Jun 11, 2019

நீங்க யாருங்க?

தெரிந்தவர் ஒருவர் இருக்கிறார். ஆறடி உயரம். எந்தப் பஞ்சாயத்தாக இருந்தாலும் அவரைத்தான் அழைக்கிறார்கள். ஒரே காரணம்தான் - யாராக இருந்தாலும் பேசி வளைத்துவிடுகிறார்.  அவர் செய்கிற தொழில்கள் அப்படி. மனிதர்களுடனேயே உலவிக் கொண்டிருக்கிறார். எந்த இடத்தில் யாரை அடித்தால் கவிழ்வார்கள் என்று துல்லியமாகக் கணிக்கிறார். அதிகாரிகளிடம் பேசும் போது ஒரு தொனி. பணியாளர்களிடம் பேசும் போது இன்னொரு தொனி. உறவுக்காரர்களிடம் ஒரு மாதிரி; நண்பர்களிடம் ஒரு மாதிரி. தம்மை விட வயது குறைந்தவர் என்றால் ஒரு வகை; மூத்தவர் என்றால் இன்னொரு வகை. மனிதர்களை எவ்வளவு நுணுக்கமாகக் கற்று வைத்தால் இப்படியெல்லாம் விதவிதமாகப் பேச முடியும் என்று ஆச்சரியமாக இருக்கும். எட்டாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத மனிதர் அவர்.  

சக மனிதர்களைக் கற்றுக் கொள்வதில் எல்லோரும் வித்தகர்களாகிவிட முடிவதில்லை. அதற்கு காரணமுமிருக்கிறது. ஒவ்வொரு மனிதருக்குமே அடுத்த மனிதர்களின் கதைகளைத் தெரிந்து கொள்வதில் மட்டும்தான் அதிகபட்ச சுவாரசியம் இருக்கிறது. காலங்காலமாகவே அப்படித்தான். திண்ணையில் அமர்ந்து ஊர் கிசுகிசு பேசுவதிலிருந்து, பெருமட்ட உரையாடல் வரைக்கும் அப்படித்தான். கதைகளையும் கிசுகிசுக்களையும் பேசுவதில் தவறில்லை. அதன் உபவிளைவாக வேறு எதனைக் கற்றுக் கொள்கிறோம் என்றிருக்கிறது அல்லவா? வெறுமனே சுவாரசியத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்தால் எதையோ கோட்டைவிடுகிறோம் என்றுதானே அர்த்தம்?

அதுவும் மெய்நிகர்(வெர்ச்சுவல்) உலகம்  வந்துவிட்ட பிறகு நேரடிப்பேச்சு வெகுவாகக் குறைந்துவிட்டது. நேரில் பேசுவதைவிடவும் ஃபோனிலும் மெசஞ்சரிலும், வாட்ஸாப்பிலும் பேசிக் கொள்வது எளிதாகிவிட்டது. ஆன்லைனில் உரையாடும் இருவர் நேரடியாக பேசுகிற வாய்ப்புக் கிடைத்தால் அதே சுவாரசியத்தோடு பேசிக் கொள்ள முடியுமா என்றால் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. பேச்சும் ஒரு அற்புதமான கலைதான். எதிராளியின் முகபாவனை, கண்கள், உடல்மொழி ஆகியவற்றை எதிர்கொண்டு அவரது வாக்கியங்களை கிரகித்து அதற்கேற்ற பதில் சொல்வதற்கு அந்தக் கலையைப் பயிற்சி செய்து கொண்டேயிருக்க வேண்டும். தொடர்ச்சியான பயிற்சியில்லாமல் போனால் அது மழுங்கிக் கொண்டேதான் வரும்.

ஒரு நண்பர் ‘நான் நிறைய வாசிக்கிறேன். அதனால் என்னால் மனிதர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது’ என்றார். ம்க்கும். எனக்கு நம்பிக்கை இல்லை. நேர்பேச்சில் மிக மொக்கையாகப் பேசுகிறவர்கள் இலக்கியவாதிகள்தான். 

