Jun 18, 2019

அணி நிழற்காடு- வீடியோ பதிவுகள்

அணி நிழற்காடு- அடர்வனத்தின் முதலாமாண்டு நிகழ்வின் சலனப்படத் தொகுப்பு இது.

(அடர்வனம் - தொகுப்பு)
நிசப்தம் சார்பில் நடத்திய எந்த நிகழ்வுக்கும் வீடியோ எடுத்ததெல்லாம் இல்லை. ஈரோடு மூர்த்திதான் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் கேமிராவைத் தூக்கிக் கொண்டு திங்களூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்திருந்தார். நிகழ்ச்சி முழுக்கவும் இருந்து பதிவு செய்து, தேவையான இடத்தில் கத்தரியும் போட்டு மிகச் சிறப்பான ஆவணமாக்கிக் கொடுத்திருக்கிறார். இனிமேல் எந்த நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தாலும் மூர்த்தியிடம் நேரம் கேட்டுவிட்டுத்தான் நடத்த வேண்டும். 

இன்னொரு முக்கியமான நபர் நிவாஸ். இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறோம் என்றவுடன் தாமாக முன்வந்து ஒலிப்பதிவு கருவிகளுடன் மதியமே வந்து ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருந்தார். நிவாஸூம் நிசப்தம் வாசகர். 

மூர்த்திக்கும் நிவாஸுக்கும் நன்றியும் அன்பும்.

நிகழ்வில் கலந்து கொள்ள முடியாதவர்கள் ஒரு மணி நேரம் ஒதுக்கி கோவை சதாசிவத்தின் பேச்சை முழுமையாகக் கேட்கவும். இயற்கை மற்றும் சூழல் சார்ந்த அற்புதமான உரை அவருடையது. மருத்துவர் சத்தியசுந்தரி பேசியதையும், மரங்களுக்கான விதைகள் தேடுவது குறித்தான ஆனந்த் பேச்சையும் தவற விட வேண்டாம்.

நிகழ்வு குறித்தான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி.

 ***

மூர்த்தியின் ஃபேஸ்புக் பதிவு:

நிசப்தம் அறக்கட்டளையின் அடர்வனம் உருவாக்கப்பட்டு ஓராண்டு ஆனதை ஒட்டி ஆண்டு விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான அறிவிப்பை மணி அண்ணன் வெளியிட்டதும் இந்த நிகழ்வில் நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும் என முடிவு செய்திருந்தேன். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. 

1. அடர்வனத்தை பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.

2. சூழலியல் குறித்து நீண்ட நாட்களாக எழுதி வரும் 'கோவை சதாசிவம்' ஐயா அவர்களின் உரையை நேரில் கேட்க வேண்டும்.

கோட்டுப்புள்ளாம்பாளையத்தில் அமைந்திருந்த அடர்வனத்தைச் சென்றடைந்த போது மணி அண்ணாவும் சரியாக வந்தார். நிசப்தம் அறக்கட்டளையால் தூர்வாரப்பட்ட குளம் தண்ணீரால் நிரம்பியிருக்க, அதன் ஏரியில் அமைந்திருந்த அடர்வனம் அசைந்து கொடுத்து நம்மை வரவேற்றது. மரங்கள் அனைத்தும் ஓரளவிற்கு வளரந்துள்ளன. அந்த இரண்டாயிரம் மரங்களும் நன்றாக வளர்ந்து பெரிய மரங்களாக நிற்கும் காட்சியை பார்க்கும் ஆவல் அதிகமாகிவிட்டது.

 (அடர்வனம் அருண் - வரவேற்புரை)

அடுத்தாக கோபிபாளையத்தில் அமைந்திருந்த தூய திரேசாள் முதனிலைப்பள்ளியில் சிறப்பு அழைப்பாளர்கள் உரை நிகழ்ந்தது.

பவானி நதிநீர் பாதுகாப்புக் கூட்டமைப்பிலிருந்து வந்திருந்த மருத்துவர். சத்திய சந்தரி அம்மா அவர்களின் பேச்சிலயே நதிகளின் மீதும், தண்ணீர் மீதும், காடுகளின் மீதும் அவருக்கு இருந்த அக்கறையை உணர முடிந்தது. 

(மருத்துவர் சத்தியசுந்தரி அவர்களின் உரை)

அவினாசியில் இருந்து வந்திருந்த ஆனந்த் காடுகளைப் பற்றியும் மரங்களைப் பற்றியும் நாம் அறிந்திராத தகவல்களை கூறினார். 

(அடர்வனம் குறித்து - ஆனந்த்)

மணி அண்ணன் பேச்சில் இப்போதும் எனக்குள் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு விசயம் ' நாம் ஒவ்வொருவரும் சொந்தமாக கால் ஊன்றி நிற்க ஆரம்பித்து விட்டால் நாம் நினைத்தே பார்க்காதவற்றை எல்லாம் நம்மால் செய்ய முடியும்'. இப்படி ஒவ்வொருவரின் பேச்சு தவறவிடக்கூடாத உரையாக இருந்தது.
(எனது உரை)
அடுத்து சிறப்பு விருந்தினர் கோவை சதாசிவம் ஐயா அவர்களின் உரை. 50 நிமிடங்கள் பேசினார். பேசினார் என்பதை விட 50 நிமிடங்களை நம்மிடம் இருந்து பிடுங்கி வைத்துக் கொண்டார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு முழுக்க முழுக்கச் சுவாரசியமான உரை. அழகான கதை சொல்லியாக கூடியிருந்தவர்களை கட்டிப் போட்டிருந்தார். படிக்க சுவாரசியம் இல்லாத கதைகளைக் கூட ஐயா சொல்ல கேட்டால் அந்த கதை எளிதாக பிடித்து விடும். ஐயாவின் உரையை அடிக்கடி கேட்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என மணி அண்ணாவிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.
(கோவை சதாசிவம் அவர்களின் உரை)

