Apr 22, 2019

ப்ளஸ் டூ மதிப்பெண்கள்..

2019 ஆம் ஆண்டுக்கான ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் மிகுந்த குழப்பத்தை உண்டாக்கியிருக்கின்றன. வழக்கமாக 1200 மதிப்பெண்களுக்கு என்று இருந்த தேர்வு இந்த முறை அதிகபட்ச மதிப்பெண்கள் அறுநூறுதான் என்று மாற்றப்பட்டிருக்கிறது. இதுவரையிலும் 1150 ஐத் தாண்டினால்தான் நல்ல மதிப்பெண் என்று நினைத்திருந்தவர்கள் ‘ஐநூறுதான் வாங்கியிருக்கான்; நானூற்றுச் சொச்சம்தான் வாங்கியிருக்கா’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளியில், மாவட்டத்தில், மாநிலத்தில் எது முதலிடம் என்று யாருக்கும் தெரியவில்லை. அதனால் தமது மதிப்பெண் நல்ல மதிப்பெண்ணா? மோசமான மதிப்பெண்ணா? இந்த மதிப்பெண்ணுக்கு எந்தக் கல்லூரி கிடைக்கும் என்று தெரியாமல் மாணவர்களும், பெற்றவர்களும் திணறிக் கொண்டிருக்கிறார்கள். 

போதாக்குறைக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கல்லா கட்டும் கல்லூரிகள் ‘நோ வேக்கன்ஸி’ என்று பலகை மாட்டாதது மட்டும்தான் பாக்கி. ‘எல்லா இடமும் நிரம்பிவிட்டது’ என்று துரத்தியடிக்கிறார்கள். எந்தப் படிப்பில் மாணவர்களே சேர மாட்டார்களோ அவை மட்டும்தான் காலியிருக்கிறது; அதுவும் கூட காத்திருப்புப் பட்டியல்தான். வேண்டுமானால் உடனே பணம் கட்டுங்கள் என்று கழுத்தை நெரிக்கிறார்கள். சேரலாமா அல்லது பொறுத்திருக்கலாமா என்று முடிவெடுக்க முடியாமல் ‘உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா’ என்று ஆகிவிடக் கூடாது என்று பெற்றவர்கள் பதறுவதைக் காண முடிகிறது. ‘என்ன செய்யலாம்?’ என்று தமக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  

இத்தகைய குழப்பங்களைத் தவிர்க்க அரசாங்கம் ஏதாவதொரு வழிகாட்டுதலைக் காட்டியிருக்க வேண்டும். கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் என்ன வித்தியாசம் நிகழ்ந்திருக்கிறது என்று தெளிவாகச் சொல்லியிருந்தால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஓரளவுக்கு நிம்மதியாக இருந்திருக்கும் அல்லது ஒவ்வொரு பாடத்திலும் நூறு மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கையையாவது வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி ஏதேனும் ஒரு வழிகாட்டுதலைச் செய்திருந்தால் திருட்டுக் கல்லூரிகளின் சூழ்ச்சிகளிலிருந்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அவர்கள் தப்பிக்க நல்ல வாய்ப்பிருக்கிறது. கல்வித்துறை புரட்சிகளைச் செய்வதாக நினைத்துக் கொண்டு லட்சக்கணக்கானவர்களின் கண்களைக் கட்டி இருட்டுக்குள் விட்டிருக்கிறது. தனியார் கல்லூரிகளின் கொள்ளைக்கு மறைமுக உதவியாகத்தான் இதையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது. 

என்னுடைய தனிப்பட்ட கணிப்பின்படி, இந்த ஆண்டில் மதிப்பெண்கள் மிகக் குறைந்திருக்கின்றன; பொறியியல் படிப்புக்கு அநேகமாக ஆறு முதல் ஏழு மதிப்பெண்கள் கட்-ஆஃப் குறையக் கூடும். கடந்த முறை நூற்றியென்பது மதிப்பெண்களுக்குக் கிடைத்த பாடப்பிரிவானது இந்த வருடம் 171 அல்லது 172க்கு கிடைக்கக் கூடும் என்று அனுமானிக்கலாம். இந்த அடிப்படையை மனதில் வைத்துக் கொண்டு கல்லூரிகளைத் தேடுவது சரியாக இருக்கும். பொறியியல் கலந்தாய்வுக்கும் கூட இதே அடிப்படையை மனதில் வைத்துக் கொள்ளலாம். 