நாம் விரும்பி வாசிப்பது எல்லாமே இன்னொருவரின் கதைகளை மட்டும்தானே? புனைவுகள் என எழுதப்பட்டு நம்மை ஈர்ப்பவை அடுத்தவர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள்தான். இவையும் கூட ஒரு வகையில் மெய்நிகர்தான். சுவாரசியத்தோடு நின்று கொள்கிறோம். ரத்தமும் சதையுமாக மனிதர்களை அணுகுவதில்லை. ஏன் எல்லாவற்றையும் எழுத்து வழியாகவும் டிஜிட்டலாகவும் மட்டுமே தேட வேண்டும்? மிக எளிய பதில்தான். சகமனிதர்களிடமிருந்து வெகு அந்நியாகிக் கொண்டிருக்கிறோம். படிப்பும், வேலையும், பணமும் மனிதர்களை அந்நியர்களாக்கிவிடுகின்றன. 

சொகுசான வாழ்க்கையும் நம்மை விலக்குகிறது. ‘நமக்கு கவர்ண்மெண்ட் பஸ் செட் ஆகாதுங்க’ என்கிறவர்கள் அதிகம். தவறென்று சொல்லவில்லை. அவரவர் வசதிகள் சம்பந்தப்பட்டது அது. எஸ்.ஆர்.எம், பர்வீன், கே.பி.என் பேருந்துகளில் செல்லும் போது பக்கத்தில் இருப்பவர்கள் நம்மை எதிரியைப் போலவேதான் பார்க்கிறார்கள். நான்கு சொற்கள் சேர்ந்தாற் போல பேச வைக்க முடிவதில்லை. எட்டு மணி நேரப் பயணம். ஆனால் எதுவுமே பேசியிருக்க மாட்டோம். பேசினால் முத்து உதிர்ந்துவிடுமா? கையைக் கொஞ்சம் அந்தப் பக்கம் கொண்டு போனால் கூட என்னவோ இடத்தைப் பிடிக்க வந்தவன் போலதான் முகத்தைச் சுளிப்பார்கள். 

அரசுப் பேருந்துகளில் மட்டும் என்ன வாழ்கிறது? அங்கேயும் கூட பேச்சு வெகு குறைவுதான். இதனால்தான் மனிதர்களை நோக்கிப் பயணிக்க மனம் எத்தனிக்கிறது. குக்கிராமங்களில், சாலையோரங்களில் எளிய மனிதர்களைத் தேடிச் செல்ல வேண்டும் என்கிற ஆர்வமும் அப்படித்தான். ஆனால் முதல் அடி கூட உருப்படியாக எடுத்து வைத்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. வாழ்நாள் முழுக்கவும் அலைந்து திரிந்தாலும் நான் கண்டடைகிற ஒவ்வொரு மனிதனிடமும் நாம் கண்டறியா முடியாத ஒரு வித்தை இருக்கும். 

மனிதர்களைப் பார்த்தவுடனே எடைப் போட்டுவிடுகிற கலையெல்லாம் எனக்கு சுட்டுப்போட்டாலும் வராது.

சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அலைபேசியில் பேசியவர் ‘நம்ம லாட்ஜ்ல இருங்க..வந்துடுறேன்’ என்றார். வரவேற்பறையில் இருந்த இளைஞர் ‘நீங்க வருவீங்கன்னு அண்ணாச்சி சொன்னாரு..உள்ள உட்காருங்க சார்’ என்று கன மரியாதை கொடுத்தார். பெரிய விடுதி அது. முதலாளியின் அறைக்குள் சொகுசான இருக்கை போட்டு வைத்திருந்தார்கள். அமர்ந்திருந்தேன். 

