ஹாக்கி பெண்களும் அவர்தம் பெற்றோரும் மேடைக்கு வர, ஐந்து லட்சத்து இருபதாயிரத்துக்கான காசோலையை கல்லூரி நிர்வாகத்தினரிடம் வழங்கிவிட்டோம். நேரடியாகக் கல்லூரிக்குச் சென்று காசோலையைக் கொடுத்துவிடுவதுதான் திட்டமாக இருந்தது. ஆசிரியர் அரசு தாமஸ்தான் இதனை ஒரு நிகழ்வாகச் செய்ய வேண்டும் என்றார். நிசப்தம் சார்புடையவர்களை அழைத்து இரண்டே நாட்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தாமஸ், கார்த்திகேயன் போலவே கோபிக்கலைக்கல்லூரியில் கலைச்செல்வி என்றொரு பேராசிரியர் இருக்கிறார். சூப்பர் 16 மாணவர்களை ஒருங்கிணைப்பதெல்லாம் அவர்தான். எள் என்பதற்கு முன்பாக எண்ணெய்யாக இருக்கும் பேராசிரியர் அவர். நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்.
யாரைச் சிறப்பு விருந்தினராக அழைப்பது என்றொரு குழப்பம் இருந்தது. எல்.ஐ.சி சீனு என்று ஒருவர் இருக்கிறார். ஊக்குவிக்கும் விதமாக பேசுவதில் வித்தகர். அவரிடம் பேசினோம். ‘அதுக்கென்ன தம்பி வந்துடுறேன்’ என்றார். அடுத்ததாக தமிழ்நாடு பனியன் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவரிடம் அடர்வனம் ஆனந்த் பேசினார். அவர் சரியென்று சொன்னவுடன் ஏற்பாடுகள் மடமடவென்று ஆரம்பமாகின. நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர் காலனியிலிருந்து வண்டி பிடித்து ஒரு கூட்டம் வந்து சேர்ந்தது. கோவையிலிருந்து ராம்கி, பிரகாஷ், ஒட்டன்சத்திரம் விக்னேஷ், ஈரோடு மூர்த்தி, ரமேஷ், பெருந்துறை ஜெயபால், கானுயிர் ஆர்வலர்கள் ராமமூர்த்தி, திவ்யா என்று நிசப்தம் வழியாக உருவான நண்பர்கள் கூட்டமே திரளாக இருந்தது.
நிசப்தம் ஒருங்கிணைக்கும் கோட்டுப்புள்ளாம்பாளையம் அடர்வனக் குழு, தெற்குப்பதி இளைஞர்கள் குழு, இளங்கோ, வரதராஜன், ரமாராணி உள்ளிட்ட சுற்றுவட்டார ஆசிரியர்கள் என்று தனித்தனி குழுக்கள் - அனைவரது பெயரையும் குறிப்பிட்டால் அதற்கு தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும்.
அரங்கு நிறைந்த கூட்டம்.
கல்லூரியின் செயலாளர் தரணி, டீன் செல்லப்பன், முதல்வர் தியாகராசன் உள்ளிட்ட நிறையப் பேராசிரியர்கள் வந்திருந்தார்கள். கல்லூரியைச் சார்ந்த விளையாட்டு மாணவர்களும் நிறையப் பேர் வந்திருந்தார்கள். அந்த மாணவர்களிடம் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. பதினோரு நிமிடங்கள் பேசினேன். மொபைல் பதிவுதான். வாய்ப்பிருப்பவர்கள் கேட்டுவிட்டு எப்படி பேசியிருக்கிறேன் என்று சொல்லவும்.
மேடையைத் தவிர தனியாகவும் அந்தப் பெண்களிடம் பேசியிருக்கிறேன். அவர்களிடம் ஒரு நெருப்பு இருப்பதை உணர முடிகிறது. சில மாணவர்களிடம் இருக்கும். அத்தகைய முழுமையாக நம்பலாம். இவர்கள் அப்படியான மாணவர்கள்தான். இப்போதைக்கு நன்கொடையாளர்கள் உட்பட எல்லோருடைய நோக்கமும் அந்தப் பெண்கள் ஏதாவதொருவகையில் பிரகாசித்துவிட வேண்டும் என்பதுதான்.
பத்துப் பெண்களில் ஒருத்தியை மேடைக்கு அழைத்தார்கள். கூட்டத்தில் இருந்த எல்லோரையும் விடவும் அவள் பேசியதுதான் சிறப்பு. எல்லாவற்றையும் பேசிவிட்டு இறுதியாக ‘என்ன பேசுவதென்று தெரியவில்லை’ என்று அப்பாவியாகச் சொன்னாள்.
