ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை வேளை அது. மதியத் தூக்கத்துக்குப் பிறகு எழுந்து அமர்ந்திருந்தேன். சூலூர் தொகுதியின் பிரச்சாரம் சூடு கிளப்பிக் கொண்டிருந்தது. தூரத்துச் சொந்தக்காரர் ஒருவர் அரசியல்வாதி. ஏதாவது சூடாகச் சொல்வார் எனத் தோன்றியது.
அலைபேசியில் அழைத்து ‘சித்தப்பா, வீட்ல இருக்கீங்களா?’ என்றேன்.
‘பிரச்சாரத்துல இருக்கேன்’ என்றார்.
‘சும்மா உங்களைப் பார்க்க வரலாம்ன்னு கேட்டேன்’ என்றேன். பத்து மணிக்கு வரச் சொன்னார். இரவு பத்து மணி. அரசியல்வாதிகளுக்கு பத்து மணியெல்லாம் பிரச்சினையே இல்லை. எங்கள் வீட்டில்தான் பதறினார்கள். ‘அந்நேரத்துக்கு அப்புறமெல்லாம் போக வேண்டியதில்லை’ என்று ஆளாளுக்கு பன்னாட்டு. எப்படியோ சமாளித்து எட்டரை மணிக்குக் கிளம்பினேன். பதினைந்து கிலோமீட்டர் பயணிக்க வேண்டும்.
தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்திருந்தது. வீட்டு வாசலிலேயே ஒரு பொமரேனியன் வள் வள்ளென்று வந்தது. அவசரமாக ஓடி வந்தவர் ‘ஒண்ணும் பண்ணாது வாங்க’ என்றார். அவர் வேறு என்னவோ கேள்வி கேட்டார். எனக்கு கண்ணெல்லாம் பொமரேனியன் மேலேயே இருந்தது. ‘ஒண்ணும் பண்ணாது’ என்றவர் என்ன நினைத்தாரோ ‘அது வர்றவிய போறவியளையெல்லாம் கடிச்சு வெச்சுடுதுங்க’ என சர்வசாதாரணமாகச் சொன்னார். இரண்டாவது வாக்கியம்தான் உண்மை.
‘அடப்பாவிகளா’ என்று மனதுக்குள் நினைத்து ஓரடி பின்னால் நகர்ந்தேன். அந்த பைரவர் என்னையே முறைத்துக் கொண்டிருந்தார். மறுபடியும் சித்தப்பா துரத்திவிட்டார். அது வீட்டுக்குள் ஓடியது.
‘இங்கேயே நின்னு பேசிக்கலாம் வாங்க’ என்றேன்.
‘அட வாங்க உள்ளுக்குள்ள போலாம்’
‘சித்தப்பா..அவியெல்லாம் தூங்கிட்டு இருப்பாங்க’- நாம் சொன்னால் சொந்தக்காரர்கள் எப்பொழுது கேட்டிருக்கிறார்கள். வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டார். அந்த பொமரேனியன் சத்தமில்லாமல் எங்களுக்கு முன்பாக படுத்திருந்தது. அரசியல் நிலவரமெல்லாம் பேசி முடித்த போது மணி பத்தரைக்கு மேல் ஆகியிருந்தது. கிளம்பினேன்.
‘நாய் கம்முன்னு இருக்குமுங்களா?’
‘வாங்க..நான் வர்றேன்’ என்று வழியனுப்புவதற்காகக் கிளம்பி வந்தார். பொமரேனியன் எழுந்து வரவில்லை. அதனால் கொஞ்சம் தைரியமாக நடந்தேன். கிட்டத்தட்ட வெளிநடவைக்கு வந்தாகிவிட்டது. எதற்காக வந்ததோ தெரியவில்லை- ஓட்டமாக ஓடி வந்து ஒரு கவ்வு கவ்விவிட்டது. எந்த இடம் என்று கேட்டால், அது சொல்லக் கூடாத இடம். பற்கள் பதிந்தனவா? ரத்தம் வந்ததா என்று எதுவும் தெரியவில்லை. எனக்கு என்ன கிலோக்கணக்கிலா சதை இருக்கிறது? அது மேல என்ன குறியோ தெரியவில்லை.
‘கடிச்சு போடுச்சுங்களா?’ என்றார்.
‘ஆமாங்க’
‘எந்த இடத்துல?’
