ஒரு நண்பர் இருக்கிறார். அப்பாவி மனிதர். வேலூர் சென்றிருந்த போது திரும்பத் திரும்ப அழைத்து கடைசியில் தொடர்வண்டி நிலையத்தில் வந்து பிடித்துவிட்டார். கையில் இரண்டு காலண்டர்களை வைத்திருந்தார்.
‘உங்களுக்குத்தான்’ என்றார். வாங்கிப் பார்த்தால் கமலஹாசன். எங்கள் வாக்கு விற்பனைக்கு இல்லை என்று காலண்டரில் அச்சிட்டிருந்தார். நண்பருக்கு பெரிய வருமானம் எதுவுமில்லை. கமல் மீதான பிடிப்பில் சொந்தக்காசில் அச்சடித்திருந்தார்.
‘நடிகரோட படத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றால் அம்மாவிடம் திட்டு வாங்க வேண்டும்..தப்பா எடுத்துக்காதீங்க’ என்றேன்.
கமலை எப்படி நடிகர் என்று சொல்லலாம் என்று அவர் மனதுக்குள் நினைத்திருக்க வேண்டும். ‘இதில் நீங்க ஆதார் எண்ணைக் குறித்து வைக்கலாம்; கியாஸ் எண்ணைக் குறித்து வைக்கலாம்’ என்றெல்லாம் சொன்னார். அதையெல்லாம் எனது செல்போனிலேயே குறித்து வைத்திருக்கிறேன் என்று சொன்னனேன். அவருக்கு முகம் சுருங்கிவிட்டது.
அதன் பிறகு அடிக்கடி அலைபேசியில் அழைப்பார். ‘எங்க தலைவர் அதைச் சொல்லியிருக்காரு..இப்படி செய்யறாரு’ என்று அவருக்கு கமல் மீது அலாதியான பற்று. ஒருவிதமான மயக்கநிலையில் இருக்கிறார். நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லிப் பார்த்தேன்.
கமலுக்கென்று உறுதியான கொள்கை எதுவுமில்லை. கட்சிகளுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு எதையும் வலுப்படுத்தவில்லை. கல்லூரிகளில் பேசினால் வாக்களித்துவிடுவார்கள் என்று நம்புகிறார். அவரை நம்பிச் செலவு செய்து கையைச் சுட்டுக் கொள்ளாதீர்கள் என்று சொன்னாலும் நண்பர் கேட்பதாக இல்லை. கமல் பற்றி எதையாவது ஒரு செய்தியை அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்.
கமலுக்கென்று உறுதியான கொள்கை எதுவுமில்லை. கட்சிகளுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு எதையும் வலுப்படுத்தவில்லை. கல்லூரிகளில் பேசினால் வாக்களித்துவிடுவார்கள் என்று நம்புகிறார். அவரை நம்பிச் செலவு செய்து கையைச் சுட்டுக் கொள்ளாதீர்கள் என்று சொன்னாலும் நண்பர் கேட்பதாக இல்லை. கமல் பற்றி எதையாவது ஒரு செய்தியை அனுப்பிக் கொண்டேயிருக்கிறார்.
நல்லது.
அரசியலில் கூட்டத்தைச் சேர்க்கும் முன்பாக தமக்கான சித்தாந்தம் என்னவென்று தெளிவாகச் சொல்ல வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரையிலும், கொள்கையில்லாமல் அரசியல் அதிகாரத்தில் சிறு சலனத்தைக் கூட உருவாக்க முடியாது என்று உறுதியாகச் சொல்லலாம். திராவிடமோ, ஆரியமோ, தமிழ் தேசியமோ- ஏதோவொன்று. ஆனால் இதுதான் எங்கள் சித்தாந்தம் என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். அப்படியாகக் கமல் எங்கேயாவது பேசியிருக்கிறாரா என்று நண்பரிடம் கேட்டேன். அவரைச் சங்கடப்படுத்தக் கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அப்பாவியாகவே பேசிக் கொண்டிருக்கிறார். கமலுக்கு இப்படியான அப்பாவிகள்தான் தேவை. இந்தச் சமூகத்தை ஒரே இரவில் புரட்டிப் போட்டுவிட முடியும் என்று நம்புகிற மிடில்க்ளாஸ் அப்பாவிகள்.
