Jun 20, 2019

வறட்டு அறிவுஜீவித்தனம்

அன்பு மணிக்கு,

வணக்கம்.

மாற்று மருத்துவம் தொடர்பான கட்டுரை ஒன்றை மீண்டும் எழுதி இருக்கிறீர்கள். வாசகர்களின் ஆலோசனைக்கான பதிலாய் தங்களின் தரப்பைத் தெளிவுபடுத்தியதில் மகிழ்ச்சி. எனினும், அக்கடிதத்தில் ஒருவித ’வறட்டு அறிவுஜீவி’யின் பார்வை இருப்பதாக நான் கருதுகிறேன்.

‘அலோபதி மருத்துவத்தில் இதற்கு மேல் எதுவும் செய்வதற்கில்லை’ என்று முடிவான பிறகு மாற்று மருத்துவத்தை நாடியதாகச் சொல்கிறீர்கள். இங்கிருந்துதான் நாம் யோசிக்கத் துவங்க வேண்டும். நிரூபிக்கப்பட்ட அறிவியல் அல்லது உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட நிரூபண மருத்துவம் என்பதாக அலோபதி இருக்கிறது; மறுக்க முடியாத உண்மை. அதேநேரம், அம்மருத்துவ முறையினை இன்று ‘மருத்துவம்’ என்பதற்காகவா ‘மருத்துவர்கள்’ தேர்ந்தெடுக்கின்றனர்? அதன் வழியாகக் கிடைக்கும் ‘வணிக லாபம்’ என்பதற்காக அல்லவா அத்துறையையே நாம் ‘படிப்புக்காக’ கூடத் தேர்ந்தெடுக்கிறோம்?

உங்களைப் போல படித்தவருக்கே அப்பாவுக்குத் தரப்பட்ட அலோபதி சிகிச்சை பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.  ‘அறுவைச்சிகிச்சைக்காக இரத்தம் கொடுத்தபோது அவருக்கு ஹெபாடைட்டிஸ் சி வழியாக வந்ததோ என்னவோ..’ என்று ஊகிக்க மட்டுமே உங்களால் முடிந்திருக்கிறது (உங்களை மனவருந்தச் செய்வதாக தயைகூர்ந்து நினைத்துவிட வேண்டாம். உண்மையைப் பேசும்போது அவ்வாறு தொனிக்கும் அபாயம் இருக்கிறது). அப்படி இருக்கையில், எளிய, ஓரளவே கல்வி அறிவு பெற்ற பெரும்பானமையான மக்களின் நிலையை மனதில் கொண்டு யோசித்துப் பாருங்கள்.

ஒன்றை அழுத்திச் சொல்லிக் கொள்கிறேன். நான் அலோபதி சிகிச்சை முறைகளுக்கு எதிரானவன் அல்ல. நவீன கால நோய்களைக் கண்டறியவும், குணப்படுத்தவும் அலோபதி சிகிச்சை முறைகளில் விரைவும், நிறைவும் இருக்கிறது. எனினும், அம்மருத்துவ முறையை மேற்கொள்ளும் மருத்துவர்களும், தனியார் மருத்துவமனைகளும் கொஞ்சமேனும் தங்களிடம் வரும் மக்களின் வாழ்வுச்சூழலைக் கவனத்தில் கொள்கின்றனரா அல்லது கொள்கின்றனவா?

அலோபதி முறை குறித்த பயத்தை மக்களிடம் ஏற்படுத்தி இருப்பது, அம்மருத்துவ முறையின் அடிப்படையல்ல; அம்முறையை ‘பெருவணிகச் சந்தை’யாக மாற்றி இருக்கும் பெருச்சாளிகளின் அட்டகாசங்களே. கோபிசெட்டிபாளையத்தில் இரவீந்தர் எனும் மருத்துவரை உங்களுகே தெரியும். அவரைப்போன்ற பல மருத்துவர்களை முன்பு காண முடிந்தது. இக்காலகட்டத்தில், அப்படியான மருத்துவர்களைக் காண்பதே அரிதாக அல்லவா இருக்கிறது?

