Jun 26, 2019

மாற்று மருத்துவம்- ஒரு தொடர்ச்சி

 உங்கள் பதிலுக்கு முதலில் நன்றி.

மருத்துவ முறைகள் தொடர்பான உரையாடலுக்காகவே அக்கடிதத்தை எழுதினேன். அன்றி, வாதம் புரிந்து ஒன்றை நிறுவும் நோக்கில் நான் எதையும் குறிப்பிடவில்லை. மேலும்,  ‘அலோபதி மருத்துவர்கள் வணிகப்பிசாசுகள்’ என்பதான கருத்தை என் கடிதத்தின் வழி ஒருவர் உடனடியாகப் பெற்றுவிடக் கூடும் என்பதைக் கவனிக்கத் தவறி விட்டேன். மாற்று மருத்துவமுறைகள் குறித்து நீங்கள் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை என்பதால், அப்படியான ‘தோற்றமே’ முந்தி நிற்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், அக்கடிதம் அப்படியான தாக்கத்துக்காக எழுதப்படவில்லை.

பெரும்பானமையான மருத்துவமனைகளில் ‘வணிகமே’ பிரதானமாக இருக்கிறது என்பது என் தரப்பு. இது கல்வித்துறை போன்ற பிற துறைகளுக்கும் பொருந்தும். கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்றவை சேவைத்துறைகள். இன்றோ அவை வெகுவேகமாக ‘வணிகமயமாகி’ வருகின்றன. முழுக்க முழுக்க அரசுவசம் இருக்க வேண்டிய அத்துறைகள் ‘தனியார்மயமான’ பின்னர் அதிகப்படியான மக்களை சென்று சேர்ந்திருக்கிறது. அதில் துளியும் சந்தேகம் இல்லை. அது எதன் அடிப்படையில் என்பதே கவனிக்கப்பட வேண்டியது. அதிகபட்ச சேவை அடிப்படையிலா அல்லது அதிகபட்ச இலாப அடிப்படையிலா? இலாபத்தைக் கூட நான் குறை சொல்லவில்லை. ஈவிரக்கமற்ற அதிகப்படியான இலாப வெறி என்பதையே நான் சுட்டிக் காட்ட விரும்பினேன். மேலும், அக்கருத்தை எளிமையாய்ப் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டியே அரவிந்த் கண் மருத்துவமனை சுட்டியையும்(Link) உங்களுக்கு அனுப்பினேன். இங்கு அதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தி விடுகிறேன். எத்துறை சார்ந்த நிறுவனமானாலும் அதில் மக்கள் நலம்(பொதுநலன்) என்பது முதலாவதாகவும், இலாபம்(சுயநலன்) என்பது இரண்டாவதாகவும் இருக்க வேண்டும் எனும் சிந்தனையை முன்வைக்கவே அக்கட்டுரையையும் பகிர்ந்து கொண்டேன். 

எத்துறையிலும் அத்துறைக்கு இழுக்கு சேர்க்காத பலர் கட்டாயம் இருப்பர். அவர்களைப் பற்றியதன்று நம் உரையாடல். அலோபதி மருத்துவம் எனும் சேவைத்துறை இன்று திட்டமிட்டு வணிகமயமாக்கப்பட்டு இருக்கிறதா, இல்லையா என்பதே அலசப்பட வேண்டியது. அவ்வகையில், இலாப வணிகத்தை முதன்மைப்படுத்தும் மாற்று மருத்துவர்களும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே. மருத்துவத்துறை மட்டுமன்று... எத்துறையாயினும் அதில் இலாப வெறியை நோக்காகக் கொண்டோரைக் கண்டிக்கவாவது செய்யலாம்தானே?

கடிதத்தை நிதானமாய்ப் படிக்கும் ஒருவருக்கு நான் மேற்சொன்னவை குறித்த தூண்டுதல் கிடைத்திருக்கக் கூடும். எப்படி இருப்பினும், உயிர்நேயத்தோடு செயல்படும் அலோபதி மருத்துவர்கள் யாரையேனும் நான் மனம் வருந்தச் செய்திருப்பின், அதற்காக மன்னிப்பு கோருகிறேன். அவர்களை மட்டுமன்று.. எத்துறையையாயினும் அதில் வணிக இலாபத்தை மட்டுமே முதன்மைப்படுத்தாமல் செயல்படும் மனிதர்களை உளமார வணங்குகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மற்றுமொரு விளக்கம். மாற்று மருத்துவ முறைகள் குறித்த நோய் குணமாக்கல் விபரங்கள் தொடர்பானது. குணம் பெற்றவர்கள்(மாற்று மருத்துவத்தில்) குறித்த விபரங்கள் உங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், ”மாற்று மருத்துவங்கள், இயற்கை வாழ்வியல், ஆதியை நோக்கித் திரும்புதல் என்ற பெயர்களில் லட்சக்கணக்கானவர்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் பெருகிவிட்ட காலத்தில்...” என்று மட்டும் உங்களால் சொல்லிவிட முடிகிறது (அதைத்தான் ‘வாழ்க பகுத்தறிவு’ எனும் பத்தியில் சொல்லி இருந்தேன்). மாற்று மருத்துவம் தொடர்பான சில நல்ல மருத்துவர்களைப் பரிந்துரைத்து என்னால் அதை மறுத்திருக்க முடியும்தானே? தயைகூர்ந்து, அதையும் விளங்கிக் கொள்ளுங்கள்.