கமலஹாசன் அவர்களுடைய எண் என்னுடைய வாட்ஸாப்பில் இருக்கிறது. ‘செண்டரிஸ்ட்’ என்று எழுதி வைத்திருக்கிறார். ‘ஒண்ணா இந்தப் பக்கம் ஆட்டு. இல்லைன்னா அந்தப் பக்கம் ஆட்டு’ என்று வடிவேலுவின் பாணியில் ஒரு செய்தியை அனுப்பிவிடலாமா என்று கூட பல முறை நினைத்திருக்கிறேன். ஆனால் கட்டுப்படுத்திக் கொள்வேன். யாரோ சொல்வதைக் கேட்டு சண்டைக்கு என மைதானத்துக்கு வந்துவிட்டு ‘மய்யமாக நிற்கிறேன்’ என்று நழுவினால் இரண்டு பக்கமும் அடி விழும் அல்லது ‘போய் ஓரமா விளையாடு’ என்று நம்மைச் சீந்தக் கூட மாட்டார்கள்.
மரம் வைக்கிறேன், குளம் வெட்டுகிறேன், ஊழலை ஒழிக்கிறேன் அதனால் நான் அரசியல் செய்கிறேன் என்று பேசுவதெல்லாம் என்.ஜி.ஓ அரசியல். ஊழலை ஒழிக்கிறேன் என்றால் எப்படி ஒழிக்க முடியும் சொல்ல வேண்டும். அதற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் என்னவென்று சொல்ல வேண்டும். இருக்கிற கட்சிகளை ஒழித்துவிட்டு என்னைக் கொண்டு வாருங்கள் ஒழித்துக் காட்டுகிறேன் என்றால் ‘மலையைத் தூக்கி என் தோள் மீது வையுங்கள்; நான் தூக்கி நடந்து காட்டுகிறேன்’ என்று சொல்வதைப் போலத்தான். சினிமாவில் முதல்வன் மாதிரியான ஷங்கர் படங்களைப் பார்த்துவிட்டு கள நிலவரம் தெரியாமல் லட்சியவாதம் பேசுகிறவர்களுக்குத்தான் சரிப்பட்டு வரும்.
திடீரென்றும் மரம் வைப்பதாலும், குளம் வெட்டுவதாலும் அரசியலுக்கு வரத் தகுதியிருக்கிறது என்று சொன்னால் கமலஹாசனைவிடவும் பியூஸ் மானுஷுக்குத்தான் முதல்வராகும் தகுதி இருக்கிறது. ‘ஏரி காப்போம்’ குழுவினருக்குத்தான் அமைச்சர்களாகும் தகுதி இருக்கிறது. இதையெல்லாம் கமல் பேசுவதை நம்பிக் கல்லூரி மாணவிகள் விசிலடிக்கலாம். மக்களையே சந்தித்திராத அல்லது தமது பகுதியைத் தாண்டி வெளியில் வராத இலக்கியவாதிகள் ‘அடுத்த முதல்வர் நம்மவர்தான்’ என்று குதூகலிக்கலாம். ஆனால் களம் அப்படியானதில்லை.
வாக்கு அரசியலில் நீங்கள் யார் என்று காட்டுவதைவிடவும் உங்களின் எதிரி யார் என்று சுட்டிக் காட்ட வேண்டும். அப்படிச் சுட்டிக்காட்ட ஒரு தைரியம் வேண்டும். திமுகவுக்கு காங்கிரஸ் என்ற எதிரி தேவைப்பட்டது. காங்கிரஸ் மிக வலுவாக இருந்த போது அதைச் செய்தது திமுக. எம்.ஜி.ஆர் மிகப்பெரிய திரை நாயகன்தான் ஆனால் மக்களிடையே கருணாநிதியைத் தீயசக்தி என்று திரும்பத் திரும்பச் சொல்லி தன்னை மக்கள் தலைவராக வடிவமைத்தார். கருணாநிதி வலுவான தலைவராக இருந்த போதே இதைச் செய்தார். ஜெயலலிதாவும் அதே பாணியைத்தான் கையில் எடுத்தார். அப்படிச் சொல்லும் போது ஊடகங்களும் சூழலும் எதிரியை வில்லனாகக் கட்டமைக்க உதவுமானால் எதிர்க்கிறவன் ஹீரோ ஆகிவிடலாம். ஆனால் எல்லோராலும் அப்படிச் சொல்லிவிட முடியாது. தமக்கு வரும் வசவுகளைச் சமாளிக்கும் திராணி வேண்டும். எதிர்ப்புகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மன தைரியம் வேண்டும். இதையெல்லாம் செய்துதான் மக்கள் மன்றத்தில் தலைவர்கள் உருவாகிறார்கள்.
