May 29, 2019

வேரும் மரமும்

நண்பரொருவர்  ‘கோயமுத்தூர் வாழ்க்கை பரவாயில்லையா?’ என்று கேட்டார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சொன்னால் சொந்த ஊரை விட்டுவிட்டு வெளியில் வாழ்கிறவர்களுக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது போல ஆகிவிடும். 

அப்பா உயிரோடு இருக்கும் வரைக்கும் வகைதொகை தெரியாமல் திருமணப்பத்திரிக்கைகள் நிறைந்து கிடக்கும். முக்கால்வாசி அழைப்பிதழ்களில் இருக்கும் விவரங்கள் யாருடையது என்று கூட எங்களுக்குத் தெரியாது. அம்மாவுக்கும் அப்படித்தான். ‘அப்பாகிட்ட கேளு’ என்பார். அப்பாவுக்கு அவர்கள் எல்லோரையும் ஏதாவதொருவகையில் கோர்க்கத் தெரிந்திருந்தது. அவர் நூல் பிடித்துக் காட்டினால் ஏதாவதொருவகையில் உறவுக்காரரின் திருமணமாக இருக்கும். துக்ககாரியங்களும் அப்படித்தான். இறந்தவர்களை யாரென்றே எனக்குத் தெரியாது. அப்பா சென்று வருவார். அறுபத்தைந்தாண்டு காலம் ஒரே ஊரிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்தவருக்கு அப்படித்தான் தொடர்புகள் இருக்கும். 

அப்பா இருக்கும் வரையிலும் எதைப்பற்றியும் யோசித்ததில்லை. அப்பாவை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்ற போதே ஊரை விட்டுத் தள்ளிப் போவது போலத்தான் ஆனது. அது, பெரிய மரம் ஒன்றை வேரோடு தோண்டியெடுத்து எங்கேயோ நடுவது போல. எவ்வளவுதான் நீருற்றிப் பார்த்தாலும் தன்னைத் தேடி வரும் பறவைகளின் ஓசையைக் கேட்க விரும்பும் மரம் போல மெளனம்தான் விரவிக் கிடக்கும்.  

அப்பாவின் மறைவுக்குப் பிறகு திருமணப்பத்திரிக்கைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து போயின. ‘அவங்க பெங்களூர்ல இருக்காங்க’ ‘கொடுத்தாலும் வரவா போறாங்க’ என்று தவிர்த்துவிடுவார்கள்.  ‘அவர் இருக்கிற வரைக்கும் கொடுத்தோம்...பசங்களைத் தெரியாது’ என்றார்கள். துக்க காரியங்கள் பற்றிய செய்திகளே வராது. வந்தாலும் ‘இதுக்கெல்லாம் போகணுமா’ என்று நாங்கள் தவிர்த்துவிடுவோம். ஒரு கட்டத்தில் சொந்த மண்ணைவிட்டு வெகு தூரம் செல்வது போலத் தோன்றியது. எந்த நிகழ்விலும் மூன்று முதல் ஐந்து சதவீதம் பேர்களைத் தாண்டி அறிமுகம் இருக்காது. அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் நம்மிடம் பேச மாட்டார்கள். 

கோயமுத்தூர் வந்த பிறகு எவ்வளவோ பரவாயில்லை. அப்பாவின் நண்பர்கள் விலகினாலும் உறவுகள் எப்படியாவது ஒட்டியபடியே இருக்கின்றன. திருமணங்களுக்குச் சென்று வர முடிகிறது. துக்க காரியங்களில் பங்கெடுக்கிறோம். பத்து நிகழ்வுகளில் கலந்து கொண்டால் மூன்று நிகழ்வுகளிலாவது  புதிதாக யாரோ அடையாளம் கண்டுபிடிக்கிறார்கள். ‘வாசு அண்ணன் பையனா?’ என்று கேட்கிறார்கள். ஆமாம் என்று சொன்னால் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். இவையெல்லாம் ஏதோ புதிய உலகத்தை அறிவது போல இருக்கிறது.

கிடாவிருந்து, வளைகாப்புக்கெல்லாம் அழைப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் அட்டெண்ட்ஸ்தான். என்னைவிட பத்து வயது குறைந்தவர்கள் கூட உள்ளூரிலேயே இருக்கிறவர்களுக்கு பரவலாக அறிமுகம் இருக்கிறது. பாதி வயதைத் தாண்டிய பிறகு உள்ளூரில் பழைய உறவுகளைத் தூசி தட்ட ஆரம்பித்திருக்கிறோம். ஒரு வகையில் வருத்தமாக இருந்தாலும் late is better than never அல்லவா? 