நம் உரையாடலின் அடித்தளமாக நான் கருதுவது, சமூக மருத்துவ முறைகளின் அடிப்படைகளையும், அவற்றுக்கு இடையேயான முரண் இயக்கங்களையும் புரிந்து கொள்ள முயற்சிப்பதே. அவ்வகையில், அதைத் தெளிவாகவும், விரிவாகவும் உங்களுக்கு எழுதவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். இங்கு அதைத்தான் செய்ய இருக்கிறேன். மேலும், நான் சொல்பவையும் என்னளவிலான புரிதல் மட்டுமே. மேலதிக உரையாடலுக்குத் தயாராகவே இருக்கிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உயிர்ப்பரிணாமத்தில் ஆறாவது அறிவுடன் தோன்றிய உயிரினம் மனிதன். மனிதர்கள் கூடி வாழும் தொகுப்புக்குப் பெயரே சமூகம். சமூகத்தில் மனிதனே மையம்(அப்படித்தான் நம் செயல்பாடுகள் இருக்கின்றன). சமூகத்தில் இடம்பெறும் எப்பொருளுக்கும் மனிதனின் கோணத்தில் இருந்தே அர்த்தம் இருக்கும். அதாவது, மனிதனே சமூகத்தை நிறுவி அதன் இயக்கத்தைத் தீர்மானிப்பவனாக இருக்கிறான். இவ்வகையில், அவனுக்கான சிக்கல்களும், துன்பங்களும் அவனால் கண்டறியப்பட்டவையே. நோய், அச்சிக்கல்களில் முக்கியமானது; முதன்மையானது.

மனித சமூக வரலாற்றைச் சுருக்கமாகப் புரிந்து கொண்டால் நோய் குறித்த ஓரளவிலான புரிதலும் கிடைத்து விடும். துவக்கத்தில் வேட்டைச்சமூகமாக இருக்கிறான் மனிதன். அச்சமூகத்தில் உணவு மட்டுமே பிரதானம். உணவைத்தவிர வேறு எதுவும் முக்கியம் இல்லை. இந்நிலையில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் சிறிதளவிலான வேறுபாடு மட்டுமே. உணவுக்காக வேட்டைக்குச் செல்வது, விலங்குகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வது என்பதான சிந்தனையிலேயே அச்சமூகம் காலத்தைக் கழித்திருக்கும். பிற சிந்தனைகளுக்கு துளியும் இடமில்லை; அதற்கான தேவையும் இல்லை. மேலும், இச்சமூகத்தில் குழுக்களுக்கு என்றோ, தனிமனிதனுக்கோ என்றோ தனிப்பட்டு ‘உடைமைகள்’ இல்லை. சுருக்கமாகச் சொல்வதானால், தனியுடைமை இல்லை. வேட்டைச்சமூகக் காலகட்டத்தில் மனிதர்கள் நாடோடிகளாக இருந்தார்கள். வேட்டைச் சமூகத்தை இனக்குழுச் சமூகம் என்று சொல்லலாம். இங்கு குழுக்களுக்கு இடையே உடைமைகள் தொடர்பான போட்டி, பொறாமைகள் இல்லை. குழுவின் பொதுநலன் மட்டுமே முதன்மையான அம்சம்.

