Mar 12, 2019

கொங்கு மண்டலமும் குற்றங்களும்

தமிழகத்திலேயே கோவையில்தான் கல்லூரி மாணவர்களிடையே மிக அதிகளவு கஞ்சாவும், போதை மாத்திரைகளும் கிடைப்பதாக ஒரு பேராசிரியர் சொன்னார். தனியார் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் அவர். மிகைப்படுத்திச் சொல்கிறார் என நினைத்தேன். ஆனால் விசாரித்துப் பார்த்தால் அவர் சொன்னதில் உண்மையில்லாமல் இல்லை. மாணவர்களுக்கு எங்கிருந்தோ கஞ்சா கிடைக்கிறது. தனியார் மருத்துவமனைகளிலிருந்து மயக்க மருந்துகள் கடத்தப்பட்டு அவை ‘ஷாட்’களாக கல்லூரி மாணவர்களுக்கு விற்கப்படுகிறது. மிகச் சாதாரணமாக எக்ஸ்டெஸி மாத்திரைகளை வாங்குகிறார்கள். இப்படி இன்னமும் நமக்குத் தெரியாதவையெல்லாம் மாணவர்களுக்குச் சாத்தியமான சமாச்சாரங்கள்.

தமிழகத்தில் மிக அதிகளவிலான பண மோசடிகள் நடக்கும் ஊர்களில் திருப்பூரும் ஒன்று. கடன் வாங்கிவிட்டு தலைமறைவாவது தொடங்கி, செக் மோசடிகள், கந்துவட்டி என பட்டியல் மிகப்பெரியது. கொங்குப்பகுதியைச் சார்ந்தவன் என்ற முறையில் ஊர் மீதான பெருமிதம் இருந்தது. இங்கேயிருக்கும் மக்கள் மரியாதை தெரிந்தவர்கள்; பண்பானவர்கள் என்கிற எண்ணமெல்லாம் நிறைய இருந்தது. இன்னமும் இருக்கிறதுதான். வெள்ளந்தியான மனிதர்களைப் பார்க்கும் போதும், கிராமங்களில் வேளாண்மை செய்தும் பிழைத்துக் கொண்டிருக்கிறவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் அதே பகுதியில்தான் பணமே பிரதானம் என்று எந்தவிதமான அறமும் இல்லாமல் ஒரு பெருங்கூட்டம் மிக வேகமாக வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. 

அறமில்லாத இடத்தில் எல்லோருமே வெட்டுப்படுவதுதான் நியதி. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. 

‘குற்றங்கள் எல்லா ஊர்களிலும்தான் நடக்கிறது. இன்றைக்கு ஒரு பிரச்சினை பூதாகரமானவுடன் இந்தப் பகுதியே அப்படித்தான்னு சொல்ல வேண்டுமா?’ என்று கோபம் வரத்தான் செய்யும்.  ஆனால் இதையெல்லாம் எப்பொழுது பேசுவது? ஒரு பிராந்திய மனநிலை என்றிருக்கிறதல்லவா? அங்கே நிலவும் பொது உளவியல் என்ன என்பது பற்றியதான விவாதங்கள் அவசியமில்லையா? புனிதமான பிம்பங்களை உடைத்து உண்மையிலேயே என்னதான் பிரச்சினை என்று புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.  

நான்கு பேர்கள் நல்ல மனிதர்கள் என்றால் அதில் ஒருவராவது கபட எண்ணம் கொண்டவராக இருக்கிறார். மற்ற நான்கு பேர்களைப் போலவே அவர்களும் தும்பைப்பூ வெண்மையில் உடை தரித்து, ஆன்மிகம், கடவுள் எனப் பேசி மதத்தையும், சாதியையும், பணத்தையும் முகமூடியாகத் தரித்துக் கொள்கிறார்கள். மற்ற நான்கு பேர்களும் இவரை நம்பத் தொடங்குகிறார்கள். மற்றவர்களிடம் இந்த வேடதாரியைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறார்கள். அதைப் பார்க்கும் பிற சல்லிகளும் அதே வேடங்களை இம்மி பிசகாமல் ஏந்திக் கொள்கிறார்கள். இப்பொழுதெல்லாம் யாரையும் நல்ல மனிதர் என்று நம்புவதைவிடவும், பார்க்க பாந்தமானவராக இருக்கிறார் என்று கருதுவதைவிடவும் ‘தமது எல்லாவிதமான குற்றவுணர்ச்சிகளையும் மறைப்பதற்கான வேடமாகவும், நியாயப்படுத்துதலாகவும் இப்படியொரு தோற்றத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு பேசித் திரிகிறார்களோ’ என்று பதற்றமாக இருக்கிறது. அதற்கேற்ற வேடங்களில் பொருத்தமானவற்றை இந்தப் பகுதியே வழங்குகிறது.

