Mar 4, 2019

தெற்குப்பதி

தெற்குப்பதி பற்றி எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். மிகச் சிறிய ஊர். ராஜேந்திரன் அந்த ஊர்தான். நிசப்தம் உதவியில் படித்தவன். சூப்பர் 16 மாணவர். இப்பொழுது ஐ.ஐ.டியில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர். ‘படிச்சுட்டு போனா மட்டும் பத்தாது..நம்மூருக்கு ஏதாவது செய்யணும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தவன். உள்ளூர் இளைஞர்களும் தீக்குச்சிகள் மாதிரி- படித்தவர்கள். பொது நல ஆர்வம் கொண்டவர்கள். 

ஒரு நாள் உள்ளூர் கோவிலில் அமர்ந்து பேசினோம். அந்தச் சமயத்திலேயே பொங்கல் விழா கொண்டாடிவிட்டு நாற்பத்தைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்துவிட்டு வந்திருந்தோம். உள்ளூர் இளைஞர்களும் பெண்களுமே பொறுப்பெடுத்து செடிகளை பராமரிக்கிறார்கள்.

‘தண்ணீர்தான் பிரச்சினை..இல்லைன்னா இன்னமும் கொஞ்சம் அதிகமாக செடி வைக்கலாம்’ என்றார்கள். அந்த ஊரில் நிறைய மரங்களை நட்டு வளர்க்க முடியும். அதற்கான இடமும் இளைஞர்களும் இருக்கிறார்கள். ஆனால் தண்ணீரைச் சேகரித்து வைக்கும்படியான வசதி இல்லை. ஒரு நிலத் தொட்டி கட்ட வேண்டும் என்றார்கள். பத்தாயிரம் லிட்டர் நீர் கொள்ளளவு கொண்ட நிலத்தொட்டியைக் கட்ட சுமார் அறுபதாயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். 

‘நீங்கள் பாதிச் செலவை பொறுப்பெடுத்துக் கொண்டால் மீதத் தொகையை நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து வழங்கலாம்’ என்று சொன்னேன். கடந்த காலத்தில் பொதுக்காரியங்களில் கற்றுக் கொண்ட பாடம் ஒன்று உண்டு என்றால் அது இதுதான். குறைந்தபட்ச பங்களிப்பாவது அந்தப் பகுதி மக்களிடமிருந்து இருக்க வேண்டும். உள்ளூரில் உள்ள அத்தனை பேரும் தயாராக இருக்க மாட்டார்கள். ஆனால் பத்து அல்லது இருபது பேராவது தங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்ய வேண்டும். நாம் எங்கேயோ இருந்து செல்கிறோம். பணத்தைக் கொடுக்கிறோம் பிறகு வந்துவிடுகிறோம். அந்த ஊர்க்காரர்களும் நிகழ்ச்சித் தொடக்கத்தில் வந்து சிரித்துவிட்டு கண்டுகொள்ளாமல் போய்விடுவார்கள். சிலரேனும் தங்கள் பங்களிப்பைச் செலுத்தியிருந்தால் ‘நமக்கும் உரிமை இருக்கு’ என்று களத்தில் நிற்பார்கள். அதுதான் அவசியமும் கூட.தெற்குப்பதிக்கார இளைஞர்கள் முப்பதாயிரம் ரூபாய் திரட்டிவிட்டார்கள். மீதம் முப்பதாயிரம் ரூபாயை நிசப்தம் அறக்கட்டளையின் காசோலையாகக் கொடுத்திருக்கிறோம். கடந்த வாரத்தில் பூமி பூஜை செய்து பணியைத் தொடங்கிவிட்டார்கள். பத்து நாட்களில் பணி முடிந்துவிடக் கூடும் என நினைக்கிறேன். பஞ்சாயத்து நீர் தினசரி வருகிறது. அந்தக் குழாயைத் தொட்டியில் இணைத்துவிட்டால் தொட்டி நிரம்பிவிடும். தொட்டியிலிருந்து நீரை மேல் தொட்டிக்கு ஏற்றுவதற்கான மேல்நிலை ப்ளாஸ்டிக் டேங்க், மின் மோட்டார் இணைப்புகளை ஏற்பாடு செய்து கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். 

கோடை காலம் முடிந்த பிறகு அநேகமாக ஜூன் மாதத்தில் இன்னமும் ஐம்பது மரங்களை தெற்குப்பதியில் நட்டுவிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். 