காலம் இயங்குகிறது. வேட்டைச்சமூகத்தில் இருந்து மேய்ச்சல் சமூகம் பரிணமிக்க ஆரம்பிக்கிறது. மேய்ச்சல்சமூகத்தில் மாடு, எருமை, ஆடு போன்ற விலங்குகளை மேய்க்கும் தொழிலும், சிறிதளவிலான விவசாயமும் அறிமுகமாகின்றன. பண்டமாற்று முறைக்கான களமாகவும் இச்சமூகம் இருக்கிறது. இங்குதான் ‘உடைமை’ பங்கு கொள்ளத் துவங்குகிறது. அதனால், மாடுகள் உள்ளிட்ட விலங்குகளைக் கவர்ந்து செல்லல், பிற இனக்குழுக்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது போன்ற ஆதிக்கச் செயல்பாடுகள் தொடங்கி விடுகின்றன. ’உடைமை’ எண்ணம் தோன்றியதுமே, ’தனிப்பட்ட குழுநலன்’ பிரதானமாகி விடுகிறது. வேட்டைச் சமூகத்தில் குழுக்கள் இருந்தன; தனிப்பட்ட குழுநலன் இல்லை. மேய்ச்சல் சமூகத்தில் குழுக்கள் இருந்தாலும், தனிப்பட்ட குழுநலனால் அவற்றுக்கிடையே மோதல்கள் நடந்து கொண்டே இருந்தன. சுருங்கக் கூறின், பொதுவுடைமை என்பதிலிருந்து விலகி தனியுடைமைக்கான வேர்கள் துளிர்விட்ட காலம் இது. இச்சமூகத்தை சிற்றரசு அல்லது குறுநில மன்னர் சமூகம் என்று சொல்லலாம்.

காலம் மேலும் இயங்குகிறது. மேய்ச்சல் சமூகத்திலிருந்து வேளாண் சமூகம் முகிழ்த்து வர ஆரம்பிக்கிறது. வேளாண் சமூகம் என்பது விவசாயம்(விவசாயத்தை ஒட்டிய தொழில்களும் அடக்கம்) மற்றும் மீன்பிடித் தொழில்களை முதன்மைப்படுத்துவது(தமிழ்த்திணைகளில் மருதம் மற்றும் நெய்தலைச் சொல்லலாம்). உணவு, உடை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளில் மூன்றாவதான உறைவிடத்தின் தேவையும் இங்கு பூர்த்தியாகிறது. அவ்வகையில், இச்சமூகத்தில் மக்கள் ஓரிடத்தில் நிலைத்து வாழத்துவங்குகின்றனர். இங்கு குறுநில அரசுகளின் தொகுப்பாக பேரரசு உருவாகி வருகிறது. அதனால் இச்சமூகத்தை பெருநில வேந்தர் சமூகம் அல்லது அரசுச்சமூகம் என்று சுட்டலாம். இச்சமூகத்தில் ‘தனிப்பட்ட குழுநலன்’ என்பது ‘தனிப்பட்ட அரசின் நலம்’ என்பதாக மாறுகிறது. அரசுகளுக்கிடையே போர்கள் நடைபெறுகின்றன; நாடுகள் கைப்பற்றப்படுகின்றன.

 காலம் மேலும் இயங்குகிறது. வேளாண் சமூகத்தில் இருந்து தொழிற்சமூகம் உருவாக ஆரம்பிக்கிறது. அதையே நாம் நவீன சமூகம் என்று சொல்கிறோம். இன்றைக்கு நாம் வாழ்ந்து கொண்டிருப்பது இச்சமூகத்திலேயே. தொழிற்சமூகத்தில் சமூகமையமாக அரசு இருப்பினும், நாட்டின் பொருளியலைத் தீர்மானிக்கிற சக்தியாக பொருளாதாரமே இருக்கிறது. அவ்வகையில், அதைப் பெரும்பான்மையாகத் தங்கள் வசம் வைத்திருக்கும்  முதலாளிகள் அல்லது தனியார் நலனே முக்கியமானதாக இருக்கிறது. அல்லது அரசியந்திரம் முதலாளிகளின் நலனுக்குப் பாதகம் வராத வகையிலேயே தன்னை முன்வைக்கிறது. மக்கள் நலனே முக்கியம் என்பதான கருத்தியலில் செயல்படவேண்டிய அரசால் அப்படி செயல்பட்டு விட முடியாத நிலை உருவாகிறது. மேலும், அரசுப்பொறுப்புக்கு வர பொருளாதாரமே முக்கியப் பங்காற்றுகிறது. அவ்வகையில், இன்றைக்கு அரசுப்பொறுப்புக்கு வந்த அல்லது வர இருக்கும் அரசியல் கட்சியினர் பெருமுதலாளிகளின் பக்கமே நிற்க வேண்டி இருக்கிறது. தேவைக்கான உற்பத்தி என்பது போய், திணிப்பு நுகர்வுக்கான உற்பத்தி என்பதான யுத்தி அறிமுகமாகிறது. நுகர்வு அவசியமா, இல்லையா என ஒரு தனிமனிதன் யோசிக்கக்கூட முடியாத அளவில் சந்தைப்படுத்தல் முகம் காட்டத் துவங்குகிறது. உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் போன்றவற்றுக்குப் பின் பெருமுதலீட்டின் கரங்களே செயல்படுகின்றன. இச்சமூகத்தில் பெரும்பாலும் முதலாளிகள் அல்லது தனியார்நலனே முக்கியம். நவீனச்சமூகத்தை கொஞ்சம் நெருங்கிக் கவனிக்கும் ஒருவரால் இதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். மனிதர்களிடையேயும் குழுஉறவுக்கான முக்கியத்துவம் குறைந்து தனிமனித நலன் மேலோங்கத் துவங்குகிறது. தெளிவாகச் சொல்கிறேன். சமூகப்பொருளியல், அரசியல் சூழலுக்குத் தகுந்தவாறு மனித மனங்களில் தீவிரமான சுயநலம் செயல்படத் தொடங்குவதைத் தவிர்க்க முடியாது. எனினும், அதைப் புரிந்து கொள்ளவோ, விளங்கிக் கொள்ளவோ முயற்சி செய்ய அவனுக்கு வாய்ப்பிருக்கிறது. அதைக் கவனிக்காமல் இருக்கிறோம் என்பதாகவே என் ஆதங்கம் இருக்கிறது.

