தேசியக் கல்விக் கொள்கை என்று வெளியிட்டிருக்கிறார்கள். நானூறு பக்கங்களுக்கும் மேலாக இருக்கிறது. அதனை நம்மவர்கள் ஐம்பது பேர் சேர்ந்து மொழிபெயர்த்துக் கோப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். பதினைந்தே நாளில் இதைச் செய்வது மிகப்பெரிய காரியம். ஆனால் செய்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து இதில் பலரும் ஐடி துறையில் பணி புரிகிறவர்கள், தனியார் துறையில் இருப்பவர்கள்தான்.
உமாநாத் இந்தக் காரியத்தை ஒருங்கிணைத்தவர்களில் முக்கியமான ஒருவர். அவரிடம் ‘இதெல்லாம் எதுக்கு பயன்படும்?’ என்று கேட்டேன். உண்மையில் இவை எல்லாம் கிட்டத்தட்ட ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவைதான் என்பதுதான் என் அனுமானம். நம்மிடம் கேட்டுவிட்டு இதையெல்லாம் மாற்றவா போகிறார்கள்? கருத்துக் கேட்பு என்பதெல்லாம் வெறும் கண் துடைப்பு சமாச்சாரம் என்கிற மனநிலையில்தான் இருந்தேன். உமாநாத் நம்பிக்கையாகச் சொன்னார். மனிதவளத்துறையில் பேசியிருக்கிறார்களாம். ஜூலை 31 வரை அவகாசமும் கோரியிருக்கிறார்கள். ஜூன் 30 என்னும் கால அவகாசத்தை ஒரு மாதம் வரையிலும் நீட்டிப்பு செய்து தர வாய்ப்பிருக்கிறது என்கிறார்.
முழுமையாகத் தடைக்கல்லைப் போட முடியாவிட்டாலும் சில மாறுதல்களைச் சொல்லலாம். அதற்கெனப் போரடலாம் என்றார் அவர்.
வெளியாகியிருக்கும் தேசியக் கல்விக் கொள்கை குறித்து தொடர்பில் இருக்கும் ஆசிரியர்களிடம் பேசினால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது. ‘நானூற்றைம்பது பக்கம்தான் படித்துப் பாருங்கள்’ என்று சொன்னால் யாருமே பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. ஆசிரியர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தமிழகமே தமக்கு ஆதரவாக திரள வேண்டும் என்று கருதுகிறார்கள். சம்பள உயர்வு பாதிக்கப்படக் கூடாது, விடுப்பு தினங்கள் குறையக் கூடாது என்றெல்லாம் கேட்கும் ஆசிரியர்கள் இந்த தேசத்தின் கல்விக் கொள்கையே மாறும் போது ஏன் இவ்வளவு அசமஞ்சமாக இருக்கிறார்கள்?
ஆசிரியர்கள், கல்வி முறை, மாணவர்கள் என்று ஒட்டுமொத்த கல்விச் சமூகத்தையும் மாற்றுவதற்கான வாய்ப்புகளைக் கொண்ட நானூற்றைம்பது பக்கங்களைப் புரட்டிப் பார்க்க ஏன் தயங்குகிறார்கள் என்று புரியவில்லை. தேசியக் கல்விக் கொள்கை குறித்தான முன்னெடுப்புகளை ஆசிரியர் சங்கங்கள்தான் முன்னெடுக்க வேண்டும். கூட்டங்களை நடத்தி, தமது கருத்துக்களை விவாதித்து, தொகுத்து மனிதவளத்துறைக்கும், மாநில அமைச்சருக்கும், கல்வித்துறையின் அதிகாரிகளுக்கும் அனுப்புகிற வேலையை ஆசிரியர்கள்தான் செய்திருக்க வேண்டும். அப்படியான பரபரப்பு எதுவும் தமிழகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இப்படி அசிரத்தையாக இருப்பது பேராபத்தில் முடியும்.
வெளியாகியிருக்கும் தேசியக் கல்விக் கொள்கை குறித்து தொடர்பில் இருக்கும் ஆசிரியர்களிடம் பேசினால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது. ‘நானூற்றைம்பது பக்கம்தான் படித்துப் பாருங்கள்’ என்று சொன்னால் யாருமே பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. ஆசிரியர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தமிழகமே தமக்கு ஆதரவாக திரள வேண்டும் என்று கருதுகிறார்கள். சம்பள உயர்வு பாதிக்கப்படக் கூடாது, விடுப்பு தினங்கள் குறையக் கூடாது என்றெல்லாம் கேட்கும் ஆசிரியர்கள் இந்த தேசத்தின் கல்விக் கொள்கையே மாறும் போது ஏன் இவ்வளவு அசமஞ்சமாக இருக்கிறார்கள்?