அரிவாளை எடுத்து வெட்டி வீசுகிறவர்களைவிடவும் சாந்தமானவர்களாக நடிக்கிறவர்கள் பேராபத்துக் கொண்டவர்கள். கொங்கு மண்டலம் முழுக்கவும் அப்படியானவர்கள் விரவியிருக்கிறார்கள் என்று நினைக்கும் போதே மனம் பதைபதைக்கிறது.

இன்னொரு புள்ளியையும் பார்க்க வேண்டியிருக்கிறது. அறம் சார்ந்து சம்பாதிப்பவர்களும் கூட ‘சம்பாதிப்பதெல்லாம் நம் பிள்ளைக்குத்தானே’ என்று  ஏகபோகமாக வாரி வழங்குகிறார்கள்.  அறம், வாழ்க்கை நெறிமுறைகள் என்பதையெல்லாம் தாண்டி ‘சந்தோஷமா இரு கண்ணு’ என்று தமது பிள்ளைகளுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். பணம் கொழிக்கும் ஓர் இளம் சமூகம் என்ன செய்வதென்று தெரியாமல் தறிகெட்டுத் திரிகிறது.  ஒரு கூட்டத்தில் தீய வழிக்கான தேடல்களோடு இருப்பவர்கள் இரண்டு பேர் இருந்தால் போதாதா? இன்னமும் நான்கு பேர்களை வளைத்துக் கொள்வார்கள். பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது. நாளை அவன் சம்பாதிக்கும் போது ‘எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்’ என்றே முழுமையாக நம்புகிறான்.

அரையும் குறையுமாக பிரச்சினைகள் பற்றித் தெரிய வந்தாலும் கூட ‘நம் பையன் இதைச் செய்ய மாட்டான்; நம் பொண்ணு இதைச் செய்ய மாட்டாள்’ என்று நம்புகிற பெற்றோர்களே அதிகம்.  அப்படியே நம்பினாலும் கூட ‘வயசு அப்படி..போகப் போக சரியாகிடும்’ என்று அதைவிடவும் அதிகமாக நம்புகிறார்கள். இவற்றையெல்லாம்தான் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதிகாரம், கொழிக்கும் பணம், எதையும் மூடி மறைத்துவிட முடியும் என்கிற தைரியம், கட்டற்ற சுதந்திரம், காமம், போதை, தொழில்நுட்பம் என பல தரப்பும் ஒரு தலைமுறையையே சிதைத்துக் கொண்டிருக்கிறது. பணம் இருந்தால் பிற எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என இன்னொரு கூட்டம் இதே மண்ணில்தான் மேற்சொன்ன எல்லாவற்றையும் தமக்கு ஏற்றபடி வளைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல வாய் நிறைய மரியாதையோடு அழைக்கும் மனிதர்கள் மட்டுமே நிறைந்த பிரதேசமாக இல்லை. மோசடிக்காரர்களும், அதிகார வெறி கொண்டவர்களும், சாதியப் பித்து ஏறியவர்களும், மதத் துவேஷம், இவற்றையெல்லாம் வர்த்தமாக்கத் தெரிந்து கொண்டவர்களும் நிறைந்து பெருகிக் கொண்டிருக்கும் களமாக மாறிக் கொண்டிருக்கிறது கொங்கு மண்டலம். இப்படியான அயோக்கியர்கள் அத்தனை பேருக்கும் நன்கு வேடம் அணியத் தெரிகிறது. அதே மரியாதை நிறைந்த வார்த்தைகளுடன் அன்பு குழையப் பேசத் தெரிகிறது. இப்படியான சூது நிறைந்த மனிதர்கள் சேர்ந்து ஒரு பகுதியின் பிராந்திய மனநிலையைக் கட்டமைக்கிறார்கள். ‘எந்த வரைமுறையில்லாமல் சம்பாதிக்கலாம். சம்பாத்தியம் மட்டுமே முக்கியம்’ என்று பிறரையும் நம்ப வைக்கிறார்கள். இங்கு நிலவும் நிலைகுலையச் செய்யும் மோசடிகளுக்கும், அத்துமீறல்களுக்கும் இப்படிக் கட்டமைக்கப்படும் பொது உளவியலே முழுமையான காரணம் என்று தீர்க்கமாக நம்பலாம். ‘புதுக்கோட்டையிலும் ராமநாதபுரத்திலும் கொலை செய்தவனெல்லாம் தப்பிச்சு வந்து இங்கே பனியன் கம்பெனியில் வேலை செய்கிறான்; அதனால்தான் குற்றச் செயல்கள் அதிகமாகிவிட்டன’ என்று அடுத்தவர்கள் மீது பழியைப் போடுவதும் கூட ஒருவிதமான தப்பித்தலே. நாம் எல்லாவிதத்திலும் சரியாக இருக்கிறோமா என்றும் யோசித்துப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகியிருக்கிறது. 

