தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் காலூன்றவே முடியாது என்று நண்பரொருவர் முகத்தில் நரம்பு புடைக்க பேசிக் கொண்டிருந்தார். தேனீர் அருந்தும் போது இதை அவர் சொன்னார். அவர் இந்துத்துவ சக்திகள் எனச் சொல்வது பாஜகவை. கடந்த ஆண்டு வரைக்கும் கம்யூனிஸ்ட்களின் பழைய கோட்டை, மம்தாவின் எஃகுக் கோட்டை என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட வங்கத்தில் இன்றைக்கு போட்டி மம்தாவா பாஜகவா என்றுதான் மாறியிருக்கிறது. இன்றைக்கு பாஜகவால் தனித்துப் போட்டியிடுமளவுக்கு வலுவில்லாத ஒரே மாநிலம் என்றால் தமிழகம்தான். விட்டு வைப்பார்களா என்ன? ஒருவேளை பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்றிருந்தால் தமிழகத்தில் பாஜக அடுத்த சில ஐந்தாண்டுகளுக்கு வலுப்பெறாமல் போயிருக்க சாத்தியமிருக்கிறது. ஆனால் பாஜகவின் இன்றைய வலுவான நிலைமையை வைத்துப் பார்க்கும் அப்படி முழுமையாக நிராகரிக்க முடியவில்லை.
‘அப்போ பாஜக வந்துடுமா?’ என்றார்நண்பர். அதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.
தமிழகத்தில் எப்பொழுதும் இருகட்சி சூழல்தான் இருந்திருக்கிறது. ஒன்று வலுவிழக்கும் போது இன்னொன்று உறுதியாகும். கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் என்ற சூழலில் திமுக வலுப் பெற்றது; அதன் பிறகான காங்கிரஸ்-திமுக என்ற காலகட்டத்தில் காங்கிரஸ் வலுவிழக்க அந்த இடத்தை அதிமுக பிடித்துக் கொண்டது, பின்னர் திமுக-அதிமுக என்ற இரட்டைத் தன்மை தொடர்ந்தது. இனியும் இரட்டைத்தன்மைதான் தொடரும். அப்படியெனில் அதிமுக கரைந்து போவதையே பாஜக விரும்பும். அந்த இடம் பாஜகவுக்கானதாக மாற்றப்படும். ஒருவேளை ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் வலுவான தலைமை அமைந்திருந்தால் அதிமுகவைக் கரையச் செய்வது என்பது பாஜகவுக்கு சவாலாக இருந்திருக்கும். தமிழகத்தில் காலூன்ற வேறு விதமான கணக்குகளை அவர்கள் போட்டிருக்கக் கூடும். சசிகலா சிறை சென்றது, தினகரனை அதிமுகவின் தலைமைக்கு வரவிடாதது போன்ற ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எல்லாமும் அதிமுகவை சுவீகரிக்கப் போவதன் முதல் சில படிகள்தான் என்று புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
அதிமுக அரசின் பதவிக்காலம் முடிந்த பிறகு, சரியான தலைமையில்லாமல் திண்டாடும் போது விக்கெட்டுகள் எப்படி விழுகின்றன என்பதை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
தொண்டர்களைவிடவும் உள்ளூர் தலைவர்களே பாஜக போன்ற கட்சிகளுக்கு முக்கியம். ‘தமக்கு ஏதேனும் பதவி தேவை’ என்று கருதுகிறவர்கள் கால ஓட்டத்தில் எது வலுவாக இருக்குமோ அங்கு சாய்ந்துவிடுவதுதான் கீழ்மட்ட அரசியல். இப்பொழுது இருக்கக் கூடிய பல அமைச்சர்கள் பாஜக அனுதாபிகள்தான். அவர்களுக்குத் தேவை உள்ளூருக்குள் செல்வாக்கு, சம்பாதிக்க ஒரு வழி, தமக்குக் கீழாக ஒரு கூட்டம். அதைத்தாண்டி சித்தாந்தம், கொள்கை என்பதையெல்லாம் வைத்து அவர்களின் அரசியல் தேர்வுகள் இருப்பதில்லை. தமக்கான தேவைகளை யார் தருவார்களோ அங்கு நகரத் தயங்காதவர்கள் பாஜகவுக்குப் போவதற்குத் தயங்கமாட்டார்கள். அரவணைத்துக் கொள்ள பாஜகவும் தயாராகவே இருக்கும். மற்றபடி, உள்ளூர் தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை இம்மிபிசகாமல் பெரும்பாலான தொண்டர்கள் செய்வார்கள்.