இப்போது நோய்க்கு வருவோம். வேட்டைச் சமூக காலத்தில் துவங்கி நவீனச்சமூகக் காலம் வரை மனிதமனம் இயங்கி வருவதோடு, தன்னைத் தொகுத்தும் வந்து கொண்டிருக்கிறது. ஆக, நோய் என்று நவீனச் சமூகத்தில் குறிப்பிடுவதை இன்றைய சூழலை மட்டும் வைத்து புரிந்து கொண்டு விடக் கூடாது. இதைக் கொஞ்சம் எளிமையாகச் சொல்லப்பார்க்கிறேன். நவீன மனிதனின் மனதில் நவீனச் சமூகம், வேளாண் சமூகம், மேய்ச்சல் சமூகம் மற்றும் வேட்டைச் சமூகம் போன்றவற்றின் நினைவுப்பதிவுகள் நிச்சயம் இருந்தே தீரும். மரபணுக்கள் வழியாக காலந்தோறும் அவை தலைமுறை தலைமுறையாய் கடத்தப்பட்டு வந்து கொண்டே இருக்கின்றன. ஆக, நோய் எனும்போது அதையும் கவனத்தில் கொண்டே ஆக வேண்டும். இங்கு, நவீன மனிதனுக்கான நோய் என்பது வெறுமனே நோய் மட்டும் அல்ல என்பதும் தெளிவாக வேண்டும்.

வேறுவகையில், எளிமையாகச் சொல்ல முயற்சிக்கிறேன். இன்றைக்கு இருக்கும் கோவில் வழிபாடு என்பது வேட்டைச் சமூகக் காலகட்ட நடுகல் வழிபாட்டின் நீட்சி. இன்றைக்கு இருக்கும்படியே வழிபாடு வேட்டைச் சமூகக் காலகட்டத்திலும் இருந்திருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், இன்றைக்கிருக்கும் கோவில் வழிபாட்டைக் கொண்டு அன்றைக்கு நடந்த நடுகல் வழிபாட்டை யூகித்து, விளங்கிக் கொள்ள முடியும். அதைப்போன்றவையே.. மருத்துவமுறைகளும், இன்ன பிற அறிவுத்துறைகளும்.

வேட்டைச் சமூகக் கால கட்டத்தில் ’தன்னைக் குழுவின் பிரதிநிதி’யாக உணர்ந்த மனிதன், நவீனச் சமூகத்தில் ’குழுவில் தன்னைத் தனியனாக’ உணர்கிறான். மனிதமனதை இன்றைக்கு ஆட்டிப்படைக்கும் பல சிக்கல்களுக்கு அதுவே காரணம். இதை இன்னும் கொஞ்சம் விரித்துப் பேசலாம். உயிர்களில் மனிதனும் ஒருவனே என்பதுதான் இயற்கை நியதி. மனிதனைப் பொறுத்த வரை அவனுக்காகத்தான் உலகமே என்பதாகவே அழுத்தமாய் நம்புகிறான். அப்படி நம்புவதோடு, தன்னை மையப்படுத்தியே பிரபஞ்சத்தையும் விவரிக்கத் துணிகிறான். பிரபஞ்சத்தை ஆராய்வதில் தவறு இல்லை. அதன் அடிப்படை என்பது, உண்மையைத் தெரிந்து கொள்ள இருக்க வேண்டுமே தவிர, தன்னை மையப்படுத்துவதில் இருக்கக் கூடாது. அதன்பொருட்டே, இன்றைக்கு அவன் கணக்கிலடங்க சிக்கல்களை உணரவும், நம்பவும் துவங்கி விட்டான். மனிதர்களின் தங்களை மையப்படுத்திய சுயநலச் செயல்பாடுகளும், மனதின் திரிபு எண்ணங்களுமே நோய்களாக அவர்களைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அப்படியானால், பொதுவுடைமைச் சமூகமான வேட்டைச் சமூக வாழ்க்கை முறைக்குத் திரும்பி விட்டால் நோய்கள் குறைந்து விடுமா அல்லது இல்லாது போய்விடுமா? என்ற கேள்வியைக் கேட்கலாம். சமூக இயங்கியலில் அது சாத்தியமே இல்லை. நமக்குச் சாத்தியமானது ஒன்றே ஒன்றுதான். நவீனச் சமூகத்தில் இருந்து பகுத்துக் கொண்டே போய் வேட்டைச் சமூகக் கால கட்டத்தை அடைவது. அங்கிருந்து தொகுத்துக் கொண்டே வந்து மனிதச்சமூகத்தின் வரலாறைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது. அப்படியான புரிதல், ஒரு நவீன மனிதனின் மனதில் இருக்கும் சிக்கல்களை ஓரளவு களையலாம். அவ்வகையில், நவீனச் சமூகத்தில் அவனுக்கான வாழ்வை அவன் தேர்ந்தெடுக்க அது உதவலாம். அதன்வழி, குறைந்தபட்ச ஆரோக்கிய வாழ்வை அவன் வாழலாம்; அவ்வளவே.