இன்று, தனியார் மருத்துவமனைக்குள் நுழையும்போதே நம் பீதியை அதிகப்படுத்தும்படியான முகங்களையே காண முடிகிறது. நீங்களே ‘நம்பகமான’ மருத்துவர்கள் என்று குறிப்பிடுகிறீர்கள். ‘நம்பகமான’ மருத்துவர்களை எங்ஙனம் கண்டு கொள்வது? அதற்கு எவ்வித ‘அறிவியல் முறைகளும்’ நம்மிடம் இல்லை. இருக்கிறதோ இல்லையோ சாமியைக் கும்பிட்டு விட்டு நம்மை அவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டியதுதான். நம்முடைய நோய் என்ன, அதை அவர்கள் சரியாகத்தான் கண்டறிந்து இருக்கிறார்களா, சிகிச்சை முறைகள் சரியானவைதானா என்பது பற்றி நாம் ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான்(பெரும்பாலான நேரங்களில்).  

“நீங்கள் எழுதித் தரும் மாத்திரைகளால் சிறுநீரக்த்துக்குப் பாதிப்பு வருமாமே?” என்று வாய்திறந்து விட்டால் போதும். பொங்கி விடுவார்கள். வரும் நோயாளிகளைக் கனிவுடனும், பரிவுடனும் அணுகுகிற அலோபதி மருத்துவர்கள் அருகி வருகிறார்கள். நம்மிடம் இருக்கும் பணவசதியைத் தெரிந்து கொண்டே நமக்கான சிகிச்சைகள் துவங்குகின்றன. இதை என் அப்பா, சித்தப்பா மற்றும் பாட்டியின் இறுதிக்கால சிகிச்சைகளின்போது நான் உணர்ந்திருக்கிறேன்.

‘அலோபதி முடியாது’ என்று சொன்னால் மாற்று மருத்துவம் பக்கம் கவனத்தைத் திருப்பலாம் என்கிறீர்கள். சிகிச்சையின் துவக்கத்தில் அலோபதி மருத்துவர்கள் அப்படி சொல்ல மாட்டார்கள். ‘முயற்சிப்போம்’ என்பதே எச்சிகிச்சை நிலையிலும் அவர்களின் பதிலாக இருக்கும். அது யதார்த்தமானதும் கூட. ஆனால், தங்கள் சிகிச்சைகளில் ஏதாவது தவறுகள், கவனக்குறைவுகள் நிகழ்ந்தால் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்(மாற்று மருத்துவர்களிலும் பெரும்பாலானவர்கள் அப்படித்தான்). ’அலோபதி மட்டுமே மருத்துவம் இல்லை. இன்னும் சில மருத்துவ முறைகள் இருக்கின்றன. முயற்சித்துப் பாருங்கள்’ என்று தேறுதலாகக் கூட சில வார்த்தைகள் அவர்களிடம் இருந்து வராது. அவர்களைப் பொறுத்தவரை, மாற்று மருத்துவர்கள் காட்டுமிராண்டிகள். மாற்று மருத்துவர்களைப் பொறுத்தவரை, அலோபதி மருத்துவர்கள் அராஜகர்கள். இதுகுறித்து தனித்தே பேசலாம்.

மாற்று மருத்துவத்தைக் குறித்து எவ்வித ஆவணங்களும் இல்லை என்று சொல்கிறீர்கள். தரவுகளை எங்கு தேடினீர்கள்?  ‘அலோபதி மருத்துவ முறையைத் தவிர, பிற மருத்துவ முறைகள் போலியானவை’ என்பதான கருத்தில் இருக்கும் இந்திய மருத்துவச் சங்கம் அப்படியான தரவுகளை ஆவணப்படுத்த விட்டுவிடுமா என்ன? சிகிச்சை, குணப்படுத்தல் என்பதான் விபரங்களை லேப் டெஸ்ட்களாகவே அணுகப்பழகி இருக்கும் நமக்கு.. மாற்று மருத்துவ முறைகளைப் ‘பயத்துடன்தான்’ பார்க்கத் தோன்றும். மேலும், மாற்று மருத்துவ முறைகளை மேற்கொள்ளும் ‘மருத்துவர்கள்’ பலரின் ’அமானுட’ சிலாகிப்புகளும் நமக்குக் கிலியை ஏற்படுத்தவே செய்யும். அதற்காக அம்மருத்துவ முறைகளின் அடிப்படையையும், சமூகத்தேவையையும் சந்தேகிப்பது என்பது என்னைப் பொறுத்தவரை வறட்டு அறிவுஜீவித்தனமாகவே தொனிக்கிறது.