உள்ளூர் தலைவர்களை தமக்குள் கரைத்துக் கொண்ட பிறகு அந்தந்த ஊர்களில் அமைப்பு ரீதியாக பாஜக வலுவடைவதை உள்ளுர் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள். கீழ்மட்டத்தில் அமைப்பு ரீதியாக வலுவடைந்தால் போதுமா? டிடிவி தினகரன் தமிழகம் முழுக்கவுமே அமமுகவை அமைப்பு ரீதியாக வலுவாக உருவாக்கியிருக்கிறார். ஆனாலும் வாக்காளர்களை ஈர்ப்பதில் ஏமாந்து போனார். அப்படி பாஜக வலுவடைந்தாலும் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமல்லவா? அதற்கு இரண்டு காரியங்களைச் செய்வார்கள். முதலில் வாக்காளர்களைக் கவர தமிழகத் தலைமைக்கு சரியான ஆளைப் பிடிப்பார்கள். தமிழிசையோ, பொன்.ராதாகிருஷ்ணனோ, எச். ராஜாவோ அல்லது பிற தலைவர்களோ தமிழகம் முழுவதும் பரவலான மக்கள் ஏற்றுக் கொண்ட அல்லது மக்களை ஈர்க்கும் செல்வாக்கு கொண்ட தலைவர்களாக உருவாகவில்லை என்பதால் தலைமை உருவாக்கத்திலும் பாஜக சில கணக்குகளைப் போட்டு வைத்திருக்கக் கூடும். ரஜினியை முன்னிறுத்துவார்கள் என்றுதான் பரவலாகச் சொல்கிறார்கள். அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. நோகாமல் நோம்பி கும்பிடும் தலைவராக- ‘எல்லாம் ரெடியா இருந்தா நான் வந்து பதவி ஏத்துக்கிறேன்’ என்பதான ஆளுமையாகத்தான் ரஜினி தெரிகிறார்.
அமைப்பு, தலைமை ஆகியவற்றுக்குப் பிறகு இன்னொரு காரியம் இருக்கிறது. இதுதான் முக்கியமான செயலும் கூட.
அமைப்பை வலுப்படுத்துவது, தலைவரை மாற்றுவது என்பதெல்லாம் அதிகாரமும், பணபலமும் கொண்ட கட்சிக்கு கண நேரத்தில் முடியக் கூடிய காரியம். ஆனால் ‘மாற்று’ என்ற வாதத்தை மக்களிடையே விதைப்பதுதான் திமுக, அதிமுக தவிர்த்த பிற கட்சிக்கான வாக்குகளாக மாறும். திமுகவும், அதிமுகவும் மாநிலத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கின்றன என்கிற வாதம் அப்படியானதுதான். திரும்பத் திரும்ப இதைச் சொல்லிக் கொண்டிருப்பதும், மாற்றம் தேவை என்று மக்களை நம்ப வைப்பதற்குமான பிரச்சாரங்களும் மிக அவசியம். தமிழகத்தில் இவையெல்லாம் ஏற்கனவே தொடங்கிவிட்டன. சீமான் பேசுகிற தமிழ் தேசியத்துடன் கூடிய ‘மாற்று’ என்கிற வாதம் பாஜகவுக்கு பலனளிக்குமா என்று கணிக்க முடியவில்லை. ஆனால் மய்யமாக நின்று அரசியல் செய்து கொண்டிருக்கும் கமலின் அரசியல் களத்தைக் கூட இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவருக்கு முதல்வர் கனவெல்லாம் இருக்க முடியாது. தனது வாழ்நாளில் அது சாத்தியமுமில்லை என்று அவருக்கும் தெரியும். ஆனால் தமிழகம் திராவிட இயக்கங்களின் கோட்டை என்பதை அசைத்துப் பார்க்கும் வேலையைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார். ‘இரண்டுமே மோசம்’ என்ற எண்ணத்தை கணிசமாக பரவச் செய்து, திமுக/அதிமுக அபிமானத்தில் குறிப்பிடத்தக்க ஓட்டையைப் போட்டு ஓரளவுக்கு அசைத்துவிட்டால் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்வார். அந்த அசைவின் பலனை பாஜக அறுவடை செய்து கொள்ளும்.
