Apr 8, 2019

சாமி

‘ஆன்மிகவாதின்னு சொல்லிக்கிறவன் பூரா ஏமாற்றுக்காரன்தான்’ என்கிற ரீதியில் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. யாரையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு எழுதியிருந்தார் என்று தெரியவில்லை. நிறைய நண்பர்கள் இப்படிச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை.  நிறையப்பேரைச் சுட்டிக்காட்ட முடியும். அடுத்தவர்களை ஏய்த்துப் பிழைக்காமல் எதையோ தேடியலையும் ஆன்மிகவாதிகள். கள்ளக்குறிச்சியில் ஒரு சாமியார் இருந்தார். அவர் பெயர் தெரியாது. கரப்பாத்திர சாமிகள் என்பார்கள். கரங்களையே பாத்திரமாகப் பயன்படுத்தி நான்கு வீடுகளில் இரந்து அதை உண்டு வாழ்ந்தவர். வசதியில்லாமல் இல்லை. பல ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக் காரர். அந்த நிலத்தின் விளைச்சலில் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு இவர் கடைசி வரைக்கும் இப்படித்தான் வாழ்ந்து வந்தார். ஒரு நாளைக்கு நான்கு வீடுகள்தான். அன்றைய தினம் எதுவுமே கிடைக்கவில்லையென்றாலும் ஐந்தாவது வீட்டில் கை ஏந்தாத சாமியார் அவர்.

அவர் சமாதி இருக்கும் இடத்திலேயே ஒரு சிவலிங்கத்தை வைத்து பணம் வசூலித்து ஒரு கோவிலைக் கட்டியிருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி பைபாஸில் சாமியார் மடம் என்ற இடத்தில் இருக்கிறது அந்தக் கோவில். நந்தவனம், தென்னந்தோப்பு என்றெல்லாம் இருந்தது. இப்பொழுது சாலைப்பணிக்காக அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டார்கள். கோவில் இருக்கிறது. வெகு அமைதியாக இருக்கும். வாய்ப்பிருப்பவர்கள் போய்ப் பார்க்கலாம். அந்தச் சாமியாரை எப்படி ஏமாற்றுக்காரன் என்று சொல்ல முடியும்? தம் பாட்டுக்கு தம் வாழ்க்கையை வாழ்ந்த ஆன்மிகவாதி அவர். ஒடுக்கத்தூர் சாமிகள் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். இவர்களை எல்லாம் பைத்தியங்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சம்பளம், குடும்பம், வருமானம், சொகுசு என யதார்த்த உலகம் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் இருந்து பார்த்தால் இவர்களை எல்லாம் பிழைக்கத் தெரியாதவர்கள்; பைத்தியங்கள் என்றுதான் சொல்லத் தோன்றும். ஆனால் அது அவர்களின் Personal Choice.

கார்போரேட் சாமியார்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களை வேண்டுமானால் ஏமாற்றுக்காரர்கள் என்று தயக்கமேயில்லாமல் சொல்லலாம்.

இந்த உலகத்தில் எதுவுமே சரியில்லை என்பதைத் திரும்பத் திரும்ப போதிக்கிறவர்கள் கார்போரேட் சாமியார்கள்தான்.  கார்போரேட் சாமியார்களைப் பின் தொடர்கிறவர்கள் தம்மை உயர்ந்த பீடத்தில் வைத்துக் கொள்கிறார்கள். ‘ஆமாப்பா...இங்க எதுவுமே சரியில்லை’ என்று தாம் மட்டுமே யோக்கியம் என்று நம்பத் தொடங்குகிறார்கள். இதுதான் மிகப்பெரிய அபாயகரமான மனநிலை. அத்தகைய மனிதர்களிடம் பேசிப் பாருங்கள். தம்மையுமறியாமல் எதிராளியைக் குற்றவுணர்வு கொள்ளச் செய்யும்படி மட்டுமே பேசிக் கொண்டிருப்பார்கள்.  ‘இந்தப் பாவப்பட்ட உலகின் அத்தனை கீழ்மைத் தனங்களிலும் உனக்கும் பங்கு இருக்கிறது’ என்பதை நமக்கு உணர்த்துவதும், சாமிகள் கற்றுத் தந்திருக்கும் வித்தைகளும், தியானங்களுமே அவற்றிலிருந்தெல்லாம் விடுதலையத் தருகின்றன என்பதுதான் அந்த மனிதர்களின் ஒரே நம்பிக்கை. தம்மைப் பின் தொடர்கிற ஒவ்வொரு மனிதனையும் போலியான பீடத்தில் அமரச் செய்து கற்பிதங்களை உருவாக்கி, ருத்திராட்சக் கொட்டையிலிருந்து, தியான வகுப்பு, நிழற்படங்கள் என எல்லாவற்றையும் வணிகமாக்கி அறுவடை செய்கிற ஆன்மிகவாதிகள்தான் ஏமாற்றுக்காரர்கள்.

