Jun 17, 2019

மாற்று..

சமீபமாக சில அழைப்புகளில் ‘அந்த மாற்று மருத்துவம் பற்றி எழுதியிருந்தீர்களே’ என்று கேட்டு விசாரிக்கிறார்கள். சில விஷயங்களைத் தெளிவு படுத்தி எழுதிவிட வேண்டும் என நினைக்கிறேன். அப்பாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு விபத்து நடந்து அப்பொழுது நடந்த அறுவை சிகிச்சைக்காக ரத்தம் கொடுத்து அதன் வழியாகவோ என்னவோ ஹெபாட்டிடிஸ் சி வைரஸ் வந்து அதன் உபவிளைவாக ஈரல் பாதிக்கப்பட்டு புற்றுநோயாகாவும் மாறியது. அலோபதி மருத்துவத்தில் இதற்கு மேல் எதுவும் செய்வதற்கில்லை எனக் கைவிரிக்கப்பட்ட பிறகு மாற்று வைத்தியங்களை நாடினோம். ஈரல் பரிசோதனையின் முடிவுகள் சிறப்பாக இருந்த போதிலும் ஈரலில் நீர்க்கசிவு அதிகமாகிக் கொண்டே சென்று அது வெளியேற வழியில்லாமல் நீரை ஊசி மூலம் எடுக்க, அது ரத்த அழுத்தத்தைக் குறைத்து உயிர் பிரியக் காரணமாக இருந்தது. 

ஒவ்வொன்றாக யோசித்தால் அதைச் செய்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்; இதைச் செய்யாமலிருந்திருந்தால் இன்னமும் சில காலம் இருந்திருப்பார் என்றெல்லாம் தோன்றக் கூடும். ஆனால் அப்படி யோசிப்பதனால் எந்தப் பலனுமில்லை என்று தெரியும். அப்பொழுது எழுதிய கட்டுரைகளை வாசிக்கிறவர்கள் அவ்வப்போது அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  ‘சரி ஆகிடுச்சா?’ என்பார்கள். முன்னேற்றம் இருந்தது. அலோபதி ‘இரண்டொரு நாள்தான் தாங்குவார்’ என்று நிராகரித்த பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நெருங்கினார். அந்த வகையில் எனக்கு மாற்று மருத்துவத்தின் மீது நம்பிக்கையுண்டு. ஆனால் எதையுமே கண்களை மூடிக் கொண்டு நம்பவும் கூடாது என்பதிலும் ஒரு தெளிவு இருக்க வேண்டும். 

உயிருக்கு எந்த பாதிப்புமில்லாத நோய்கள் என்றிருக்கின்றன அல்லவா? அந்த நோய் உடலில் இருந்தாலும் ஒன்றும் பெரிய பாதிப்பில்லை என்பது மாதிரியான நோய்கள்- அவற்றுக்கு ‘நம்பகமான’ மாற்று மருத்துவர்களை அணுகுவதில் எந்தப் பெரிய பிரச்சினையுமில்லை. நம்பகமான என்றால் நோயைக் குறைக்கிறேன் என்று இஷ்டத்துக்கு மருந்தை உள்ளே தள்ளி சிறுநீரகங்களைப் பழுதடையச் செய்துவிடாத மருத்துவர்களாக இருக்க வேண்டும்- எந்த மருந்துமே அதிக அளவில் உள்ளே தள்ளப்படும் போது அவற்றை வெளியேற்றுகிற வேலையை சிறுநீரகங்களே செய்கின்றன. மருந்தின் வீரியத்தைப் பொறுத்து அது சிறுநீரகத்தைப் பாதிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

மற்றபடி தீவிரமான சிகிச்சை மேற்கொண்டே தீர வேண்டிய நோய் என்னும் சூழலில் அலோபதி மருத்துவத்தைத்தான் பரிசீலிக்க வேண்டும். அறுபது வயதைக் கடந்த ஒருவருக்கு உணவுப்பாதையில் புற்றுநோய். சமீபத்தில்தான் கண்டறிந்திருக்கிறார்கள். மாற்று மருத்துவத்தை ஆலோசிக்கலாம் என்கிற மனநிலையில் இருக்கிறார் போலிருக்கிறது. புற்றுநோயில் என்ன கட்டம் என்ற முடிவுகள் இன்னமும் வந்திருக்கவில்லை.  அழைத்திருந்தார். இப்பொழுதெல்லாம் புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டாலே எனக்கு பதற்றமாக இருக்கிறது. திரையரங்குகளில் கூட ‘புகையிலை புற்றுநோயை உண்டாக்கும்’ என்னும் போது கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பேன். நம்மை நம்பி யாராவது அழைக்கும் போது அப்படித் தவிர்த்துவிட முடிவதில்லை. அதைப் போன்ற பாவமும் வேறில்லை. 

வேலூர் சி.எம்.சி, சென்னை அப்பல்லோ, அடையாறு மாதிரியான சிறப்பு மருத்துவமனை ஏதேனுமொன்றில் முழுமையான பரிசோதனைகளைச் செய்து மருத்துவரின் ஆலோசனை கேட்டு இரண்டாவது கருத்தாக இன்னொரு மருத்துவமனையையும் அணுகி தெளிவுபடுத்திக் கொள்வதுதான் சரி என்று அவரிடம் சொன்னேன். அலோபதியில் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று உறுதியாகச் சொன்னால் துணிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை ‘உறுதியாச் சொல்ல முடியாது’ ‘முயற்சி செய்யலாம்..ஆனால் ரிசல்ட் எப்படி இருக்கும்ன்னு தெரியாது’ ‘வாய்ப்பு ரொம்பக் குறைவு’ என்பது மாதிரியான பதில்கள் வந்தால் மட்டுமே மாற்று மருத்துவம் பக்கம் கவனத்தைச் செலுத்தலாம்.