ஆசிரியர்கள், கல்வி முறை, மாணவர்கள் என்று ஒட்டுமொத்த கல்விச் சமூகத்தையும் மாற்றுவதற்கான வாய்ப்புகளைக் கொண்ட நானூற்றைம்பது பக்கங்களைப் புரட்டிப் பார்க்க ஏன் தயங்குகிறார்கள் என்று புரியவில்லை. தேசியக் கல்விக் கொள்கை குறித்தான முன்னெடுப்புகளை ஆசிரியர் சங்கங்கள்தான் முன்னெடுக்க வேண்டும். கூட்டங்களை நடத்தி, தமது கருத்துக்களை விவாதித்து, தொகுத்து மனிதவளத்துறைக்கும், மாநில அமைச்சருக்கும், கல்வித்துறையின் அதிகாரிகளுக்கும் அனுப்புகிற வேலையை ஆசிரியர்கள்தான் செய்திருக்க வேண்டும். அப்படியான பரபரப்பு எதுவும் தமிழகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இப்படி அசிரத்தையாக இருப்பது பேராபத்தில் முடியும்.
ஆசிரியர்கள் மட்டுமில்லாமல் மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லோருக்குமே எதிர்காலத்தில் இந்த நாட்டின் கல்வி எந்தத் திசையில் பயணிக்கப் போகிறது என்பது பற்றிய தெளிவு தேவை. இல்லையெனில் வெறுமனே ஃபேஸ்புக் போராளிகளாக மட்டுமே சுருங்கிப் போவோம்.
ஒவ்வொருவரும் தேசியக் கல்விக் கொள்கையை முழுமையாகப் புரிந்து கொள்ள ஒரு வார காலமாவது தேவைப்படும். அந்தந்த ஊர்களில் இருக்கும் ஆசிரியர்களின் சங்கங்கள், கல்விக்கான தன்னார்வலர்கள் கொள்கையின் தமிழாக்கத்தைப் பரவலாக்க வேண்டும். அதன் பிறகு ஜூலை முதல் வாரத்தில் தமிழகம் முழுக்கவும் பரவலாக கருத்தரங்குகள், விவாத அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு தேசியக் கல்விக் கொள்கை குறித்தான தமது புரிதல்களைப் பேசியும், கருத்துகளைப் பகிர்ந்தும் அவற்றைத் தொகுக்கவும் வேண்டும். தமிழிலேயே இதைச் செய்யலாம். தொகுத்த கருத்துகளை உமாநாத்தின் அணிக்கு அனுப்பினால் அவர்கள் மொழிபெயர்த்து அவற்றை மனித வளத்துறைக்கு அனுப்புகிற செயலைச் செய்வார்கள்.
புதிய தேசியக் கல்விக் கொள்கையை முற்றாக எதிர்ப்பதாக இருந்தாலும் கூட அதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம். கொஞ்சம் மெனக்கெடல் தேவை. ஆனால் இந்த மெனக்கெடல் காலத்தின் கட்டாயம்.
இது குறித்தான வேறு எந்தவிதமான சந்தேகம் என்றாலும் உமாநாத்தை அணுகலாம்.
umanaths@gmail.com
தேசியக் கல்விக் கொள்கை குறித்தான விவாதங்களை முன்னெடுக்கும் உமாநாத் எழுதியது கீழே-
தேசிய கல்விக் கொள்கை (வரைவு) என்பது எதோ கல்லூரிப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பல்கலைக்கழகங்களுக்கான விஷயம் மட்டும் அல்ல. நம் பிள்ளைகளுக்கு மூன்று வயது முதல் கல்லூரி முடித்து ஆராய்ச்சி செய்யும் வரையில் கல்வி எப்படி கொடுக்கப்படும் என்பதற்கான ஒரு கட்டமைப்பு.
சரி, ஒரு பெற்றோராக இதில் எங்கெல்லாம் பாதிக்கப்படுவோம். நமக்கான முக்கிய புள்ளிகள் என்ன?
1. இனி அரசுப் பள்ளிகளைப் போலவே தனியார் பள்ளிகளையும் சரிசமமாக அரசு ஊக்குவிக்கும். தனியார் பள்ளிகளெனில் அவர்கள் பள்ளிக் கட்டணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் நிர்ணயித்துக் கொள்ளலாம் ஆனால் வருடா வருடம் ஏற்றக்கூடாது (சும்மா அவங்களை கட்டுப்படுத்தறாங்கலாம்)
2. நம் குழந்தைகள் பள்ளி முடித்துவிட்டுக் கல்லூரிக்கு இனி எளிதாகச் சென்றுவிட முடியாது. தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வினை எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கல்லூரிக்குள் நுழைய முடியும்.
3. அரசுப் பள்ளிகளில் குறைவான மாணவர்கள் இருந்தால் அவை மூடப்பட்டு வேறு பள்ளிகளுடன் இணைக்கப்படும். (பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே நீலகிரியில் பத்து பள்ளிகள் மூடப்பட்டு இணைக்கப்பட்டன)
4.மாங்கு மாங்கு என விடியற்காலை எழுந்து டீ, காபி போட்டு படிக்க வைத்த மேல்நிலைச் சான்றிதழுக்கு(+2) இனி எந்தப் பயனும் இல்லை.
5. டியூசன் / கோச்சிங் சென்டருக்கு கட்ட இப்போதே வைப்பு நிதி, லோன் போட்டு வைக்கவும்.
6. கட்டாயம் இனி மூன்று மொழி உண்டு.
7. ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் அறிவியல், கணிதம் ஆகியவை இரண்டு மொழிகளில் கற்றுத்தரப்படும்.
8. சமஸ்கிருதம் கட்டாயம் கற்றுத்தரப்படும். ஆகவே விரைவில் ஒரு மாதத்தில் சமஸ்கிருதப் புத்தகம் வாங்கவும்.
9. பத்து ஆண்டுகளுக்குள் தானாக டிகிரி வழங்காத கல்லூரிகள் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு விடும். அந்தக் கல்லூரிகள் நூலக வளாகமாகவோ தொழில் பயிற்சி வளாகமாகவோ மாற்றப்படும் (நீங்க படிச்ச கல்லூரிகளை ஒரு முறை பார்த்துவிட்டு வந்துவிடுவது நல்லது)
10. தற்சமயம் ஆசிரியர் பணிக்கு ஏராளமான காலியிடம் இருந்தாலும் அரசு பணியிடங்களை நிரப்பவில்லை. இந்தக் கல்விக் கொள்கையின் படி இன்னும் நிறைய ஆசிரியர்கள் தேவை. அப்ப உங்க பிள்ளை படிக்கும் பள்ளியில் எத்தனை ஆசிரியர்கள் இருப்பாங்க?
11. தமிழ் நாடு அரசு பின்பற்றும் 69% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.
12. பத்தாம் வகுப்பு - 12ஆம் வகுப்பு இடைநிற்றல் அதிகம். 12ஆம் வகுப்பு - கல்லூரிகள் இன்னும் அதிகம். நுழைவுத்தேர்வு மூலம் கல்லூரியில் சேரும் Procedureகள் இன்னும் இடைநிற்றலை அதிகரிக்கும்.
13. எட்டாம் வகுப்பு முதலே துணைப்பாடமாக (விருப்பப்பாடம்) தொழில்சார் கல்வி வழங்கப்படும். குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவன் கூட இதனால் படிக்கமாட்டான். வேறு மொழியில் கிராமப்புற மாணவனுக்கு எலக்ட்ரிக்கல், நகரப்புற மாணவனுக்கு ரொபோட்டிக்ஸ்.
14. மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளில் தேசிய அளவிலான கற்றல் திறன் வெளிப்பாடு அடிப்படையிலான தேர்வுகள் நடத்தப்படும்.
15. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இடைநிலைக் கல்வியாக கருதப்பட்டு எட்டு பருவத் தேர்வுகள் வாரியத் தேர்வுகளாக நடத்தப்படும். அரே ஓ சம்போ !
16. தாய்மொழிக்கல்வியே சிறந்தது ஆனால் ஆங்கில வழிக் கல்வி மட்டும் ஊக்குவிக்கப்படும்
17. பள்ளிகளுக்கு இதனைச் செய்வோம் அதனைச் செய்வோம், ஆசிரியர்களுக்கு இதனைச் செய்வோம் அதனைச் செய்வோம்னு ஆயிரத்து நானூத்தி முப்பத்தி எட்டு வாக்குகள். ஆனால் இதற்குத் தேவையான நிதி எங்கிருந்து வரும்னா பெப்பே !
18. 10+2 (5+3+2+2)என்று இருந்த பள்ளிக் கல்வி முறை 5+3+3+4 என்று மாற்றி அமைக்கப்படும்.
19.கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் இனி மாநில அரசுக்கு இல்லை! அதுமட்டுமல்ல, அதன் பாடத்திட்டத்திலும் மாநில அரசு தலையிட முடியாது. அதற்கென்று “பொதுக் கல்விக் குழு” (General Education Council) என்ற ஒன்று நிறுவப்படும்.
20. இது தான் முக்கியமான பாயிண்ட். இன்னும் இன்னும் நிறைய விஷயங்கள் இந்த கல்விக் கொள்கையில் இருக்கு. இதனை சாமான்ய மனிதர்களாகிய நாம் எதுவும் செய்திடவும் முடியாது. கருத்துச் சொல்ல இன்னும் ஒரு வாரமே மீதம் இருக்கு (ஜூன் 30). ஆனால் இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி கல்வி பற்றிய புரிதலை நமக்குள் விதைக்க வேண்டும்.
இது கட்டாயம் நிறைவேறும், அப்படி நிறைவேறினால் மினிமம் டேமேஜிற்கு என்ன செய்ய முடியும் என்றும் பேச வேண்டும்.
மிக முக்கியமாக இது சமமற்ற ஒரு களத்தினை உருவாக்கும் முயற்சி. சிலர் வளர்ந்து நல்ல நிலையில் இருக்கலாம், சிலர் இன்னும் எழக் கூட முடியாமல் இருக்கலாம். இந்தக் கொள்கை சமூகப் பிளவினை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்யும். அதற்காகவேனும் கை கேர்க்க வேண்டும்.
வாசிப்போம். விவாதிப்போம். புரிந்துகொள்வோம். ஒன்றாய் கைகோர்த்து பயணிப்போம்.
13 எதிர் சப்தங்கள்:
ஆசிரியர்கள் கற்பிக்க முற்படும் அ
ளவுக்கு கற்க விரும்புவதில்லை.
