May 7, 2019

புல்டோசர்

கருப்பணசாமி அப்பாவின் நண்பர். மின்வாரியத்தில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். கோவில்களில் யாகம் நடத்துவது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அவர் கேட்டிருந்த கேள்விகள் இணையத்தில் வைரல் ஆகுவதற்கு முன்பாகவே அவரை அழைத்து வாழ்த்தைச் சொன்னேன். ‘எதுக்கும் தயாரா இருந்துக்குங்க...ஃபோன் நெம்பர் வேற தெளிவா இருக்குது’ என்றேன். அவர் அசரும் மனிதரில்லை. ‘அதுக்குத்தான் தயாராகிட்டு இருக்கேன்’ என்றார். அவரது விண்ணப்பத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தவுடன் கடந்த ஆண்டு அக்னிக்கும்பம் எடுத்த படத்தைப் போட்டு ஒருவர் என்னைக் கலாய்த்திருந்தார். 


சில மாதங்களுக்கு முன்பாகப் பெரியார் குறித்து ஏதோ கருத்துச் சொன்ன போதும் இன்னொருவர் இதையே செய்தார். அதாவது ‘உனக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதனால் நீ இந்து மதத்தை விமர்சனம் செய்யக் கூடாது; பெரியாரைப் புகழக் கூடாது’ என்கிற மாதிரியான வாதங்கள் இவை. கடவுள் நம்பிக்கை என்பது தனிப்பட்ட மனிதனைச் சார்ந்ததாக இருக்கும் வரைக்கும் பிரச்சினை இல்லை. அது ஆபத்துமில்லை. பெரும்பாலான தனிமனிதர்களின் கடவுள் நம்பிக்கை மிக எளிமையானது. எல்லாவற்றையும் கொட்டுவதற்கு ஓர் உருவம். சலித்துப் போகும் போதெல்லாம் ‘நீ எந்திரிச்சுக்குவ’ என்று காதுக்குள் சொல்லக் கூடிய ஒரு வடிவம். அவ்வளவுதான். அது யாரையும் எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை.

அரசாங்கம் அப்படியில்லை. அது எந்தவொரு சார்பு நிலையையும் எடுக்கக் கூடாது. எல்லோருக்கும் பொதுவான அரசாங்கமானது அலுவல்ரீதியாக தன்னுடைய மத நம்பிக்கையை வலியுறுத்துவது ஆபத்தானது. தலைமைச்செயலகத்துக்குள் யாகம், மழை வேண்டி யாகம் என்று யாரோ சொல்வதைக் கேட்டு ஒரு பக்கச் சார்பாக அரசாங்கம் தம்முடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அதை எதிர்க்கத்தான் வேண்டும். 

மாரியம்மனும் கருப்பராயனும் இருந்த கோவில்களுக்குள் நவக்கிரகங்களை வைத்து ‘கிடா வெட்டுவது தவறு’ ‘அய்யர்தான் பூசை செய்யணும்’ என்றெல்லாம் மாற்றிய வரலாறுகள்தான் நம்முடையது. பண்டாரங்களை வெளியேற்றிவிட்டு பார்ப்பனர்கள் கைப்பற்றிக் கொண்ட பூசை முறைதான் இன்றைக்கு நாம் பின்பற்றிக் கொண்டிருப்பது. இன்னமும் மிச்சம் மீதி இருக்கும் பண்பாட்டு எச்சங்களையெல்லாம் புல்டோசரை வைத்து ஏற்றிவிட்டு ‘எல்லாமே இந்துத்துவா’ என்று வடக்கத்திய, பிராமணர்களின் நம்பிக்கைகளை, ஆச்சாரங்களை முழு வீச்சில் பரவலாக்க மத்திய அரசானது மாநில அரசு வழியாக எத்தனிக்கும் போது எந்தவிதச் சலசலப்புமில்லாமல் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

மதச்சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் போன்றவை தனிமனிதர்களின் விருப்பம் சார்ந்தவையாக இருக்கும் போது பண்பாட்டு ரீதியிலான நசுக்குதல் எதுவும் நிகழ்வதில்லை. தனிமனிதர்களுக்குள் சச்சரவுகளுமில்லை. ஆனால் இவற்றில் அரசாங்கம் மூக்கை நுழைத்து, அதிகாரமிக்க உத்தரவுகளைப் பிறப்பிக்கும் போது வலுவற்றவர்களின் நம்பிக்கைகள் ஓரங்கட்டப்படும். இதுதான் இன்றைக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

