Apr 3, 2019

குறி

‘அண்ணா உங்களுக்கு சாமி மேல நம்பிக்கை இருக்கா?’ என்று அந்த நண்பர் கேட்டு சில மாதங்கள் இருக்கும். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நாத்திகம் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது திராவிடர் கழகத்தின் பெரியவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். நண்பர்கள் என்றால் , எங்கள் ஊரில் செந்தாமரை அச்சகம் என்றொரு கடை இருந்தது. அங்கே சிலர் கூடிப் பேசுவார்கள். அந்த உரையாடலில் பார்வையாளராக இருப்பேன். அதன் விளைவுதான். பிறகு ப்ளஸ் ஒன்னில் தோல்வி அடைந்துவிடுவேனோ என்ற பயம் தொற்றிய பிறகு மெல்லக் கடவுள் நம்பிக்கை வளர்ந்தது. நம்பிக்கை என்றால் அளவான நம்பிக்கை. வெளியில் காட்டிக் கொள்ளாத, கடவுள் இல்லை என்று குரல் உயர்த்தாத நம்பிக்கை. கேட்ட நண்பரிடம் சொன்ன போது ‘குறி சொல்லுறது மேல நம்பிக்கை இருக்கா?’ என்றார். 

‘ஒருத்தரைப் பார்க்கப் போனேண்ணா....என் வாழ்க்கையில் நடந்ததையெல்லாம் அப்படியே சொல்லிட்டாரு’ என்றார். துல்லியமாகச் சொன்னதாகச் சொன்னார். அந்த மாதிரியான ஆட்களைத் தேடிப் போவதில் ஒருவிதமான க்யூரியாசிட்டி உண்டு. விதவிதமான மனிதர்களையும் புதுப்புது இடங்களையும் தேடி அடைவதைவிடவும் வாழ்வில் வேறு என்ன அனுபவங்களை அடைந்துவிடப் போகிறோம்?

சில நாட்களுக்கு முன்பாக புதுக்கோட்டை செல்லும் வாய்ப்பு வந்தது. நண்பரை அழைத்து முகவரியை வாங்கிக் கொண்டேன். புதுக்கோட்டை பக்கத்தில் கீழ்செட்டிப்பட்டி என்றொரு குக்கிராமம். மொத்தமாகவே முப்பது வீடுகள்தான் இருக்கும். சாலை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். வண்டி வாகனம் உள்ளே செல்லும் வழி எதுவென்று தெரியவில்லை. பிரதான சாலையிலேயே வண்டியை நிறுத்திவிட்டு நடக்க வேண்டும்.  ஆடு மாடு மேய்க்கிறவர்களிடம் ‘சாமியாடுவாருல்ல..அவர் வீடு எங்க இருக்குங்க?’ என்று கேட்டபடியே போய்ச் சேர்ந்த போது மாலை நான்கு மணி இருக்கும். அந்தக் கிராமத்திலேயே ஏ.சி பொருத்தப்பட்ட மாடி வீடு. 

அவர் வீட்டில் இல்லை. பக்கத்தில் ஒரு கோவில் கட்டுமானம் ஆகிக் கொண்டிருக்கிறது. அதனருகில் ஒரு கொட்டகையில் இருப்பார் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். எனக்கு முன்பாக சிலர் இருந்தார்கள். அவர்கள் அதிகாலையிலேயே வந்துவிட்டதாகச் சொன்னார்கள். எளிய மனிதர்கள். இந்த மனிதர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம். நம் முறை வரும் போது ராகுல் காந்தி எந்தத் தொகுதியில் நிற்பார்? அதிமுக எத்தனை இடங்களில் வெல்லும் என்றெல்லாம் கேட்டுவிட வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தேன். பத்து ரூபாய்க்கு வெற்றிலை வாங்கிக் கொண்டு வந்து வரிசையில் வைத்துவிட்டு காத்திருக்கச் சொன்னார்கள். ஓடு வேய்ந்த கொட்டகை அது. நடுவில் ஒரு பச்சை நிறத் துணியை திரைச்சீலையாகப் போட்டு குறி சொல்கிறவர் சீலைக்கு அந்தப் பக்கமாக அமர்ந்திருந்தார். குறி சொல்வதைக் கேட்க வந்திருந்தவர்கள் கிசுகிசுவென்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