எல்லோரையும் ஒரே தட்டில் நிறுத்திவிடுகிறோம். அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், தொழிலதிபர்கள் என்று ஒரு வட்டத்துக்குள் அடைத்து ‘நடிகைன்னா இப்படித்தான்’ என்று நாமாக ஒரு கேரக்டரை வடிவமைத்துக் கொள்வது போலவே சாமியார்களையும் ஒரு வட்டத்துக்குள் அடைத்து ‘சாமியார்ன்னா இப்படித்தான்’ என்று ஒரு முத்திரை குத்திவிடுகிறோம். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு அனுபவம் இருப்பது போலவே காவி தரித்துப் பரதேசியாகச் சுற்றும் மனிதர்களுக்கும் அனுபவமிருக்கிறது. கடவுளைத் தேடுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்மைப் போலவேதான். நம்மில் எத்தனை பேருக்கும் நம் தேடல் குறித்து துல்லியத்தன்மை இருக்கிறது?  ‘இதுதான் என் இலக்கு’ என்று எத்தனை பேரால் சொல்லிக் கொள்ள முடியும்? அவர்களும் அப்படித்தான். ‘பெரிய ஆள் ஆகிவிட வேண்டும்’ என நாம் சொல்வது போலவே ‘சிவனைத் தேடுகிறேன்’ என்பார்கள். ‘பெரிய ஆள்ன்னா என்ன’ என்று கேட்டால் எப்படி நம்மால் வரையறுக்க முடியாதோ அப்படித்தான் சாமியார்களிடம்  ‘எது சிவன்’ என்று கேட்டால் பலருக்கும் சொல்லத் தெரியாது. சினிமாவைப் போல ஒரு நாள் திடீரென்று இடி இடித்து சிவன் தோன்றிவிடுவான் என்று நம்புகிறார்களோ என்று கூடத் தோன்றும். 

மனிதர்கள் எல்லோருக்குமே ஏதாவொரு தேடல் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கும் அது துல்லியத்தன்மையில்லாத தேடல். ‘அடுத்த அஞ்சு வருசத்துல ஆகணும்?’ என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. ஆனால் கடிவாளமிட்ட குதிரையைப் போல விடிந்தால் பையைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறோம். மாதத் தொடக்கத்தில் நாம் எதிர்பார்த்த வருமானம் வந்துவிட்டால் போதும் என்பதைத் தவிர எந்த இலக்கும் இல்லாத அந்த ஓட்டத்தில் எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு ஓடுகிறோம். சாமியார்கள் ‘அய்யோ..இதெல்லாம் சுமை’ என்று கருதி அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு நம்மைப் போலவே குருட்டாம்போக்கில் வேறு எதையோ ஓடுகிறார்கள்.

பரதேசிக் கோலம் தரித்திருக்கும் யாராக இருந்தாலும் நான்கைந்து கேள்விகளாவது பேசுகிற வழக்கம் எனக்கு. சாமியார்கள்தான் என்றில்லை. தனித்து அலையும் எந்த மனிதராக இருந்தாலும் எதையாவது பேசத் தோன்றும். விதவிதமான மனிதர்கள் தரக்கூடிய அனுபவமே நம் வாழ்வில் நாம் தேடிச் சேர்க்கக் கூடிய மிகப்பெரிய சொத்து என்பதை உறுதியாக நம்பலாம். எல்லோரையும் போலவே கூட்டமாக ஓடிக் கொண்டிருக்கிற மனிதர்களிடமில்லாத சுவாரசியம் தனித்து அலையும் மனிதர்களிடம் இருக்கிறது. கார்போரேட் சாமியார்களின் அடிமைகளைப் போல அவர்கள் என்னைக் குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்வதில்லை. கோவில்களில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் அந்த மனிதர்கள் யாரும் தம்மை பீடத்தில் வைத்துக் கொண்டு ‘உன்னால்தான் உலகமே அழிந்து கொண்டிருக்கிறது’ என்னைப் பார்த்துச் சொல்வதில்லை. உய்விக்க வந்தவன் என்று தம்மைப் பிரஸ்தாபித்துக் கொள்வதில்லை. எந்தத் தருணத்திலும் உடைந்துவிடக் கூடிய சோப்புக் குமிழிகள் அவர்கள். அத்தகைய எளிய மனிதர்களுக்கும் கயவர்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசமிருக்கிறது. கார்போரேட் களவாணிகளுக்குக் குத்தும் ‘ஏமாற்றுக்காரன்’ என்கிற முத்திரை கோவில் முற்றத்தில் துண்டை விரித்துப் படுத்துறங்கும் சாமியாருக்குப் பொருந்தாது. 

3 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

"எந்தத் தருணத்திலும் உடைந்துவிடக் கூடிய சோப்புக் குமிழிகள் அவர்கள்"

Sir...Is it !!?

Narayanasami Vijayaraghavan said...

ஆழமான தெளிவான கருத்துக்கள்.

"பெரிய ஆள்ன்னா என்ன’ என்று கேட்டால் எப்படி நம்மால் வரையறுக்க முடியாதோ"

"கடிவாளமிட்ட குதிரையைப் போல விடிந்தால் பையைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறோம்."

முற்றிலும் உண்மை

சேக்காளி said...

//ஆன்மிகவாதின்னு சொல்லிக்கிறவன்//
இதன் செயப்பாட்டு வினை நமக்கு உண்மையான ஆன்மிகவாதிகளை எளிமையாக அடையாளம் காட்டும்.