வேட்டைச்சமூக காலத்தில் ஒரு இனக்குழுவில் வேட்டைக்குப் போக இயலாத ஒருவருக்கும் உணவு கிடைக்கும். அங்கு குழுவின் மனிதன் மிக முக்கியம். நவீனச் சமூகத்தில் பொருளீட்டும் தகுதியில்லாத முதியவர்கள், மனநிலை பாதிக்கபட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வுச்சூழலைக் கவனித்துப் பாருங்கள். விளிம்புநிலையில் அவர்கள் இருப்பது புரியவரும். மறுபடியும், தெளிவாகச் சொல்கிறேன். நவீனச் சமூகம் முழுக்க மோசமானது என்று நிறுவ விரும்பி நான் எதையும் சொல்லவில்லை. நவீனச்சமூகத்தில் மனிதர்களைக் காட்டிலும் உடைமைகளுக்கும், பொருளாதாரத்துக்குமே முக்கியத்துவம். அதைக் கொண்டே மனிதர்களுக்கு மதிப்பு. இன்றைக்கும், திருமணத்தில் சாதிக்கு அடுத்தபடியாக நிலம், நகைகள் உள்ளிட்ட உடைமைகள்தானே முதன்மையாக இருக்கின்றன. ஆணோ, பெண்ணோ குணத்தில் சிறப்பானவர்களாக இருந்தாலும் நிலபுலன், தொழில் அல்லது சொத்து போன்றவற்றில் ‘கம்மியாய்’ இருந்தால் அவர்களுக்கான ’மார்கெட் வேல்யூ’... சொல்லவும் வேண்டுமோ?

வேட்டைச்சமூகக் காலகட்டத்தில் இருந்த அச்சமும், நவீனச்சமூகத்தில் ஒரு மனிதனுக்கு இருக்கும் அச்சமும் முழுக்க வேறானவை. என்றாலும், துவக்க கால கட்ட அச்சத்துக்கான விளைவு மிகவும் குறைவு; நவீன கால அச்சத்தின் விளைவுகளோ படுபயங்கரமானவை. துவக்கத்தில் நம்மிடம் நம்பிக்கை இருந்தது; இன்றோ சந்தேகம் மிகுந்திருக்கிறது. வாழ்க்கைச் செயல்பாடுகள் > சடங்குகள் > வழிபாடு > தத்துவம் > சமயம் எனும்படியான பரிணாமத்தில் உள்ளீடாக மனிதனின் அச்சத்துக்கும், நம்பிக்கைக்குமான போராட்டத்தைத் தெளிவாகக் காண முடியும். சமயத்தைப் பொறுத்தவரை அச்சம் அல்லது குழப்பமே நோய்; நம்பிக்கை அல்லது தெளிவே மருந்து. சமயத்தின் வரலாற்றுப்பரிணாமத்தை தனிமனிதத் தளத்தில் வைத்து பார்க்கும் ஒருவருக்கு நான் சொன்ன உண்மை பிடிபடலாம். சமூகத்தளத்தில் சமயத்தை சில ஆதிக்க சக்திகள் தங்களின் செயல்பாடுகளை நியாயப்படுத்த கையில் எடுத்திருக்கலாம். எனினும், பெரும்பான்மையான மக்களுக்கு இன்றளவும் நம்பிக்கை அளிப்பதாக கடவுள் வழிபாடு இருப்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது. இங்குதான், கடவுள் வழிபாட்டின் சமூகத்தேவையைப் புரிந்துகொள்வதற்கான முயற்சி அவசியமாகிறது. அதைப்போன்றே நோய் மற்றும் மருத்துவமுறைகளையும் சமூகத்தேவை அடிப்படையில் அணுகவேண்டிய கட்டாயமும் எழுகிறது.  