திரைச்சீலையிலிருந்து மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்தேன். நாற்பது வயதுக்குள்ளான மனிதர். இடுப்பில் வேஷ்டி மட்டும் அணிந்து அதன் மீது துண்டு கட்டியிருந்தார். மெல்ல உடலைக் குலுக்கியபடியே இருந்தார். புகையிலையைப் பிய்த்து வாய்க்குள் குதப்பி அருகில் இருந்த செம்பில் துப்பினார். ஒவ்வொரு சாமியாகப் பெயர் சொல்லி அழைக்கிறார். நமக்கு அதில் ஏதாவதொரு சாமி பொருந்தி வரும் வரைக்கும் அழைப்பு தொடர்கிறது. 

‘பட்டுக்கோட்டைக்காரா உள்ள வா’என்றார். அடங்கொண்ணிமலையா, நம்மை கரட்டடிபாளையத்துக்காரா என்று அழைப்பார் என்று நினைத்துக் கொண்டேன். யார் உள்ளே சென்றாலும் உடனடியாகப் பேச ஆரம்பிப்பதில்லை. ‘மைண்ட் ரீடிங் செய்யறாரோ?’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். புகையிலையைக் குதப்பி, எச்சிலைத் துப்பிவிட்டு, சாமியை அழைத்து ‘என்ன நடமாடும் வாகனத்தைக் காணோம்ன்னு வந்தியா’ என்றார் அந்தப் பட்டுக்கோட்டைக்காரனிடம். 

‘ஆமாம் சாமி’ என்றான்.  திக்கென்றாகிவிட்டது எனக்கு. யார் திருடியிருக்கிறார்கள், எந்தத் திசையில் இருக்கிறது என்றெல்லாம் சொல்லிவிட்டு ‘மூணு நாள் இல்லீன்னா மூணு வாரத்துக்குள்ள உனக்கு வந்து சேரும் போ’ என்றவர் ஐந்தாயிரம் ரூபாயைக் கேட்டார். அந்தப் பையன் கொடுத்துவிட்டு வந்தான். நான் வேறு நல்ல சட்டை அணிந்திருந்தேன். நிறையக் காசு கேட்டுவிடுவாரோ என்று பதற்றம் வந்துவிட்டது. 

பட்டுக்கோட்டைக்காரன் வெளியே சென்ற பிறகு சாமியாடி எழுந்து கிளம்பிப் போய்விட்டார். எனக்கு முன்பாக இருந்தவர்கள் ‘அவ்வளவுதான்..இனி எப்போ வருவாருன்னே தெரியாது’ என்றார்கள். அந்தப் பட்டுக்கோட்டைக்காரன் வசமாகச் சிக்கினான். ‘வண்டி கிடைச்ச பிறகு காசைக் கொடுக்கலாம்ல..’ என்றேன்.  ‘எனக்கு ஒன்றரை வருஷமா தெரியுங்க’ என்று வெட்டிருப்பாகச் சொன்னான். ‘எனக்குத் தெரியும்..நீ வேலையைப் பாரு’ என்கிற தொனி அது. அடங்கிக் கொண்டேன். 

கோவில் கட்டுமானம் நடக்கும் இடத்தில் கொஞ்ச நேரம் அமர்ந்திருந்துவிட்டு எழுந்து வந்தவர் என்னிடம் வந்து ‘எப்படி வந்தீங்க?’ என்றார். ‘ஒரு நண்பர் பைக்கில் கொண்டு வந்துவிட்டார்’ என்றேன். உண்மையில் காரில் சென்றிருந்தேன். கார் என்று சொன்னால் பணம் அதிகமாகக் கேட்பாரோ என்ற பயம்தான். அவர் எதுவும் சொல்லவில்லை. ‘யார் உங்களுக்கு சொன்னாங்க?’ என்றார். ‘புதுக்கோட்டையில் பிரசாத்ன்னு ஒருத்தர்’ என்றேன். அதுவும் பொய்தான். அவர் திரைச்சீலைக்குப் பின்பாக அமர்ந்து கொண்டார்.

