May 25, 2019

மெளனம்

கடந்த சில மாதங்களாக எனக்கு மிகப்பிடித்தமான வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். தமிழகத்தின் அத்துணை ஊர்களுக்கும் சென்று வந்துவிட்டேன். தேர்தல் சம்பந்தமான டேட்டா சேகரிப்பு, அதனை அலசுவது என்பதுதான் கடந்த இரண்டு மூன்று மாதங்களாகச் செய்து கொண்டிருந்த வேலை. Data Analysis. என்ன மாதிரியான தகவல்களைச் சேகரித்தேன், எப்படிச் சேகரித்தேன் என்றெல்லாம் விலாவாரியாகச் சொல்வதற்கு எனக்கு அனுமதியில்லை. தேர்தலுக்கு முன்பாக அரசியல் குறித்து எழுதினால் எங்கே நம்மையுமறியாமல் சிலவற்றை உளறிவிடுவேனோ என்ற பயமும் ஒட்டிக் கொண்டேயிருந்தது. 

Psephology என்றொரு துறை இருக்கிறது. அரசியலை அறிவியல் ரீதியாக அலசுவது. அதில் முதல் அடியை எடுத்து வைத்த சந்தோஷம் எனக்கு. நிறையக் குளறுபடிகளையும் செய்தேன். உதாரணமாக சூலூரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு ஒன்றைச் செய்ய வேண்டியிருந்தது. சுமார் அறுநூறு வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு அது. இருநூற்றி முப்பத்தொன்பது பேர் திமுகவுக்கு வாக்களித்ததாகச் சொன்னார்கள். நூற்று தொண்ணூற்றைந்து பேர் அதிமுகவுக்கு. தினகரனுக்கு அறுபது. மநீம, நாதக அதற்கடுத்து என்ற எண்ணிக்கையில் இருந்தது. இதனடிப்படையில் திமுகதான் வெற்றி பெறும் எனச் சொல்லியிருந்தேன். என்ன காரணம் என்று இப்பொழுது மண்டை காய்ந்து கொண்டிருக்கிறேன். மொத்தமாக எந்நூற்றைம்பது பேர்களிடம் பேசியதில் அறுநூறு பேர் கருத்துச் சொன்னார்கள். மீதமிருக்கும் இருநூற்றைம்பது பேர் பதில் எதுவும் சொல்லவில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் அதிமுகவுக்கு வாக்களித்திருக்க வேண்டும். இப்படி கருத்துச் சொல்லாதவர்களையும் கணக்கில் எடுத்து அதை புள்ளியலில் skew என்று சொல்வார்கள். அவர்களை முழுமையாகக் கணிக்க முடியாததுதான் தவறாகிப் போனது. 

மத்தியில் பாஜக ஆட்சியமைத்துவிடும் என்று கணித்தவர்கள் என்ன நுணுக்கத்தைப் பயன்படுத்தினார்கள் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். சரியாக அடித்திருக்கிறார்கள்.

கருத்துக்கணிப்பில் பங்கேற்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் Sampling method ஐக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது அவற்றை எப்படி அலசுகிறோம் என்பதுதான். அதில்தான் சூட்சமமே இருக்கிறது. அலசுவதற்காக நிறைய புள்ளியியல் சூத்திரங்கள் இருக்கின்றன. அதே சமயம் உள்ளூர் சூழல், சாதி அரசியல், பணம் உள்ளிட்ட காரணிகளையும் கணக்கில் எடுத்து அவற்றுக்கேற்ற ‘வெயிட்டேஜ்’களையும் கொடுக்க வேண்டும். இதில்தான் எங்கேயோ கோட்டைவிட்டுவிட்டேன். ஆனால் மிகச் சிறந்த கற்றல் அனுபவம் இது. ஆண்டவன் புண்ணியத்தில் அடுத்தடுத்த தேர்தல்களிலும் இதே மாதிரியான வாய்ப்பு கிடைத்தால் ஒழுங்காகக் கற்றுக் கொள்ளலாம். நன்றாக ஊரும் சுற்றிக் கொள்ளலாம். 

நகர்ப்புறங்களில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை வாங்குகிறது என்பதைத் தேர்தல் தினம் வரைக்கும் கணிக்க முடியவில்லை. தேர்தலன்று கோயமுத்தூரில் விசாரித்த போது கணிசமானோர் ‘டார்ச் லைட்’ என்றார்கள். எவ்வளவு சதவீதம் வரும் என்று குழப்பமாக இருந்தது. அதே போலத்தான் கோவை, தென்சென்னை போன்ற தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை வாங்கியிருக்கிறார்கள். கிராமப்புற இளைஞர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவைச் சொன்னார்கள். பரவலாக பெரும்பாலான தொகுதிகளில் சீராக வாக்கு வாங்கியிருக்கிறார்கள்.