‘தொடைலைங்க’
‘காட்டுங்க...ரத்தம் வருதான்னு பார்க்கிறேன்’
‘இல்லைங்க தொடைக்கும் கொஞ்சம் மேல..காட்ட முடியாது..நான் போய் பார்த்துக்குறேன்’
‘அட பேண்ட்டைக் கழட்டுங்க’
ஆளை விடுங்க என்று நினைத்துக் கொண்டு வண்டியைக் கிளப்பும் போது ‘டாக்டர்கிட்ட காட்டிடுங்க’ என்றார்.
‘நாய்க்கு ஊசி போட்டிருக்குங்களா?’
‘எப்பவோ போட்டதுங்க...யாரை வேணும்ன்னாலும் கடிச்சு வெச்சுடுது..எதுக்கும் டாக்டர்கிட்ட காட்டிடுங்க’
உடனடியாக சிவசங்கர் டாக்டரை அலைபேசியில் அழைத்தேன். எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு அவரும் சொல்லி வைத்தாற்போல ‘எதுக்கும் டாக்டர்கிட்ட காட்டிடுங்க..ரேபிஸ் வந்துடுச்சுன்னா அதுக்கு மருந்தே இல்லை’ என்றார்.
‘டாக்டர், ஜீன்ஸ் பேண்ட், அதுக்குள்ள ஜட்டி, அதையும் தாண்டித்தான் கடிச்சுது’ என்றேன். அவர் சிரித்தார்.
சட்டையை பேண்ட்டுக்குள் டக் செய்யாமல் முக்கியப் பகுதியை மறைத்திருக்க வேண்டும். காம வெறி பிடித்த நாய் போலிருக்கிறது.
எவ்வளவு சீக்கிரம் மருத்துவரைப் பார்க்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பார்த்துவிட வேண்டும் என்றார் சிவசங்கர். ஞாயிற்றுக்கிழமை அந்நேரத்தில் எந்த மருத்துவர் இருப்பார்?
கோவை மெடிக்கல் செண்டருக்குச் சென்றேன். அவசரப்பிரிவுக்குச் செல்லச் சொன்னார்கள்.
‘என்னங்க ஆச்சு?’ என்ற நர்ஸிடம் ‘நாய் கடிச்சுடுச்சுங்க?’என்றேன்.
‘எந்த இடத்துல?’
‘பின்னாடிங்க’- அந்த நர்ஸ் கமுக்கமாக சிரிப்பது போலத் தோன்றியது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை.
‘ரத்தம் வருதா?’
‘தெரியலைங்க..நேரா இங்கதான் வர்றேன்’
‘கடிச்சுதா? புரண்டுச்சா?’
‘பேண்ட் மேல கை வெச்சுப் பார்த்தேன்...ஈரமா இருந்துச்சுங்க’
அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.
‘டாக்டர் பேரு என்னங்க?’ என்றேன்.
வழக்கமாக மருத்துவமனையில்தான் நம் பெயரைக் கேட்பார்கள். இவன் எதுக்கு டாக்டர் பெயரைக் கேட்கிறான் என்று குழம்பியவராக ‘டாக்டர். திவ்யா’ என்றவர் ‘பேண்ட்டைக் கழட்டிட்டு அந்த பெஞ்ச் மேல படுத்துக்குங்க..டாக்டர் வந்து பார்ப்பாங்க’ என்றார்.
கே.எம்.சி.ஹெச் அவசர சிகிச்சைப்பிரிவு எனக்கு அத்துப்படி. அங்கு இரண்டு வழிகள் உண்டு.‘முன்னப்பின்ன தெரியாதவங்ககிட்ட பேண்ட்டைக் கழட்ட முடியாது’ என்று நினைத்துக் கொண்டு வேக வேகமாக வெளியேறி வந்துவிட்டேன்.
இனி எங்கே மருத்துவமனையைத் தேடுவது என்று பெருங்குழப்பம். காளப்பட்டி வரைக்கும் தென்பட்ட இரண்டு மூன்று மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை. ‘அட பைரவா...எந்தச் சிவன் கோவிலுக்கு வந்தாலும் உன்னையக் கும்பிடாம போறதில்லையேய்யா...என் மேல ஏய்யா ஏவிவிட்ட?’ என்று மனதுக்குள் கறுவிக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன். ரேபிஸ் வந்துவிட்டால் தண்ணீர் கூட குடிக்க முடியாது. நடுக்கம் வந்துவிடும். தனியறையில் தங்க வைத்துவிடுவார்கள். அதன் பிறகு அப்படியே இறந்து போக வேண்டியதுதான். நினைக்க நினைக்க வண்டியின் வேகம் அதிகரித்தது.