நான் முன்பே உங்களிடம் சொல்லி இருக்கிறேன். மருத்துவ முறைகளை அலோபதி, மாற்று என்று பிரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அனைத்து மருத்துவ முறைகளுமே சமூக மருத்துவ முறைகள்தான். அவற்றைக் கையாளும் மருத்துவர்களின் நோக்கத்தைக் கொண்டே அவற்றின் பயன்பாடுகள் இருக்கின்றன். ஒருவர் எம்முறைக்குச் செல்வதானாலும் அம்முறைச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான தொகை முக்கியமான காரணியாக இருக்கிறது. ’வசதி இருப்பவர்க்கே அலோபதியில் உயர்சிகிச்சை’ என்பதை நிசப்தம் அறக்கட்டளைச் செயல்பாடுகள் வழி நீங்களே அறிந்து இருப்பீர்கள். இவ்விடத்தில்தான், புட்டப்பர்த்தி சாய்பாபா போன்றோரின் மருத்துவமனைகள் மீது நன்மதிப்பு வருகிறது. கருத்தியல் சார்ந்து, அவருக்கு முற்றிலும் நேர்மாறானவன் நான். ஆனால், அவரின் மருத்துவமனையால் குணம்பெற்ற பல இருதய நோயாளிகளை நான் அறிவேன். சில நோயாளிகளுக்கு அம்மருத்துவமனையை சாய் தொண்டர்கள் வழி பரிந்துரையும் செய்திருக்கிறேன். பெங்களூரில் இருக்கும் அம்மருத்துவமனை குறித்த தகவல்களை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.  

ஒரு மருத்துவமனை நிர்வாகம் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு அரவிந்த் கண் மருத்துவ மனையைச் சுட்டலாம் என நினைக்கிறேன். பாலா என்பவர் எழுதிய இக்கட்டுரை உங்களுக்கு ஒரு புதிய திறப்பினைத் தரக்கூடும் என்று நம்புகிறேன்.

போகிறபோக்கில், ‘இயற்கை வாழ்வியல் எனும் பெயரைச் சொல்லி இலட்சக்கணக்கானவர்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் பெருகி விட்ட காலம்’ என்று எழுதிச் சொல்வது உங்களைப் போன்றோரின் வறட்டு அறிவுஜீவித்தனத்தைக் காட்டுவதாகவே நான் புரிந்து கொள்கிறேன். மாற்று மருத்துவ முறைகளுக்குச் சென்று குணமானவர்கள் பட்டியலை உங்களால் கண்டடைய முடியவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் பற்றிய துப்பு கிடைத்திருக்கிறது. வாழ்க பகுத்தறிவு!

நீங்கள் அலோபதியைத் தூக்கி, மாற்று மருத்துவ முறைகளைக் குறை சொல்லவில்லை என்பதை நான் தெளிவாக உணர்ந்தே இருக்கிறேன். என்றாலும், உங்களின் சமீபக் கடிதத்தில் ’மாற்று மருத்துவ முறைகள் போலியானவை’ என்பதான தோற்றம் தரும்படியான செய்தி மறைந்திருப்பதாகவே நான் உணர்கிறேன். முதலில், மாற்று மருத்துவ முறைகளின் அடிப்படைகளைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். பிறகு, அவற்றைக் குறித்த உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.

அலோபதி மற்றும் மாற்று மருத்துவ முறைகள் குறித்து சில மணி நேரங்கள் பேசுவதற்கான தரவுகள் என்னிடம் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு, குறிப்பிட்ட மருத்துவ முறையைச் சிறந்தது என்று நிறுவுவதில் எனக்கு உடன்பாடில்லை. மாறாக, மாறுபட்ட மருத்துவ முறைகளின் தேவையை விளங்கிக் கொள்ள வைப்பதே அவசியம் எனக் கருதுகிறேன். கத்தியிடம் பிரச்சினை இல்லை. அதைக் கையாளுபவனின் மனதில்தான் அதற்கான பயன்பாடு இருக்கிறது. புரிந்து கொண்டிருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

உயிர்நலத்தை விரும்பும்,

சத்திவேல்,
கோபிசெட்டிபாளையம்.