தினகரன் factor என்ற சொல்லைத் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருந்தார்கள். தேர்தலில் அமமுகவும் கணிசமாகச் செலவு செய்தார்கள். பல தொகுதிகளிலும் ஒரே மாதிரியான பட்டுவாடா. ஆனால் எல்லோருக்கும் பணம் இல்லை. உதாரணமாக ஒரு பூத்தில் ஆயிரம் வாக்குகள் இருந்தால் நூறு அல்லது நூற்றைம்பது வாக்காளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டும் நல்ல கவனிப்பு. ஆனால் தொகுதி முழுக்கவும் ‘தினகரனும் பணம் கொடுக்கிறாரு’ என்றொரு பிம்பத்தை தெளிவாகக் கட்டமைத்தார்கள். ஆனால் அவை வாக்குகளாக மாறவில்லை. பெரும்பாலான ஊர்களில் ‘தினகரன் ஜெயிச்சுடுவாரு’ என்று சொன்னாலும் ‘நீங்க ஓட்டுப் போடுவீங்களா?’ என்றால் ‘மாட்டேன்’ என்று சொன்னார்கள். ‘அப்புறம் எப்படி ஜெயிப்பாரு?’ என்று கேட்டால் ‘நல்லா செலவு செய்யறாங்க’ என்பார்கள். ‘நீங்க ஏன் போட மாட்டீங்க?’ என்று கேட்டால் ‘அவரும் அவரைச் சார்ந்தவர்களும் தெனாவெட்டாகப் பேசுகிறார்கள்’ என்பதை நாசூக்காகச் சொல்லிவிடுவார்கள். சமூக ஊடகம் தினகரனை எப்படி ‘தைரியமான ஆளு’ என்று உருவகப்படுத்தியதோ அதுவே அவருக்கு எதிரானதாக மாறிக் கொண்டிருப்பதாக உணர முடிந்தது. தங்கத் தமிழ்செல்வன், வெற்றிவேல் போன்றவர்கள் அதற்கு எண்ணெய்யை ஊற்றிவிட்டார்கள். அதிமுகவினர் தினகரன் குறித்து பயமில்லாதவர்கள் போலத்தான் இருந்தார்கள். ‘போட்டி எங்களுக்கும் திமுகவுக்கும்தான்’ என்றுதான் பல இடங்களிலும் சொன்னார்கள்- ராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை உட்பட.

தேர்தலில் அதிக செலவு என்றால் அதிமுகவினர்தான். எந்த ஊரில் பார்த்தாலும் அவர்கள் கூட்டம்தான் அதிகமாக இருந்தது. பணம் மட்டுமே தேர்தல் முடிவுகளை முடிவு செய்வதாக இருந்திருந்தால் அதிமுகதான் வென்றிருக்கும். பணவிஷயத்தில்  திமுகவினர் அதிமுகவினர் அளவுக்குப் போட்டி போட முடியவில்லை என்றாலும் பரவலாகவே திமுகவினர் வெறித்தனமாகப் பணியாற்றினார்கள். ‘அதிமுக பணத்துல அடிக்கிறாங்க’ என்ற பயம் அவர்களைப் பதறச் செய்தது.  ‘இந்த எலெக்‌ஷன்ல தோத்துட்டா அவ்வளவுதான்’ என்று பரவலாகச் சொல்வதை உணர முடிந்தது. இவையெல்லாம் அவர்களை வேகம் எடுத்திருக்கச் செய்திருக்க வேண்டும். ஏற்கனவே அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத ஒரு அலை இருக்க அவர்களது வேகம் திமுகவுக்குப் பெரும்பலனைக் கொடுத்திருக்கிறது. தேர்தல் தினத்தன்று திமுகவினர் பேச்சுக் கொடுத்த போது ‘காசு மட்டும் பிரதானமில்லைன்னா ஜெயிச்சுடுவோம்’ என்றார். தினகரன் வாக்குகளைப் பிரிப்பதைத்தான் காரணமாகச் சொன்னார்களே தவிர மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் சொல்லவில்லை. 

பிரச்சாரத்தைப் பொறுத்தவரைக்கும் ஸ்டாலினும் தினகரனும் சிறப்பாகச் செய்தார்கள். ஆனால் ஸ்டாலின் ஒரு படி மேலே போய் காலை நடைபயணத்தில், பேருந்தில், மார்க்கெட்டில் மக்களைச் சந்திப்பது போன்றவை நல்ல அளவில் தாக்கத்தை உருவாக்கிக் கொடுத்தது. 