அடுத்ததாக இன்னொரு பெண். அவரிடம் கீழ்செட்டிப்பட்டியில் சாமி திருவிழா எப்படி நடக்கும் என்று விலாவாரியாகப் பேசிக் கொண்டிருந்தார். இப்படியே வெட்டி அரட்டை அடித்தால் இவர் எப்பொழுது நம்மை அழைப்பார் என்று கடியாக இருந்தது. பக்கத்தில் இருந்தவரிடம் ‘என்னங்க இது?’ என்றேன். ‘ராத்திரி பண்ணெண்டு மணி ஆனாலும் ஆவும்..’ என்றார். பகலில் நடந்துவிடலாம். இரவில் அந்தச் சாலையில் எப்படி நடப்பது என்று பயமாகிவிட்டது. ‘ஆட்டோ ஏதாச்சும் வருமா’ என்றேன். அவர் சிரித்தார். அமைதியாக அமர்ந்து கொண்டேன்.

புகையிலை, எச்சில், சாமி அழைப்பெல்லாம் முடிந்த பிறகு அந்தப் பெண்ணிடம் ‘மணவாளன் செத்தாக் கூட நிம்மதியா இருக்கும்ன்னு நினைக்குறியா தாயி...குடிச்சுட்டு அத்தனை சித்ரவதை உனக்கு’ என்றார். அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள். ‘உனக்கு ரெண்டு பசங்க கொடுத்திருக்கேன்ல..மூணாவது பையனா இவனை மாத்தி உனக்கு அடங்க வைக்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

இருள் கவிந்து கொண்டிருந்தது.  திரைச்சீலையை விலக்கி சாமியிடமே ‘ராத்திரியாகிடுச்சு....இங்கிருந்து எப்படி போகலாம்?’ என்றேன். அவர் அப்பொழுதும் அந்தப் பெண்ணுக்கு குறி சொல்லிக் கொண்டுதான் இருந்தார். அனுமதியில்லாமல் மேலாளர் அறைக்குள் நுழைந்த ப்ரெஷர் போல ஆகிவிட்டது. ‘கொங்கு நாட்டுக்குப் போகணுமா? கார்தான் மெயின் ரோட்டுல நிக்குதுல...உக்காருங்க..கொண்டு வந்துவிடுறேன்’ என்றார். சத்தியமாக வெலவெலத்துவிட்டது. இது எப்படி சாத்தியம்? ஏதாவது மனோவியல் சூத்திரம் என்றாலும் கூட எப்படி முடியும்? இதில் என்னவோ சூட்சமம் இருக்கிறது. நூறு சதவீதம் துல்லியமாகச் சொல்ல வாய்ப்பில்லை. ஒருவேளை அவரிடம் பேசியிருந்தால் ஏதாவது க்ளூ கிடைத்திருக்கக் கூடும். இன்னொரு நாள் வந்து கொள்ளலாம் என்று கிளம்பி வந்துவிட்டேன். அவர் கோவில் கட்டிக் கொண்டிருக்கும் பெரியநாயகி அம்மனை ‘சாமீ...பின்னாடி வந்து பொடனில சாத்திடாத’ என்று மனமுருகி வேண்டிக் கொண்டபடியே ஓட்டமும் நடையுமாக நடந்து கொண்டிருந்தேன். ’ காரில் ஏறும் வரைக்கும் திக் திக்கென்றேதான் இருந்தது. 

குறி சொல்லுதல் பற்றிய விவரம் உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

12 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

உங்க கார் நம்பர் ப்ளேட்ட வச்சி கொங்கு நாடு என்று சொல்லிவிடலாம்.

thiru said...

Mostly informers ..

You had already checked with local people for his address.
Read about Dr.Kovoor and his open challenges to god men.

Next time when you go, keep a 100 rupee note in your pocket and ask him to tell the serial Number.

mohan said...

திகில் படம் பார்த்தது போல இருந்தது

சேக்காளி said...