சத்தியமங்கலம் செல்லும் குமரன் என்றொரு புதிய இன்னொரு மருத்துவமனையைக் கண்டறிந்தேன். இரண்டு ஆண் மருத்துவர்கள் இருந்தார்கள். இருவரும் டார்ச் லைட் அடித்து ஆராய்ந்து ‘சிராய்ப்பு கூட இல்லை..ஊசி தேவையில்லை..இருந்தாலும் போட்டுக்கிறது நல்லது’ என்றார்கள். ‘சிராய்ப்பே இல்லைன்னா எதுக்கு ஊசி?’ என்று தோன்றியது. மணி பனிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை- இன்னொரு மருத்துவரிடம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தேன்.
விமல்ஜோதி மருத்துவமனைக்கு வண்டி ஓடியது. அங்கேயும் ஒரு ஆண் மருத்துவர்தான். அவரும் லைட் அடித்துவிட்டு ‘ஒண்ணும் பிரச்சினையில்லை..ஊசி வேண்டாம்’ என்றார். அப்பாடா என்றிருந்தது. வீட்டுக்குச் செல்லும் போது மணி ஒன்றாகியிருந்தது. அம்மாவும் வேணியும் தூக்கக் கலக்கத்தில் இருந்தார்கள். எதுவும் சொல்லவில்லை என்றால் பேசாமல் படுத்திருப்பார்கள். ‘என்னை நாய் கடிச்சுடுச்சு’ என்றேன். மேய்ப்பது எருமை; இதில் பெருமை வேற- இருவருக்கும் படு அதிர்ச்சி. தூக்கம் கலைந்து ‘எங்க கடிச்சது’ என்றார்கள்.
‘கால்லதான்....டாக்டர்கிட்ட காட்டிட்டேன்...ஒண்ணும் பிரச்சினையில்லை’ என்று சொல்லிவிட்டார்கள் என்றேன்.
‘கண்ட நேரத்துக்கு கண்ட பக்கம் போவக்கூடாதுன்னு சொன்னா கேட்டாத்தானே ஆகும்? பேசாம பெங்களூர்லேயே இருந்திருக்கலாம்’ என்று திட்டிவிட்டு அம்மா படுக்கச் சென்றார். வேணி எதுவும் சொல்லவில்லை. ‘எப்போ பாரு...இப்படி ஏதாச்சும் குண்டக்க மண்டக்க செஞ்சுடுறான்’ என்று ஏதாவது மனதுக்குள் நினைத்திருப்பாள்.
படுத்தும் தூக்கம் வரவில்லை. தொண்டை கமறுவது போலிருந்தது. தண்ணீரைக் குடித்தேன். நல்லவேளையாகத் தண்ணீர் மீது பயமெல்லாம் இல்லை. எதற்கும் இருக்கட்டும் என்று அடுத்த நாள் வயசான தாத்தா டாக்டர் ஒருவரிடமும் காட்டிவிட்டு- இரட்டைப்படை இலக்கம் நல்லதுக்கில்லை- காட்டியதே காட்டியாகிவிட்டது, கணக்குக்கு மூன்றாக இருக்கட்டும்- அவர் ஒரு டிடி ஊசியைப் போட்டுவிட்டார். அதன் பிறகுதான் பயம் நீங்கியது. அப்பாடா!
‘உங்களுக்கென்ன ஊருக்கு வந்துட்டீங்க’ என்று கேட்பவர்களுக்கு சமர்ப்பணம் இது. இனிமேல் ‘உங்களுக்கென்ன ஊருக்கு வந்துட்டீங்க’ என்று மெயில் மெஸேஜ் அனுப்பினால் உங்களுக்கும் ஏவிவிடச் சொல்லி பைரவரை வேண்டிக் கொள்வேன்.
12 எதிர் சப்தங்கள்:
முந்தைய "வேரும் மரமும்" பதிவில், நீங்க போட்டிருந்தது
//சொன்னால் சொந்த ஊரை விட்டுவிட்டு வெளியில் வாழ்கிறவர்களுக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது போல ஆகிவிடும். //
சொல்றதெல்லாம் சொல்லிப்புட்டு அப்புறம் மறக்காம disclaimer வேற. அயல் தேசத்தில் பிழைப்பை ஓட்டுகிற எங்கள் போன்றவர்களின் வயித்தெரிச்சல் தான் பொமரேனியன் வடிவில் வந்துள்ளது ..
