Jun 7, 2019

கொண்டாட்டம்

அடர்வனம் அமைத்து ஓராண்டு நிறைவடைகிறது. 

பெரும்பாலான மரங்கள் நன்கு வளர்ந்துவிட்டன. கடந்த வருடம் இந்த நேரம் கடும் வறட்சி நிலவியது. அதனால் வறட்சியைத் தாங்கக் கூடிய மரங்களாகத் தேடித் தேடி மேட்டுப்பாளையம், மரக்காணம் போன்ற இடங்களில் இருந்தெல்லாம் செடிகளை எடுத்து வந்து நட்டோம். நாம் காடு அமைத்த நேரமோ என்னவோ மழை பெய்து, நாம் தூர் வாரிய கோட்டுப்புள்ளாம்பாளையம் குளம் நிரம்பி அடர்வனத்துக்குள்ளும் புகுந்துவிட்டது. நீர் வடியவே இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. அத்தனை செடிகளும் பட்டுப் போய்விடுமோ என்ற பதற்றத்திலேயேதான் இருந்தோம். ஆனால் சொற்பமான எண்ணிக்கையிலான செடிகளைத் தவிர்த்து அனைத்தும் மிகச் சிறப்பாக வளர்ந்து விடலைகளாகி நிற்கின்றன.


முதலாண்டு கொண்டாட்டத்தை வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (09.06.2019) மாலை நான்கரை மணியளவில் கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் நிகழ்த்தலாம் என்று இளைஞர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். 

நாமே அமர்ந்து நாமே பேசுவதைவிடவும்- அதை நிறைய முறை செய்தாகிவிட்டது- முதலாண்டு கொண்டாட்டத்திற்கான தகுதியான ஆளுமை ஒருவரை அழைத்து வருவது என ஆலோசித்து, சூழலியலாளர் கோவை சதாசிவம் அவர்களை அணுகியவுடன் சம்மதம் தெரிவித்துவிட்டார். அவருடைய எழுத்துக்களின் வாசகனாகவும், பேச்சுக்களின் ரசிகனாகவும் தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. தமிழகத்தின் மிக முக்கியமான சூழலியலாளரான திரு.சதாசிவம் அவர்கள் அக்கம்பக்கத்து இளைஞர்களிடமும் உள்ளூர் மக்களிடமும் விரிவாக உரையாடவிருக்கிறார். வாய்ப்பு கிடைக்குமெனில் ஏதாவது ஒன்றிரண்டு பள்ளிக்குழந்தைகளையும் அழைத்து வந்து அவர் பேசுவதைக் கேட்க வைக்கும்படியாகத் திட்டமிட வேண்டும்.

நிகழ்வு குறித்து எல்லாவற்றையும் முழுமையாகத் திட்டமிட்டுவிட்டு பிறகு எழுதலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் வெள்ளிக்கிழமையாகிவிட்டது. இப்பொழுதே எழுதிவிட்டால் நிகழ்வுக்கு வருகிறவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்வார்கள். இப்பொழுதெல்லாம் நிசப்தம் சார்பில் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் பத்துப் பேர்களாவது வெளியூர்களிலிருந்து வந்துவிடுகிறார்கள். அவர்கள் வந்து போவதற்கோ, தங்குவதற்கோ, தேநீருக்கோ கூட எந்த ஏற்பாடுகளையும் செய்வதில்லை. அவர்களே வந்து நிகழ்ச்சி முடியும் வரைக்கும் இருந்து பிறகு கிளம்பிவிடுகிறார்கள். ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்யாவிட்டாலும் கூட குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் முன்பாகவேனும் தகவலைச் சொல்லிவிட வேண்டும் என்பதற்காகவாவது உடனே எழுதிவிடத் தோன்றியது.

இயற்கை குறித்தும், வனவிலங்குகள், பறவைகள் குறித்தும் ஒரு தேர்ந்த கதைசொல்லியாகப் பேசக் கூடியவர் சதாசிவம். அவரது எழுத்துக்களை வாசித்தவர்கள், அவரது யூடியூப் சலனப்படங்களைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். அவரது உரையை ஆற அமர உள்வாங்கிக் கேட்க வேண்டும். கிராம மக்களைவிட இளைஞர்களும் குழந்தைகளும் கேட்க வேண்டும். அது ஒரு தலைமுறைக்கான வித்தாக இருக்கும்.

வாய்ப்புள்ள நண்பர்கள் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு கோட்டுப்புள்ளாம்பாளையம் வரும்படி திட்டமிட்டுக் கொள்ளுங்கள். கோபிச்செட்டிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் ஐந்தாவது கிலோமீட்டரில் இருக்கிறது. வெளிச்சம் இருக்கும் போதே அடர்வனத்தைப் பார்த்துவிட்டு, அடர்வனம் குறித்தும் அதில் உள்ள மரங்கள், அவற்றின் சிறப்புகள், அடர்வனம் அமைக்கும் முறை ஆகியன குறித்து நம் அடர்வனத்தின் ஆலோசகர் ஆனந்தை அரை மணி நேரம் பேசச் சொல்லலாம். அந்தி சாயும் போது கோவை சதாசிவத்திடம் கதை கேட்கலாம். மாலை ஏழு மணிவாக்கில் நிகழ்ச்சி நிறைவடைந்துவிடும்.

ஒரு மாலை நேரத்தை மிகப் பயனுள்ளதாக்கலாம். வருக!

தொடர்புக்கு: 98420 97878/96633 03156

6 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

WILL THE EDUCATION MINISTER PRESENT? (OR) YOU MAY SEND THE PHOTOS AND VIDEOS OF THE FOREST TO HIM!

Janesha Habib said...

அருமை வாழ்த்துக்கள் ..

Ganesh Babu said...

வாழ்த்துக்கள்.நமது முயற்சியைப் போலவே நாம் வைத்த மரக்கன்றுகளும் போராடி இன்று மரமாய் காட்சி அளிக்கிறது

நாடோடிப் பையன் said...

Mani

Awesome accomplishment! Congratulations and sincere thanks to you and the team.

சேக்காளி said...

Jaypon , Canada said...

Congrats on this endeavor.