ஆதிச்ச நல்லூருக்குச் சென்றிருந்தேன். முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்ட இடம் அது. ஸ்ரீவைகுண்டத்திலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் நான்கைந்து கிலோமீட்டர் தொலைவில் ஆதிச்ச நல்லூர் இருக்கிறது. தாமிரபரணியை ஒட்டிய ஊர். அந்த ஊரின் சுடுகாட்டு மேட்டில்தான் இன்றைக்கு தொல்லியல் துறை யார் வேண்டுமானாலும் நுழையக் கூடிய வகையில் பெயருக்கு ஒரு தடுப்பை அமைத்து வைத்திருக்கிறார்கள். அருகிலேயே ஒரு துருப்பிடித்த அறிவிப்புப் பலகை.நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வரலாறு நைந்து கிடக்கிறது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான தமிழக வரலாற்றின் எச்சம் இந்த ஊர். பழங்காலத்தில் ஆற்றங்கரையை ஒட்டிய ஊர்களில்தான் மக்கள் கூட்டமாக வசிக்கத் தொடங்கினார்கள்; அங்குதான் நாகரிகமும் வளர்ந்தது; வேளாண்மைத் தொழிலைச் செய்தார்கள் என்றெல்லாம் ஏழாம் வகுப்பு வரலாற்றுப் புத்தகங்களில் நாம் படித்த தகவல்களுக்கு சாட்சியம்தான் ஆதிச்ச நல்லூர். தாமிரபரணிக் கரை அதை ஒட்டிய ஊர். அங்கு கடல் சார்ந்த வணிகமும் நிகழ்ந்ததாம். அந்த நல்லூர் மக்கள் தங்களின் சுடுகாட்டு நிலத்தில் மரணித்தவர்களைப் புதைத்து, காவலுக்கு சுடலைமாடசாமியின் கோவிலைக் கட்டியிருக்கிறார்கள். அந்தக் கோவிலைச் சுற்றித்தான் தாழிகள் கிடைத்திருக்கின்றன.
ஆதிச்சநல்லூரில் 1800களின் இறுதி ஆண்டுகளிலேயே வெளிநாட்டினர் தோண்டி தாழிகளை எடுத்துவிட்டார்கள். அப்பொழுதே இரும்பு ஆயுதங்கள் கூட கிடைத்தன எனச் செய்தியுண்டு. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இரும்பு ஆயுதங்கள் எப்படி தமிழர்களுக்கு கிடைத்தது என்று சிலர் ஒரு பக்கம் புளகாங்கிதம் அடைந்தாலும் உள்ளூரில் சில பெரியவர்களிடம் விசாரித்த போது சமீபகாலம் வரைக்கும் அந்தப் பகுதி அந்த ஊர் மக்களுக்கான சுடுகாடாக இருந்திருக்கிறது. நான்காயிரம் ஆண்டுகளாக மனிதர்களை புதைத்து வரக் கூடிய இடம் அது. இரும்பு ஆயுதங்களை இடைப்பட்ட காலத்தில் கூட அங்கு புதைத்திருக்கலாம். எல்லாவற்றையும் முழுமையாக ஆராய்ந்தால் நிறைய வரலாற்றுத் தரவுகள் கிடைக்கக் கூடும்.
நூறாண்டுகளுக்குப் பிறகு இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொல்லியல்துறை போனால் போகட்டும் என்று 2004 ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சியைச் செய்து சுமார் நூற்றியெழுபது களிமண் தாழிகளைத் தோண்டியெடுத்திருக்கிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அந்தப் பகுதி முழுவதும் தோண்டவில்லை. சுடலைமாடசாமி கோவிலின் அருகில் மட்டும் தோண்டியிருக்கிறார்கள். 2004 ஆண்டில் தோண்டிய இடத்தையும் மூடிவிட்டார்கள். இப்பொழுது வெறும் மேட்டு நிலம்தான்.
ஸ்ரீவைகுண்டம் - திருநெல்வேலி சாலையின் ஒரு பக்கம் இந்த மேட்டு நிலம் என்றால் சாலையைக் கடந்தால் பாண்டியராஜா கோவில் இருக்கிறது. பழைய கோவில் அது. உள்ளூரில் அதைப் பஞ்சபாண்டவர் கோவில் என்கிறார்கள். அதை வைத்துத்தான் மகாபாரதப் போர் நடந்தது என்று நம்மூர் அரசியல்வாதிகள் எதையோ கிளறிக் கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் நம்ப வேண்டியதில்லை. மதுரைக்கு முன்பாக முற்கால பாண்டியர்களின் தலைநகராக ஆதிச்சநல்லூர் விளங்கியது என்றொரு தியரி உண்டு. அதனடிப்படையில் பார்த்தால் அங்கு பாண்டிய மன்னர்களைப் புதைத்திருக்கக் கூடும். அந்தச் சமாதியே கூட இன்றைக்கு பாண்டியராஜா கோவிலாக மாறியிருக்கக் கூடும்.
