அப்பொழுது குழப்பமாகத்தான் இருந்தது. எம்.ஜி.ஆர் காலனி மாதிரியான பகுதியைச் சார்ந்த மாணவர்களைத்தான் முதலில் யோசித்தேன். ஆனால் அமெரிக்க மாணவர் நடத்தும் பாடத்தைப் புரிந்து கொள்கிற அளவுக்கு அவர்களுக்கு இன்னமும் திறன் வளர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. அல்லது நிசப்தம் உதவியில் படிக்கும் மாணவர்களைத் திரட்டி ஓரிடத்தில் தங்க வைத்து அவர்களுக்கு ஒரு வொர்க்ஷாப் மாதிரி நடத்தலாம் என்று கூட யோசனை இருந்தது. ஆனால் வெவ்வேறு ஊர்களிலிருந்து மாணவர்களை அழைத்து வருவது, தங்க வைப்பதெல்லாம் சிரமமான காரியம். கல்வி நிறுவனமாக இருந்தால் சரியாக இருக்கும். ஆசிரியர்கள் இருப்பார்கள்; கணினி ஆய்வகம் இருக்கும். முதலில் ட்ரையல் பார்த்துவிடலாம் என்று கோபி கலைக்கல்லூரியை அணுகினேன். அந்தக் கல்லூரியில்தான் நாம் விரும்புவதைச் செய்து பார்க்க அனுமதிக்கிறார்கள். வழக்கம் போலவே பேராசிரியை கலைச்செல்விதான் இணைப்புப் பாலம். அங்கேயிருக்கும் மாணவர்கள் கிராமப்புறத்தைச் சார்ந்தவர்கள். இந்த மாதிரி வொர்க்ஷாப் எதுவும் நடத்தியதில்லை என்றார்கள்.
அதன் பிறகு அபிஷேக்கிடம் பேசி, ஐந்து நாட்களுக்கு அவர் என்ன நடத்தப்போகிறார் என்பதைத் தெளிவான பாடத்திட்டமாக்கி அதைக் கல்லூரியிடம் கொடுத்து அந்தப் பாடத்திட்டத்தைப் புரிந்து கொள்ளும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்துத் தரச் சொல்லி- இவர் அமெரிக்காவில் படிக்கிறவர்; இங்கே கிராமங்களில் அதைப் புரிந்து கொள்ளுமளவுக்கு மாணவர்களின் திறன் இல்லாமல் இருக்கலாம்- சரியான மாணவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதை அபிஷேக்கிடம் தெரியப்படுத்தி, நாற்பத்தைந்து மாணவர்களை வைத்து நேற்று பயிலரங்கம் தொடங்கிவிட்டது.
அபிஷேக்கும் அவரது அம்மாவும் திருப்பூரில் உள்ள தமது உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு தினசரி காலையில் வந்துவிடுகிறார்கள். காலை பத்து மணிக்குத் தொடங்கி மாலை நான்கு மணி வரைக்கும் பயிலரங்கம். அபிஷேக் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர். தமிழ் பேசத் தெரியும் ஆனால் தமிழ்நாட்டில் பாடம் நடத்துவதில் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறியதாகச் சொன்னார்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு சரி செய்து கொண்டிருக்கிறார்.
எப்பொழுதோ ஒரு முறை விடுமுறை கிடைக்கிறது. இரண்டு மூன்று வாரங்கள் இந்தியாவில் தங்க வாய்ப்புக் கிடைக்கிறது. அந்தச் சந்தர்ப்பத்தில் உறவினர்களைச் சந்திக்கச் செல்வதையும், ப்ளாக் தண்டரில் குளியல் போடுவதையும், ராமேஸ்வரம் புனித யாத்திரைக்குச் செல்வதையும் விட்டுவிட்டு தமக்கு சம்பந்தமில்லாத எங்கேயோ ஒரு கிராமத்தில் இருக்கும் நாற்பது மாணவர்களுக்குத் தமக்குத் தெரிந்த பாடத்தைச் சொல்லித் தருவதற்காக தினசரி டாக்ஸி ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு அம்மாவும் மகனுமாக வந்து போகிறார்கள். அதனால்தான் பத்தியின் தொடக்கத்திலேயே சொன்னேன் - நல்ல இதயம் கொண்ட மனிதர்களின் தொடர்புகளைச் சம்பாதிப்பதுதான் வாழ்க்கையில் நாம் செய்யக் கூடிய மிகப்பெரிய காரியம்.