‘முடியாதுன்னு சொன்ன பின்னாடிதான் நாங்க கண்ணுக்குத் தெரிவோமா’ என்று சில மாற்று மருத்துவ ஆதரவு நண்பர்கள் சண்டைக்கு வரக் கூடும்.  அப்பாவின் மறைவுக்குப் பிறகு மாற்று மருத்துவத்தில் நிரூபிக்கப்பட்ட தரவுகள் ஏதேனும் கிடைக்கின்றனவா என்று தேடிக் கொண்டேயிருக்கிறேன். பிரச்சினை என்னவென்றால் மாற்று மருத்துவத்தால் முழுமையாக குணமாக்கப்பட்ட நோயாளிகளின் பட்டியலை எங்குமே தேடி எடுக்க முடிவதில்லை. ‘நாங்க சரி செஞ்சுட்டோம்’ என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்களே தவிர ஆவணமாக்கப்பட்ட தரவுகள் என்று எதுவும் கண்களில்படுவதில்லை. வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே எப்படி உயிர்காக்கும் மருத்துவத்தைச் செய்ய முடியும்?

நண்பர் முத்துக்குமாரின் தாயாருக்கு புற்றுநோய் என்று கண்டுபிடித்தார்கள். குருதியில் புற்று. ஷிமோகா மருந்து தவிர எதுவுமே எடுத்துக் கொள்ளவில்லை. இரண்டாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. சமீபத்தில் முத்துவிடம் ‘அம்மா எப்படி இருக்காங்க?’ என்றால் ‘தோட்டத்துல தண்ணி கட்டுறாங்கண்ணா’ என்றார். ஆச்சரியமாக இருக்கிறது. அவரது அம்மாவுக்கு தனக்கு புற்றுநோய் என்பதே தெரியாது. ஏதோ உடல் உபாதை அதற்கான மருந்து என்று உண்டிருக்கிறார். அதன் பிறகு வேறு தொந்தரவு எதுவுமில்லை என்பதால் இவர்களும் பரிசோதனை, சிகிச்சை என்று அவரை வருத்துவதில்லை. அவரும் இயல்பாக இருக்கிறார். இவரை உதாரணமாக எடுத்துக் கொண்டு ஷிமோகா மருந்து உட்கொண்டால் புற்றுநோய் குணமாகிவிடும் என்று எப்படிச் சொல்ல முடியும்? விதிவிலக்குகள் ஒன்றிரண்டு இருக்கலாம். 

இன்னொரு முக்கியமான பிரச்சினையும் மாற்று மருத்துவத்தில் இருக்கிறது- சிறுநீரகத்திற்கான சிகிச்சையின் போது ஈரலில் ஒரு பிரச்சினை என்றால் மாற்று மருத்துவம் பார்க்கிறவர்கள் ‘அதையும் நானே சரி செஞ்சுடுவேன்’ என்று நோயாளியை எலியாக மாற்றுகிற நிகழ்வுகள்தான் அதிகம். அலோபதியில் அப்படியில்லை- ‘எதுக்கும் அந்த டாக்டரை பாருங்க’ என்று அதற்கென இருக்கும் சிறப்பு மருத்துவரிடம் அனுப்பிவிடுவார்கள். மாற்று மருத்துவர்களின் ஒருங்கிணைப்பில் இருக்கும் இந்தக் குறைபாட்டையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

அலோபதி மருத்துவத்தில் ஆலோசனை பெறும் போது அவர்கள் நம்பிக்கையாகச் சொன்னால் தைரியமாக அதைத் தொடர்வதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். அதே சமயத்தில் குறுக்கீடு செய்யாத மாற்று மருத்துவங்களையும் பின் தொடரலாம். மருத்துவ அறிவு எனக்கு இல்லை என்பதால் இதில் அதீதமான நம்பிக்கை உண்டாக்கும் விதத்தில் எதை எழுதினாலும் அது அறம் சார்ந்ததாக இருக்காது. மாற்று மருத்துவங்கள், இயற்கை வாழ்வியல், ஆதியை நோக்கித் திரும்புதல் என்ற பெயர்களில் லட்சக்கணக்கானவர்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் பெருகிவிட்ட காலத்தில் எதையும் கண்களை மூடிக் கொண்டு நம்ப வேண்டாம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். தரவுகளே மிக முக்கியம்.

தேவைப்பட்டால் இது குறித்து விரிவாக உரையாடுவோம். 

3 எதிர் சப்தங்கள்:

Prakash said...

Hi Mani,

As always, You ve written very clearly and transparently. I am not sure you would remember the discussion we had about three years back regarding my Mother-in-law's breast cancer. we also took different alternate medicines starting from Panjakavyam to Shimoga medicine. But no success and she's no more. Allopathy cancer specialists had exactly predicted her lifetime and it became true. As you rightly pointed out It may work for someone, there are thousands of people queued up in Shimogo to get medicine for their family. If there is no other hope that could be the way or getting treatment from cancer specialists should be the way to go.

Thanks for keeping us informed about all this.

Prakash V.

Anonymous said...

Sir,

There is some technical problem in your blog i believe. It takes lots of time to open the article and not able to access the older one. Not sure about others but I am having this for the last few weeks....

Anonymous said...

Hi Anonymous, Its working fine for me. Are you accessing the blog from any secured environment? like office networks? I can access without any issues.