Jun 26, 2019

தூவானம்

Fraternize- இந்தச் சொல்லுக்கான பொருள் என்ன? 

ஹாம்பர்க் என்னும் ஜெர்மனி நகரத்துக்கு ரெச்செல் சென்று தொடரூர்தியில் சென்று கொண்டிருக்கும் போது அவளுக்கு முன்பாக அமர்ந்திருக்கும் சிறுவன் சொல்லுக்கான பொருள் கேட்பான். ‘ஜெர்மனியர்களுடன் நட்புரீதியாக பழகக் கூடாது’ என்று வாக்கியத்தை அவனது அம்மா சொல்லித்தரும் போது ரெச்செல் அவளுக்குள்ளாகவே புன்முறுவல் பூப்பாள்.

இரண்டாம் உலகப்போர் முடிந்து, ஹிட்லர் இறந்து, சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடக்கும் அந்நகரத்தில் ரெச்செலின் கணவன் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி. மழை நின்றாலும் தூவானம் விடவில்லை எனச் சூழல் நிலவும் அந்நகரில் போருக்குப் பிறகும் கைகளில் 88 என பச்சை குத்திய ஹிட்லரின் ஆதரவாளர்கள் உண்டு. எட்டாவது எழுத்து H. Heil Hitler என்பதன் சுருக்கப்பட்ட வடிவம்தான் 88. அந்நகரில் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இன்னமும் இடிந்த கட்டடங்களுக்குள் பிணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வப்பொழுது போராட்டங்கள் நடக்கிறது. இதையெல்லாம் ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கும் ரெச்சலின் கணவனான கர்னல் லூயிஸுக்கு அந்நகரத்தில் ஒரு மிகப்பெரிய பங்களா வழங்கப்பட்டிருக்கிறது.  அது லூபெர்ட் என்னும் ஜெர்மானியக் கட்டடக்கலை நிபுணனின் மாளிகை. அவனும் அவனது மகளும் இனி முகாமுக்குச் சென்றுவிடுவார்கள். அந்த மாளிகையில் கணவனுடன் தங்குவதற்காகத்தான் ரெச்செல் சென்று கொண்டிருக்கிறாள்.

ரயில் பயணத்தில், சிறுவன் வாசித்த வாக்கியத்திற்கேற்ப மனநிலையில் இருப்பவள்தான் ரெச்செல். ஜெர்மானியர்கள் மீதான வெறுப்பு அவளுக்கு உண்டு. அவளது கணவனுடன் பணியாற்றும் இராணுவ அதிகாரிகளின் மனைவிகளும் அதைத்தான் அவளிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘ஜெர்மானியர்கள் நம்மை மாதிரி இல்லை’. ஆனால் ரெச்செலின் கணவன் லூயிஸ் அப்படியில்லை. அடிப்படையில் மனிதாபிமானி. ‘லூபெர்ட்டும் அவனது மகளும் மாடியில் தங்கிக் கொள்ளட்டும்’ என்கிறான். என்ன இருந்தாலும் அந்த மாளிகை அவர்களுடையதுதான். அது ரெச்சேலுக்குப் பிடிப்பதில்லை. ‘நாம் இருவர் மட்டும்தான் இருப்போம்’ என்றுதான் நம்பினேன் என்று வாக்குவாதம் செய்கிறாள். கடைசியில் ஒரு வழியாக அவர்களும் அந்த மாளிகையில் தங்கிக் கொள்ள ஒத்துக் கொள்கிறாள்.

‘அவரவருக்கான இடங்களைத் தாண்டி அவர்கள் வரக் கூடாது’ என்பது விதிமுறை. லூபெர்ட்டும் அவனது மகளும் அங்கேயே தங்கிக் கொள்ள ஒத்துக் கொண்டாலும் அவள் லூபெர்ட் மீதான வெறுப்பையே காட்டிக் கொண்டிருக்க, அவளிடம் பொறுத்துப் போகும் லூபெர்ட் ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்து ‘எங்களை வெளியே அனுப்பிவிடு..அதற்கான ஒரு காரணத்தையும் உனக்குத் தருகிறேன்’ எனச் சொல்லி உதடு பதித்துவிடுகிறான்.

இதன் பிறகு கதையின் தளமே மாறிவிடும்.

ரெச்செலுக்கு பதினோரு வயதில் ஒரு மகன் இருந்தான். போரின் போது இலண்டனில் அவர்கள் வீட்டின் மீது விழுந்த குண்டில் இறந்துவிட்டான். கிட்டத்தட்ட அதே சமயத்தில்தான் லூபெர்ட்டின் மனைவி ஜெர்மனியில் போரில் இறந்து போகிறாள். ரெச்சேலும் லூபர்ட்டும் ஒரே வீட்டில் அவரவருக்கான எல்லை பிரிக்கப்பட்டு வாழத் தொடங்குகையில்தான் இச்சம்பவம் நடக்கிறது. அதுவே இவர்கள் இருவருக்குமிடையிலான காதலாக வளர்ந்து, காமமாக வழிந்து ‘நீ என் கூட வந்துடு’ என்று லூபெர்ட் கேட்க, அவள் சரி என முடிவெடுத்து, தன்னுடைய கணவனின் சக அதிகாரியிடம் லூபெர்ட்டுக்காகப் பரிந்துரை செய்து- ஜெர்மானியனான லூபெர்ட் நகரத்தை விட்டு வெளியேற வேண்டுமானால் அதற்கு பிரிட்டிஷ் ராணுவம் அனுமதியளிக்க வேண்டும்- அவள் அவனுடன் நெருக்கமாக இருக்கிறான் என்பதை அந்தப் பிரிட்டிஷ் தம்பதி புரிந்து கொள்கிறார்கள். லூயிஸிடமும் தகவலைச் சொல்லிவிடுகிறார்கள்.