நண்பர்கள் அனைவருக்கும் இந்த கட்டுரையை Forward செய்து இருக்கிறேன். அவர்களையும் எல்லோருக்கும் அனுப்புமாறு சொல்லி இருக்கிறேன். தமிழக ஆசிரியர்கள் கொஞ்சம் கூட சிரத்தை எடுக்காமல் இருப்பது ரொம்ப வேதனையை தருகிறது
Let all opposition parties go thru 450 pages and participate in meaningful discussion instead of shouting at TVs
//8. சமஸ்கிருதம் கட்டாயம் கற்றுத்தரப்படும். ஆகவே விரைவில் ஒரு மாதத்தில் சமஸ்கிருதப் புத்தகம் வாங்கவும்.//
புதிய கல்விக் கொள்கையை எவ்வாறு திரித்து புரிந்து கொள்வது என்பதற்கு இது ஒரு சிறு எடுத்துக்காட்டு என்று நினைக்கிறேன். இதுவரை புதிய வரைவு அறிக்கையில் 130 பக்கங்கள் வரை படித்து விட்டேன். இந்த சமஸ்கிருதம் தொடர்பாக இவ்வாறு எங்கும் கூறப்பட்டிருக்கவில்லை. பக்கம் 86-இல் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ், கன்னடம், தெலங்கு, மலையாளம் உள்ளிட்ட முக்கியமான மொழிகளும் கூறப்பட்டிருக்கின்றன. அத்துடன், இந்நியாவின் தொன்மையான அறிவு சமஸ்கிருத மொழியில் இருப்பதால் அதைப் படிப்பதற்கான வாய்ப்புகளை பெருமளவு ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. தமிழைக் குறித்தும் கிட்டத்தட்ட இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.
வாய்ப்புக்களை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்கும் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கும் வித்தியாசம் இல்லை என்று நான் கருதவில்லை. தமிழ் இந்து நாளிதளில் தொடர்ச்சியாக வெளிவரும் கட்டுரைகளை, இவ்வாறு பெருமளவு திரித்துக் கூறவதையே கடமையாக கொண்டுள்ளன.
உங்கள் பதிவில் உள்ள 19 வரிசைப்படுத்தப்பட்டுள்ள பிரச்சனைகளில் இது போல பல திரிபுகள். முக்கியமாக வாசிப்பவர்களை உண்மையை பார்க்க இயலாமல் உணர்ச்சி வசப்பட வைப்பதைப்போல... (வரைவு அறிக்கை எதிர்மைறையாக இருந்தால் கூட)
தற்போதைய கல்வி முறையின் போதாமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது கூறப்பட்டிருக்கிறது. நிவர்த்தி செய்வதற்கான கட்டமைப்புகளுக்காக பெருமளவு நிதி தேவைப்பட்டும். கல்விக்காக பரிந்துரைக்கப்படும் பட்ஜெட் நிதியில் 6% என்பதையே இந்தியாவால் இன்னும் எட்ட முடியவில்லை. அவ்வாறு இருக்கும்போது இந்திய அரசால் புதிய கல்விக்கான கட்டமைப்புகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி! போதுமான அளவு கண்காணிப்பு அமைப்புகள் இல்லாமல் பு.க.கொ. நடைமுறைக்கு வந்தால், மிக மோசமான விளைவுகள் ஏற்படும். அதற்காக அழுகி நாறும் தற்போதைய கல்வி முறையை தொடர்வது, நம் சந்ததியினரின் அறிவையும் அழுக வைப்பதேயாகும்.
நீங்களும் உங்கள் வாசகர்களும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்கலாம். உணர்ச்சி வசப்பட வைக்கும் திரித்தல்கள், பெரும்பாலானவர்கள் பின் தொடர்ந்து குரவையிட வைக்க உதவலாம். ஆனால் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் மட்டுமே (அவை இந்த வைரைவுக் கொள்கைக்கு எதிரானவையாக இருந்தாலும்) நம் சந்ததியினருக்கு உதவக்கூடியதாக இருக்கும்.
//3. அரசுப் பள்ளிகளில் குறைவான மாணவர்கள் இருந்தால் அவை மூடப்பட்டு வேறு பள்ளிகளுடன் இணைக்கப்படும். (பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே நீலகிரியில் பத்து பள்ளிகள் மூடப்பட்டு இணைக்கப்பட்டன)//
புதிய வரைவு கல்விக்கொள்கையில், நான் புரிந்து கொண்டவரை, இந்த வாதமும் திரிபு செய்யப்பட்டதே. குறைவான மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளை மூடுவது பற்றி எங்கும் கூறவில்லை. மாறாக பள்ளித் தொகுதிகளை (School Complex) உருவாக்கி, குறைவான மாணவர்கள் கொண்ட பள்ளிகளையும் அதன் அங்கமாக மாற்றுவது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு மேல்\உயர் நிலைப்பள்ளி, பள்ளித் தொகுதியின் தலைமையாகவும் அதைச் சூழ்துள்ள (10 மைல்களுக்குட்பட்ட) அங்கன்வாடிகள், தொடக்க\நடுநிலைப் பள்ளிகள். தொகுதியின் உறுப்புகளாகவும் செயல்படும். இது முதன்மையாக ஆசிரியர்கள் மற்றும் கருவிகள் கட்டுமானங்கள், மைதானங்கள் போன்ற ஆதாரங்களை பகிர்ந்து கொள்வதற்காக. குறிப்பாக கூறினால், effective management of resources and made available to all.