ஏதோ, நாங்கெல்லாம் நல்லவர்களாக இருக்கப்போய் வெறும் சிராய்ப்போடு போனது.
அன்புடன்,
சே ச
பொருளாளர் (கோ ப சே)
வா.ம பாறைகள்
மணி,எதற்கும் பைரவருக்கு ஒரு மணி வாங்கி கட்டுவதாக வேண்டிக்குங்க.
அந்த நாய் என்னாச்சு...? டாக்டரான்ட இட்டுனு போனாய்ங்களா..?
//அது வர்றவிய போறவியளையெல்லாம் கடிச்சு வெச்சுடுதுங்க//
ஒமக்கு மட்டும், ரேபிஸ் வந்துவிட்டால் தண்ணீர் கூட குடிக்க முடியாது. நடுக்கம் வந்துவிடும். தனியறையில் தங்க வைத்துவிடுவார்கள். அதன் பிறகு அப்படியே இறந்து போக வேண்டியதுதான் ன்னு பயம் வந்து மூணு டாக்டர்களை பாக்க தோணுது.
ஆனா அந்த நாய்க்கு ஒரு ஊசிய போட்டுட்டா வர்றவிய போறவியளையெல்லாம் ரேபிஸ் ல இருந்து காப்பாத்தலாம்னு தோணல இல்ல.
நீருதாம்ய்யா மொத ரேபிஸ் தீவிரவாதி
இதெல்லாம் நாளைக்கு சரித்திர உண்மையா மாறும்
//ஏதாவது சூடாகச் சொல்வார்//
நம்ம பக்கமும் சூடாக் சொல்லுற ஒரு ஆளு இருக்காரு.அடுத்த ஞாயித்துக் கெழம ராத்திரி வேணா வர்றியளா??
"அடுத்த நாள் வயசான தாத்தா டாக்டர் ஒருவரிடமும் காட்டிவிட்டு- இரட்டைப்படை இலக்கம் நல்லதுக்கில்லை- காட்டியதே காட்டியாகிவிட்டது, கணக்குக்கு மூன்றாக இருக்கட்டும்- " பக்க கொங்கு மனோபாவம்.
Very funny blog post, Mani! Only you will make such a humor out of a tragedy.
On a serious note, I hope you heal fast.
may be you are undergoing rahu dasa. bites by snake dog and scorpion supposed to happen only then
நேரங்கெட்ட நேரத்துல சும்மா வீட்டுக்கு மொக்க போட வரவங்களை கடிக்குறதுக்குன்னே உங்க சித்தப்பா அவரோட நாயை ட்ரைன் பண்ணி வெச்சுருப்பாருனு நினைக்குறேன்.. பொதுவாக எந்த சிறிய ரக நாயும் கடிக்கும் (small dog syndrome). வேணும்னா நல்ல பெரிய ஜேர்மன் ஷெப்பர்ட் அல்லது ராட்வெய்லர் போன்ற நாய்களிடம் பரிசோதித்து பார்க்கவும் :)
very entertaining article, couldn't stop laughing till end of article
“காரணம்? காரணமே வேண்டாம். ஓடுகிற காரணம் ஒன்றே போதும். துரத்துவதற்கு. வாழ்க்கையின் தத்துவமே இதுதான் என்று புரிந்துகொள்ள நான் வக்கற்றுப் போனால் தப்பு யார் மேல்?”
லா.ச.ராவின் வரிகளில் மிகப் பிடித்த வரிகள் இவை. பிராயச்சித்தம் நாவலின் வரிகள் இவை. நாவலோடு சேர்த்து வாசிக்கும் போது என்ன அர்த்தம் வேண்டுமானாலும் வரட்டும். தனியாக வாசிக்கும் போது அது தரக் கூடிய அர்த்தம் ஒன்றுதான். வாழ்க்கையில் துணிந்து நின்றால் மற்றவர்கள் துரத்த யோசிப்பார்கள். மற்றவர்கள் மட்டுமில்லை-விதியும்தான். அதுவே ஓடுகிறான் என்று தெரிந்துவிட்டால் அவ்வளவுதான். நாய் நரி கூட துரத்த ஆரம்பித்துவிடும்.
- From your earlier article.
Hi Mani,
A sincere advice from my experience, to be on the safer side, please take an anti-rabies shot ASAP, anyways.
Since the dog was vaccinated a while ago - we can't be best assured.
Post a Comment