மனிதர்கள் தங்களுக்கான நோய்களை, அவர்களின் வாழ்வுச்சூழலில் இருந்தே பெறுகின்றனர். அவ்வகையில், தொடர்ந்து இயங்கிவரும் சமூகத்தில் நோய்களின் வகைகளும், அவற்றுக்கான தீர்வுகளும் மாறிக்கொண்டேதான் இருக்கும். அவ்வகையில், நவீனச் சமூகத்தின் முதன்மையான மருத்துவமுறை அலோபதி. எக்காரணம் கொண்டும், அதன் தேவையையும், சமூகப்பயனையும் குறைத்து மதிப்பிடத் தேவை இல்லை. அதேநேரம், அம்மருத்துவமுறைக்கு முன்பிருந்த முறைகளைக் கவனத்தில் கொள்வதும், ஆராய்வதும் தொடர்ந்து செய்யப்பட வேண்டிய ஒன்று. இங்கு முக்கியமாய் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். சமூகப்பரப்பில் இருந்து முற்றிலும் மறைந்து போன மருத்துவமுறையைத் தோண்டி எடுத்து ஆராயச் சொல்லவில்லை. மக்கள் மத்தியில் இன்றைக்கு புழக்கத்தில் இருக்கும் மருத்துவமுறைகளை வரலாற்று அடிப்படையில் புரிந்து கொள்வதும், அறிவியல் அடிப்படையில் சீர்படுத்துவதும் நவீனச் சமூகத்தைச் சேர்ந்தவர்களான நம்முடைய பணி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இதுகாறும் நான் பகிர்ந்து கொண்டவற்றை பலமுறை நிதானமாய்ப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன். ஒரு மனிதனுக்கான நோய் என்பதை வெறுமனே அவனை மட்டும் கவனத்தில் கொண்டு மட்டும் முடிவு செய்துவிட முடியாது; அவன் வந்த மரபு, வாழ்கின்ற குடும்பச் சூழல், காலநிலை உள்ளிட்ட அம்சங்களும் முக்கியம்.

ஒரு தனிமனிதனைக் கணக்கில் கொண்டு நோயை விளக்கப் பார்க்கிறேன். மனிதனை உடல், மனம் மற்றும் உயிர் என்பதாகவே பகுத்திருக்கிறோம். வேறுவகையில் சொல்வதானால், உடல்-மனம்-உயிர் மூன்றின் தொகுப்பாகவே மனிதனைப் பார்க்கிறோம். அப்படி இருக்க, அவனுக்கு ஒரு நோய் எனும்போது எப்படி அணுக வேண்டும்?

சமூகத்தில் இன்றைக்குப் பயன்பாட்டில் இருக்கும் மருத்துவ முறைகளை நான் சமூக மருத்துவ முறைகள் என்று குறிப்பிடுகிறேன். முக்கியமான மூன்று மருத்துவமுறைகளை நம் உரையாடலுக்கு எடுத்துக் கொள்வோம். அலோபதி, ஹோமியோபதி மற்றும் சித்த மருத்துவம். இதில், அலோபதி மட்டுமே நவீன அறிவியல் மருத்துவமாகப் பார்க்கப்படுகிறது. மீதி இரண்டும் மாற்று மருத்துவ முறைகளில் வருகின்றன. யுனானி, அக்குபஞ்சர், அக்குபிரஷர், ஹீலிங் மற்றும் இயற்கை மருத்துவம்(Natrupathy) போன்றவையும் மாற்று மருத்துவ முறைகளில் அடங்கும்.

