அடர்வனம் - இந்தச் சொல்லுக்காக ட்விட்டரில் ஒருவர் என்னைத் திட்டிக் கொண்டிருந்ததாக நண்பரொருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்- வனம் என்பது வடமொழிச் சொல் என்றும், அதற்குரிய தமிழ் சொல்லை ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்தியிருந்தால் இவ்வளவு பிரபலமாகியிருக்காது என்பது அந்த ட்விட்டர்வாசியின் வேதனை. அடர்வனம் என்ற சொல்லை ஏற்கனவே வேறு சில நண்பர்கள் பயன்படுத்தியிருந்தார்கள். அதைத்தான் அப்படியே பின் தொடர்ந்தேன். ஒருவேளை நிசப்தத்தில் வேறு சொல்லைப் பயன்படுத்தியிருந்தால் இணையவெளியில் அது பிரபலமாகியிருக்கக் கூடும். வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்கிறேன்? மாற்றி எழுது என்று சொல்கிறார்களே தவிர சரியான சொல்லை யாருமே பரிந்துரை செய்ததாக ஞாபகமில்லை. சில தமிழ் ஆர்வலர்களைக் கேட்டால் குதறி எடுத்துவிடுகிறார்கள். அதற்கு அடர்வனமே சரியாக இருக்கும் என்று அப்படியே பயன்படுத்தியாகிவிட்டது.
ஞாயிற்றுக்கிழமையன்று முதலாமாண்டு கொண்டாட்டத்தை நடத்தினோம்.
சூழலியலாளர் கோவை சதாசிவத்துக்கு மரங்களைக் காட்டுவதற்காக அழைத்துச் சென்ற போது காட்டுக்குள் மயில் முட்டையிட்டிருந்தது. அதைச் சுட்டிக் காட்டிய போது பெருமகிழ்ச்சியடைந்தவராய் ‘மணிநீரும் மலையும் மண்ணும் அணி நிழற்காடும் உடையது அரண்’ என்ற குறளைச் சொல்லிவிட்டு ‘அந்த அணிநிழற்காடுதான் இது’ என்றார். அடர்வனம் என்பதைவிடவும் அணிநிழற்காடு அழகான சொல்லாகவே இருக்கிறது. இனிமேல் அணிநிழற்காடு என்று கூட குறிப்பிடலாம்.
மாலை நான்கு மணிக்கு ஓராண்டுக் கொண்டாட்டத்தின் நினைவாக மூன்று மரக்கன்றுகளை நட்டுவிட்டு அங்கேயிருந்து சிறு ஊர்வலமாக அருகாமையில் உள்ள புனித திரேசாள் பள்ளிக்குச் சென்று அங்கே கூட்டத்தை நடத்தினோம். பவானி நதி நீர் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் சத்தியசுந்தரியின் வாழ்த்துகளுக்குப் பிறகு மியவாக்கி முறையில் அடர்த்தியான காட்டை உருவாக்குவது எப்படி என ஆனந்த் விளக்கினார். மண்ணைத் தோண்டியெடுத்து, நீர் தேங்க, காற்று உட்புக, வளத்தை செறிவூட்ட என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை விளக்கி பின்னர் செடிகளுக்கான தேர்வினை எப்படிச் செய்தோம் என்று விளக்கினார். வெளியூர்களிலிருந்து இந்நிகழ்வுக்காக சில நண்பர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு அணிநிழற்காடு அமைக்கும் முறையினை மேம்போக்காகவாவது எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காகவே ஆனந்த்தை பேசச் சொன்னோம். ஆனந்த் இதில் வித்தகர். தனது பள்ளிக் காலத்திலிருந்தே காடுகளுக்குள்ளாக அலைந்து திரியும் காடாந்திரி.
வழக்கம் போலவே அரசு தாமசும், கோபி கலைக்கல்லூரியின் கலைச்செல்வியும்தான் பெரும்துணை.