கடந்த தலைமுறை வரைக்கும் குழந்தைகளுக்கு இவ்வளவு செகளரியங்கள் வழங்கப்படவில்லை. கேள்வி கேட்காமல் பணம் கொடுக்கப்படவில்லை. இரு சக்கர வாகனங்களும், கார்களும் கேட்காமலே கிடைக்கவில்லை. நீதி போதனை பேசினார்கள். திருக்குறளும், அறநெறிகளும் கற்பிக்கப்பட்டன. குடிப்பது அவமானம் என்ற பிம்பம் இருந்தது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பயப்பட வேண்டும் என்ற சூழல் இருந்தது. ஆசிரியர்களுக்கான சுதந்திரம் இருந்தது. திசை மாறும் பிள்ளைகளை அவர்கள் தண்டிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். குழந்தைகள் மீதான கண்காணிப்பு சற்றே வலுவாக இருந்தது. அதுதான் சமூகத்திற்கான பொதுவான மனநிலையை உருவாக்குவதாகவும் இருந்தது.  இன்றைக்கு எல்லாவற்றையும் உடைத்து வீசியிருக்கிறோம். பக்கத்து வீட்டுப் பையன், எதிர்வீட்டுப் பெண் என பிறரை அளவுகோலாக வைத்துத்தான் நம்முடைய முடிவுகள் இருக்கின்றன. ஆசிரியர்கள், பள்ளிகள் என்பதைவிடவும் தொழிலும் வருமானமுமே உளவியல் கட்டமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. எந்தவிதமான கட்டுப்பாடுகளுமில்லாதவர்களுக்கு எதைப் பற்றிய யோசனையுமில்லாமல் போய்விடுகிறது. பின்விளைவுகள் பற்றியக் கவலையே இல்லாமல் ஆகிவிடுகிறது.

கட்டுப்பாடில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் குதிரையின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்தே தீர வேண்டும். நம்மை நம் பெற்றோர்கள் எப்படி வளர்த்தார்கள் என்று குறைந்தபட்சமாகவாவது சிந்திக்க வேண்டும். பணத்தைத் தாண்டி நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் நெறிகள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளாதவரைக்கும் சூழல் மோசமாகிக் கொண்டேதான் இருக்கும். ஆனால் அதெல்லாம் இனி சாத்தியமா என்றே தெரியவில்லை. எந்தவிதமான சுய உணர்வுமில்லாமல் ஓடுகிற வேட்டை நாயாக இந்தப் பகுதி மாறிவிட்டது என்றுதான் தோன்றுகிறது.

16 எதிர் சப்தங்கள்:

Wanderer said...

மிகச்சரி. நேற்று என் அம்மா என்னிடம் "பையனோட பத்தாவது பர்த்டே வருதேப்பா, பாரினில் இருந்து அண்ணன் வரும்போது ஐபேட் வாங்கி வரச் சொல்லட்டுமா?" என்று கேட்டதும் தூக்கி வாரி போட்டது. நான் அவனுக்கு gadgets வாங்கித் தந்ததே இல்லை. ஏனென்று கேட்டதற்கு, "அபார்ட்மென்ட் ல இருக்கும் மத்த பசங்கள்லாம் வச்சிருக்கிறதை பார்த்து குழந்தை ஏங்கி போய்டுவான்" றாங்க.

