Jun 19, 2019

வேலை இல்லைன்னா?

தமது அலுவலகத்தில் ப்ராஜக்ட் சரியில்லை என்றும் தமது வேலை குறித்தான பயம் உருவாகியிருப்பதாகவும் ஒரு நண்பர் வருந்தியிருந்தார். மென்பொருள் நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். வேலை குறித்து மட்டுமில்லாமல் வேறு சில பிரச்சினைகளுக்கும் ஆலோசனை கேட்டு அவ்வப்பொழுது யாராவது தொடர்பு கொள்வார்கள். பெரும்பாலும் தனிப்பட்ட பிரச்சினையாக இருக்கும் என்பதால் அது குறித்து பொதுவில் எழுத வேண்டிய தேவை இருப்பதில்லை. வேலை குறித்தான கவலை என்பதால் பொதுவெளியில் எழுதுவது சரியானதாக இருக்கும். 

இருக்கிற வேலை போய்விட்டால் என்னவாகும் என்கிற பயம் பெரும்பாலானவர்களுக்கும் உண்டு. கடந்த பதினைந்து வருடங்களாக மென்பொருள் துறையில் ஏகப்பட்ட பேர்களை வேலையை விட்டு அனுப்புவதைப் பார்த்திருக்கிறேன். தாம் வேலையை விட்டு நீக்கப் போகிறவரின் சூழல் குறித்து மேலாளருக்கும் தெரியும் - இப்பொழுதுதான் குழந்தை பிறந்திருக்கிறது; வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மாதிரியான நெருக்கடிகளைக் கொண்டவன் என்று தெரிந்தாலும் கூட அனுப்பிவிடுவார்கள். அன்றைய தினம் பேயறைந்த மாதிரி வெளியேறுவார்கள். அழுவார்கள். வாழ்க்கையே இருண்ட மாதிரிதான் இருக்கும். ஆனால் பத்து நாட்கள் கழித்து அழைத்தால் படித்துக் கொண்டிருப்பதாகச் சொல்வார்கள். ஒரு மாதம் கழித்து அழைத்தால் வேலைக்கான அழைப்புகள் வருவதாகவும் ‘பதினைஞ்சு வருஷ எக்ஸ்ப்ரீயன்ஸா’ என்று கேட்டுத் துண்டித்துவிடுவதாகப் புலம்புவார்கள். மூன்று மாதங்களுக்குப் பிறகு அழைத்தால் ஏதாவதொரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்திருப்பார்கள். 

அவ்வளவுதான். தொண்ணூறு சதவீதத்துக்கும் மேலானவர்களுக்கு இதுதான் நடக்கிறது. பிறகு ஏன் பதற வேண்டும்?

வேலை குறித்து எப்பொழுது பயப்பட வேண்டுமென்றால் உலகின், நாட்டின் மொத்தப் பொருளாதாரமும் நிலை குலைந்து லட்சக்கணக்கான பேர்கள் வேலையிழந்து சாலைகளுக்கு வரும்போதுதான் பயப்பட வேண்டும். ‘அய்யோ இந்தக் கூட்டத்துக்குள்ள என்ன செய்யப் போகிறோம்’ என்று. மற்றபடி ஒரு நிறுவனம் சரியில்லை; ஒரு ப்ராஜக்ட் சரியில்லை; வாய்த்த மேலாளர் சரியில்லை என்றெல்லாம் நிலை வந்தால் கவலையே பட வேண்டியதில்லை. வேலையை விட்டு அனுப்புகிற கடைசி நொடி வரைக்கும் அதைப் பற்றி எந்தச் சிரத்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி இடம் கொடுத்தால் நாள் முழுவதும் தலைக்குள் புழு நெளிகிற மாதிரி அதுதான் அடைத்துக் கிடக்கும். 

தற்போதைய பணியானது மூழ்கும் கப்பல் என்று தெரிந்தால் .நெட், சி++, லினக்ஸ், ஆரக்கிள் என்று நம் துறை எதுவோ அதில் தினசரி ஒரு மணி நேரம் கவனத்தைச் செலுத்தி உருவேற்றிக் கொள்ள வேண்டும். நேர்காணலைச் சந்திக்க எந்தத் தயக்கமும் இல்லை என்கிற மனநிலையில் இருப்பதே முக்கால்வாசி தைரியத்தைக் கொடுத்துவிடும். அதன் பிறகும் அவர்கள் வேலையை விட்டு நீக்காதிருந்தால் ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை முடித்து வைக்கலாம். ஏகப்பட்ட தளங்கள் இருக்கின்றன. தன்னம்பிக்கை வர ஒன்றிரண்டு மாதங்கள் உழைக்க வேண்டியிருக்கும்.  அப்பொழுதும் கூட நம் வேலை நம் வசமே இருந்தால் வேலை தேடும் படலத்தை ஆரம்பித்துவிடலாம்.

எந்தவொரு வேலை வாய்ப்புத் தளத்திலும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும். Manikandan என்பதை Manigandan என்று மாற்றி மீண்டும் பழையபடிக்கு மாற்றி வைத்துவிடலாம். வேலைக்கான ஆட்களைத் தேடுகிறவர்களின் கண்களில் கடைசியாக புதுப்பிக்கட்டவர்களின் விவரங்கள்தான் கண்களில் படும். படிப்பது, வேலை தேடுவதற்கான முனைப்புகள் என்பதெல்லாம் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கச் செய்கிற செயல்பாடுகள்.  வேறொரு நல்ல பணி கிடைத்தால் மாறிவிடலாம். அப்படி வேலையே கிடைக்கவில்லையென்றாலும் இந்த நிறுவனம் துரத்துகிற வரைக்கும் ஒட்டிக் கொண்டிருக்கலாம். வெளியில் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம். 