நிகழ்வில் கோவை சதாசிவத்தின் பேச்சுதான் அட்டகாசம். அங்கிருந்த நூறு கிராமத்து இளைஞர்களும் இம்மியும் கவனம் சிதறாமல் முழுவதுமாகப் பேச்சைக் கேட்டார்கள். வள்ளுவம், காந்தியத்தைத் தொட்டு, கதைகளைச் சொல்லி, இயற்கை குறித்துப் பேசி, நாவல் ஒன்றை விவரித்து என மிகச் சிறப்பாகப் பேசினார். அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டுமெனில் சதாசிவம் மாதிரியான பேச்சாளர்கள்தான் அவசியம். அலங்காரமில்லாமல், வெற்றுக் கிச்சுகிச்சு மூட்டாமல் சொல்ல வந்த விஷயத்தை ஆணி அடித்தாற்போல பதிய வைத்தார். அவரது பேச்சினை ஈரோடு மூர்த்தி பதிவு செய்திருக்கிறார். மூர்த்தி நிசப்தம் வாசகர். இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் மூர்த்தியின் தங்கையின் திருமணம் நடைபெற்று முடிந்திருந்தது. அந்த அசதியிலிருந்து கூட இன்னமும் முழுமையாக மீண்டிருக்க மாட்டார். ஆனால் நிகழ்வு முழுக்கவும் பதிவு செய்து நேற்றிரவு அழைத்து ‘அண்ணா வீடியோ ரெடி..உங்களுக்கு எப்படித் தருவது’ என்றார். நேரமிருக்கும் போது யூடியூப்பில் பதிவேற்றம் செய்து தரட்டும். இரண்டொரு நாட்களில் காணொளியைப் பகிர்கிறேன்.
அத்திக்கடவு போராட்டக்குழுவில் முக்கியமானவரான தொரவலூர் சம்பத், சட்டையணியா சாமியப்பனை அழைத்து வந்திருந்தார். நொய்யல் ஆற்றின் சாயக்கழிவுகள்தான் நதியைக் கொல்கின்றன என்பதால் தன் வாழ்நாள் முழுமைக்கும் மேலாடை அணியப் போவதில்லை என்று கடந்த பல வருடங்களாக சட்டையணியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர் சாமியப்பன் அய்யா அவர்கள். இவர்களைப் போன்றவர்கள்தானே அடுத்த தலைமுறைக்கான உந்துசக்தி!
(சட்டை அணியா சாமியப்பன் மற்றும் தொரவலூர் சம்பத்துடன்)
செடிகளை நட்ட சில மாதங்களில் மழை பெய்து, குளம் நிரம்பி அணி நிழற்காடு தப்பிக்குமா என்று கூட பயம் உருவாகியிருந்தது. ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு நீர் வடிந்து, செடிகள் உயிர் பிடிக்கவும்தான் எங்களுக்கு உயிர் வந்தது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான செடிகள் தப்பிவிட்டன. மிகச் சந்தோஷமாக இருக்கிறது. இனி எந்தப் பிரச்சினையும் உருவாக வாய்ப்பில்லை. இனியும் கூட வேறு சில இடங்களில் இப்படியான காட்டை அமைக்க ஆலோசிக்கலாம். ஆனால் இத்தகைய செயல்களில் மிகப்பெரிய பலமே உள்ளூர் இளைஞர்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. உறுதுணைக்கு அப்படியொரு அணி உருவாகவில்லையெனில் மிகச் சிரமம்.
முன்பே குறிப்பிட்டிருக்கிறேன் - சில ஊர்களில் இளைஞர்களைத் திரட்டி ஒரு காரியத்தைத் திட்டமிட்டுவிட்டு வருவோம். அடுத்த நாளே அவர்களுக்குள் ஒரு கறுப்பு ஆடு புகுந்து ‘வெளியூர்காரங்க வந்து எதுக்கு நம்மூர்ல செய்யணும்? நாமே செய்ய முடியாதா?’ என்று கிளப்பிவிடும். அவ்வளவுதான். அதோடு சரி. அதன் பிறகு அந்த ஊரில் துரும்பைக் கூட அசைக்க முடியாது. அனுபவத்தில் பார்த்தாகிவிட்டது. அந்தவிதத்தில் கோட்டுப்புள்ளாம்பாளையம் இரும்புக்கோட்டை. யாராவது புல்லுருவி வேலையைச் செய்தால் இவர்களே தூக்கிவீசிவிடுவார்கள். இப்படியான இளைஞர்கள் கூட்டம் ஒன்றைக் கட்டமைத்தால் எந்த ஊரில் வேண்டுமானால் இத்தகைய பொதுக்காரியங்களைச் செய்ய முடியும்.
(மரு.சத்தியசுந்தரி மற்றும் கோவை சதாசிவத்துடன்)
கலைக்கல்லூரி மாணவர்கள், கோட்டுப்புள்ளாம்பாளையம் இளைஞர்கள் கூட்டம் என செய்தி யாருக்கு சென்று சேர வேண்டும் என விரும்பினோமோ அத்தகையதொரு கூட்டத்திற்கான எளிய நிகழ்வாக அமைந்திருந்தது. அந்தி சாயும் நேரத்தில் மரத்தடியில் நாற்காலிகள் போட்டு, கோவை சதாசிவம் மாதிரியானவர்கள் பேசுவதைக் கேட்பதெல்லாம் உண்மையிலேயே அற்புதமான தருணம். அத்தகைய தருணத்தை உருவாக்கிக் கொடுத்த அத்தனை பேருக்கும், இயற்கைக்கும் நன்றி.
(கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஏற்பாடுகள்)
காந்தியின் ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது-
“செயலே முக்கியம், அதன் பலன்கள் அல்ல. நீங்கள் சரியானவற்றை செய்ய வேண்டும். உங்கள் காலத்தில் அதற்கு எந்த பலனும் கிடைக்காமல் போகலாம். ஆனால் அதன் பொருள் நீங்கள் சரியானவற்றை செய்யாமல் இருப்பது என்பதல்ல. உங்கள் செயலால் என்ன விளையும் என்பதை நீங்கள் ஒருபோதும் அறிய முடியாமல் கூட ஆகலாம். ஆனால் நீங்கள் எதையுமே செய்யவில்லை என்றால் எந்த பலனும் கிடைக்காது.”
7 எதிர் சப்தங்கள்:
அணி நிழற்காடு - அருமை.
" அழகிய நிழல் உடைய காடு" என்று பொருள் படும்.. நெருக்கமாக மரங்கள் வளர்ந்து சூரிய ஒளி உட்புக முடியாமல் எப்போதும் நிழல் உடையதால் , "அடர்வனத்திற்கு" ஒரு வகையில் நல்ல தமிழில் இந்த மாற்று பெயர் பொருத்தமே. சமயத்தில் பொருத்தமான குறளை நினைவு படுத்திய கோவை சதாசிவம் அவர்களுக்கும், அதனை கொண்டே உடனே பெயர் சூட்டிய உங்களுக்கும் கோடி நன்றிகள்.
வேறு பொருள் கருதி சூட்டி இருந்தாலும் சொல்லுங்கள்..
கடைசியில், அந்த போக்கை வாய் கிழவனின் வார்த்தைகள் , நச் ரகம் .. பலனை எதிர்பார்த்து நின்று விடாத வீரன் தான், நம் தேசத்தின் தந்தை ..
அருமை மணி,
அணி நிழற் காடு - கடினம் எனத் தோன்றினால், அடர் காடு என்றே வைத்துக்கொள்ளுங்கள்
அணி நிழற்காடு - தலைப்பையே கொஞ்சம் நேரம் பார்த்துக்கொண்டே இருந்தேன். நல்ல பெயர். (வனம் வடமொழி சொல்லா?). முதல் நிழற்படமும், மரங்களுக்கிடையில் போடப்பட்டிருந்த நாற்காலிகளின் கடைசி நிழற்படமும் அருமை. சூழலியலாளர் கோவை சதாசிவம் அவர்களின் பேச்சை தளத்தில் காண ஆவலாக இருக்கிறது முடிந்தவரை சீக்கிரம் பதிவிட முயற்சி செய்யுங்கள். பவானி நதி நீர் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் சத்தியசுந்தரி அவர்களை பற்றி நீங்கள் முன்பொருமுறை எழுதியிருந்தீர்கள் என்று நியாபகம். (தளத்தில் தேடி பார்க்கிறேன் மறு வாசிப்பிற்கு). சாயக்கழிவுகள் நதியை கொல்கின்றன என்று மேலாடையணியாமல் வாழும் சாமியப்பன் அவர்களை எப்படி புரிந்துகொள்வது? நம்மிடையே இப்படியும் ஒரு மனிதர். அணி நிழற்காடுக்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
"அடர்வனம்"
தான் நல்லாருக்கு
அருமை அண்ணா...
அருகில் இருந்தும் வரமுடியாத தருணம்.
மன்னிக்கவும்...
தலைப்பு மிக அருமை, அழகு...
அணிநிழற்காடு மொழி ஆர்வலர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்.. ஆனால் அடர்வனம் நாள்தோறும் மொழிவதற்கும் பொதுவாக எளியமொழி பேசும் அனைவருக்கும் புரிந்து கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும். அனைத்து தரப்பினருக்கும் எளிதாக புரியும் வகையில் உள்ளது தானே பொருத்தமாக இருக்கும். வாழ்க வளமுடன்
அருமை வாழ்த்துக்கள். அண்ணா சற்று உடல் தேறியதாக தெரிகிறது .ோவை அலைச்சலை குறைத்ததாக தெரிகிறது. உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்.
Post a Comment