அடுத்த சில ஆ/ண்டுகளில் தமிழகத்தில் அரசியல் போக்கு இப்படி இருக்க வாய்ப்புகள் அதிகம் என நம்புகிறேன். அரசியல் என்பது ஒரு தியரிதான். களத்தில் எது வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் மாறும். ஆனால் இதுதான் என்னுடைய புரிதலாக இருக்கிறது. ஐந்தாண்டுகளில் தமிழக அரசியல் களம் திமுக-பாஜக என்று இருப்பதற்கான சாத்தியங்கள்தான் மிக மிக அதிகம். அதற்கான அனைத்து விதைகளும் தூவப்பட்டுவிட்டன.
அடுத்த சில ஆ/ண்டுகளில் தமிழகத்தில் அரசியல் போக்கு இப்படி இருக்க வாய்ப்புகள் அதிகம் என நம்புகிறேன். அரசியல் என்பது ஒரு தியரிதான். களத்தில் எது வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் மாறும். ஆனால் இதுதான் என்னுடைய புரிதலாக இருக்கிறது. ஐந்தாண்டுகளில் தமிழக அரசியல் களம் திமுக-பாஜக என்று இருப்பதற்கான சாத்தியங்கள்தான் மிக மிக அதிகம். அதற்கான அனைத்து விதைகளும் தூவப்பட்டுவிட்டன.
8 எதிர் சப்தங்கள்:
Periyar vithaithu sendrathu eppothum irukum. BJP cannot dominate TN politics.
I don't see DMK, ADMK, BJP, etc. I just see sand mafia, granite mafia, land grabbers and hooligans. It's our fate to elect these people for power.
BJP strategy is first they are trying to get familiar leaders from other parties, if no one is ready to join, they will create chaos with some issue in the state like Delhi, West Bengal, Kerala. Because of those 2 reasons, people lose interest and tired of current issues, they would think BJP can be other option to keep the state Peace.
பதிமூன்று வருடங்களுக்கு முன்பு மிக தீவிரமாக மல்யுத்தம் WWF பார்த்திருக்கிறேன். அதில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இரண்டுபேர் சாம்பியன் பெல்ட்டுக்காக சண்டையிடுவார்கள் அவர்கள் சண்டையிடும்போது சின்ன சின்ன எதிராளியிடம் சண்டையிடும் ஒரு மூன்றாம் கட்ட நிலையிலுள்ள மல்யுத்த வீரர் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருப்பவர்களில் யாரையாவது ஒருவரை மல்யுத்த போட்டியின் இடையே போய் அடித்து விடுவார். அதற்கு அடுத்தவாரம் மல்யுத்த போட்டியானது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருப்பவருக்கும் கடந்த போட்டியின் இடையில் சென்று அடித்த அந்த சாதாரண வீரருக்கும் என்றாகிவிடும் . அதைத்தான் பாரதிய ஜனதா செய்துவருகின்றது. நோட்டாவை விட குறைவாக வாக்கு வாங்கும் அல்லது வாக்கு வங்கியே இல்லாத ஒரு கட்சியை சுற்றித்தான் தமிழக அரசியல் விவாதங்கள் நடைபெறுவது ஒரு திட்டமிட்ட வியூகம்தான். சமூக வலைத்தளங்களில் பெரியாருக்கெதிராக தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் செய்யப்படுகின்றன (அசைத்துப்பார்க்க முயற்சிக்கின்றார்கள்). அடுத்த இலக்கு திமுக - தமிழகத்தின் தற்போதைய குடிநீர் பிரச்சினைக்கு ஒன்பது வருடமாக ஆட்சியிலிருக்கும் அதிமுகவை நோக்கி கேள்வி தொடுக்காமல் அதற்கும் திமுகவே காரணமென்று தமிழிசை கூறுவதை ஒரு உதாரணமாக கூறலாம். திராவிட கட்சிகளை கடுமையாக எதிர்த்து விமர்சனம் செய்வதால்தான் சீமானை விட்டு வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
சசிகலா சிறை சென்றதும் தினகரன் அதிமுக தலைமைக்கு வரமுடியாதபடி செய்ததும் பாரதியஜனதாதான் காரணமென்பது அப்போதே பெரும்பாலான தமிழக மக்களுக்கு புரிந்திருக்கும். ஒருவேளை சசிகலா அப்போதே பாரதிய ஜனதாவுடன் உடன்பட்டிருந்தால் தப்பித்திருப்பார். (கர்நாடகாவில் தற்போதைய ஆட்சி கவிழ்ந்து பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் சசிகலா ஒருவேளை ஜெயிலிலேயே 'உடல்நலக்குறைவால்'மரணமடையலாம்) . ஜெயலலிதா சாவுக்கு சசிகலாதான் காரணமென்று மக்களிடம் ஒரு எண்ணத்தை திட்டமிட்டு தமிழகம் முழுவதும் பரவ செய்தனர். ஜெயலலிதா இருக்கும்வரைக்குத்தான் தனக்கு மதிப்பும் மரியாதையும் ஜெயலலிதா மரணமடைந்தால் தனக்கு அதோகதிதான் என்று சசிகலாவுக்கு தெரியாதா என்ன? தமிழக கவர்னரே உள்ளே நுழைய முடியாத அளவுக்கு அப்பல்லோ மருத்துவமனை என்ன அமெரிக்காவின் வெள்ளை மாளிகையா? சசிகலா பலிகடா ஆக்கப்பட்டார் என்பதே உண்மை
கமல் பாரதிய ஜனதாவால் இயக்கப்படுகிறார் என்பதை புரிந்துகொள்ள அரசியலில் உச்ச அறிவு தேவையில்லை என்று நினைக்கிறேன். கடந்த முறை காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த நேரத்தில் பாபா ராம் தேவ் ஊழலுக்கெதிராக என்று போராடியபோது பாரதிய ஜனதாதான் ராம் தேவ்வை பின்னிருந்து இயக்குகிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது உடனடியாக பாரதிய ஜனதா அந்த குற்றசாட்டை மறுத்தது. அதன்பின்பு நடந்தது நாடறிந்தது.