தருமபுரி நண்பர் ஒருவர் கோவைக் கல்லூரியில் மகளைச் சேர்ப்பதற்காக மூன்று நாட்களாக விடுதியில் அறையெடுத்துத் தங்கியிருக்கிறார். அந்தக் கல்லூரியில் வேண்டுமென்றே பற்றாக்குறையை பிம்பப்படுத்துகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. கடந்த வருடம் காற்று வாங்கிக் கொண்டிருந்த கல்லூரி அது. இந்த வருடம் மட்டும் எப்படி இடமில்லாமல் போகும்? ஏமாற்றுகிறார்கள். பெற்றோர்கள் முண்டியடிக்க வேண்டியதில்லை. இந்த வருடமும் பல கல்லூரிகள் காற்று வாங்கும். பல பொறியியல் கல்லூரிகளில் கேட்க நாதி இருக்காது. பதறாமல் கல்லூரிகளையும் பாடப்பிரிவுகளைத் தேட  வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டால் போதும். 

கடந்த சில வருடங்களாகவே கலை அறிவியல் கல்லூரிகளின் பாடங்களுக்கு நல்ல மரியாதை உண்டாகியிருக்கிறது. கலை, அறிவியல் பாடங்களில் சேரும் மாணவர்களுக்கும், அவர்களுக்கு வழிகாட்டுகிறவர்களுக்கும் ‘இதை முடித்துவிட்டு அடுத்து என்ன?’ என்ற தெளிவு அவசியம். உதாரணமாக பி.எஸ்.சி சைக்காலஜி பாடத்தில் சேர்ந்தால் எம்.எஸ்.சி சைக்காலஜி, எம்.ஃபில் என்று ஆராய்ச்சியாளராகலாம்; அரசுப்பணிகளுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன அல்லது முதுகலைப்படிப்புடன் மருத்துவமனைகள், நிறுவனங்களில் மனநல ஆலோசகராகலாம். இப்படியான வாய்ப்புகள் பற்றி ஓரளவுக்கேனும் தெரிந்திருக்க வேண்டும். 

கலை அறிவியல் கல்லூரிகளில் நிறையப் படிப்புகள் இருக்கின்றன. அதே சமயம் கடந்த டிசம்பர் மாதம் முப்பத்தி மூன்று பட்டங்களை அரசுப்பணிகளுக்குக் காட்ட முடியாது என்று அரசு அறிவித்திருக்கிறது. எம்.எஸ்.சி ஐடி மாதிரியான ஐந்து வருடப் பாடங்களில் படிக்க விரும்பினால் அந்தப் பாடம் இந்த விதியின் கீழ் அடிப்பட்டுப் போகிறதா என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

நேற்று ஒரு மாணவனைச் சந்தித்த போது பி.எஸ்.சி கணிதம் சேர்வதாகச் சொன்னான். ஏன் என்று கேட்ட போது ‘இஞ்சினியரிங்கில் ஆர்வமில்லை’ என்றான்.  ‘அது சரி...அதுக்கு ஏன் கணிதம் சேர வேண்டும்?’ என்று கேட்ட போது பதில் இல்லை. கணிதத்திலும் நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன அவை பற்றித் தெரிந்து கொண்டு பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.

பொறியியல் பாடத்தைப் பொறுத்தவரைக்கும் அண்ணாயுனிவர்சிட்டிகவுன்சிலிங் என்ற தளத்தில் 2018 ஆம் ஆண்டுக்கு எந்தக் கல்லூரியில் எந்தப் பாடப்பிரிவு கிடைத்தது என்று பார்த்துக் கொள்ளலாம். 

மதிப்பெண்கள் மாணவர்களின் திறமைக்கான அளவுகோல் இல்லை. அவை மட்டுமே ஒரு மாணவனின் எதிர்கால வெற்றியை தீர்மானிப்பதுமில்லை. சரியான கல்லூரியில், சரியானப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்தால் போதும். அது அவனை/அவளை அவர்களுக்குரிய இடத்தில் கொண்டு போய் நிறுத்திவிடும்.

3 எதிர் சப்தங்கள்:

NAGARATHAN said...

மாணவ சமுதாயத்திற்கும், பெற்றோருக்கும் மிகச்சிறப்பான வழிகாட்டுதல். பதற்றத்தில் பெற்றொரும், மாணவரும் எடுக்கும் முடிவுகளால்தான் பல கல்வித்தந்தைகள் பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது.
சமீபகாலமாக ஏன் பெரியஇடைவெளி மணி?

Anonymous said...

Yes, huge gaps between posts. Mani sir please let us know if you plan interval !! Once in 2/3 days I visit nisaptham but see old one published 15 days ago. Take care...

Anonymous said...

Sir...Please don't encourage science stream...So many persons are jobless (even after PhD from anna univ). Even IIT PhD's are working for meager salary...People go for abroad (Korea or china) for Postdoc...Once return to India, the story is same...Very difficult to get faculty position...Even in reputed private universities, salary is different for science background faculties and engineering background faculties...Government should pump-in large amount of research money...
Sir...Even in USA..author of noble prized work was working as a driver when the prize was awarded...