இன்றைக்கு கமல் யாரை எதிர்த்து அரசியல் நடத்துகிறார்? எந்தக் கொள்கையை வெளிப்படையாக விமர்சிக்கிறார்? பட்டும்படாமலும், தடியும் உடையாமல் பாம்பும் சாவாமலும் அரசியல் நடத்துகிற கமலை எப்படி நம்புவது? இப்படி யாரிடமும் வம்பு செய்யாமல் எப்பொழுது வேண்டுமானாலும் பிக்பாஸின் அடுத்த பகுதிக்கோ, விஸ்வரூபம் படம் எடுக்கவோ சென்றுவிடுவாரோ என்ற நினைப்பிலேயே நம்மை வைத்திருக்கிறார். அது பரவாயில்லை.
கொள்கை, சித்தாந்தம் என்பதையெல்லாம் கூட விட்டுவிடலாம். விஜயகாந்த்திடம் என்ன கொள்கை இருக்கிறது? கமலை மட்டும் ஏன் கொள்கை என்னவென்று கேட்கிறீர்கள் என்று அவருக்கான சலுகையை அளிக்கலாம். ஆனால் விஜயகாந்த் ஒரு காரியத்தை மிகக் கச்சிதமாகச் செய்தார். தன்னை எளிய மக்களிடத்தில் கொண்டு சேர்த்தார். அவர்கள்தான் வாக்களிக்கக் கூடியவர்கள். அவர்கள் விஜயகாந்த்தை ‘நம்ம ஆளு’ என்று பார்த்தார்கள். அதுதான் விஜயகாந்த்தின் வேகமான வளர்ச்சிக்குக் காரணம். அப்படி கமல் ஏதாவது செய்திருக்கிறாரா? கல்லூரிகளைத் தாண்டி, ரோடு ஷோ எனப்படும் சாலைப் பயணங்களைத் தாண்டி கமல் என்ன செய்திருக்கிறார்?
தன்னுடைய பிரபல்யத்தை மட்டுமே வைத்துக் கட்சியைக் கட்டமைத்துவிடலாம் என்று கருதினால் அதைக் களத்தில் எப்படிச் செய்கிறோம் என்பதிலும் நுணுக்கம் இருக்கிறது. ஒருவேளை கட்டமைப்பை உறுதிப்படுத்தாமல் களத்தில் ஏமாந்தாலும் கூட குறைந்தபட்சப் பொருளாதாரப் பின்புலமாவது வேண்டும்.அதுதான் யதார்த்தம். யாராவது பின்னாலிருந்து உதவ வேண்டும். யார் முன்வருவார்கள்? ‘பணமே இல்லாமல் அரசியலை நடத்திவிடலாம்’ என்று சினிமாவில் வேண்டுமானால் வசனம் பேசலாம். ஆனால் வாய்ப்பேயில்லை. நண்பரைப் போல யாராவது காலண்டர் அடித்துக் கொடுத்தால் உண்டு. எத்தனை நாளைக்குத் தொண்டர்கள் கைக்காசு போட்டுச் செலவு செய்வார்கள்?
காலண்டர் கொடுத்த நண்பர் சமீபத்தில் பேசும் போது ‘தலைவர் சொல்லிட்டாரு.....கட்சியில் உறுப்பினராகக் கூட இருக்க வேண்டியதில்லை. தேர்தலில் நல்லவர்கள் நின்றால் அவர்களை ஆதரிப்போம்ன்னு சொல்லிட்டாரு’ என்று படு உற்சாகமாகப் பேசினார். உண்மையிலேயே சிரிப்பு வந்துவிட்டது. நாடாளுமன்றத் தொகுதியில் அப்படியொரு ஆடு சிக்குகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் ஆயிரத்து எந்நூறு பூத்துகள் வரும்; பதினைந்து லட்சம் வாக்காளார்கள் இருப்பார்கள். கமல் வந்து சிரித்துக் கை காட்டி ‘இவருக்கு ஓட்டுப் போடுங்க’ வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தாலும் கூட பத்தாயிரம் வாக்குகளை வாங்க முடியாது. கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்யலாம்.
கள அரசியல் என்பது வேறு; கமலஹாசன் மாதிரியானவர்கள் கருதிக் கொண்டிருக்கிற மேல்மட்ட புரட்சி என்பது வேறு. ஒன்றுக்கொன்று எந்தச் சம்பந்தமுமில்லை. மாற்றத்தை உருவாக்க வேண்டுமானால் களத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் நாடி பிடித்துப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். இதில் எதையுமே செய்யாமல்தான் கமல் ட்விட் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். கடந்த ஒரு வருட காலத்தில் நான் புரிந்து கொண்டவரையில் கமல் இன்னமும் அரசியலைத் தொடங்கவேயில்லை. அது அவருக்கு ஒத்து வரும் என்றும் தோன்றவில்லை.