இந்து மதத்திற்கு தாங்கள் மட்டுமே காவலன் என்று பாரதியஜனதா திட்டமிட்டு தமிழகத்தில் நிறுவிவருகிறது. மதரீதியாக மக்களின் உணர்ச்சிகளை கிளறி விடுவது மிக எளிது. அதை பாரதிய ஜனதா வட இந்தியாவில் செய்வதை போன்று கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்திலும் செய்து வருகிறது. பொறியியல் படித்த ஒரு நண்பன் திடீரென பாரதிய ஜனதாவுக்கு தீவிர ஆதரவாளனாக மாறினான், ஏனென்று கேட்டேன் 'செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் முஸ்லீம் மதத்தினர் கல் வீசி தாக்குதல் நடத்தினர் அதன்பின்பு நான் பாரதிய ஜனதா ஆதரவாளனாகிவிட்டேன் என்றான். தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பாரதிய ஜனதா வேர் விட துவங்குகிறது என்று இதற்கு முன்பு ஒரு கட்டுரையில் எழுதியிருந்தீர்கள் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது என்று நினைக்க தோன்றுகிறது.
அருமை அண்ணா...
//...Periyar vithaithu sendrathu eppothum irukum..//
ஆணவக்கொலைகள் தினம் தினம் . சாதிகளை ஒழிக்க பெரியார் எடுத்துக்கொண்ட அல்லது எடுத்துக்கொண்டதாக சொல்லப்படும் போராட்டத்தின் பலன்?
ஒவ்வொரு தெருவிலும் குறைந்தது இரண்டு பிள்ளையார் கோயில். பெரியாரின் இறை மறுப்புக் கூவலின் வெற்றி??
தமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, பமக எல்லாமே எதாவது மக்களுக்கு தேவையான விசயங்களில் போராடி அதாவது விவசாயி, சுதந்திர போராட்டம், மொழி, சாதி மாதிரி (அதிமுக, தேமுதிக போன்றவை விதிவிலக்கு) ஓட்டு வாங்கினார்கள். ஆனால், பஜக நாங்கள் மத்தியில் பெரிய ஆள், இந்து என்று மட்டும் சொல்லி வாக்கு கேட்டால் கஷ்டம்தான்.
1. தண்ணீர் பிரச்சினை
2. கல்வி
3. மொழி
4. வேலைவாய்ப்பு-விலைவாசி
5. தமிழகத்தின் அன்றாட பிரச்சினைகள்
இதில் எதாவது ஒன்றுக்கு மக்களோடு மக்களாக நின்று போராடினால் மட்டுமே சாத்தியம். வாட்சாப்-போட்டோசாப் மட்டும் செய்தால் கடைசிவரை கூட்டணிதான்.
ம்ஹூம் என்னத்தச் சொல்ல பூனை மேல் மதில் கட்டுறவரு B.J.P யின் B டீமுங்கறாரு. அந்தப் பக்கம் ஒருத்தரு நாக்கருத்துறுவேன்றாரு!. நீங்க என்னன்னா வாழ்நாளுக்குள்ள சாதிக்க முடியாதுன்னு அடிச்சி சொல்லுறீங்க. அப்ப திரிசங்கு சொர்க்கம்தானா?.
Post a Comment