மாணவிகளை அவர்களது பயிற்சியாளர் அருள்ராஜூம், கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியும் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் இரண்டு பேருமே அர்பணிப்புமிக்கவர்கள்.
இரண்டு நாட்களாக மனதுக்குள் இந்த நிகழ்வுதான் ஓடிக் கொண்டிருந்தது. செய்தி வெளியில் தெரிந்த பிறகு ‘இவர்களை ஏன் அங்கு சேர்க்கவில்லை? ஏன் இங்கு சேர்க்கவில்லை?’ என்று நிறைய அறிவுரைகள் வருகின்றன. அவர்களிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. செய்யும் வரைக்கும் எதுவுமே பேசமாட்டார்கள். செய்து முடித்த பிறகுதான் இப்படியெல்லாம் கேட்கத் தொடங்குவார்கள். ‘நீங்க என்னதான் செஞ்சாலும் டீம் செலக்ஷன்ல இருக்கும் அரசியலைத் தாண்டி அவர்களால் எதுவுமே செய்ய முடியாது’ என்று கூடச் சொல்கிறார்கள். எங்களுக்கும் அந்த பயம் இருக்கிறது. ஆனால் தயங்கிக் கொண்டேயிருந்தால் எதைத்தான் செய்ய முடியும்? ‘ஒன்றுமேயில்லாவிட்டாலும் பத்துப் பெண்களைப் பட்டம் வாங்க வைக்கிறோம் என்ற திருப்தியாவது கிடைக்குமல்லவா? அது போதும்’இப்படித்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஆனால் ஒன்று - இப்பொழுதெல்லாம் எதுவும் பேசக் கூடாது. ‘புதுசுக்கு வண்ணான் கடுசுக்கு வெளுத்தான்’ என்றொரு பழமொழி உண்டு. ஆரம்பத்தில் ஜோராகத் தொடங்கும். போகப் போகச் சுணங்கிவிடும். எவ்வளவு பார்த்துவிட்டோம்! தொடக்க நிகழ்ச்சியை ஆஹா ஓஹோவென்றெல்லாம் பேச வேண்டியதில்லை. சிறப்பாகத் தொடங்கியிருக்கிறோம். அவ்வளவுதான்.
அசாதாரணமான வெற்றி ஒன்றை அவர்கள் அடையட்டும். அதன் பிறகு விரிவாக எழுதுகிறேன். அவர்கள் அப்படியொரு வெற்றியை அடைவார்கள் என்ற முழுமையான நம்பிக்கை இருக்கிறது. அதுவரையிலும் சத்தமில்லாமல் பின் தொடர்வோம்.
(காணொளியைக் காண ப்ரவுசரில் பதிவை வாசிக்கவும்)
9 எதிர் சப்தங்கள்:
வாழ்த்துகள் மணி மற்றும் நண்பர்களுக்கு.
மத்தவங்க சொல்ற ஆப்ஷன் எல்லாத்தையும் பேர் எழுதி குறிச்சி வச்சுக்குங்க. அடுத்த செட் ரெடியானா, இவங்கள புடிச்சு ஹெல்ப் பண்ண சொல்லலாம்!!!
வாழ்த்துக்கள்.
//வாய்ப்பிருப்பவர்கள் கேட்டுவிட்டு எப்படி பேசியிருக்கிறேன் என்று சொல்லவும்.//
மனச போல குரலும் பிஞ்சு தான்
வாழ்த்துக்கள்.Mani sir..
அத்தகைய முழுமையாக நம்பலாம்.
அத்தகையதை முழுமையாக நம்பலாம்.
Politics and lobbying is there everywhere, particularly in sports and awards. Recently read one story called "yaanai doctor" by jayamohan. Available in net. This article reminded me that story.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மணி சார்!
"சொல்லுதல் யார்க்கும் எளிய..."ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கணும்!!
========
தற்செயலா உங்க பழைய பதிவை படிக்க நர்த்தது...எவ்ளோ தப்பா எழுதி இருக்கீங்க!....உங்களைப் பற்றி நீங்களே!!!
http://www.nisaptham.com/2013/04/blog-post_2.html
அருமை அண்ணா...
நற்பணி...
அருமையான பேச்சு...
நலமுடன் தொடருங்கள்...
Post a Comment