பல நூறு ஆண்டுகளாக தம்முடைய முன்னோர்களின் சிறுதெய்வ வழிபாடு, நாட்டார் தெய்வங்கள் குறித்தான எந்தவிதமான புரிதலுமில்லாத, மூத்த குடிகளின் வழிபாட்டு முறை, தமது இறைநம்பிக்கை சார்ந்த பண்பாடு ஆகியன குறித்து அறியாத, மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு இளந்தாரிக் கூட்டம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தக் குழுதான் ‘எல்லாமே காவி’ என்று நம்புகிற கூட்டம். அவர்களுக்கு அய்யனார் பற்றியோ, கன்னிமார் சாமி பற்றியோ எதுவும் அக்கறையில்லை. காவி அணிந்தால் போதும். பாவாடை, குல்லா என்று வசைபாடினால் போதும். மற்ற எந்தக் கவலையுமில்லை. காவி நிறச் சுனாமியொன்று நம் ஒவ்வொருவரின் தனித்த அடையாளங்களையும் கபளீகரம் செய்ய எத்தனிக்கிறது என்பதைப் பற்றிப் புரிய வைக்க யாராவது பேசித்தானே ஆக வேண்டும்?

நம் அடையாளங்களை அழித்து ‘எல்லாமே ஒண்ணுதான்’ என்று சொல்லும் அந்தக் காவிச் சுனாமிக்கு கம்பளம் விரிப்பதைத்தான் மறைமுகமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ள வேண்டியதில்லையா? ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அலகு குத்துதல், அக்னிக்கும்பம் எடுத்தல், தீ மிதித்தல், பலி கொடுத்தல் என்று பல நூறாண்டுகளாகப் பின்பற்றி வரும் இந்த நம்பிக்கைகளில் பெரும்பாலானவை ஊர் நலம் பெற வேண்டும் என மழை வேண்டுவதாகத்தான் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு ‘யாகத்தை நடத்துங்கள்; அண்டாவில் கழுத்தளவு நீரில் அமருங்கள்’ என்றெல்லாம் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடுவதன் உள்நோக்கம் என்னவாக இருக்க முடியும்?

ஒரு மிகப்பெரிய கலாச்சார ஆக்கிரமிப்பை கமுக்கமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தைப் பார்த்து சிறு சலசலப்பை உருவாக்கினால் கூட தனிமனித நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கிற மூளைச்சலவைக் கூட்டத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லைதான். ஆனால் பழைய படத்தையே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும்தான் அக்னிக்கும்பம் எடுக்கிறேன். புதுப்படத்தை வெளியிட நமக்கும் ஒரு சாக்குப் போக்கு வேண்டுமல்லவா? இவர்களது கேள்வியை சாக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

சித்திரை மாதத்தில் உச்சி வெயிலில் மதியம் ஒரு மணிக்கு காலில் செருப்பில்லாமல் தகிக்கும் தார்ச் சாலையில் அக்னிக்கும்பத்தை எடுத்துக் கொண்டு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊரைச் சுற்றி கோவிலுக்கு வந்து பார்த்தால் புரியும். கும்பத்துக்குள் பற்ற வைத்த நெருப்பு மெல்ல மெல்ல சட்டியில் இறங்கும்.  எப்படியும் கொண்டு போய்ச் சேர்த்துவிடலாம் என்ற மன உறுதி ஏறிக் கொண்டேயிருக்கும். சற்று மனம் பதறும் போதெல்லாம்  ‘இத்தனை பேர் வர்றாங்க..நாம போக மாட்டோமா’ என்று திரும்பத் திரும்ப நினைக்கத் தோன்றும். இப்படி ஏறுகிற உறுதி அடுத்த ஒரு வருடத்திற்கான டானிக். இதற்காகவாவது ஒவ்வொரு வருடமும் எடுப்பேன்.

13 எதிர் சப்தங்கள்:

Parthiban said...