மூணு பசங்களை பற்றாக்குறை பட்ஜெட்டில் வளர்த்த எங்கம்மாவுக்கே பென்ஷன் வாங்கும் காலத்தில் இப்படி தோன்றுவது ஆச்சர்யமும், பயமும் தந்தது.

பழனிவேல் said...

அண்ணா...இவற்றை கேக்கும் போது மனம் கனக்கிறது. பணம் மட்டுமே பிரதானம் என எண்ணும் மக்கள் மனங்களை மாற்ற வேண்டும். அறம் விளைந்த பிள்ளைகளாய் உருவாக்க வேண்டும்.

Anonymous said...

True

Anonymous said...

வாழ வேண்டும்... சந்தோசமா வாழ வேண்டும்.

ஏங்க வைக்கிறது இந்த காலங்களில்!!!!

Kutti said...

நாம் படிக்கும்பொழுது நன்னெறி வகுப்புகள் இருந்தன...இப்பொழுது அவை எங்கே இருக்கிறது...

சேக்காளி said...

//அதெல்லாம் இனி சாத்தியமா என்றே தெரியவில்லை//
ஆமாம். பூமி சுழன்று கொண்டே இருக்கிறது.ஆனால் ஒரு நாளும் பின்னோக்கி சுழலாது.

jasdiaz said...

You have left an important point i.e peer pressure. If your child's friend is having an iPhone and if you refuse a phone to your child your child will hate you and may go to any extent to blackmail you. I know school children threatening their parents that they will jump from the terrace if they don't get the phone.

Alad said...

It may sound silly, But the issue is younger generation is not given enough exposure to the environment.

15 years back entertainment for boys were sports and roaming. 90 % used to go out and have fun. Now only 2 % to 5 % doing sports and roaming.

This brings the physical body to a stage where no calm and lazy. Since they are scratching screen, they are intended search ecstasy, then blah blah blah..

If their body is tired and fresh, no need for additional ecstasy. So the younger generation must go out and see the world and bind with it.

The Society's responsible is to make such environment. It is not based on area or surroundings, its based on how they physically lives.

Unknown said...

அந்த பகுதியில் வேலை செய்தவன் என்ற வகையில் எனது சில கருத்துகள் :
இங்கு அனைவரும் (தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவரும்) பணத்தை பற்றியே பேசி கொண்டு இருப்பார்கள். எந்த நிகழ்வையும் பணத்துடன் ஒப்பிட்டு கொண்டே இருப்பார்கள். என்னுடைய பதினொன்று வருட காலத்தில் அறம் அழிந்து கொண்டு இருந்ததை நேராக உணர்ந்தேன். பேச்சு மட்டுமே இனிமயாக இருக்கும் அதுவும் தேவைபடும் நேரங்களில் மிக இனிமையாக இருக்கும். இது அவர்கள் பொருளாதார வளர்ச்சிக்கான உத்தியாக வழி வழியாக கொண்டு செல்ல படுவதாக தான் நினைத்தேன். இன்று அவர்கள் வளர்ச்சி தலைகீழ் நிலையில் செல்கிறதையும் பார்க்கிறேன் இது அவர்களின் அறமற்ற செயல்களால் ஏற்பட்டதே என்பதை எனது நம்மிக்கை. ஆனால் இவ்வளவு கேவளமான செயல்களை செய்யும் கூட்டம் உருவாகும் என கனவிலும் நினைத்தது இல்லை இது மிகவும் அதிர்ச்சி தரும் விசயம். மகிழ்ச்சியின் உண்மை அர்த்தத்தை அனைவரும் தெரிந்து கொள்ளாமல் மாற்றம் ஏற்பட வழியில்லை.

shiva said...

இது ஒரு பிராந்திய பிரச்சினை மட்டுமல்ல ஒப்புநோக்க கொங்கு பகுதியில் இது அதிகமாக இருக்கிறது. அவ்வளவே

Selvaraj said...