அலோபதி மருத்துவ முறை மனிதனை உடலாக மட்டுமே பார்க்கிறது. உடற்கூற்றியல், உடற்செயல்பாட்டியல் போன்ற அதன் பாடங்கள் வழி, உடலுக்கு நேரும் ஊறுகளையே அது கணக்கில் கொள்கிறது. அதற்கே மருத்துவமும் பார்க்கிறது. ஏற்கனவே, இதுபற்றி உங்களுக்கு விரிவாக எழுதி இருக்கிறேன். எனினும், சுருக்கமாக மீண்டும் சொல்லி விடுகிறேன். உடலில் வெப்பம் மிகுந்தால் காய்ச்சல் என்று முடிவு செய்யும் அலோபதி, அதற்கு மருந்தைப் பரிந்துரைக்கிறது. சத்திவேலின் காய்ச்சலும், மணியின் காய்ச்சலும் அலோபதி மருத்துவமுறையைப் பொறுத்தவரை ஒன்றே; அதனால் மருந்தும் ஒன்றே. ஆக, உடலின் குறிகள் மட்டுமே அலோபதியில் கணக்கில் கொள்ளப்படுகின்றன. உடலில் ஏற்பட்ட மாற்றங்களைத் தெரிந்து கொள்ள ஆய்வக முடிவுகளை நாடுகிறார்கள். அம்முடிவுகளின் அடிப்படையிலேயே மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றான ஹோமியோபதிக்கு வருவோம். ஹோமியோபதி முறையின் தந்தை என்று சொல்லப்படுபவர் சாமுவேல் ஹானிமன்; அலோபதி மருத்துவர். அலோபதி எனும் பெயரை நவீன மருத்துவமுறைக்கு அளித்தவரும் கூட. ஒரு மனிதனை உடலாகப் பார்த்து சிகிச்சை அளிப்பது முட்டாள்தனம் எனும் கருத்தை முன்வைத்ததற்காக வசைபாடப்பட்டவர். நோயுற்ற மனிதனின் உடலைக் காட்டிலும், அவன் மனநிலையே முக்கியம் என்பது ஹோமியோபதியின் அடிப்படை. அவ்வகையில், மனக்குறிகளுக்கே மருந்து. சத்திவேலின் காய்ச்சலுக்கான மருந்து அவருக்கான மனக்குறிகளைக் கொண்டும், மணிக்கான காய்ச்சலுக்கு மருந்து அவருக்கான மனக்குறிகளைக் கொண்டும் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கு மருத்துவர் நோயாளியுடன் கட்டாயம் உரையாடி அவரின் மனநிலையை விளங்கிக் கொள்வது மிக முக்கியம். அலோபதியில் நோயாளியின் மனநிலையை உள்வாங்க வேண்டிய தேவை இல்லை. அவனின் உடற்குறிகளைக் கொண்டு அதற்கு மருந்துகளைப் பரிந்துரைத்தால் போதும். அதனாலேயே, அம்மருத்துவமுறை அறிவியலுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது; உலகப் பொது மருத்துவமாகவும் இருக்கிறது.

அலோபதி மற்றும் ஹோமியோபதி மருத்துவமுறைகளில் மருந்துகளின் செயல்முறைகளும் எதிரெதிரானவை. ஒத்தது ஒத்ததைக் குணப்படுத்தும் என்பது ஹோமியோபதி. ஒத்ததை அதற்கு எதிரானதே குணப்படுத்தும் என்பது அலோபதி. இரண்டு மருத்துவமுறைகளுமே மேலைநாட்டின் கொடைகள். அவை இரண்டிலும் வேதிப்பொருட்களே மருந்துகளாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. பல அலோபதி மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அலோபதி மருத்துவர்களே ஒப்புக்கொள்கின்றனர். ஹோமியோபதி மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தாதவை என அம்மருத்துவர்கள் உறுதிபடச் சொல்கின்றனர். எப்படி இருப்பினும், இம்மருத்துவமுறைகள் முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமானவை.

மாற்றுமருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்துக்கு வருவோம். சித்தமருத்துவத்தைப் பொறுத்தமட்டில், மனிதன் என்பவன் ஒரு உயிர். உயிர் என்பதை உயிரியக்கமாகப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன். இயற்கையில் எண்ணற்ற இயக்கங்கள் தொடர்ந்தபடி இருக்கின்றன. அவற்றுள் ஒன்று உயிரியக்கம். இயற்கையின் இயக்கத்தில் உயிர் இயக்கம் சிறுபகுதியே தவிர, உயிர் இயக்கமே முழுஇயற்கையும் அன்று. உயிரியக்கப் பரிணாமத்தில் சமகால வடிவமே மனிதன்.

சித்த மருத்துவத்தின்படி, மனித உயிரியக்கமே மனமாகவும், உடலாகவும் நம்மால் புரிந்து கொள்ளப்படுகிறது. மனிதன் சமூகத்தோடு கொள்ளும் தொடர்புகள் அவன் உயிரியக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்த, அவை மனதிலும் உடலிலும் வெளிப்படுகின்றன. சுருங்கச் சொல்வதாயின், சமூகத்துக்கும் மனிதனுக்கும் இடையேயான உற்வும், பகையும் உயிரியக்கத்தில் சமன்குலைவை ஏற்படுத்துகின்றன. அதை அவன் நோயாகச் கருதுகிறான்.