கடந்த வாரத்தில் ஒரு கல்லூரியிலிருந்து அழைத்திருந்தார்கள். ‘நாம சேர்ந்து பணியாற்றுவோம்’ என்று சொன்னார்கள். நாசூக்காக மறுத்துவிட்டேன். உதிரிகளாகச் செயல்படுகிறவர்களுடன் இணைந்து செயல்படுவதுதான் சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது. பெரிய காரணமெல்லாம் எதுவுமில்லை- இத்தகைய பணிகள் யாவும் சமூகத்தைப் புரட்டிப் போட்டுவிடப் போவதில்லை. மெல்ல மெல்ல நம்மால் செய்ய முடிகிற ஒரு விழிப்புணர்வு என்பதைத் தாண்டி இதில் எதுவுமில்லை. நம்முடைய ஆத்மார்த்தமான திருப்திக்குச் செய்கிறோம். அவ்வளவுதான். பெரிய அமைப்புகளுடன் சேர்ந்து செய்து அதில் கிடைக்கும் விளம்பரம், வெளிச்சம் இவையெல்லாம் நம் நோக்கத்தைச் சிதைத்துவிடக் கூடும் என்றும் தயக்கமாக இருக்கிறது. விளம்பரமில்லாமல் பெரிய அமைப்புகளால் செயல்களைச் செய்ய முடியாது என்றும் உறுதியாகத் தெரியும்.

இதே அளவில்- சிறு வட்டத்திற்குள்ளாகவே ஆனால் மனப்பூர்வமாகப் பணியாற்றலாம். 

அம்மா இல்லாத பெண்ணொருத்தி வெகு தீவிரமாக ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்குத் தயாரிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறாள். தினசரி வாட்ஸாப்பில் தமது குறிப்புகளை அனுப்பி வைத்துவிடுகிறாள். காலையில் அப்பாவுக்கு சாப்பாடு செய்து கொடுத்துவிட்டு கல்லூரிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி வெறியெடுத்த மாதிரி படித்துக் கொண்டிருக்கிறாள். அவளைக் கை தூக்கிவிடுவதைவிடவுமா பெரிய அமைப்புகளுடன் சேர்ந்து நாம் சாதனைகளைச் செய்துவிடப் போகிறோம்? ராஜேந்திரனின் வாழ்வில் ஒளியேற்றுவதைவிடவுமா அமைப்பாகத் திரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும்? 

இப்படியே பயணிப்போம். இத்தகைய சிறு சிறு திருப்திதான் உளப்பூர்வமான திருப்தி. தெற்குப்பதி நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
நிசப்தம் நண்பர்களுக்கு நன்றிகள்.

10 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

மூலையில் இரண்டு நாற்காலிகள் இருக்கே..ஏன் கீழே உட்கார்ந்திருக்கீங்க? ஃபோட்டோவுக்காகவா?

Vaa.Manikandan said...

கூட்டத்திற்குச் சென்றிருந்த போது அங்கு இரண்டு அல்லது மூன்று நாற்காலிகள்தான் இருந்தன. நாம் மட்டும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு மற்றவர்களை கீழே அமரச் சொல்வது எப்படி நாகரிகமான செயலாக இருக்க முடியும்? அதனால் கீழேயே அமர்ந்து கொள்ளலாம் என்று அமர்ந்து கொண்டோம்.

(ஃபோட்டோவுக்கு வேண்டியாக இருந்தால் முகம் தெரிவது போன்ற படத்தைத்தானே போட்டிருப்பேன்..எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கறீங்களோ?!)

Anonymous said...

Mani sir... ippadilaam yosipaangalo nu irukku...I think that guy is personally affected...Samathuvam....

Jaypon , Canada said...

எப்படித்தான் யோசிக்கிறாங்களோனு நினைப்பதை விட இப்படி யோசிப்பவர்களும் இருக்காங்கனு சிரிச்சுட்டு போய்க்கிட்டே இருங்க. தன்னிலை விளக்கம் கூட உங்களை நியாயப்படுத்துவதற்கு இல்லை அவர்களுக்கு சரியான பார்வையை காட்டவே தவிர வேறு எதற்கும் இல்லை. ஒரு கட்டத்தில் சமூக பணியில் இருக்க இருக்க இந்த பக்குவம் வந்துடும்.

அருமை. வாழ்த்துக்கள்.

Felix said...

அடர்வனம் பற்றிய ஒரு update சொல்லுங்க

சேக்காளி said...

//அவளைக் கை தூக்கிவிடுவதைவிடவுமா பெரிய அமைப்புகளுடன் சேர்ந்து நாம் சாதனைகளைச் செய்துவிடப் போகிறோம்?//
பாரதியின் வாக்கு செயலாகிறது.

Kalaivani said...

மனமார்ந்த வாழ்த்துக்கள். "சிறு சிறு திருப்திதான் உளப்பூர்வமான திருப்தி." உங்களுக்கு சிறிய திருப்பிதியாக இருந்தாலும் அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள்

பழனிவேல் said...

அண்ணா... தங்களை பின்தொடர்ந்து பல பிள்ளைகள் வருகின்றன... ஆதலால் உங்கள் கருத்தையும், கணிப்பையும் மிகவும் மதிக்கிறேன்...
அருமை... நற்பணி நலமுடன் தொடருங்கள்....

Nanjil Siva said...

அருமை... நற்பணி நலமுடன் தொடருங்கள்....

Anonymous said...

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...