நடுங்கிப் பதற்கும் லூயிஸ் ‘எவ்வளவு நாளா இது?’ என அவன் அவளிடம் கேட்பான்.  கதை இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும்.


வெகு நாட்களுக்குப் பிறகு பார்த்த ஒரு நல்ல படம். The aftermath. சமீபத்தில் வெளியான படங்களின் விவரங்களை ஐ.எம்.டி.பி தளத்தில் தேடிக் கொண்டிருந்தேன். இரண்டாம் உலகப்போர் சம்பந்தப்பட்டது என இந்தப்படம் கண்ணில்பட்டது. இவ்வாண்டுதான் வெளியாகியிருக்கிறது.

படத்தில் வில்லன் என்றெல்லாம் யாருமில்லை. மகன் இறந்த பிறகு கணவனுக்கும் மனைவிக்குமிடையில் அவர்களையுமறியாமல் விரிசல் விழுகிறது. அவனது பணி அப்படி. ரெச்செல் ஹாம்பர்க் வந்த பிறகும் கூட அவனும் அவளும் வேட்கையோடு நெருங்கிக் கொள்ளும் தருணத்தில் ஏதோ ஆர்ப்பாட்டம் நடப்பதாகத் தகவல் வந்து தொடாமலேயே கிளம்பிச் செல்கிறான். என்ன இருந்தாலும் மனித உடல்தானே? அணுக்கத்திலேயே ஓர் ஆண் இருக்கிறான் அவனும் அவளைப் போலவே மனைவியை இழந்தவன், போரின் வலியை அறிந்தவன், சூழல் கனிந்து வர எல்லை மீறுகிறார்கள். 

காமம் உயிர்களை எல்லை மீறச் செய்கிறது. அதன் வலுவான கரங்கள் மனிதர்களை ஆக்கிரமித்திருக்கும் போது ‘இப்படி சந்தோஷமா இருப்பேன்னு நினைச்சதேயில்லை’ என்று அவர்களைப் பேச வைக்கிறது. அருகாமையும் இதமும் இருவருக்கும் தேவையானதாக இருக்க, ‘என் கூட வந்துவிடு’ என்று கேட்பதில் அவனுக்கும் தயக்கம் எதுவுமில்லை. அதை ஏற்றுக் கொள்வதில் அவளுக்கும் பிரச்சினையில்லை. உடல் கிளர்ந்து கிடக்கும் அந்தக் காலகட்டத்தில் எதிராளியின் உறவு தவிர வேறு எதுவுமே பெரிதில்லை என்கிற எண்ணம்தான் எல்லாவற்றையும் மிஞ்சி நிற்கிறது. 

ரெச்சலுக்கும் அப்படித்தான். ஆனால் அவளது கணவன் லூயிஸ் எந்தவிதத்திலும் அவளுக்குத் துரோகம் செய்தவனில்லை. ‘உன்னைப் பார்க்கும் போதெல்லாம் மகனின் நினைவுதான் வருகிறது’ என்கிறான். ‘உன்னை நெருங்கும் போதெல்லாம் உன்னுடலில் அவனது வாசம்தான் வீசுகிறது’என்கிறான். அவனை விட்டுச் செல்ல அவள் தயாராகிறாள். அவனும் சம்மதிக்கிறான். என்னதான் உடலும் காமமும் ஆக்கிரமித்தாலும் அவனை எப்படி விட்டுவிடுவாள் என்கிற கேள்விதான் கடைசிக் கணம் வரைக்கும் படத்தைப் பார்க்கச் செய்கிறது. காமத்தைத் தாண்டி ஊடுபாவியிருக்கும் காதலே படத்தின் அடிநாதம்.

The aftermath என்ற நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் இது.

படம் முடிந்த பிறகு நள்ளிரவு தாண்டியும் வெளியில் அமர்ந்திருந்தேன். காற்று சிலுசிலுத்துக் கொண்டிருந்தது. கோடை முழுமையாக விலகிவிட்டது. மழை பெய்வதற்கான சூழல் போல இருந்தது. ரெச்சல்தான் மனம் முழுக்கவும் நிரம்பியிருந்தாள். 

4 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//காமம் உயிர்களை எல்லை மீறச் செய்கிறது.//
மனிதர்களை எல்லை மீற செய்கிறது என சொல்லலாம்.
எல்லை என்பது மனிதர்கள் வகுத்துக் கொண்டது தானே.

சேக்காளி said...

//அவள் லூபெர்ட் மீதான வெறுப்பையே காட்டிக் கொண்டிருக்க,//
வெளிப் படுத்த முடியாத காதல் வெறுப்பாகவும் கொட்டி தீர்க்கும்.

Vaa.Manikandan said...

மனிதர்களை எல்ல மீறச் செய்கிறது என்றுதான் எழுதினேன். திருத்தும் போது உயிர்களை என்று மாற்றிவிட்டேன்.

Anonymous said...

மனிதர்களை எல்லை மீற செய்கிறது என சொல்லலாம்.
எல்லை என்பது மனிதர்கள் வகுத்துக் கொண்டது தானே.

Sema ...