அன்பே சிவம் இன்றைய அரசியலில் ஒத்து வராது சார்!
அன்பே சிவம் இன்றைய அரசியலில் ஒத்து வராது சார்!
18 எதிர் சப்தங்கள்:
நாம மட்டும்தான் இப்படி நெனைக்குறோமோனு தோணிட்டு இருந்துச்சு. சூப்பர் தல. கரக்ட்டான பதிவு. டிவிட்டர் ல பாலோ பண்றவங்க ஓட்டு கூட விழாது என்ன கேட்டா!!
கமல்ஹாசன் அவர்களை இருமுறை நேரில் சந்தித்திருக்கிறேன். நல்ல மனிதர். அறிவுஜீவியாகக் காட்டிக் கொள்வதில் அகவை ஐம்பது கடந்தும் அவருக்கு ஆர்வம் குறையவில்லை. அரசியலுக்கு வரவே மாட்டோம் என்றுதான் அவர் சொல்லிக் கொண்டிருந்தார். ஏனோ, வந்து விட்டார். அரசியலில் இருந்து விலக மாட்டேன் என்றும் சொல்வார். எப்படியும் இரண்டு ஆண்டுகளில் வெளியேறி விடுவார். அவரைச் சார்ந்திருக்கும் ரசிகக்குஞ்சுகளை நினைத்தால்தான் திக்கென்றிருக்கிறது.
ஹா..ஹா..ஹா ஹாஸ்யமாக இருந்தது படிக்க. தேர்தல் முடியும் வரை காமெடிக்கு பஞ்சமில்லை.
டி. டி. வி. தினகரனுக்கு நன்றி. இவர் மட்டும் இல்லா விட்டால் இன்று திமுக கொடுப்பதுதான் சீட் என்ற நிலைமை இருந்து இருக்கும். இன்று ஆள், ஆளுக்கு 10,2,2,2 என்று திமுக வாரி கொடுக்கிறது என்றால் பயம்தான் காரணம். காங்கிரஸ் முதல் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக யாருமே இன்று வரை தினகரனை தாக்கி பேசவோ, அறிக்கை விடவோ இல்லை. தாலியா கட்டி விட்டோம்! என்று கூட்டணி கட்சிகளை துரை முருகன் கேவலமாக பேசினார். இன்று இருக்கும் இடம் தெரிய வில்லை. மிரட்டி உருட்டி தாங்கள் கேட்ட சீட்களை வாங்கி விட்டு போய் விட்டன கூட்டணி கட்சிகள். அனைத்திற்கும் காரணம் தினகரன் தான். ஆர்.கே. நகரில் திமுக டெபாசிட் கூட வாங்க முடியாமல் தோற்றது. அதுவும் சுயேச்சையாகபோட்டியிட்டு 89,000 வோட்டு வாங்கி திமுக டெபாசிட்டை காலி செய்தார். எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சசிகலா ஏதோ ஜெயலலிதாவை கொன்று விட்டது போல் அதிமுகவும் திமுகவும் பிஜேபியும் அபாண்டமாக குற்றம் சுமத்தின. ஜெயலலிதா தொகுதியிலேயே போட்டியிட்டு ஜெயித்து இவர்கள் வாயை அடைத்தார். மகனையும், மனைவியையும் ,மருமகனையும் வைத்து கட்சி நடத்தி எந்த முடிவும் தெளிவாக இல்லாமல் ஸ்டாலின் தடுமாறி கொண்டு இருக்கும் போதே தன் கட்சியை பலப்படுத்தி பிஜேபி எதிர்ப்புகளை சமாளித்து ஜெயிலுக்கு சென்றாலும் அசால்ட்டாக பேட்டி கொடுத்து அசத்தினார். தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து கட்சியை பலப்படுத்தினார். காங்கிரஸ் இதை வைத்தே அங்கு போய் விடுவோம் என்று சொல்லி சொல்லியே 10 சீட் வாங்கி விட்டது. இதையே திருமாவளவன் பின்பற்றினார். ஒர்க் அவுட் ஆகியது. இதே போல் இவர்கள் அனைவரும் கமலுக்கும் நன்றி சொல்ல வேண்டும். காங்கிரஸ் கமலை சந்தித்து பேசி அதுவும் ராகுலே பேசி தங்களுக்கு வேறு சாய்ஸ் இருப்பதை திமுகவுக்கு உணர்த்தினார். கம்யூனிஸ்ட்தலைவர் பிரகாஷ் காரத்தை கமல் சந்தித்து பேசினார். இது சாதாரண சந்திப்புதான் என்று சொல்வார்கள் என்று திமுக எதிர்பார்த்தது. நெத்தியடியாக