விழாவில் கவனித்த இன்னொரு விசயம், நிகழ்வு நடந்த சூழல். விழா இடத்தை சுற்றிலும் மரங்கள் அடர்ந்த சூழல். சுற்றியிருந்த பறவைகளின் ஓசை. இப்படிப்பட்ட ரம்மியமான சூழலில் சிறப்பான பேச்சாளர்களை கொண்டு விழாவை ஏற்பாடு செய்த மணிகண்டன், அரசு தாமஸ் மற்றும் அடர்வனம் குழுவினருக்கு மிகப்பெரிய நன்றி சொல்ல வேண்டும்.

(ஆசிரியர் அரசு தாமஸ்- நன்றியுரை)

விழா முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இனிமேல் இதைப்பற்றி ஏன் எழுத வேண்டும் என்று தான் தோன்றியது. ஆனால் விழாவில் பேசியவர்களின் உரை எழுதச் செய்துவிட்டது. விழாவின் முழு காணொளியும் யூ டியூப்பில் உள்ளது. அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும். (ஹெட்போன் பயன்படுத்தி கேட்டால் பறவைகளின் ஓசைகளையும் கூடவே ரசிக்கலாம்).

3 எதிர் சப்தங்கள்:

Shanmugam S said...

நேரில் கலந்துகொண்ட உணர்வு.அருமையான
உரைகள். நன்றி.

V.RAMANAN said...

மிக்க நன்றி.மணி. முழுவதும் பார்த்தேன். அருமை. மாணவர்களுக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் அவசியமானது. உங்கள் விழாக்களை மிஸ் பண்ணுகிறேனே எனநினைப்பதுண்டு. இது போல் வீடியோ நல்ல முயற்சி. இது விளம்பரமில்லை. ஆவணப்பதிவு என நினைத்து எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்யவும்

Selvaraj said...

முதலில் எனது உரை (வா. மணிகண்டன்)

நல்ல தெளிவான சரளமான பேச்சு.இளைஞர்களுக்காக சொன்ன 'சுய சார்பு' நிச்சயமாக சூழல் ஆர்வலர்களுக்கு மட்டுமானதல்ல அனைத்து தரப்பினரும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய கருத்து. ஒரு உறுதியான வருமானத்தை நமக்காகவும் குடும்பத்திற்காகவும் உருவாக்கியபின்பு சமூக பணிகளில் ஈடுபட முனைவது சிறப்பு.

ஆனந்த் அவர்கள் பேச்சு:

நிறைய தகவல்களை மரம் காடு சார்ந்து தெரிந்து வைத்திருக்கிறார். நல்ல ஆர்வத்துடன் வேகமாக பேசினார். மாட்டின் சாணம் ஆறு மாதமாவது மட்க வேண்டும் அதன் பிறகுதான் அது நல்ல உரமாகும் என்று கூறியது நல்ல தகவல். மரங்களை தேர்வு செய்யும்போது அந்த மண்ணின் பாரம்பரிய மரங்களாக தெரிவு செய்ய வேண்டும் என்று கூறியதும் நன்று.

மருத்துவர் சத்தியசுந்தரி அவர்கள் :

இயற்கையை காப்போம் என்று தொடங்கி, பாரம்பரியத்தை காப்பாற்றவேண்டும், நம் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ளவேண்டும், இயற்கையை பாழ்படுத்தாமல் எளிமையான வாழ்க்கையை வாழுங்கள் என்ற தொனியில் பேசினார்.

கோவை சதாசிவம் அவர்கள் உரை :

ஓநாய் மனிதனாக வாழ ஆசைப்படும் கதை ஒன்றுபோதும். நம்முடைய தற்போதைய நிலைமையை அப்பட்டமாக எடுத்து சொல்ல . ( இந்த கதை அனைத்து மக்களுக்கும் போய் சேர வேண்டும்) டோடோ என்ற ஒரு பறவை இனம் அழிந்ததால் ஒரு மர இனமும் அழிந்ததாக சமீபத்தில் வாசித்திருக்கிறேன் ஆனால் அதை பற்றி விளக்கமாக இப்போது தெரிந்துகொண்டேன். மரத்தின் பழங்களை தின்று விட்டு அதன் விதைகளை எச்சமாக வெளியேற்றினால் மட்டுமே மீண்டும் அந்த விதை மரமாக முளைக்கும் மாறாக மரத்திலிருந்து நேரடியாக மண்ணில் விழும் விதையிலிருந்து இந்த இன மரம் முளைப்பதில்லை என்பது எவ்வளவு ஆச்சரியம். பறவைகள் எவ்வளவு முக்கியமென்று இதைவிட வேறு சான்று தேவையில்லை. ஆம் 'பறவையை இழந்த தேசம் தாவரத்தையும் இழப்பது இயற்கை விதி மாத்திரமல்ல அறிவியல் விதியும் கூட' அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்