//கடவுள் நம்பிக்கை மிக எளிமையானது. எல்லாவற்றையும் கொட்டுவதற்கு ஓர் உருவம். சலித்துப் போகும் போதெல்லாம் ‘எந்திரிச்சுக்குவ’ என்று காதுக்குள் சொல்லக் கூடிய ஒரு வடிவம். அவ்வளவுதான். அது யாரையும் எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை.// அருமை

சேக்காளி said...

////கடவுள் நம்பிக்கை மிக எளிமையானது. எல்லாவற்றையும் கொட்டுவதற்கு ஓர் உருவம். சலித்துப் போகும் போதெல்லாம் ‘எந்திரிச்சுக்குவ’ என்று காதுக்குள் சொல்லக் கூடிய ஒரு வடிவம். அவ்வளவுதான். அது யாரையும் எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை.//
அதே

சேக்காளி said...

// ‘எல்லாமே இந்துத்துவா’ என்று வடக்கத்திய, பிராமணர்களின் நம்பிக்கைகளை, ஆச்சாரங்களை முழு வீச்சில் பரவலாக்க மத்திய அரசானது மாநில அரசு வழியாக எத்தனிக்கும் போது எந்தவிதச் சலசலப்புமில்லாமல் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?//
எடப்பாடி கூட்டத்த அதிகாரத்துல இருந்து இறக்கணும்.
இல்லன்னா தேசதுரோகியா அலையணும். சொத்து பத்து இருந்தா அமலாக்கம், வருமானவரிதுறை எப்படி செயல் படுதுன்னு செயல்முறை விளக்கத்தை பார்க்க ஆயத்தமா இருக்கணும்.
இது போல இன்னும் நிறைய "ணும்" கள் இருக்கு

செல்வராஜ் said...

சரியான வாதங்கள். என் மனதில் இருப்பதை அப்படியே படித்ததுபோல இருந்தது. கடவுள் இல்லை என்ற வாதங்களை விவாதம் செய்ய வேண்டிய தளம் வேறு. அதையும் இந்த இந்துத்துவா அடையாளங்களை தீவிரமாக புகுத்திடும் அரசியலையும் தனித்தனியாக அணுக வேண்டும். ஆனால் இது பெரும்பாலோனுர்க்குப்புரிவதில்லை என்பதுதான் வருத்துமளிக்கிறது

Anonymous said...

எல்லா காவி எதிரிகளுக்கும் சேத்து சொல்லுறேன் ..

"அண்ணன் ஆர்ம்ஸ் பாத்தியா?
அடிச்சா தங்குவியா ?
பாத்து பக்குவமா நடந்துக்கணும் பாத்துக்க.."

Saravanan Sekar said...

கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா, என்பது பல நூற்றாண்டுகளாக கேட்கப்படும் கேள்வி.
இதில் ஏதேனும் ஒரு நிலைப்பாடு எடுப்பதும், அது சார்ந்த நம்பிக்கைகளையும் சடங்குகளையும் ஏற்பதும் மறுப்பதும் தனிப்பட்ட மனிதர்களின் விருப்பத்திற்கு விட்டு விட வேண்டியது.
ஆகா, பிரச்சினை இங்கே இத்தகைய நிலைப்பாட்டை அரசாங்கமே எடுப்பதும், அதனை நிறைவேற்ற அரசாணை வெளியிடும் அவலத்தை கண்டும் காணாமல் இருப்பதே. இதனை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மிக கடுமையாக சாடிய ஐயா கருப்பணசாமி -அவர்களின் முயற்சி பெரும் பாராட்டுக்குரியது.இத்தகைய அறிவு நோக்கு கொண்ட கேள்விகள், ஈவேரா பிறந்த மாவட்டத்திலிருந்தே வருவது, சாலப் பொருத்தம்.
தேவை பட்டால் இதன் பின் விளைவுகளை (அச்சுறுத்தல்கள் வருமாயின்) சந்திக்க நாம் அவரோடு துணை நிற்பதும் அவசியம்.

தனி ஒருவன் விருப்பத்தின் பேரில் மழை வேண்டி கோவிலிலோ, குளத்தங்கரையிலோ, யாகம் வளர்த்தால் - அதை தடுக்க அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை, அதே போல், மக்கள் யாவருக்கும் பொதுவான அரசாங்கம் மழை வெண்டி யாகம் நடத்த ஆணை வெளியிடுவதற்கும் எள்ளளவும் உரிமையில்லை.