வரைவுக் கொள்கையில் பக்கம் 157 முதல் 175 வரை இது விரிவாக கூறப்பட்டிருக்கிறது.
ஆக, தமிழ் சூழலில் புதிய வரைவு கல்விக் கொள்கையை பற்றி பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் முன்முடிவிற்கேற்ப திரித்து கூறுவதையே விரும்புகிறார்கள். அல்லது அந்தத் திரிபுகளை மட்டுமே படித்து விட்டு பின்பாட்டு பாடுவது! தமிழ் இந்து நாளிதழ், இந்த திரித்தல்வாதத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
//கல்விக்காக பரிந்துரைக்கப்படும் பட்ஜெட் நிதியில் 6% என்பதையே இந்தியாவால் இன்னும் எட்ட முடியவில்லை. அவ்வாறு இருக்கும்போது இந்திய அரசால் புதிய கல்விக்கான கட்டமைப்புகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி!//
அப்புறம் எதுக்கு வீணா இந்த புககொ
உமாநாத் அவர்களின் கருத்துக்கள் சற்றே அதிகமான அனுமனங்கங்களின் அடிப்படையில் பெற்றோராகளை குழப்புவதாக எனக்கு தோன்றுகிறது.
இந்த தேசிய கொள்கையின் முதல் 15 பக்கத்திலேயே ஆரம்ப கல்வியில் தற்போது உள்ள குறைபாடுகள், அதை ECCE மற்றும் பிற திட்டம் கொண்டு நடைமுறைப்படுத்தினால் எப்படி சரிசெய்யலாம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. அடிப்படையில் நாம் அனைவரும் நினைப்பது என்ன ? தரமான உள்கட்டமைப்பு, தரமான ஆசிரியர்கள், தரமான கல்வியை கொடுக்கும் தனியார் பள்ளிகளை விரும்புவோம். அதை அரசு இந்த திட்டத்தின் மூலம் கொடுக்க முடியும். அப்போது தனியார் பள்ளிகளில் அதிக தொகையும் கொடுக்க எந்த பெற்றோரும் விரும்ப மாட்டார்கள். அப்பொழுது அரசு பள்ளிகளில் சேர்க்கை சதவீதங்களும் அதிகமாகும். இந்த திட்டங்களின் மூலம் சமமான கல்வி அனைவருக்கும் கிடைக்கிறது என்றால் இதனை ஆதாரிக்கலாம்.
அனைவருக்கும் தாய்மொழி மீது ஆர்வமுண்டு. ஆனால் தாய் மொழியை வைத்து மட்டுமே நாம்மால் அவரவர் தொழிலை தற்சார்புடன் உள்மாநிலங்களில் செய்வதற்க்கான வாய்பில்லை.உதாரணமாக, மணிகண்டன் அவர்களையே கூறலாம். நான் பல ஆந்திர, கன்னடா மாநில நண்பர்கள் இந்தி மொழி பேசுவதை பார்த்திருக்கிறேன். அவர்களால் தங்களது தாய் மொழியிலும், இந்தி மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். நமக்கு இந்தியில் ஒரு நகைச்சுவை கூறினால் கூட புரிந்து கொள்ள முடிவதில்லை.அவர்களது மாநிலம் எல்லாம் முழுவதுமாக வட இந்தியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா? அவர்களுக்கு மொழி உணர்வு இல்லை என்று கூற முடியுமா?
தரமான கல்வி, தரமான ஆசிரியர்கள் , தரமான உள்கட்டமைப்பு அனைவருக்கும் வேண்டும். ஆனால் அதை முறையாக செயல்படுத்த அக்கறை இல்லை என்பது தற்போதை சூழல். எல்லாம் தரமானதாக வேண்டும், ஆனால் ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டு மத்தியில் இருந்து வந்தால் எதிர்ப்போம். சரி தற்போதைய சூழ்நிலையில், அவர் சொன்ன பிரச்சினை களுக்கு தீர்வாக எப்படி திட்டங்கள் இருக்க வேண்டும் என்று அவரே சொன்னால் ஆக்கபுர்வமாக இருக்கும். அது அனைத்து தரப்பினருக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
arokkiuamana vivatham inge ullatgu santosam
As usual, prejudice takes over
தினமலரில் வந்த கட்டுரையை இங்கே பதிவிடுகிறேன்..
கடந்த, 1965-ல், வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாமல், தமிழகத்தில் மட்டும், ஹிந்தி மொழிக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாகின. அதனுடன், அப்போது நிலவிய, கடும் அரிசி பஞ்சமும், சேர்ந்து கொண்டதால், காங்கிரஸ் ஆட்சி துாக்கி எறியப்பட்டு, 1967ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு, இது வரை, தமிழகத்தில், காங்கிரசால், ஆட்சிக்கு வர முடியவில்லை.
