Mar 5, 2019

சின்னச் சின்ன மழைத்துளிகள்

நிசப்தம் அறக்கட்டளை சார்பில் இதுவரைக்கும் சற்றேறக்குறைய ஐம்பது பள்ளிகளில் நூலகங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். சில பள்ளிகளில் குறிப்பேடு போட்டு எந்த மாணவன் எந்தப் புத்தகத்தை எடுத்துச் செல்கிறான் என்றெல்லாம் மிகச் சரியாக பின் தொடர்ந்து கவனிக்கிறார்கள். நூறு பேர் படிக்கும் பள்ளியில் அதிகபட்சமாக ஐந்து பேருக்கு வாசிப்புப் பழக்கம் உருவாகக் கூடும். இன்றைய காலகட்டத்தில் ஐந்து சதவீதம் பேர் பாடத்தைத் தாண்டி வாசிக்கிறார்கள் என்பதே மிகப்பெரிய விஷயம்தான். 

ஏன் குழந்தைகள் வாசிக்க வேண்டும்? எளிய பதில்தான். ‘இதுதான் யானை’ என்று டிவியிலும் கணினியிலும் காட்டிவிட்டால் குழந்தை அதற்கு மேல் யானை குறித்து கற்பனை செய்வதில்லை. அதையே வாசிக்கும் போது யானையின் முழு உருவத்தையும் தனது மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்துகிறது குழந்தை. அதன் காதுகளும், தந்தங்களும் குழந்தைகளின் கற்பனையில் வடிவம் பெறுகின்றன. இப்படியாக வாசிப்பில் ஒவ்வொரு வரி நீளும் போதும் குழந்தையின் கற்பனை நீளும். அறிவு வளர்ச்சியின் அடிப்படையே கற்பனையின் நீட்சிதான்.

இந்த ஆர்வமே குழந்தையின் வாசிப்பைத் தொடங்கி வைக்கும். அதன் பிறகு குழந்தையின் தேடலைப் பொறுத்து, அமைகிற சூழலைப் பொறுத்து வாசிப்பு நீளக் கூடும். 

‘இருக்கிற பாடமே குழந்தைகளுக்கு அதிகம்...அதனால் தொடக்கப்பள்ளிகளில் நூலகம் அவசியமில்லை’ என்கிற ரீதியில் அமைச்சர் பேசிய போது எப்படி நொந்து கொள்வதென்று தெரியவில்லை. ஆனால் இது பற்றியெல்லாம் பெரிய அளவில் விவாதம் நடத்தமாட்டார்கள். நடத்தினாலும் பலனில்லை என்பது நமக்கும் தெரியுமல்லவா? தொலையட்டும்.

சரியான தலைமையாசிரியர் மட்டும் இருந்துவிட்டால் பள்ளிகளில் நூலகம் அமைத்துத் தருவதுதான் நாம் குழந்தைகளுக்குச் செய்யக் கூடிய மிகப்பெரிய உதவியாக இருக்கும். கணினி, விளையாட்டுச் சாதனங்கள், ஸ்மார்ட் வகுப்பறை என்பதெல்லாம்  அடுத்தடுத்த முன்னுரிமைதான். எந்தக் கல்வியாளரும், குழந்தைகள் நலன் குறித்தான வல்லுநர்களும் மறுக்கமாட்டார்கள் என நம்புகிறேன். மிக எளிய குடும்பத்திலிருந்து, கிராமப்புற பின்னணியிலிருந்து மேலே வந்து வெற்றியாளராக இருக்கிறவர்களுக்கு நிச்சயமாக வாசிப்பு பழக்கம் இருக்கும். உங்களுக்குத் தெரிந்தவர்களையெல்லாம் மனதில் கொண்டு வந்து பார்க்கலாம்.  

நிசப்தம் சார்பில் நூலகங்கள் அமைத்துத் தரப்பட்ட பள்ளிகளில் பகுத்தம்பாளையமும் ஒன்று. அதன் பிறகு பள்ளியினருடன் தொடர்பில்லை. கடந்த வாரம் உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்ட போது பள்ளிகளிலும் கொண்டாடியிருக்கிறார்கள். பகுத்தம்பாளையம் என்ற ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் சில வீடியோக்களைப் பதிவு செய்து அவர்களது ஃபேஸ்புக்கிலும் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். பெரும்பாலும் ஒரு காரியத்தைச் செய்துவிட்டு வரும் போது ‘என்ன நடக்குதோ ஏது நடக்குதோ’ என்ற சந்தேகம் இருந்து கொண்டேயிருக்கும். எல்லோரும் நம்மிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது. தொண்ணூற்றொன்பது சதவீதம் பேர் தொடர்புக்கே வர மாட்டார்கள். ஆனால் நம்மை நினைவில் வைத்திருந்து உதவிகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். அப்படியான உதாரணம் இது.

ஆசிரியர் ஒருவர் இந்த வீடியோப் பதிவுகளை வாட்ஸாப்பில் அனுப்பியிருந்தார். உள்ளபடியே மிக்க மகிழ்ச்சி. 
(சலனப்படங்களை ப்ரவுசரில் பார்க்கவும்)

பகுத்தம்பாளையம் ஆசிரியர்களுக்கு நன்றி. தம்பிகளுக்கு வாழ்த்துகள்.  நம்மில் பலரும் இப்படித்தான் இருந்திருப்போம் என நினைக்கிறேன்.  தம்பிகள் மிகப்பெரிய உயரங்களை அடைக!

4 எதிர் சப்தங்கள்:

மதுரை சரவணன் said...

தொடர் வாசிப்பினை உருவாக்ஙத் தொடக்கப் பள்ளி அளவிலே வாசிப்பை உருவாக்க வேண்டும். தாங்கள் வழங்கிய புத்தகங்கள் மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி. தொடர்பு என்பது செயலில் இருப்பதால் தொடர்பை பெரிதுபடுத்தவில்லை. மன்னிக்கவும்.

Unknown said...

Super.

சேக்காளி said...

ஜெய் நிசப்தம்!

Jaypon , Canada said...

ஆஹா அருமை. ஆனா காக்கா கதையை ஆர்வமா கேட்டுட்டு இருந்தேன். பாதில நின்றதும் பொசுக்குனு ஆயிடுச்சு.

நூலகம் தேவையில்லையா? நம்மஅமைச்சர்களிடம் வேற என்ன எதிர்பார்க்க முடியும்.