திருப்பூரில் அதிமுக வென்றுவிடும் என நினைத்திருந்தேன். அங்கே பெரிய அளவில் தகவல்களைத் திரட்டவில்லை என்றாலும் கம்யூனிஸ்ட் தோற்றுவிடக் கூடும் என்றுதான் தோன்றியது. ஆனால் வேட்பாளர் சுப்பராயன் ‘அலை இருக்கு’ என்று எனது நெருங்கிய நண்பர்களிடம் சொன்னாராம். அது சரிதான். தேர்தல் நெருங்க நெருங்க மெளனமான அலையை தமிழகம் முழுக்கவும் உணர முடிந்தது. ஆனால் வாக்கு வித்தியாசம் இவ்வளவு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

பெரம்பலூரில் ‘பாரி வேந்தர் வென்றுவிடுவார்’ என்பது தேர்தலுக்கு வெகு நாட்கள் முன்பாகவே தெரிந்தது. அப்பொழுது ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசம் என்று கணித்திருந்தோம். எதிர்த்து நின்ற சிவபதி ‘நான் ஜெயிச்சுடுவேன்’ என்றார். அவரிடமும் பேசினேன். அவர் இன்னமும் மக்களின் பல்ஸைத் தெரிந்து கொள்ளவில்லை என்று தெரிந்தது. கடைசியில் வித்தியாசம் எவ்வளவு என்று நமக்கே தெரியுமல்லவா? ஈரோடு, பெரம்பலூர், தூத்துக்குடி, நீலகிரி மாதிரியான தொகுதிகளில் முடிவு தெளிவாகத் தெரிந்தது. சேலம், தர்மபுரி, கோவை மாதிரியான தொகுதிகள் மண்டை காய வைத்தன. 

தமிழகம் முழுக்கவும் காரில்தான் சுற்றினேன். ஓட்டுநரையும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள். எளிய கிராமத்து மக்களிடம்தான் விசாரிப்பேன். வழி கேட்பது போல பேச்சுக் கொடுத்து தகவல்களைக் கேட்டுவிட்டு வந்து காரில் அமர்ந்த பிறகுதான் நோட் எடுத்துக் குறிப்பேன். பரவலாகவே ‘ஒரு மாற்றம் வரும்’ என்றார்கள். அதுதான் இந்த ரிசல்ட். தேர்தல் என்பதே பரவலான கருத்துகளின் தொகுப்புதானே? ஆனால் குழப்பம் மிகுந்த தேர்தலாகவே இருந்தது. 

பணம் முடிவைத் தீர்மானிக்குமா? தினகரன் எவ்வளவு வாக்கைப் பிரிப்பார்? போன்ற பல காரணிகள் அத்தனை கட்சிக்காரர்களையும் குழப்பியிருந்தது. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி, எப்பொழுதுமே நம்மை ஆச்சரியப்படுத்துவது போல மக்கள் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறார்கள். அம்பாசமுத்திரத்தில் நினைப்பதைத்தான் முக்காணியிலும் நினைக்கிறார்கள் வெள்ளகோவிலிலும் நினைக்கிறார்கள். அதில் இருக்கும் மாஸ் சைக்காலஜிதான் வியப்பூட்டக் கூடிய அம்சம்.

12 எதிர் சப்தங்கள்:

நந்தா said...

டேட்டா வாங்குபவர்கள் வேறு டிபார்ட்மெண்ட், அதை அனலைஸ் பண்றவங்க வேறு டிபார்ட்மெண்ட். அதுக்கு நடுவில் பல வேலைகள் இருக்கு. Cleansing, aggregation, data selection, etc..That’s the reason data science is the 2nd highest paid job in US now. You are on a right track though.

Anonymous said...

அது எப்படி சமூகசேவை செய்து எளியமக்களுக்கு நன்மை செய்யும் நீங்கள் ரவுடித்தனமும் கூட்டுக்கொள்ளையும் அடிக்கும் அரசியல் கட்சியின் அபிமானியாக இருக்கிறீர்கள். சூலூரில் திமுகவும் வோட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்தார்களே. அது சகஜமான விஷயமாக எடுத்துக்கொள்கிறீர்களா. இவர்களெல்லாம் ஜெயித்த பிறகு செலவு செய்த காசை பல மடங்காக எடுக்கும் வியாபாரிகள் தானே. பிறகு எப்படி திமுக மீதும் ஸ்டாலின் மீதும் உங்களுக்கு அபிமானம் ஏற்படுகிறது.

சேக்காளி said...