அபிஷேக்கும் சோழனும் ஆரம்பத்தில் தொடர்பு கொண்ட போது, ‘இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வருமா?’ என்று தயங்கி சரியாக பதில் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் விடவில்லை. தொடர்ச்சியாகப் பேசினார்கள். வாட்ஸாப் குழுமத்தைத் தொடங்கி அதில் விசாரித்தார்கள். அதன் பிறகுதான் ‘செய்துதான் பார்க்கலாமே’ என்று தோன்றியது. அமெரிக்காவிலிருந்து வந்து இதைச் செய்வதனால் அபிஷேக்குக்கு பத்து பைசா பிரயோஜனமில்லை. சிரமம்தான் அதிகம். தமது தாய்நாட்டில் சிறு கல்லையாவது தூக்கிப் போடுவோம் என்று அவருக்கு இருக்கும் ஆர்வத்தைப் பாராட்டியே தீர வேண்டும். இதையெல்லாம் நிச்சயமாக வெளிப்படையாகப் பாராட்டி எழுதிவிட வேண்டும். வெளிநாட்டில் வாழ்கிறவர்களுக்கு இந்தியாவில் தம்மால் எதையெல்லாம் செய்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்ற ஒரு புரிதல் கிடைக்கும்.
படிப்புக்குப் பிறகு அங்கேயே வேலையும் வாங்கிவிடுவார். ஆனால் இத்தகைய அறிவு சார்ந்த மனிதர்களை எதிர்காலத்திலும் கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டுக்காகத் தொடர்ச்சியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான நீண்டகாலத் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
படிப்புக்குப் பிறகு அங்கேயே வேலையும் வாங்கிவிடுவார். ஆனால் இத்தகைய அறிவு சார்ந்த மனிதர்களை எதிர்காலத்திலும் கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டுக்காகத் தொடர்ச்சியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான நீண்டகாலத் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
பயிலரங்கின் முடிவில் கல்லூரி மாணவர்களிடம் பேசி சாதகங்கள், பலன்களைக் கண்டறிந்து ஒரு முடிவுக்கு வருவோம்.
கல்லூரி நிர்வாகத்திற்கு நன்றி. அபிஷேக்குக்கு மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும். அவருடைய நல்ல மனதுக்கு பெரும் உயரங்களை அடையட்டும். அபிஷேக்கின் தந்தை நிசப்தம் வாசகர் என்பதால் தனியாக நன்றி சொல்ல வேண்டியதில்லை. அபிஷேக்கின் உடன் பயணிக்கும் அவரது தாய்க்கு அன்பும் நன்றியும்.
abishekc98@gmail.com
abishekc98@gmail.com
5 எதிர் சப்தங்கள்:
Mani,
Very happy to know about this workshop. I am sure this will provide great orientation for attendees, and it is a great effort from all of you. Wishes to you, Abhishek, his parents and your team. Regards, Radhakrishnan
ஐயா, TNF (தமிழ்நாடு ஃபவுண்டேஷன்) http://tnfusa.com பற்றி உங்களுக்கோ, கலிஃபோர்னியா வாழ் திரு .சோழன் அவர்களுக்கோ தெரியாதா?
TNF மூலமாக பல மில்லியன் டாலர்கள் அமெரிக்கத் தமிழர்கள் கொடையாய்க் கொடுத்து மட்டுமின்றி பல நூறு அமெரிக்கத் தமிழ் பதின்ம வயது இளைஞர்கள் தமிழக அரசுப் பள்ளிகள் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
. அபிஷேக்குக்கு மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும். அவருடைய நல்ல மனதுக்கு பெரும் உயரங்களை அடையட்டும். அபிஷேக்கின் தந்தை நிசப்தம் வாசகர் என்பதால் தனியாக நன்றி சொல்ல வேண்டியதில்லை. அபிஷேக்கின் உடன் பயணிக்கும் அவரது தாய்க்கு அன்பும் நன்றியும்.
அதே
Hats off to Mr.Abishek..
நல்லது செய்ய முடிவெடுப்பதோடு நில்லாமல் தொடர்ந்து முயற்சித்து செய்தும் காட்டி இருக்கிறார். வாழ்த்துக்கள்.
Keep on working, great job!
Post a Comment