கமல் கூட்டணி அமைக்க கேட்டார் என்று மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பேட்டி அளித்தார். இப்போது மொத்தமாக 4 சீட் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அள்ளி எடுத்து கொண்டார்கள். இதையே காட்டி இந்த அளவு போல் சட்டசபைக்கும் சீட் கேப்பார்கள். இப்போது திமுக நிற்க போவதே வெறும் 20 சீட் தான். ஆக மொத்தம் திமுக இனி எந்த காலத்திலும் சோலோ ஆட்டம் போட முடியாது. பக்காவான செக் பாயிண்ட். இது அனைத்திற்கும் காரணமான தினகரனுக்கும் கமலுக்கும் கோடானு கோடி நன்றிகள். ஜெயிக்கிறார்களோ இல்லையோ தமிழக அரசியலை வெறும் ரெண்டே ரெண்டு வருடங்களில் மாற்றி எழுதி விட்டார்கள். தமிழகம் இவர்களுக்கு நன்றி கடன் பட்டு இருக்கிறது!
//அது அவருக்கு ஒத்து வரும் என்றும் தோன்றவில்லை//
கத்துக்கிட்டா போச்சு.
போங்க பாஸ் "நீங்க பூனைமேல மதில்" கட்டுறவர சப்போட் பண்ணுறீங்க.
அதான் எங்க மய்ய ஓனரை உங்களால ஏத்துக்க முடியல.
பாராளுமன்ற தேர்தலை ஓரமாக வைத்து விட்டு ஒரே ஒரு சட்டசபை தொகுதிக்கு முக்கியத்துவம் அளித்து அதில் வென்றால் கூட அது மாபெரும் வெற்றிதான் கமலுக்கு.
//கத்துக்கிட்டா போச்சு//
சேக்காளி சார் இது காலை மடக்கி கட்டிட்டு கட்டையாக நடிக்கிற வித்தையில்லை.
அரசியல்
அசந்தால் அதளபாதாளம் தான்.சொல்லி வைங்க உங்க கமல் கிட்ட
//கமலுக்கென்று உறுதியான கொள்கை எதுவுமில்லை. கட்சிகளுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு எதையும் வலுப்படுத்தவில்லை. // கமலின் அரசியலின் பிரச்சனை இந்த இரண்டும்தான். centrist என்று சொல்வது தவறில்லை எவ்வகையில் தன் கொள்கை centrism என்று விரிவும், மிக முக்கியமாக தெளிவும் வேண்டும். விரிவாக என் பதிவு. உங்கள் பக்கத்தை hijack செய்வதாக குற்றவுணர்ச்சியால் தனிப் பதிவாக இட்டுவிட்டேன்
கொள்கை சித்தாந்தம் எல்லாம் தமிழகத்தில் அரசியல் வெற்றிக்கு தேவையென்றால் எம் ஜி ஆர் எல்லாம் எப்படி வெற்றி பெற்றார்? எம்ஜியார் ஜெயித்த பிறகு அண்ணாயிசம்தான் கொள்கை என்று மீடியா தொல்லையை சமாளித்தார். அதனாலதான் ரஜினி கொள்கை என்ன என்று கேட்டால் தலை சுற்றுகிறது என்று சர்காஸ்டிக்காக பதில் சொல்கிறார்.
கமலையும் தினகரனையும் பார்த்து பயந்து திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிக சீட்டு கொடுத்தது என்பது சரியான வாதம் இல்லை. திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 64 சீட்டுகள் கொடுத்தார்கள்.
கமல் அதிமுக, திமுக கூட்டணியில் பாமக, தேதிமுக போன்ற காட்சிகள் சேராமல் தனது கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்த்தார். அதை ஒரு டிவி இண்டர்வியவில் கூட குறிப்பிட்டார். தனித்து போட்டியிட்டால் செலவு செய்ய பணபலமுள்ள வேட்பாளர்களை பிடிக்க வேண்டும், தேர்தல் முடிவு எதிராக போனால் தனது உண்மையான வலிமை அப்பட்டமாகி விடும் என்று பயப்படுகிறார். ஒரு கூட்டணி ஓரளவுக்கு இந்த பிரச்சினைகளை குறைத்து கொள்ளலாம் என்று பார்த்தார்.