ஹிந்தி எதிர்ப்பு என்ற போதையில் மூழ்கிய, லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களில், அப்போது, 18 வயதுடைய நானும் ஒருவன். மத்திய அரசு அதிகாரியாக பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ள நான், 72 வயதில் சிந்தித்து பார்க்கிறேன்... அப்போது செய்தது, தவறு என உணர்கிறேன்.தாய் மொழியுடன், கூடுதலாக ஒன்றிரண்டு மொழிகளை படிப்பதில்-, அறிந்து கொள்வதில், எந்த தவறும் இல்லை. ஹிந்தியை கற்காமல் விட்டது, இப்போதும் எனக்கு பெரும் மனக்குறையாக இருக்கிறது. நான் தமிழன் தான்; தமிழ் மொழி மீது உயிரையே வைத்துள்ளேன். எனினும், தமிழ் மட்டுமே போதாது என்பது என் வாதம்!அந்த காலத்தில், அலங்கார தமிழ் வசனங்கள் பேசியவர்களை நம்பி, ஹிந்தியை, தமிழகத்திலிருந்து விரட்டியதால், எண்ணற்ற இளைஞர்கள் வேலையின்றி திண்டாடினர். அடுத்த சில ஆண்டுகளில், தமிழகத்தில் உணவு பஞ்சம் வந்த போது, பக்கத்து மாநிலங்களுக்கு கூட, செல்ல முடியாமல், இங்கேயே பட்டினி கிடந்து இறந்தோர் பலர்.
பிழைப்பதற்காக, மஹாராஷ்டிர மாநிலம், மும்பைக்கு சென்ற பலர், ஹிந்தி, மராத்தி மொழிகள் தெரியாததால், கூலி வேலை மட்டுமே பார்த்து, காலத்தை ஓட்டினர். என்னைப் போன்ற சிலர், நன்றாக படித்ததால், கிடைத்த வேலைகளில் அமர்ந்து விட்டனர்.எனினும், குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிய கதை தான். தமிழகம் தவிர்த்து, அடுத்த மாநிலம் சென்றால், கை சைகை தான் மொழியாக இப்போதும் இருக்கிறது.ஹிந்தியை வெறுத்து, ஒதுக்க வலியுறுத்திய அரசியல்வாதிகளின் வாரிசுகள், உறவினர்கள், அந்த மொழியை பேசவும், எழுதவும் படித்து விட்டனர். அதனால் அவர்கள், பல மாநிலங்களில், தொழில் சாம்ராஜ்யங்களை உருவாக்கி விட்டனர்.ஆனால், என்னைப் போன்ற சாமானியர்கள், ஹிந்தி இல்லாத, தமிழில் மட்டுமே போதித்த, அரசு பள்ளிகளில் தான் படித்தோம். தமிழ் மற்றும் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தது.ஆங்கிலம் என்றாலே கசக்கும் வகையில் தான், அப்போதைய மனநிலை இருந்தது. இதனால், அரைகுறை ஆங்கிலமும், அதே அளவில் தமிழும் கற்று, இந்த இரண்டு மொழிகளிலும், நிபுணத்துவம் பெற முடியாமல் போனோம்.
அப்போது, ஹிந்தி வேண்டாம் என்றோர், அதன் பிறகு, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில், தமிழை வளர்க்க பாடுபடவில்லை. ஆங்கிலத்தை தான், முழுமையாக அறிந்து கொள்ளவும் செய்யவில்லை.
தமிழர் என்றால், ஹிந்திக்கு எதிரானவர்கள் என்ற மனநிலையை, நாட்டின் பிற மாநிலங்களில் விதைத்தனர். அது தான், அவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!அந்த காலகட்டத்தில், தனியார் பள்ளிகள், அத்தி பூத்தாற்போலத் தான் இருந்தன. அரசு பள்ளிகளில் தான், அனைத்து தரப்பினரும் படித்தனர்.அரசு பள்ளிகளில், ஹிந்தி அல்லது வேறு மொழிகள் கற்றுக் கொடுக்கப்படாததால், அடுத்த சில ஆண்டுகளில், படித்து முடித்த பலருக்கு, மத்திய அரசு பணிகள் கிடைக்கவில்லை; பிற மாநிலங்களுக்கு, வேலைக்கு செல்ல முடியவில்லை.அப்போது துவங்கிய வேலையில்லாத் திண்டாட்டம், 20 - 30 ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் நீடித்தது. வேலை தேடி, வடக்கே சென்ற நம் இளைஞர்கள், மொழிப் பிரச்னையால், மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். அதிர்ஷ்டவசமாக, கம்ப்யூட்டர் வந்தது. அதன் மொழிகளை கற்றோர், கம்ப்யூட்டர் துறையில் சேர்ந்து, வேலையில்லாத் திண்டாட்டத்தை, சற்று குறைத்தனர். உலகம் உருண்டை என்பது போல, இப்போது மீண்டும், வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகியுள்ளது. கம்ப்யூட்டர் கற்ற பலருக்கு, வேலையில்லை.