மனித உயிரியக்கம் என்பது ஐந்து பூதங்களால் ஆனது. அப்பூதங்களில் ஏற்படும் சமன்குலைவே நோய்; அதைச் சீர்செய்வதே மருந்து. ஐம்பூதங்களின் குறைபாட்டை வாத, பித்த, கப நாடிகளைக் கொண்டு அல்லது நோயாளி தெரிவிக்கும் காரணங்களை வைத்து மருந்துகள் முடிவு செய்யப்படுகின்றன. சித்த மருத்துவத்தில் மூன்று வகையான மருந்துகள் முதன்மையாய் இருக்கின்றன. அவை தாவர வர்க்கம்(மூலிகைகள்), மாமிச வர்க்கம் மற்றும் தாது வர்க்கம்(செந்தூரம், பஸ்பம் போன்றவை). இவை குறித்து ஏற்கனவே உங்களுக்கு எழுதி இருக்கிறேன். அவ்வடிப்படைகளை அறிவியல் முறையில் முறைப்படுத்தும் வேலைகள் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் பல வருடங்களில் சித்த மருத்துவத்தின் அடிப்படைகள் நவீன அறிவியல் விதிகளுக்கு இணக்கமாக சீர்செய்யப்பட்டு விடலாம். இயற்கை மருத்துவம், அக்குபஞ்சர், அக்குபிரஷர், வர்மம் போன்ற மருத்துவமுறைகளும் ஐம்பூதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றையும் இன்றைய காலத்துக்குத் தகுந்தவாறு சீர்படுத்துவோம் எனில், நோய்கள் தீவிரமாகாமல் துவக்கத்திலேயே குணப்படுத்திவிட முடியும்.

விபத்துக் காலங்களில் அல்லது நோயின் தீவிர காலகட்டத்தில் அலோபதி மருத்துவத்தை நாடலாம். தொடர் சிகிச்சைகளுக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட மாற்றுமருத்துவ முறைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அரசும், அறிவியலாளர்களும், மருத்துவர்களும் இணைந்து இதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும். வருங்காலத்தில், ஒருங்கிணைந்த மருத்துவமுறை(அலோபதியும், மாற்று மருத்துவமுறைகளும் கலந்தது) நடைமுறைக்கு வருமாயின், அதிகம் மகிழ்வேன். மருத்துவர் தெய்வநாயகம் போன்றோர் அம்மருத்துவ முறையை முன்னெடுத்தார்கள். ஏனோ, அது தொடரவில்லை(சித்த மருத்துவர் கு.சிவராமனுக்கு ஆசிரியராக இருந்தவர் தெய்வநாயகம்).

நவீன மருத்துவ முறைகள் பிற்காலத்தியவை; மாற்று மருத்துவ முறைகள் முற்காலத்தியவை. இரண்டையும் ஒருபோதும் இணைவைத்துப் பேசிவிட முடியாது. நவீன காலத்தின் தேவைகளுக்கேற்ப, அவற்றை ஒழுங்குபடுத்துவதும், பயன்படுத்திக் கொள்வதும் நம் கையில்தான் இருக்கிறது. அதைவிடுத்து, அவற்றை எதிரெதிர் நிலைகளில் வைத்து சண்டையிட்டுக் கொள்வது எவ்விதப் பயனையும் நமக்கு அளித்து விடாது.

நோய்கள் வந்து சிகிச்சை அளிப்பதைக் காட்டிலும், அவை வரும் முன்பே காத்துக் கொள்ள வேண்டியது இன்றைக்கு மிக முக்கியம். நம்முடைய உணவுப்பழக்கங்களையும், வாழ்க்கை முறையையும் உயிரியக்கத்துக்கு இணக்கமாக அமைத்துக்கொண்டால் நோய்களைப் பெருமளவு தவிர்த்து விடலாம்.

உயிர்நலத்தை விரும்பும்,
சத்திவேல்,
கோபிசெட்டிபாளையம்

3 எதிர் சப்தங்கள்:

Murugesh Kandasamy said...

//நோய்கள் வந்து சிகிச்சை அளிப்பதைக் காட்டிலும், அவை வரும் முன்பே காத்துக் கொள்ள வேண்டியது இன்றைக்கு மிக முக்கியம். நம்முடைய உணவுப்பழக்கங்களையும், வாழ்க்கை முறையையும் உயிரியக்கத்துக்கு இணக்கமாக அமைத்துக்கொண்டால் நோய்களைப் பெருமளவு தவிர்த்து விடலாம்.// - Awesome boss

Anonymous said...

//வேட்டைச்சமூக காலத்தில் ஒரு இனக்குழுவில் வேட்டைக்குப் போக இயலாத ஒருவருக்கும் உணவு கிடைக்கும். //
இது உண்மையாக இருக்க எப்படி வாய்ப்பு இருக்கும். Survival of the fittest என்பது தானே இயற்கை.

பழங்குடி மருந்துகளின் உள்ளீடுகளை பகுத்து பல நவீன மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளது.

சேக்காளி said...

இன்றைய அவசர யுகத்தில் இவ்வளவு பெரிய கட்டுரையை பொறுமையுடன் எழுதியதற்கு நன்றி சத்திவேல்.