Well, some one can explain what is the policy or frame work and goals of each of the party that PEOPLE KNOW and VOTE ON such principles.
Nil.. May be we can't quote a few. Hindutva, federalism, Tamil nationalism, annasism emgeriyaism, what's that. For the people, by the people.. Amma..
Again the issue is not what Kejriwal or kamal can do.. What Kejriwal did, the same BJP also did. Implementation of previous govt and intoxicating with religious fanatism.
Giving politics the means to constructive and consultative policy decisions , I thing not immaturity.
Centrism endra Puthiya karutha.a mun vachathuke avara paratalam. Ethavathu oru Pakkam jalra adiche pazhagita namma makkal.ku centrism.a eduthuka kashtama than irukum. Dravidam, Aariyam, Tamil Desiyam, all these are just to split people and gain some votes. You can be anything but be ready to point out the mistakes in anyside, appreciate the goodness in anyside and do what you came to do. That is Centrism.
Am reiterating Kamal's statement. Enthalpy katchi kolgaigal.nu pattiyal potu koduthitu athu padiye nadanthurukanga. We would never question them. Because we know at the end actions define their stand. Summa katchatheevai meetpom, Tamil eelam malaravaipom.nu sonna paratuveengala?
Kamal needs innocents? What for.. to earn money? If you think deep, why would he have to come into politics.. for money? For fame? For power? No. He intends to do some good for the people. I respect that intention.
Yes, it is a new party. They need proper structure, more reach. They are just one year old. They will evolve. They need to improve on that.
சோம. சிவ சங்கரனுன்//விரிவாக என் பதிவு.//
விற்கு எழுதிய பின்னூட்டம்
மதவாத கட்சியை அகற்றுவதே கூட்டணியின் லட்சியம் என கூறி ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
கமல் "மக்கள் நலன்" தான் கொள்கை எனக் கூறுகிறார்.
யாருமே வழி வகை வாய்க்கா(ல்) வரப்பு எப்படின்னு சொல்லல.
மதவாத கட்சியை அகற்றும் லட்சியத்தை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மக்கள் நலனையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
Aravind அவர்களுக்கு,
//You can be anything but be ready to point out the mistakes in anyside, appreciate the goodness in anyside and do what you came to do. That is Centrism. // Centrism என்பதற்கான தங்களின் புரிதலில் பாதிதான் சரி. அரச நிர்வாகம் என்பதில் பல வகைகள் உண்டு உற்பத்தி (சேவை வழங்குதல் உள்ளிட்ட) அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்னும் சித்தாந்தம் ஒரு extreme. சந்தையே உற்பத்தியை தீர்மானிக்க வேண்டும் என்பது ஒரு extreme. நடைமுறையில் எந்த அரசாங்கமும் இதன் கலவையாகவே இருக்கும் அது தேவைதான். இருந்தாலும் மக்களில் ஒரு சாரார்(leftists) கூடுதலான கட்டுபாடு தேவை என்றும் மற்றொரு சாரார்(rightists) கூடுதலான சந்தைக்கு தீர்மானிக்க சுதந்திரம் தேவை என்றும் நிலை எடுத்திருப்பார்கள். Centrist என்பவர்கள் சூழலைப் பொறுத்து நிலைபாடு எடுப்பார்கள்
//do what you came to do. // என்பது அல்ல அது ambiguous ஆனது. centrist என்பவர்கள் ஒவ்வொரு பொதுப் பிரச்சனையிலும், துறைகளிலும் அந்தச் சூழலில் நிலை எடுத்திருப்பார்கள். நல்லதைச் செய்வோம் என்று பொத்தாம் பொதுவாக சொல்ல மாட்டார்கள்
//be ready to point out the mistakes in anyside, appreciate the goodness in anyside// this is nothing related to political ideology.