கடைசி வரை பரபரப்பா இருந்த அந்த தொகுதி பத்தியும் சொல்லியிருக்கலாம்

Selvaraj said...

http://www.nisaptham.com/2017/10/blog-post_29.html
29.10.2019

கேள்வி: 2019 பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாகிஸ்தானுடன் போர் வர வாய்ப்பிருக்கிறதா?

பதில்: போர் வந்தால் மக்கள் வாக்களித்துவிடுவார்கள் என்று நம்புகிறீர்களா?

K said...

ரிசர்ச் மெத்தடாலஜி+சைக்காலஜி. அப்படியே ஸ்டாடிஸ்டிக்ல நாலு டூல் துாவி விட்டு பிஜேபி சிறப்பா பண்ணியிருக்காங்க. CFA இல்லைன்னா Structural Equation Model ட்ரை பண்ணி பாருங்க. சாம்பிளிங் ரிலையபிலிட்டி + வேலிடிட்டி பொறுத்து ஏறக்குறைய சரியாவே கணிக்கலாம்

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

26.05.2019 நாள் வாசகர் கடிதம்: What matters most in exit polls is identification of the right samples and coverage of voters from various walks of life.அனுபவமே ஆழ்ந்த அறிவை தரும். வாழ்க வளமுடன்

Saravanan Sekar said...

தமிழகத்தின் அத்துணை ஊர்களுக்கும் சென்று வந்துவிட்டேன். தேர்தல் சம்பந்தமான டேட்டா சேகரிப்பு, அதனை அலசுவது என்பதுதான் கடந்த இரண்டு மூன்று மாதங்களாகச் செய்து கொண்டிருந்த வேலை.// - நேரடி அரசியலில் ஈடுபடுவதற்கான அடுத்த கட்ட பணிகள் இனிதே ஆரம்பம் போல் தெரிகிறது.

"அப்பாடா, இனி நம் பதவிக்கு ஆபத்தில்லை" என டொனால்ட் டிரம்ப் கூறுவது போல் நேற்று கனவு கண்டேன். அது நினைவாகிடும் போலவே... தமிழக அரசியல்வாதிகளே உஷாரய்யா உஷார்... வா.ம பராக், பராக்...

அன்புடன்,
சே.ச
(கோ. ப.சே)

சேக்காளி said...

//அன்புடன்,
சே.ச
(கோ. ப.சே)//
இதெல்லாம் நல்லதுக்கு இல்லை.
அந்த எரநூறு ஓவா வை தந்து பஞ்சாயத்து ல வழக்கை முடிச்சிட்டு அப்புறமா யாரை ன்னாலும் கொ ப செ வா நியமிக்கவும்.
கொபசெ
வாம பாறைகள்.

Saravanan Sekar said...

சேக்காளி அவர்களே, கவனியுங்கள் .. நான் கோ.ப.சே தான் (கோல்மால் பண்ணி பணம் சேர்ப்பவர்)- அதாவது பொருளாளர் ஐயா ... கொ.ப.செ பதவி உங்களுக்கு தான் (நான் பொருளாளராக இருக்க உங்கள் ஆதரவு இருக்கும் வரை)...
-சே ச

அன்பே சிவம் said...

அன்பா பகிர்ந்த என்னோட ஒரு ஜாலி கமண்டையே காணோம். இதுல 200 ஓவா பஞ்சாயத்து வேறையா. வெளங்கிறும்.

சேக்காளி said...

Saravanan Sekar said...
//சேக்காளி அவர்களே, கவனியுங்கள் .. நான் கோ.ப.சே தான் (கோல்மால் பண்ணி பணம் சேர்ப்பவர்)- அதாவது பொருளாளர் ஐயா ... கொ.ப.செ பதவி உங்களுக்கு தான் (நான் பொருளாளராக இருக்க உங்கள் ஆதரவு இருக்கும் வரை)...
-சே ச //
கச்சியின் எதிர்கால நலன் கருதி மிக சாதுர்யமாகவும், சமயோசிதமாகவும் செயல்பட்டு பிளவு படாமல் கச்சியை காத்த சேச வின் பணி சிறக்க ஆதரவு தொடரும்.
கொபசெ
வாம பாறைகள்

சேக்காளி said...

//அன்பே சிவம் said...
அன்பா பகிர்ந்த என்னோட ஒரு ஜாலி கமண்டையே காணோம். இதுல 200 ஓவா பஞ்சாயத்து வேறையா. வெளங்கிறும்.//
தனி பெரும்பான்மை ல ஆச்சி அமைச்சிருக்கோம். கமெண்ட் வெளியிடுறதும் வெளியிடாமல் இருக்குறதும் எங்க விருப்பம்.