இந்நிலையில், ஹிந்தி போன்ற பிற மொழிகளும் நம் இளைஞர்களுக்கு தெரியாததால், தமிழகம் தாண்டி, வேறு மாநிலங்களுக்குச் செல்ல முடியவில்லை.இதை இன்னும் உணராத அரசியல் கட்சிகள், மீண்டும், ஹிந்திக்கு எதிராக குரல் கொடுத்து, நம் இளைஞர்களுக்கு, பாலைவனத்தை பாதையாக காட்டி வருகின்றன. 'ஹிந்தி வேண்டாம்' என சொல்லும் அரசியல் கட்சிகள், தமிழையாவது சரியாக கற்றுக் கொடுக்க முன் வரவில்லை.
எந்த அரசியல் கட்சியாவது, தமிழை கற்றுக் கொடுக்க, மையங்கள் துவக்கியுள்ளனவா என்றால், இல்லை. அதன் தலைவர்கள் தான், சரியாக தமிழ் பேசுகின்றனரா... அதுவும் இல்லை! இப்போதைய இளைஞர்களில், 95 சதவீதம் பேருக்கு, ஒரு பக்கம் கூட, தமிழில் சுத்தமாக எழுதத் தெரியாது என்பது தான் வேதனையான உண்மை. அந்த அளவுக்கு தான், நம்மவர்களுக்கு, தாய் மொழியின் மீது பிடிமானம் உள்ளது.
சரி... தமிழ் தான் எழுதத் தெரியவில்லை... ஆங்கிலத்திலாவது புலமை பெற்றுள்ளனரா... அதுவும் இல்லை. எல்.கே.ஜி., முதல், கல்லுாரி வரை, ஆங்கிலத்தில் தான் படித்துள்ளனர்.எனினும், ஐந்து நிமிடங்கள், ஆங்கிலத்தில், அவர்களால் உரையாட முடியவில்லை; ஒரு பக்கத்துக்கு, தப்பில்லாமல், ஆங்கிலத்தில் எழுத தெரியவில்லை.கண்ணை மூடி, ஒரு மொழியை எதிர்ப்பதால் எழும் பிரச்னையை, தமிழக அரசியல்வாதிகள் வேண்டுமானால், சந்திக்காமல் இருக்கலாம். ஆனால், சாதாரண பொதுஜனம், வேலை தேடும் இளைஞர்கள், கட்டாயம் பாதிக்கப்படத் தான் செய்கின்றனர்.
தமிழகம் தாண்டி, பிற மாநிலங்களுக்கு சென்றால், தமிழ் எடுபடாது; ஆங்கிலம் அனைவருக்கும் தெரியாது. அதற்காக, ஹிந்தி மொழி தான் வேண்டும் என, நான் சொல்லவில்லை. அந்த மொழியை எதிர்ப்பவர்கள், தமிழ் அல்லது ஆங்கில மொழியை வளர்க்க, மாணவர்கள் எழுத, பேச துாண்டுகோலாக இருந்திருக்க வேண்டும்.
இப்போது யாராவது, சுத்தத் தமிழில் பேசினால், அவரை நாம் எவ்வாறு கருதுகிறோம் என்பதே, தமிழுக்கு எந்த அளவுக்கு நாம் மதிப்பு கொடுத்துள்ளோம் என்பதற்கான அளவீடு! எதிர்கால சந்ததிகளின் வளர்ச்சி, வாழ்க்கையை நினைத்து, மொழி எதிர்ப்பு விவகாரங்களில், அரசியல் கட்சிகள் தலையிட கூடாது. எந்த மொழியையும் பேசவும், எழுதவும், அவரவருக்கு உரிமை இருப்பது போல, பள்ளிகளில் மொழிகளை தேர்வு செய்வதிலும், பிறர் தலையீடு இருக்கக் கூடாது.கட்சிகளுக்கு தலைவர்களாக இருப்போர், தங்களின் சுய விளம்பரத்திற்காக, அப்பாவி இளைஞர்களின் எதிர்காலத்தை காவு கொடுக்கக் கூடாது.நாட்டின் முன்னேற்றம், இளைஞர்களின் வளர்ச்சியை, கட்சித் தலைவர்கள் கருத்தில் கொண்டால், 'உங்களால் எத்தனை மொழிகள் கற்க முடியுமோ, அத்தனை மொழிகளையும் கற்றுக் கொள்ளுங்கள்; இந்தியா முழுவதும் செல்லுங்கள்.உலகம் முழுவதும், தமிழ் இளைஞர்கள் வேலை பார்க்க வேண்டும்; உலகச் செல்வங்களை, தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும்' என்று தானே, கூற வேண்டும்!அதை விடுத்து, ஹிந்தியை திணிக்கின்றனர் என்று கூறி, மத்திய அரசுக்கு எதிராக, போராட அழைப்பு விடுத்து, தமிழக இளைஞர்களின் வாழ்வை சூனியமாக்குவதா?
தமிழகத்தில், பெரிய அளவில் தொழில்கள் துவங்குவதற்கு, நம் அரசியல் கட்சிகள், முட்டுக்கட்டை போடுகின்றன. இருந்த சில, பெரிய தொழிற்சாலைகளையும் மூட வைத்து விட்டன. வரவிருந்த, தொழில் திட்டங்களுக்கும், சாவு மணி அடித்தபடி உள்ளன. இப்படியே இருந்தால், நம் இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும்?