சில நண்பர்களிடம் இதைச் சொன்னால் ‘இதெல்லாம் இல்லாட்டி என்ன’ என்கிறார்கள். எனக்கும் அப்படித்தான் இருந்தது. நெருங்கிய நண்பர்களோ அல்லது உறவினரோ- பத்து பேர் போதும். அதற்கு மேல் யாரும் தேவையில்லை என்றெல்லாம் கூடத் தோன்றியதுண்டு. ஆனால் அப்படியில்லை. அப்பா இறந்த போது வந்து அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு எந்நேரமும் ஐம்பது பேர்களாவது உடனிருந்தார்கள். அவர்களில் சிலர் சிரித்து, கும்மாளம் கூட அடித்தார்கள். அப்பொழுது கடுப்பாக இருக்கும். ஆனால் நம்மை அந்தச் சூழலிலிருந்து வெளியே இழுத்து வர விதவிதமான மனிதர்கள் தேவை. மனிதர்களின் சகவாசமில்லாமல் இந்த வாழ்க்கையில் நாம் எதையும் கற்றுக் கொள்ளப் போவதில்லை. 

படித்த இடங்களில், கல்லூரிகளில், பணியாற்றும் இடங்களில் என ஆயிரம்தான் நட்புகளைச் சேகரித்து வைத்திருந்தாலும் கூட வந்து நிற்பவர்கள் வெகு சொற்பம்தான். பெங்களூருவிலும் சென்னையிலும் எவ்வளவோ சாவு வீடுகளைப் பார்த்தாகிவிட்டது. நடுத்தரக் குடும்பங்கள் என்றால் நாற்பது பேர் வந்து போயிருந்தால் அது பெரிய விஷயம். 

ஏதாவதொருவகையில் ஆறுதலாக வந்து நிற்கவும், கொண்டாட்டத்தில் நம்மோடு சேர்ந்து சிரிக்கவும் மனிதர்கள் தேவை. பொறாமை, வன்மம், வயிற்றெரிச்சல் என சகலமும்தான் விரவிக் கிடக்கும். நம்மைக் கீழே இழுத்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டும் இருப்பார்கள். எல்லாவற்றையும் தாண்டி மனிதர்களின் அருகாமை நமக்குத் தேவை.  பெருநகரங்களில் பணம் சேர்கிறது. வசதிகள் கூடுகின்றன. ஆனால் எப்படியோ மனித உறவுகள் துண்டித்துப் போகின்றன. சக மனிதர்களிடம் எப்படி நாசூக்காக பேச வேண்டும் என்பது கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

அடுத்த தலைமுறைக்கு என்ன கொடுத்துவிட்டுப் போகப் போகிறோம்? மனிதர்களையும், உறவுகளையும்தானே!

சொந்த ஊர் என்பது ஒரு மாயவித்தைக்காரி. சூட்சமங்களை உள்ளடக்கிய சூனியக்காரக்கிழவி. அதில் வாழ்ந்து பழகிவிட்ட மனிதர்களுக்கு சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரைப் போலாகாது.

கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது பேயோன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கீழே இருப்பதைப் பதிந்திருந்தார்...

நிச்சயதார்த்தம்
திருமணம்
ரிசப்ஷன்
வளைகாப்பு
கிரகப்பிரவேசம்
பிறந்தநாள் விழா
அரங்கேற்றம்
மீண்டும் பிறந்தநாள் விழா
கெட் டுகெதர்...
உங்களுக்கெல்லாம்
வேறு வேலையே இல்லையாடா?

10 எதிர் சப்தங்கள்:

Jaikumar said...

20 வயதில் ஊரை விட்டு வெளியே வந்து 40 வயதில் ஊருக்கு அருகாமையில் தான் குடியேறமுடிந்தது. மாரியம்மன் கோவில் கம்பத்தாட்டத்திலும், மற்ற விசேஷங்களிலும் என்னை விட 5 வயது குறைவானவர்களை அடையாளம் காண முடிகிறது.அதை விட சின்ன வயதுகாரர்களுக்கு நம்மை அடையாளம் தெரிந்தாலும் கொஞ்சம் விலகியே இருக்கிறார்கள், நாமாய் போய் அறிமுகம் செய்து கொள்ள வேண்டி உள்ளது. ஊருக்குள் வட இந்தியர்களின் நடமாட்டம் உள்ளது. நம் வேரை விட்டு பிடுங்கி எறியப்பட்ட மனநிலை சில சமயங்களில் வருகிறது. ஆனாலும் குழந்தைகளுக்கு நிறைய ஒறம்பறைகள் தெரிய வருகிறது. அவர்களும் ஒறம்பறைகளின் பெயரை சொல்லி அவர்களை பள்ளியில் பார்த்தேன், கடைவீதியில் பார்த்தேன் என சொல்லும் போது மனதுக்கு சிறு ஆறுதல் கிடைக்கிறது.

சேக்காளி said...