அன்புடன்
சரவணன் சேகர்
மஸ்கட்

Sathya said...

Super....

Anonymous said...

The psychology behind the fire pot (thee chatti)...Super Sir...

Anonymous said...

ஒரு சாயலில் H.ராஜா மாதிரியே இருக்கிங்க😃😃😃

அன்புடன் அருண் said...

//வடக்கத்திய, பிராமணர்களின் நம்பிக்கைகளை, ஆச்சாரங்களை முழு வீச்சில் பரவலாக்க மத்திய அரசானது மாநில அரசு வழியாக எத்தனிக்கும் போது

அவங்க எத்தனிக்கலேன்னாலும், நாம ஏற்கனவே செய்ய ஆரம்பிச்சுட்டோம்...

நல்லா நினைவு படுத்தி பாருங்க..

"தமிழர்கள்" எத்தனை பேர் தன்னோட குழந்தைகளுக்கு "ஷ", "ஜ" இல்லாம பெயர் வைக்கிறார்கள்? எத்தனை வருஷத்துக்கு முன்னால "பிரதோஷம்", "வரலட்சுமி நோன்பு", "நியூ இயர் தரிசனம்", "நவ ராத்திரி கொலு" கொண்டாட ஆரம்பிச்சோம்?

நம்மில் எத்தனை பேர் குலதெய்வம் கோயில்ல பொங்கல் வைக்க ஊருக்கு போறோம்?

ஜீவி said...

எத்தனை எத்தனையோ கோவில்கள் பார்ப்பனர் அல்லாதவர் கட்டுப்பாடு அல்லது ஆதரவில்தான் செயல்படுகின்றன.அங்கும் பெரும்பாலும் பார்ப்பனர் தான் அர்ச்சனை, அபிஷேகம் செய்கின்றனர். அவர்களை விரட்டி விட்டு ஒரு நாளில் ஆகம பயிற்சி செய்த வேறு சாதியினர் ஒருவரை பணியில் அமர்த்த எளிதாக முடியும்.ஆனால் பிற சாதியினர் அதை வேண்டுமென்றுதான் செய்ய விரும்புவதில்லை..அய்யர் பூஜை செய்து விபூதி கொடுத்து பெற்று கொள்பவன் அதே இடத்தில் பூணுல் இல்லாத ஆளை பார்த்தால் அவன் என்ன சாதி என்று கேட்டு அந்த கோவிலுக்கு போகலாமா என யோசிக்க ஆரம்பித்து விடுகிறான். அந்த அளவுக்கு சாதிய உணர்வு பார்ப்பனர் அல்லாதவர் மனங்களில் ஊறி இருக்கிறது. அதே போல் வீடு கிரகப்பிரவேசம், கல்யாணம் போன்றவற்றில் பார்ப்பனர்களை அழைத்து சடங்கு செய்வதும் பார்ப்பனர் அல்லாதவர்தானே... ஏன் அரசு ஆகம பயிற்சி பெற்ற ஒருவரை அழைத்து தங்கள் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளை இவர்கள் நடத்துவதில்லை? ஒரு திராவிட இயக்க நபர் கூட இதனை செய்வதில்லை. இத்தனையும் செய்து கொண்டு ஏதோ பார்ப்பான் கோவிலை கைப்பற்றி வைத்துக்கொண்டு இருப்பது போல ஒரு பிரச்சாரம் செய்வது எல்லா சாதிய உணர்வுகாரர் களுக்கும் மிகவும் வசதியாகவே இருக்கிறது.

kandhu said...

அரசு செலவில் கொண்டாடியது தவறு என்று சொல்லும் உங்களிடம் இந்த மத சார்பற்ற அரசு ஏன் இந்து சமய அறனிலைய துறை மட்டும் வைத்து வஸூல் செஇகிரது

Anonymous said...

HRCE is a governing body for temple administration. It's all the money the people (who have faith in God) offer in temple Hundis and meagre temple land rental income. Government not releasing any fund. Those people have faith in Varuna yagam. Of course many places in Tamil Nadu including Madurai rain after the yagam. You people counter with arguments for that we know.
Normally you write anything after detailed study.
Since he is your father's friend did you missed to check