நாமாகப் பேசினால் ஒவ்வொரு வரியும் ‘கூடும்’ ‘கூடும்’ என்றுதான் முடியும். தொல்லியல்துறைதான் இவற்றையெல்லாம் வெளிக் கொணர வேண்டும். அவர்கள் எங்கே செய்கிறார்கள்? 2004 ஆம் ஆண்டில் தோண்டியெடுக்கப்பட்ட தாழிகளுக்கான ஆராய்ச்சி அறிக்கை இப்பொழுதுதான் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு அனுப்பி ‘கார்பன் டேட்டிங்’ முறையில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளைக் கடந்த மாதம்தான் மதுரை உயர்நீதிமன்றத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். பொ.மு.905- பொ.மு 696 ஆண்டுகளுக்கு இடைப்பட்டவை என்று அந்த அறிக்கை சொல்கிறது.
தாழியில் இருக்கும் எழுத்துக்கள் குறித்து ஆளுக்கொரு வாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். கோட்டைச் சுவர் இருப்பதாகவெல்லாம் சொல்கிறார்கள். முழுமையாக அகழ்வாய்வு செய்து காட்சிப்படுத்தினால் அர்த்தமிருக்கிறது. இப்படியொரு வாய்ப்புக் கிடைத்தால் வெளிநாட்டினர் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து எடுத்துவிடுவார்கள். ஆனால் நம்மவர்களுக்கு இதெல்லாம் பெரிய பொருட்டே இல்லை அல்லது உள்ளரசியலும் கூட இருக்கலாம்.
ஒரு சமயம் இந்துத்துவாக்காரர் ஒருவர் ‘புதைப்பது கிறித்துவ வழமை. எரிப்பதுதான் இந்துக்களின் பண்பாடு’ என்று எழுதியிருந்தார். இறந்தவர்களைப் புதைப்பதுதான் தமிழர்களின் வழக்கமாக இருந்திருக்கிறது என்பதற்கு ஆதிச்சநல்லூர் உதாரணம். ஒருவேளை இத்தகைய பண்பாட்டுக் காரணங்கள் கூடவும் இந்திய அரசின் மெத்தனத்துக்குக் காரணமாக இருக்கலாம். பல லட்சங்கள் செலவு செய்து ‘முதுமக்கள் தாழி வரலாற்றுத் தகவல் மையம்’ என்று கட்டி வைத்திருக்கிறார்கள். பூட்டுப் போட்டு பூச்சிக்கூடு நிறைந்து கிடக்கிறது. உள்ளே எதுவுமில்லை. ஆற்றங்கரையோரம் ஆசுவாசமாக அமர்ந்து குடிக்கிறவர்களுக்கான நல்ல இடம் அது.
‘ஆதிச்சநல்லூர் போக வேண்டும்’ என்று திருநெல்வேலியைச் சார்ந்த ஒரு கிராமநிர்வாக அலுவரைப் பேருந்தில் சந்தித்த போது சொன்னேன். ‘நான் அங்க வி.ஏ.ஓவா இருந்தேன்...பார்க்கிறதுக்கு ஒண்ணுமில்ல..வெறும் காடுதான்’ என்றார். ஆயாசமாக இருந்தது. உள்ளுக்குள் எவ்வளவோ புதைந்து கிடந்தாலும் தலையையாவது நீட்டிப் பார்த்து ‘நான் புதைந்து கிடக்கிறேன்’ என்று வரலாறு சொல்கிறது. ‘ரெண்டு கோவில் இருக்குன்னு சொன்னாங்க’ என்றேன். ‘அப்படியா? எனக்குத் தெரியாதே’ என்றார். அங்கேயிருக்கும் பாண்டியராஜா கோவில், சுடலைமாடசாமி கோவிலையாவது அந்த அதிகாரி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என எதிர்பார்த்தேன். ம்ஹூம். இப்படித்தானே மொத்த அரசாங்கமும் இருக்கிறது? வரலாறாவது; புண்ணாக்காவது.
5 எதிர் சப்தங்கள்:
Sir, what is பொ.மு.
// இறந்தவர்களைப் புதைப்பதுதான் தமிழர்களின் வழக்கமாக இருந்திருக்கிறது என்பதற்கு ஆதிச்சநல்லூர் உதாரணம்.//
எங்க சாதி ல ல்லாம் புதைக்க தான் செய்வோம்
எங்க இனத்துல ல்லாம் புதைக்க தான் செய்வோம்
எங்க மதத்துல ல்லாம் புதைக்க தான் செய்வோம்.
எங்க நாட்டுல ல்லாம் புதைக்க தான் செய்வோம்.
// அல்லது உள்ளரசியலும் கூட இருக்கலாம்.//
பேரூந்து நிறுத்த பெயரிலும்,கோயில் பெயர் பலகையிலும் உள்ளதை உற்று கவனித்த பின்னர்
"இருக்காதா பின்ன"
Blaming the government and others.. What's the benefit.. Negatively only.. Let's do something positive..
படிக்க படிக்க ஆசுவாசமாக இருக்கிறது.
இன்னும் எத்தனை எத்தனை வரலாறு புதையுண்டே போகப்போகிறதோ...
Post a Comment