கொள்கை என்று மற்ற அரசியல்வாதிகளிடம்/கட்சிகளிடம் என்ன உள்ளது? என்று பலர் கேட்கின்றனர். இது நல்ல கேள்விதான். திமுகவிலும் சரி ஜெ. உள்ள வரை அதிமுகவிலும் சரி கொள்கை என்று இல்லாவிட்டாலும் ஓரோரு விஷயங்களிலும் ஒரு நிலைபாடு எடுத்திருந்தன. சந்தர்ப்பவாதமாக அதை அவ்வப்போது மாற்றியிருக்கின்றன என்றாலும். கமலுக்கு என்று நிலைபாடுகள் என்ன ? நிதி விஷயத்தில் கருணாநிதி கடண் வாங்கி சமாளிப்பார் பேருந்து கட்டணத்தையோ, பால் விலையையோ அவ்வளவாக ஏற்றியதில்லை. பல பிரச்சனைகளிலும் ஜெ.வும் சரி கருணாநிதியும் சரி தெளிவான நிலைபாடுகளை வைத்திருப்பர். அது கமலிடம் இல்லை. அதைதான் கமலிடம் எதிர்பார்க்கிறேன்
சமூக நலதிட்டங்கள் வழங்குவதில் கமலின் நிலைபாடு என்ன ? universalஆக எல்லோருக்கும் வழங்குவதா அல்லது targetedஆக வழங்குவதா ? இதில் அவர் கட்சியின் நிலைபாடு என்ன ?
நிலைபாடு கொள்கை போன்றவைகளை விட கட்சிக்கு அடிப்படை கட்டமைப்பு அவசியம். போராட்டங்கள் உள்ளிட்ட களப்பணியில் முன் நின்றிருக்க வேண்டும். புதிய கட்சியாக இது அவசியமானது. மக்களை தன் பக்கம் mobilize செய்ய வேண்டும். அது தான் கட்சிக்கு பலம் தேர்தலில் strong devil, strong lesser devil, weaker angel என்று option இருந்தால் devil வந்துவிடக் கூடாது என்று lesser devilக்கு தான் வாக்களிப்பார்கள். நல்ல நோக்கங்களுடன் இருந்து ஒரு பலனும் இல்லை. பலம் வேண்டும். கட்சி ஆரம்பித்து 3 ஆண்டுகளில் 2021ல் சட்டமன்ற தேர்தல். ஒரு உறுப்பினராவது வேண்டும் என்றால் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் இந்த ஓராண்டில் குறைந்த பட்சம் இரண்டாம் கட்ட தலைமைகளையாவது அடையாளம் கண்டிருக்க வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மோடி, கருணாநிதி ஆகியவர்கள் personality driven politicsக்கு எடுத்துக்காட்டுகள் என்றால், கமல் single person politics என்று புதிய வகையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
அடிப்படை கட்டமைப்பு evolve ஆகும் என்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.
பொது பிரச்சனைகளில் தெளிவும், தெளிவான நிலைபாடுகளும் தேர்தல் அரசியலில் ஒரு கட்சி பலம் பெறுவதற்கு(i.e. to mobilize voters) உதவும்.
அவருடைய நல்ல நோக்கங்களை நானும் நம்புகிறேன். என் தொகுதியில் நான் வாக்களிக்கும் போது என் நிலைபாடுகள்/கொள்கைகளுடன் ஒத்திருக்கும் வேட்பாளரை விட, integrity(நேர்மை, மக்களுக்கு விசுவாசம்) உள்ள வேட்பாளருக்குதான் வாக்களிப்பேன். weaker angelக்கு தான். மற்ற devilகள் தங்கள் வாலை சுருட்டிக்கொள்ள மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று உணர மெதுவாகவேணும் வழிவகுக்கும் என்று நம்புகிறேன். நடைமுறையில் angelஆக இருந்து பயன் இல்லை வாக்காளர்களை தன் பக்கம் திரட்ட வேண்டும்.
கமலுக்கு photo shoot செய்வதில் உள்ள ஆர்வம்; கட்சியை படோடகமாக தொடங்கியதில் உள்ள ஆர்வம், கட்டமைப்பை உருவாக்க இல்லை என்பதே உண்மை
//நடைமுறையில் angelஆக இருந்து பயன் இல்லை வாக்காளர்களை தன் பக்கம் திரட்ட வேண்டும்//
வாக்காளர்கள் ஏன் தேவதைகளை தேர்ந்தெடுக்க மறுக்கிறார்கள்?
தமாகா எந்த கொள்கைகளை அறிவித்து தேர்தலில் வென்றார்கள்?
கட்சி காரர்களை விட்டு விடுங்கள். அவர்கள் சார்ந்த கட்சிகளையே விரும்புவார்கள்.
கமல் வேண்டாம் ஆனால் "நான் வாக்களிக்கும் போது என் நிலைபாடுகள்/கொள்கைகளுடன் ஒத்திருக்கும் வேட்பாளரை விட, integrity(நேர்மை, மக்களுக்கு விசுவாசம்) உள்ள வேட்பாளருக்குதான் வாக்களிப்பேன்"
என்று அறுதியிட்டு சொல்ல ஏன் மறுக்கிறார்கள்?.