//நிச்சயதார்த்தம்
திருமணம்
ரிசப்ஷன்
வளைகாப்பு
கிரகப்பிரவேசம்
பிறந்தநாள் விழா
அரங்கேற்றம்
மீண்டும் பிறந்தநாள் விழா
கெட் டுகெதர்...//
இவை எல்லாம் இல்லாவிட்டால் நன்றாக தான் இருக்கும். ஆனால் வாழ்ந்தோம் என்று எப்படி சொல்வது?

சேக்காளி said...

உறவுகளோடு இருக்குறவனுக்கு புரியுறது இல்லை. புரியும் நிலை வரும் போது உறவுகள் தூரத்தில்.

இமேஜ் நெஸ்ட் ஷிவா said...

அருமை. இப்போதையை சூழலில் எனக்காகவே எழுதப்பட்டது போன்ற தோற்றம்.....

நந்தா said...

//நிச்சயதார்த்தம்
திருமணம்
ரிசப்ஷன்
வளைகாப்பு
கிரகப்பிரவேசம்
பிறந்தநாள் விழா
அரங்கேற்றம்
மீண்டும் பிறந்தநாள் விழா//

இதற்கெல்லாம் போகாமல் TV, YouTube, Netflix பார்த்துட்டு sofa la வாழ்வதுதான் வாழ்க்கையா?

Anonymous said...

இதுஎல்லா நீங்க பெங்களூருல இருந்திருந்தா கிடைச்சிருக்குமான்னா, சந்தேங்கம்தான். சொந்தம் வேணும்னு நானும் முடிந்தவரையில் எல்லா சுப துக்க நிகழ்வுகளில் கலந்துக்க முயற்சி செய்துகொண்டே இருக்கேன். பேயோன், கெடவிருந்தை குறிப்பிடல ஆன நீனா அத சொல்லியிருக்கீங்க. இங்க தன உங்க தனிச்சிறப்பு மேலோங்கிநிற்கிறது. :-)

பின் குறிப்பு:- சென்ற ஞாயிறு அன்று, தங்களை எனது மாமன் மகளின் கிடா விருந்தில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி சகோதரரே.
சுத்திவளாச்சு பாத்த உங்களுக்கு எங்க ஊர்ல நெருங்குண சொந்தம் வேற இருக்கு.

Anonymous said...

வேலைக்காக வெளியூரில் வாழ்வது மனமே ஓட்டாமல் வாழ்வது அனுபவத்தில் தெரிந்தது. சொந்த ஊருக்கு விடுமுறையில் செல்லும் போது மண்ணில் நடக்கும் போது தான் அதன் அருமை பெருமை தெரிய வருகிறது. பிறந்த ஊரில் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் சொல்ல தோன்றுகிறது. அளவுக்கு அதிகமாக வருமானம் வரும் வேலையாக இருந்தால் வெளிநாடு, வெளியூர் சொர்க்கமாக தெரியும். இது அனைவருக்கும் வாய்ப்பதில்லை.

பே.ஆவுடையப்பன்

Siva said...

அண்ணே, தப்பாக எடுத்துக்க வேண்டாம். இந்த சாயலில் ஏற்கனவே நீங்கள் எழுதின மாறி ஒரு ஞாபகம்...

Selvaraj said...

பதில் சொன்னால் சொந்த ஊரைவிட்டு சூழ்நிலையின் நிமித்தம் வெளியில் வாழ்பவர்களுக்கு குற்ற உணர்ச்சி வருமா இல்லையா என்று தெரியாது ஆனால் ஒருசிலர் சொந்த ஊரில் வாழ்வதற்கான முயற்சியை எடுப்பார்கள் என்பது நிச்சயம்.

உண்மை ,படித்த இடங்களில், கல்லூரிகளில், பணியாற்றும் இடங்களில் என ஆயிரம்தான் நட்புகளைச் சேகரித்து வைத்திருந்தாலும் கூட வந்து நிற்பவர்கள் வெகு சொற்பம்தான்
அதே போன்று சொந்த ஊரில் இருப்பவர்களுக்கு சாதாரணமாக தெரிபவை வெளியூரில் வசிப்பவர்களுக்கு பெரிதாக தெரியும் என்பதும் நிஜம்.
பலமுறை உங்கள் எழுத்துக்களில் பதிவு செய்திருப்பீர்கள், உங்களின் பல வருடத்திய கனவு கோயம்புத்தூர் பக்கமாக பணி செய்ய வந்துவிடவேண்டுமென்பது. இத்தனை வருடங்களாக பெங்களூரில் இருந்திருக்கிறீர்கள் இனி சொந்த ஊரில் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவியுங்கள். வாழ்த்துக்கள்

சேக்காளி said...

//Siva said...
அண்ணே, தப்பாக எடுத்துக்க வேண்டாம். இந்த சாயலில் ஏற்கனவே நீங்கள் எழுதின மாறி ஒரு ஞாபகம்.//
அதெல்லாம் அப்பப்ப ரெண்டாம் பாகம் வரும்.