எனவே, அரசியல் கட்சியினரே... நீங்கள், முதலில் திருந்துங்கள். நம் எதிர்கால சந்ததிகளின் நலன்களை உணருங்கள்.இது, உலகளாவிய பொருளாதாரச் சூழல். தமிழகத்தில் தயாரிக்கும் ஒரு பொருள், தாய்லாந்தில் விற்பனையாகும். தென் ஆப்ரிக்காவில் உற்பத்தியாகும் ஒரு பொருள், அயர்லாந்தில் விற்பனையாகும். பிற மொழிகளை பயன்படுத்தி தான், வர்த்தகம் செய்ய முடியும். இல்லையேல், பிறர் உதவியைத் தான் நாட வேண்டும்.
நம் கம்ப்யூட்டர் இளைஞர்களின் மூளையில் உதித்த, 'சாப்ட்வேர்'கள், உலகின் பல வங்கிகளில், நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழில் மட்டும் தான் பேசுவோம்; பிற மொழிகளை பயன்படுத்த மாட்டோம் என்றிருந்தால், தமிழகம் முன்னேறுமா?இப்படித் தான், 'நவோதயா' பள்ளிகளை, நம் மாநிலத்திற்கு வர விடாமல், அரசியல் கட்சிகள் சதி செய்தன. கட்டணமே இல்லாமல், தரமான கல்வியை வழங்கும், மத்திய அரசின், உண்டு, உறைவிட பள்ளிகள், அனைத்து மாநிலங்களிலும் உள்ளன; தமிழகத்தில் இல்லை. ஹிந்தி எதிர்ப்பால், அந்த பள்ளிகளை வர விடாமல் செய்து விட்டனர்.
இப்படித் தான், சில மாதங்களுக்கு முன், மருத்துவ, 'நீட்' தேர்வுக்கு எதிராக, சில அரசியல் கட்சித் தலைவர்கள் கொடி பிடித்தனர். அதையும் மீறி, நம் தமிழக மாணவர்கள், அந்தத் தேர்வை, அதிக எண்ணிக்கையில் எழுதி, தேசிய அளவில், வெற்றிக் கொடி நாட்டி வருகின்றனரே!அதன் பிறகாவது, கட்சிகளின் தலைவர்கள் திருந்த வேண்டாமா?எனவே, உலக அளவில், நம் இளைஞர்கள் மேம்பட, தாய்மொழியாம் தமிழுடன், ஆங்கிலம், ஹிந்தி அல்லது மராத்தி போன்ற மொழிகள் அவசியமே. அது மட்டுமின்றி, பிற நாட்டு மொழிகளையும், நம் இளைஞர்கள் கற்க வேண்டும்.மதம், மொழி, இனம் என வேறுபடுத்தி, மக்களை பிரித்தாளும் அரசியல் கட்சிகளின் தலைவர்களால், இளைஞர்களுக்கு, எந்த காலத்திலும் விமோசனம் கிடைக்காது.தமிழ் இளைஞர்களின் பாவம், அவர்களை சும்மா விடாது. ஒரு காலத்தில், அந்த அரசியல் தலைவர்களும், கட்சிகளும், விலாசம் இழந்து போவது நிச்சயம்!
ஏனெனில், இது, 1965 அல்ல; 2019ம் ஆண்டு. கல்வி மட்டுமின்றி, அனைத்து அம்சங்களும் உலகளாவிய அளவில், பரந்து விரிந்துள்ளன. 12 மணி நேரத்தில், உலகின் ஒரு மூலையிலிருந்து, மற்றொரு மூலைக்கு பறந்து விடலாம். இன்னமும், ஹிந்தி வேண்டாம் என, பொய் பிரசாரம் மேற்கொள்ளாதீர்.எத்தனை காலம் தான், அப்பாவி மக்களை ஏமாற்றுவீர்கள்... நீங்கள் எதிர்பார்ப்பது போல, நடக்காது. நம் தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் புத்திசாலிகள்!
மா.மனோகரன்
சமூக ஆர்வலர்
பிரின்ஸ் கஜேந்திரன் அவர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். கல்விக் கொள்கையில் சரியான விளக்கம் இல்லை என்பது பொதுவான கருத்தாக உள்ளது. மேலும் கல்வியை உலக வார்த்தக மையத்தின் கீழ் கொண்டு வந்து கல்வியை தனியரின் வசம் அரசு ஒப்படைத்து கட்டணக்கொள்ளையை தனியரே நிர்னயிக்குமாறு வழி செய்வதற்கான வரைவு என்பதை பல காரணிகளை உதாரணமாக மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார். இதற்கெல்லாம் மத்திய அரசு சரியான விளக்கம் கொடுக்க வேண்டும். கல்வியை எந்த ரூபத்திலும் வணிகமாக மாற்றி கொள்ளை அடிப்பது சமமான கல்வியை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்காது.கீழே அவருடைய youtube கானொளி
https://youtu.be/QbHHjRrocc8
Post a Comment