படிப்பு என்பது எழுதுவதும், எழுதியதை வாசிப்பதும் தான் என்பதையும் தாண்டி சிந்திப்பதும் தான்.
மகனுக்கோ மருமகளுக்கோ வரன் பார்க்கும் போது காட்டும் அக்கறை ஐந்து வருடம் நம்மை ஆளப்போகும் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் போது வராதது சாபம் தான்.
வாக்காளர்கள் ஏன் தேவதைகளை தேர்ந்தெடுக்க மறுக்கிறார்கள்?
மோசமான சாத்தான் வந்துவிடக் கூடாதே என்ற பயத்தினால் தான். யார் பதவிக்கு வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில்தான் வாக்காளர்களின் கவனம் இருக்கிறது.
சமூக நீதி தான் need of the hour என்று கருதும் என் நண்பன் 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்காமல் ம.ந.கூ வுக்கு வாக்களித்து வீணாக்கிவிட்டோமே என்று வருத்தப்படுகிறான். பிராமணீய சக்திகள் ம.ந.கூட்டணியை பயன்படுத்தி அதிமுகவை வெல்லவைத்துவிட்டன; பலர் ம.ந.கூட்டணிக்கு வாக்களிக்கப் போகிறேன் என்று கூறிவிட்டு; ம.ந.கூட்டணிக்கு சார்பாக பொது வெளியில் பேசிவிட்டு; கடைசியில் அதிமுகவுக்கு தான் வாக்களித்திருக்கிறார்கள் என்று குற்றம் சாற்றுகின்றான்(குறிப்பாக ப்ராமணர்களை). அவனை பொறுத்த வரை திமுக lesser evil.
குடும்ப ஆட்சி/ஊழல் ஆகியவற்றை ஒழிப்பதுதான் need of the hour என்று கருதும் என் மனைவி ம.ந.கூவுக்கு வாக்களிப்பதாக முடிவெடுத்திருந்தாள். வாக்குச்சாவடிக்கு செல்லும் வழியில் நானும் அவளும் பேசிக்கொண்டே சென்றோம். கலைஞர் குடும்ப உறுப்பினர்கள்; ஆட்சியில் அவர்களுடைய பங்கு; வாழையடி வாழையாக அரசியல்/ஊழல் தொழிலைச் செய்ய வாரிசுகளை தயார் செய்வது என்று பேச்சு போனது. வாக்குச் சாவடி நெருங்கும் போது அவள் முடிவை மாற்றிவிட்டாள். கருணாநிதி மட்டும் வந்து விடக்கூடாது என்று அதிமுகவுக்கு வாக்களித்தாள். அவளைப் பொறுத்தவரை அதிமுக lesser evil.
இரண்டு பேருக்குமே ம.ந.கூட்டணி முதல் choice. ஆனால் அவர்களை இயக்குவது பயம் தான். ம.ந.கூக்கு ஓட்டு போட்ட என் நண்பன் இப்போழுது தெளிவாக இருக்கிறான் தி.மு.க தான் என்று. என் மனைவியோ திமுக-அதிமுக அல்லாத வேட்பாளருக்கு வாக்களிக்கப் போவதாக கூறியிருக்கிறாள்(கமலஹாசன் கட்சி first choice அவளுக்கு). இந்த இரண்டு பார்வைகளுமே சரியானது தான் என்று தோண்றுகிறது எனக்கு.
தனிப்பட்ட முறையில் நான் need of the hourஆக கருதுவது அரச நிர்வாகத்தில் accountability, transparency. லோக் அயுக்தா, லோக் பால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்றவைகள் இன்னும் வலுவுடன் நாடு முழுவதும் பயன்பட வேண்டும். இதற்கு ஆதரவாக இருப்பவர்க்கே எனது ஆதரவு. கம்யூனிஸ்டுக்கு வாக்களித்திருக்கிறேன் ஒரு முறை. ஒரு முறை மதிமுக-வுக்கு, ஒரு முறை ஆம் ஆத்மி கட்சிக்கு.
பூசி மெழுகி மழுப்பாமல் உங்கள் நிலைப்பாடு இது தான் என சொன்னதற்கு நன்றி திரு. சோம சிவ சங்கரன்.
நல்லாட்சி அமைய வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் முடிவை இங்கு சொல்ல வேண்டும் என அவசியமில்லை.
ஆனால் தன்னை சுற்றியிருப்பவர்களிடம் சொல்லுங்கள்.அது அலை அலையாய் விரியும்.
Post a Comment