// ஐந்தாயிரம் ரூபாயைக் கேட்டார்//
அதிமுக எத்தனை இடத்துல வெல்லும்ன்னு தெரிஞ்சிக்க எவ்வளவு குடுத்தீங்க?

jasdiaz said...

Let me share my experience with one such thing "Naadi Joshium"

One day I got a call from my excited colleague from Mumbai. He was worried about his 25 year old son who was doing nothing and appears to be aimless in life. Some one told him about this "Naadi Astrology" and he flew down from Mumbai. He went to one such place near Tambaram Sanitorium.

The system works like this. You have to carry the thumb impression of the person about whom you are going to consult. No initial payment. The Astrologer takes only about 50-80 people a day. Once you are in, you are asked certain questions to which you have to answer "yes" or "No" only. After a series of such questions he announces your name, your wife's name & son's name and date of birth. Once you confirms the above information, you have to apy the fee few thousand rupees and he fetches some leaves ("Chuvadis") and gives out the predictions. He also says some "parikarams" are required at various temples and you are given the option of doing them yourself or pay Rs 10,000/- for the astrologer to do the same.

At that period my daughter was unmarried and fast approaching 30. He insisted that I visit the "Naadi Joshier" and consult him about my daughter. I was also impressed and went there. There were already 40 people there some with suitcases/bags etc coming directly from bus stand/railway stations.

I was called when my turn came and the entire house was divided into cubicles each with Air-conditioners. Now the name guessing work started. Alas he only knew only few christian names and was lost. After trying for 2 hrs or so he told me my "chuvadis" are in Thiruvarur and he had to get them and that would take 3 days or so. I was asked to contact him by phone. I rang up after three days and was told to ring up another after 3 days. Then he stopped taking my calls.

The entire thing is a fraud .

அன்பே சிவம் said...

வேலூர்ல தேர்தல் நடக்குமா? நிக்குமான்னு கேட்டு சொல்லுங்க தலை.

Unknown said...

சாரு மாதிரி ஆரம்பிச்சுட்டீங்க, எதிர்காலத்துல அவர மாதிரியே ஆகாமலிருக்கக்கடவது. :)

Anonymous said...

If he can really predict, why should he be ambiguous, he could have told you your name, your exact city and something personal to you and asked you to wait. Why stop with things you can infer, as others have stated anybody who noticed you were looking for him could have informed him. From your description he probably earns a lot to afford few look outs.

Selvaraj said...

‘கொங்கு நாட்டுக்குப் போகணுமா? கார்தான் மெயின் ரோட்டுல நிக்குதுல...உக்காருங்க..கொண்டு வந்துவிடுறேன்’ என்றார்.செம. அப்டியே ஆடிப்போயிருப்பீங்களே

Anonymous said...

நான் மதுரையில் பிறந்து வளர்ந்தவன். 7 வருடங்கள் கோவையில் இருந்தேன். முழுக்கவே என் accent மாறிவிட்டது (என்று நினைத்திருந்தேன்). கடைசி வருடத்தில் கூட புதிதாக பார்ப்பவர்கள், ஒன்றிரண்டு வார்த்தை பேசியவுடன் "அண்ணன் மதுரையா?" என்பார்கள். உங்களுடைய பேச்சை வைத்து உதவியாளர் யாராவது (கூட்டத்தில் இருப்பவர்) போட்டுக்கொடுத்திருக்கலாம்.

Unknown said...

வடமாவட்டம் வந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டது. நெல்லை வட்டார பேச்சு வழக்கோடு வடமாவட்ட வட்டார பேச்சு பழகி விட்டது. இருந்தாலும் சொந்த ஊரு திருநெல்வேலியானு சுலபத்தில் பலரும கேட்டு விடுகின்றனர். உங்களையும் இப்படி ஒரு கண்டு பிடிப்புல குறிக்காரரு கண்டு பிடித்து இருக்கலாம். சின்ன கிராமம் மெயின்ரோட்டில் கார் நிறுத்தி இருந்தா எப்படியும் தகவல் குறிக்காரருக்கு வந்து இருக்கும்.

பே.ஆவுடையப்பன்

Anonymous said...

இச்சகத்தில் உள்ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே

Konjam payamathan irundhadhu !!