தனக்கு கிடைக்காதது தன் பிள்ளைக்கு கிடைக்க வேண்டுமென்று பெற்றோர் நினைப்பதில் தவறில்லை ஆனால் அது உணவு,கல்வி,உடை , இதற்காக மட்டுமே இருக்கவேண்டும். 'எனக்க நாலு வயசு பிள்ள மொபைல்ல என்ன மாதிரி நோண்டுவான் தெரியுமா' என்று சிலாகிக்கும் பெற்றோர்கள் மிக அதிகம். இப்போதெல்லாம் ஒரு குழந்தை இரு குழந்தை இருக்கிறவர்கள் குழந்தைகளை தண்டிக்கவே பயப்படுகிறார்கள். நாம் தண்டித்தால் தற்கொலை செய்துகொள்வார்களோ என்று பயப்படுகிறார்கள்.முன்பு வீட்டில் அப்பா அம்மாவை தவிர அண்ணனை கண்டால் பயம் இருந்தது அக்காளை கண்டால் பயம் இருந்தது, சித்தப்பா, மாமாவை கண்டால் பயம் இருந்தது. இப்போது யாரை கண்டும் பயமில்லை. (அண்ணன் அக்காவை கண்டு பயப்பட இப்போது வாய்ப்பும் இல்லை).

Anonymous said...

Whenever i come across the incidents like murder, theft, rape and torture of women and children i could not tolerate that, some times i get frustrated also, why the world is like this??????. In one Tamil movie one dialogue was like this...."THIRD WORLD WAR HAS ALREADY STARTED AND SILENTLY GOING ON IN THE NAME OF CRIME AGAINST CHILDREN AND WOMEN", I fear whether it is 100 or 200 percent true by reading these kind of news. Our ancestors had given lots of good things, why? they might have known that this society may go to an extreme end.

What can we do about this? Whether getting involved in some actions, whether to get angry and discuss with others, whether take care of victims, whether to punish the accused by our self, whether to make awareness about these kind of happenings, or what else can we do? a big question mark comes in front of us and gets disappeared after some days. After all we will go to our work and will have our own problems.

As a common man without power and much money, we can do only one thing, we can lead a life with principle (suyamariyadhaiyaana vaalkai). To our own self we have to be honest and our life should inspire others in the creative way. We have to win our inner conflicts for prosperous and happy life, like we used to wish on new year and birthdays. We no need to worry about anything (whether our relatives or family members are not hearing or following us),some times good family can have good or bad children and good person may come from unhealthy family situation also. Nothing going to change in this world including our anger and worries. Only thing in our hand is our life.....so lets live our life with principle and inspire others to live like that.

sornamithran said...

மிகச்சசரியான கட்டுரை

Anonymous said...

வெள்ளந்தியான கொங்கு பகுதியில் இது மிக மிக அதிகமாக இருக்கிறது. பொறாமை. போட்டி மனப்பான்மை, எப்படியாவது பணம் காசு சம்பாதிக்கலாம். 20 வருடங்களுக்கு முன்னாடி இப்படி இல்லவே இல்லை .

Rathnavel Natarajan said...

கட்டுப்பாடில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் குதிரையின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்தே தீர வேண்டும். நம்மை நம் பெற்றோர்கள் எப்படி வளர்த்தார்கள் என்று குறைந்தபட்சமாகவாவது சிந்திக்க வேண்டும். பணத்தைத் தாண்டி நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் நெறிகள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளாதவரைக்கும் சூழல் மோசமாகிக் கொண்டேதான் இருக்கும். ஆனால் அதெல்லாம் இனி சாத்தியமா என்றே தெரியவில்லை. எந்தவிதமான சுய உணர்வுமில்லாமல் ஓடுகிற வேட்டை நாயாக இந்தப் பகுதி மாறிவிட்டது என்றுதான் தோன்றுகிறது. - அருமையான, பயனுள்ள செய்திகள் அடங்கிய பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு vaamanikandan@gmail.com

Joe A said...

Rightly said. Its not in one specific area but widespread in TN.. may be the intensity not same but trending towards money can be earned w/o any ethics and earned money is used as force on get things done w/o any ethics (personal or business based crime and violence), using money as exchange mechanism.