புஞ்சை புளியம்பட்டி என்றொரு ஊர். கோயமுத்தூர்- சத்தியமங்கலம் சாலையில் இருக்கிறது. அந்த ஊரில் இருக்கக் கூடிய மேனிலைப்பள்ளிக்கு ஒரு சிறப்பு உண்டு. பல வருடங்களாக ஹாக்கி விளையாட்டில் வீராங்கனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த பல வருடங்களாகவே பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு வெவ்வேறு கல்லூரிகளுக்கு அந்தப் பெண்கள் செல்கிறார்கள். கல்லூரிக்குச் செல்லும் வீராங்கனைகளில் சிலர் தப்பிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் தமது திறமையை நழுவவிட்டுவிடுகிறார்கள். இது அந்தப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் திரு.அருள்ராஜூக்கு நெருடலாகவே இருக்கிறது. கடந்த பல வருடங்களாகவே இப்பள்ளியின் பெண்கள் ஹாக்கியில் பிரகாசிக்கக் காரணம் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் மிக முக்கியமான காரணம்.
பள்ளிப்படிப்புக்குப் பிறகும் தமது மாணவிகள் சிதையாமல் இருந்தால் அவர்கள் தேசிய அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ வெற்றிக் கொடி கட்ட முடியும் என நினைத்த விளையாட்டு ஆசிரியர் கோபி கலைக்கல்லூரியின் செயலாளரை அணுகி, அணியை மொத்தமாகத் அவர்களுடைய கல்லூரியில் சேர்த்துக் கொள்ள முடியுமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம், பனிரெண்டாம் வகுப்பு வரை உருவாக்கப்பட்ட அணி அப்படியே கல்லூரியிலும் தொடரும்; இரண்டாவது காரணம், வார இறுதி நாட்களில் தமது மாணவிகளுக்குத் தம்மால் தொடர்ந்து பயிற்சியளிக்க வாய்ப்பு இருக்கும்.
பத்து மாணவிகளின் விவரம் இது:
கோபி கலைக்கல்லூரி தன்னாட்சிக் கல்லூரி. மேலாண்மைக்குழு நிர்வாகம் செய்கிறது. கல்லூரியின் செயலாளர் அழைத்திருந்தார். விவரங்களைச் சொல்லி ‘பெரிய நிறுவனங்களிடமிருந்து ஸ்பான்ஷர்ஷிப் வாங்கித் தர இயலுமா?’ எனக் கேட்டார். வருடத்திற்குத் தோராயமாக ஐம்பதிலிருந்து அறுபதாயிரம் ரூபாய் வரைக்கும் ஒரு மாணவிக்கு செலவு பிடிக்கும் போலிருக்கிறது. பத்து மாணவிகளுக்கு வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு லட்ச ரூபாய் தேவைப்படும். மூன்று வருடங்களுக்குப் படிக்க வைக்க வேண்டும்.
தோராயமான செலவு: (வருடத்திற்கு)
விடுதி - ₹ 7000
உணவு (2500*10) ₹ 25000
கல்லூரிக் கட்டணம் - 18000+2000 - ₹ 20000
கிராமப்புறங்களைச் சார்ந்த இப்பெண்களின் பெற்றோர் செலவு செய்து படிக்க வைக்குமளவுக்கு வாய்ப்பில்லை. அப்படியே செய்தாலும் அக்கம்பக்கம் இருக்கும் கல்லூரியில் படிக்கச் சொல்வார்கள். விடுதியில் தங்கவைத்துச் செலவு செய்ய ஒத்துக் கொள்ளமாட்டார்கள். கல்லூரி நிர்வாகம் கட்டணத்தை ரத்து செய்ய வாய்ப்பிருக்கிறது. ஆனால் விடுதிக் கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டும். கல்லூரி நிர்வாகம் விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.
ஒரு விளையாட்டு அணியை ஸ்பான்சர் செய்வது நல்ல திட்டமாகத் தெரிகிறது. பத்துப் பேர்களில் ஒரு பெண் சர்வதேச இடத்தை அடைந்தாலும் அது மிகப்பெரிய வெற்றிதான். ஆனால் பட்ஜெட் சற்றே பெரிதாக இருக்கிறது. சில நிறுவனங்களிடம் பேசியிருக்கிறேன். இதை வாசிக்கிறவர்கள் தங்களால் இயலுமெனில் கார்போரேட் நிறுவனங்களிடம் இது குறித்துப் பேசி உதவவும். வேறு வழியில்லாதபட்சத்தில் நிசப்தம் வழியாகவே இந்த உதவிகளைச் செய்யலாமா என்றும் பரிசீலிக்கலாம்.
ஒன்றிரண்டு பெண்களுக்குத் தம்மால் உதவ முடியும் என்று நினைக்கிறவர்களும் தொடர்பு கொள்ளுங்கள். அப்படிப் பத்துப் பேர் இருந்தாலும் கூட போதும்.
கோமதிகளுக்கு யாருமே எதுவுமே செய்வதில்லை என்று வருந்துவதைவிடவும் இப்படி ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய இயலுமா என்று பார்க்கலாம்.
vaamanikandan@gmail.com
1 எதிர் சப்தங்கள்:
√
Post a Comment