தொண்ணூறு சதவீதத்துக்கும் மேலானவர்களுக்கு இதுதான் நடக்கிறது சரி. மீதமுள்ள பத்து சதவீதம் பேருக்கு?

தாம் பணியாற்றுகிற துறையில் இல்லாமல் வேறு துறையில் ஏதாவதொரு சம்பாத்தியத்தை உருவாக்கிக் கொள்கிறவர்களும் நிறையப் பெருகிவிட்டார்கள். அதற்கு கொஞ்சம் துணிச்சல் வேண்டும். இத்தகைய சம்பாத்திய முறைகளிலும்  ஒரு கவனத்தை வைத்துக் கொண்டிருக்கலாம். அப்படிக் கண்டுபிடிப்பதற்கு நம் உலகை விட்டு வெளியே வந்து தேட வேண்டும். ‘நமக்கு எது செட் ஆகும்’ என்று விசாரித்து யோசனை செய்து கொண்டிருந்தால் வாய்ப்பு கிடைக்கும் போது மாற்றிக் கொள்ளலாம். இதைக் குறிப்பிடும் போதும் ஒரு எச்சரிக்கை தேவைப்படுகிறது- தயவு செய்து ‘நாட்டுக்கோழி வளர்த்து மாதம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கும் பெண்மணி’ மாதிரியான கட்டுரைகளை நம்பிவிட வேண்டாம். தீர விசாரித்து, தேவைப்பட்டால் நேரில் ஒரு முறை சென்று பார்த்துவிட்டு முடிவெடுக்கவும். செண்டிமெண்டாக, போலியான உற்சாகப்படுத்துதலோடு கட்டுரைகளை எழுதுகிற சஞ்சிகைகளும் கட்டுரையாளர்களும் பெருகிவிட்டார்கள். 

எனக்கும் இந்தக் கணம் வரைக்கும் இந்த வேலையும் சம்பளமும்தான் கதி. ஆனால் இதற்குப் பிறகு என்ன என்று நினைப்பதில்லை. அப்படியொரு சூழல் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலையில்தான் இன்று வரைக்கும் இருக்கிறேன்.

பிழைக்க ஆயிரம் வழிகள் உண்டு. ஒருவேளை, வேலைக்கான நம் தயாரிப்புகளுக்குப் பிறகும் நமக்கு வேலையே கிடைக்காமல் போனாலும் கூட அதிகபட்சம் ஆறு மாதங்களுக்குத்தான் பெரும் அவஸ்தையாக இருக்கும். ஆனால் அதற்குள்ளாக நமக்கான வெளிச்சம் தென்படத் தொடங்கிவிடும் என்பதை மட்டும் உறுதியாக நம்பலாம். வேலையைத் தாண்டி குடும்பம், குழந்தைகள் என நாம் மனதைச் செலுத்த எவ்வளவோ இருக்கின்றன. வேலை என்பது நம் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அதையே வாழ்க்கை என்று நினைத்துக் கொள்வதனால்தான் எல்லாவற்றையும் புறக்கணித்து அதையே நினைத்து அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறோம். 

வெளியே வந்தால் வானமும் வெளிச்சமும் கண்களைக் கூசுகிற அளவுக்கு பிரம்மாண்டமாய் இருக்கிறது. ஒரு குண்டூசியைத் தேடி எடுக்க முடியாதா?

4 எதிர் சப்தங்கள்:

Muralidharan said...

One more important thing which you missed here is SAVING.
While we are at work, we should save some money to manage during our unemployment days. It is very important for our dependency - Wife, Children and Parents and Loans (Home / personal / EMIs).
This will avoid most of our worries and concentrate on new Job hunting.

இமா க்றிஸ் said...

உண்மைதான். முதல் தடவை வேலை செய்யும் மணிநேரம் குறைந்தபோது எப்படிச் சமாளிக்கப் போகிறோம் அதிர்ச்சியாக இருந்தது. பிறகு மனது தயாராகிவிட்டது. இந்த வேலை போனால் இன்னொன்று அல்லாவிட்டால் இருக்கும் திறமையை வைத்து எப்படியாவது பிழைக்க முடியும் என்று தோன்றிற்று. ஒரு வருட ஒப்பந்த வேலைதான். ஆனால் ஒரே பாடசாலயில் 19 வருடங்களைச் சந்தோஷமாகக் கடத்தினேன். யோசித்துக்கொண்டு இருந்திருந்தால் அவஸ்தைதான்.

Anonymous said...

According to wall street, next major recession is expected in 12 - 18 months.
Better to save the money, invest in gold, pull out of stocks and Mutual fund.


(Dear Mr. Manikandan Sir, you may publish this comment after reading US economic bubble)

Asok said...

We can learn or spend time on our hobbies like Plumber work, mechanical, cooking, photography, event management, Hair style, cleaning house, Agricultural etc. It is good for our health and mind, it would give more confident to handle any situations. No jobs are less or more. We can make money in all areas.