சற்றே கசங்கிய சட்டையும், பழுப்பேறிய வேஷ்டியும், தாடியுமாக உள்ளே வந்த ஒருவர் பவ்யமாக வணக்கம் தெரிவித்துவிட்டு ‘ஏ.சி போதுங்களா? ஃபேன் போடட்டுமா?’ என்றார்.  விடுதியின் பணியாளர் போலிருந்த அவரிடம் அசிரத்தையாக ‘இதுவே போதும்’ என்றேன். சில நிமிடங்களுக்குப் பிறகு ‘டீ சாப்பிடுறீங்களா?’ என்றார். அப்பொழுது அதே அசிரத்தை. இருபது நிமிடங்களுக்குப் பிறகு என்னைக் காத்திருக்கச் சொன்னவர் வந்த போது- கிட்டத்தட்ட அவரும் அதே போன்ற உடைதான். வந்தவர் எனக்கு எதிரான இருக்கையில் அமர்ந்து கொண்டார். மின்விசிறி வேண்டுமா, டீ வேண்டுமா எனக் கேட்டவர் முதலாளிக்கான இருக்கையில் அமர்ந்தார். அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் பேசிக் கொண்டிருந்தேன்.

நான் பார்க்கச் சென்றிருந்தவர் ‘அண்ணாச்சி..அண்ணாச்சி’ என்று வரிக்கு வரி அவரை விளித்தார். இருவரும் இளவயது நண்பர்களாம். இப்பொழுது தொழிலில் பங்குதாரர்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நானும் முதலாளி இருக்கையில் அமர்ந்தவரைப் பார்த்து ‘அண்ணா, அண்ணா’ என்று பேசி சமாளித்தேன். அந்த விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்துகிறார்கள். உரிமையாளருக்கு மாதம் ஐந்து லட்ச ரூபாய் குத்தகைப் பணம் மட்டும் கொடுக்கிறார்கள். அப்படியென்றால் எவ்வளவு வருமானம் இருக்க வேண்டும்?

பேசி முடித்துவிட்டுக் கிளம்பும் போது ‘நாங்க நிறைய தொழில் வெச்சிருக்கோம் தம்பி...இது அதுல ஒண்ணு’ என்றார் அந்த கசங்கிய சட்டை மனிதர். அவரிடம் அசிரத்தையாக இருந்ததற்கும் அதற்கும் சம்பந்தமிருக்கிறதா என்று தெரியவில்லை. அவர் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. மரியாதையாகவே அனுப்பி வைத்தார். எனக்குத்தான் மனமே ஆறவில்லை. ஆடையையும், மனிதர்களையும் இணைத்து பொதுப்புத்தியுடன்தான் இருக்கிறோம் என்று சங்கடமாகவே இருந்தது. போலியான மனிதர்கள் நம்மைச் சுற்றி நிறையும் போது அசலான மனிதர்களை வெறும் புற அடையாளங்களை வைத்துத் தவறாகக் கணக்குப் போட்டுவிடுகிறோம்.

என்னத்தப் படிச்சு, என்னத்த பொழச்சு....

4 எதிர் சப்தங்கள்:

Mugilan said...

// பேச்சும் ஒரு அற்புதமான கலைதான். எதிராளியின் முகபாவனை, கண்கள், உடல்மொழி ஆகியவற்றை எதிர்கொண்டு அவரது வாக்கியங்களை கிரகித்து அதற்கேற்ற பதில் சொல்வதற்கு அந்தக் கலையைப் பயிற்சி செய்து கொண்டேயிருக்க வேண்டும். தொடர்ச்சியான பயிற்சியில்லாமல் போனால் அது மழுங்கிக் கொண்டேதான் வரும்.//

மிக சரி.. இந்த கணினி யுகத்தில் நம் வார்த்தைகளையே நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை .. நான் ஒன்று பேச வேண்டும் என நினைக்க வேறு ஒன்றை பேசி விடுகிறேன் ..

பழனிவேல் said...

மிகச்சரியாக சொன்னீர்கள் அண்ணா...
அருமை

தமிழ் said...

இங்கு நிறையபேர் அவ்வாறுதான் இருக்கின்றனர். ஆளைபார்த்ததும் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடுவது,
சில சமயம் நானும் அதை செய்திருக்கிறேன் ஆனால் பிறகு வருத்தப்பட்டதுண்டு என்ன செய்ய.

Subramanian said...

just because he is rich should your actions have been different.you act as per your mental conditioning