                                                          ***

அன்புள்ள சக்திவேல் அண்ணனுக்கு,

வணக்கம்.

அலோபதி மருத்துவர்கள் வணிகத்தை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படுகிறார்கள் என்கிற தொனிதான் வறட்டு அறிவுஜீவித்தனமாகத் தோன்றுகிறது எனக்கு. இலட்சக்கணக்கான ரூபாய் மருத்துவத்தை இலவசமாகச் செய்து கொடுக்கும் மருத்துவர்களையும், பல்லாயிரக்கணக்கான செலவு பிடிக்கும் சோதனைகளை ‘யாருக்காவது தேவைப்பட்டால் சொல்லுங்க..இலவசமாகச் செய்து தர ஏற்பாடு செய்கிறேன்’ என்னும் மருத்துவர்களையும், அரசு மருத்துவமனையில் பணி புரிவதை புனிதச் செயலாகக் கருதுகிற மருத்துவர்களையும் என்னால் காட்ட முடியும்.

வறட்டு அறிவுஜீவித்தனம் எங்கே வருகிறது தெரியுமா? மிகப்பெரிய மருத்துவ மையங்களுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து ‘அத்தனை பேரும் ஃப்ராடுபசங்க’ என்று சொல்வதில் தொடங்குகிறது. மனிதர்களோடு மனிதர்களாகப் பழகும் மருத்துவர்களைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாமல் பேசுகிற போது தொடங்குகிறது வறட்டு அறிவுஜீவித்தனம்.

எந்த மருத்துவத்தையும் உயர்த்திப் பிடிக்கவோ அல்லது தூக்கி வீசவோ வேண்டிய அவசியமில்லை அதே சமயம் ஒரு தவறான வழிகாட்டுதலை எந்தக் கணத்திலும் செய்துவிடக் கூடாது என்கிற பயமிருக்கிறது.

எங்கே தேடுனீர்கள் தரவுகளை என்னும் உங்களின் கேள்விக்கு- எனக்குத் தெரிந்த மாற்று மருத்துவ நண்பர்களிடமெல்லாம் கேட்டிருக்கிறேன். சிகிச்சைக்கும் முன்பும் பின்புமான தரவுகள் இருந்தால் ஆவணப்படுத்துவோம் என்று பேசியிருக்கிறேன். இதுவரை என்னால் எதையும் திரட்ட முடியவில்லை என்பதுதான் உண்மை. ஒருவேளை இதற்கான என் உழைப்பில் போதாமை இருக்கிறது என நீங்கள் கருதினால் சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய் மாதிரியான மிகக் கொடுமையான நோய்களிலிருந்து விடுபட்ட நோயாளிகளின் பட்டியல் இருந்தால் அனுப்பி வையுங்கள். நேரில் சென்று பார்த்துவிட்டு வந்து அவர்களைப் பற்றி நிசப்தத்திலேயே விரிவாக எழுதுகிறேன். 

இதில் வெற்றி தோல்வி, அறிவு ஜீவித்தனம் x முட்டாள்தனம் என்றெல்லாம் எதுவுமில்லை.

சரியான திசையை நம்மால் சிலருக்கேனும் காட்ட முடியுமென்றால் அதற்காக எவ்வளவு சிரமப்பட்டேனும் சில காரியங்களைச் செய்யத் தயாராகவே இருக்கிறேன்.

மனிதநலத்தை விரும்பும்,
மணிகண்டன்.



4 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...


தமிழ் வாழ்க
பாரத் ஆத்தாக்கு ஜே
வாழ்க பெரியார்
ஜெய் ஸ்ரீராம்
உயிர்நலத்தை விரும்பும்
மனிதநலத்தை விரும்பும்
வறட்டு அறிவு ஜீவித்தனம்
குருட்டு முட்டாள்தனம்

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

தெளிவான தன்னிலை விளக்கம். வாழ்க வளமுடன்

Asok said...

Most of the English medicines has side effects, you know how much side effects for Pain killer medicines, children cough syrub has hair loss side effects, which are coming after 5 or 10 years. Side effect of medicines has the reason for the diseases which we get in our older age. All are hidden and moreever the drug company does not even know until they will get report from the patients.

முரசொலி மாறன்.V said...


நாம் மாற்று மருத்துவம் என்று கொள்ள வேண்டியது அலோபதி மருத்துவத்தை தான்.