Mar 18, 2019

எதிர்பார்த்த வேட்பாளர்...

நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள்  கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. நான் எதிர்பார்த்த பெயர் ஒன்று விடுபட்டுப் போயிருக்கிறது. சத்யபாமா. திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர். கிட்டத்தட்ட 87% வருகைப்பதிவு, 137 விவாதங்கள், 457 கேள்விகள் என தமிழக எம்.பிக்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பணியாற்றியவர் அவர். பிற எம்.பிக்கள் என்ன செய்தார்கள் என்பதை பி.ஆர்.எஸ் இந்தியா என்ற தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். 

அவருக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்று எதிர்பார்த்தாலும் கூட, உள்ளூரில் அவருக்கு எதிரான அரசியல் உண்டு என்பது தெரிந்த விவகாரம்தான். 

மிகச் சாதாரணமாகவே சத்யபாமாவின் அரசியல் வாழ்வு தொடங்கியது. தொடக்கத்தில் யூனியன் கவுன்சிலர் பிறகு யூனியன் சேர்மேன் என்றிருந்தவருக்குக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வாய்ப்புக் கொடுத்தார். ஜெயலலிதாவுக்கு அவர் செல்லப்பிள்ளையும் கூட.  ஜெ. உயிரோடிருந்திருந்தால் சத்யபாமாவின் வளர்ச்சி தொடர்ந்திருக்கக் கூடும். ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சத்யபாமா தடுமாறியதைக் கண்கூடக் காண முடிந்தது. அந்தத் தருணத்தில்தான் அவரை எதிரியாகக் கருதிக் கொண்டிருந்தவர்கள் தலை தூக்கினார்கள். 

அரசியலில் நம்மை ஒருவர் நசுக்கத் தொடங்கும் போது நாமும் எதிர்க்கத் தொடங்கிவிட வேண்டும். அப்பொழுதுதான் மேலிடத்தில் வலுவற்று இருப்பவர்கள் ‘தேவையில்லாமல் இவரைப் பகைத்துக் கொள்ளக் கூடாது’ என்று நினைப்பார்கள்.  எம்.பியாக இருப்பவர் தமக்கென தனிப்பட்ட கூட்டம் ஒன்றை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் ‘நமக்கு எதுக்கு வம்பு?’ என்று அடங்கிப் போகத் தொடங்கினார். தமது எதிரிகள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் அவரும் கலந்து கொண்டார். சமாதானம் ஆகிக் கொண்டார்கள் என்றுதான் வெளியிலிருந்து பார்ப்பவர்கள் கருதினார்கள். ஆனால் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் வெளியில் அப்படிக் காட்டினாலும் உள்ளுக்கு கத்தியைக் கூர் தீட்டிக் கொண்டேதான் இருப்பார்கள். அந்தக் கத்தியை இப்பொழுது சத்யபாமாவின் அரசியல் வாழ்க்கையில் பதம் பார்த்திருக்கிறார்கள்.

கடந்த ஒன்றிரண்டு வருடங்களாகவே சத்யபாமா ஓரங்கட்டப்பட்டார். அவருக்கான முக்கியத்துவம் பெருமளவு குறைக்கப்பட்டது. நானறிந்த வரையில் சத்யபாமா பெரிய மேடை வேண்டும், கூட்டம் வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கிறவர் இல்லை. ‘ஒரு நிகழ்ச்சி இருக்கு வர முடியுங்களா மேடம்’ என்றால் எதைப் பற்றியும் கருதாமல் சரி என்று சொல்கிற வகைதான் அவர். அதேசமயம், ‘நான் வந்துடுவேன்..ஆனா உங்களுக்குத் தேவையில்லாத சிக்கல்’ என்றுதான் தயங்குவார். அவரை அழைத்து நிகழ்ச்சி நடத்தினால் அவரது எதிரிகளிடம் நாம் பகைமையைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார். அது உண்மைதான். ஆனால் அப்படி அவர் தயங்கியதுதான் அவருடைய மிகப்பெரிய பலவீனம் எனத் தோன்றியது. 

தனி ஆவர்த்தனம் நடத்தியிருக்க வேண்டும்; எந்த நிகழ்ச்சியென்றாலும் தயங்காமல் கலந்திருக்க வேண்டும். ‘எனக்கு சீட் கொடுக்கலைன்னா என்ன நடக்கும் தெரியும்ல’ என்று வெளிப்படையாகப் பேசாமல் காட்டுகிற அளவுக்கு வாய்ப்புகள் இருந்தும் அவர் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. எம்.பியாக தமது கடமையைச் செய்தவர், டெல்லியில் தொடர்ந்து அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பார்த்து மனுக்கள் வழங்குவதுமாக இருந்தவர் உள்ளூர் அரசியலில் ஏமாந்துவிட்டார். அவருக்கான வாய்ப்புகள் தட்டிவிடப்பட்டுவிட்டன. சமாதானமாகச் சென்றவரை இப்பொழுது முழுமையாக ஓரங்கட்டிவிட்டார்கள். 

அரசியலில் வாய்ப்பிருக்கும் போது வலுவேற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் ஆகும். இதற்கு மேல் இதைப் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

சத்யபாமா எம்.பி மீது விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. தமிழகம் பாதிப்புக்குள்ளான பொதுவான விவகாரங்களில் கட்சியை மீறி தம்முடைய குரலை எந்தவிதத்திலும் பதிவு செய்யவில்லை என்று அவர் மீது குற்றச்சாட்டு உண்டு. அது மிகச் சரி. ஆனால் கடந்த முறை நாம் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்த தமிழக எம்.பிக்களின் செயல்பாடுகள் என்னவென்று நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அந்தக் கூட்டத்தில் ஒன்று வெளியில் பிரகாசித்தது. தமது தொகுதிகளின் பிரச்சினைகளை அறிந்தவராக, அவற்றைக் களைவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டவராக சுழன்று கொண்டிருந்தார். அப்படிப்பட்டவர் நம்மூரில் இருந்து டெல்லி சென்ற உறுப்பினர் என்ற மகிழ்ச்சி கொஞ்சம் இருந்தது. 

அதையும் முடித்துக் கட்டிவிட்டார்கள். இந்த முறை திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுப்பராயனும் அதிமுக சார்பில் எம்.எஸ்.எம் ஆனந்தனும் போட்டியிடுகிறார்கள். இரண்டு பேருமே திருப்பூரைச் சார்ந்தவர்கள். கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை என நான்கு தொகுதிகளில் இருக்கும் மக்கள்தான் வெற்றியை நிர்ணயிக்கப் போகிறவர்கள். சத்யபாமா இருந்திருந்தால் இந்தத் தொகுதிகளில் போட்டி கடுமையானதாக இருந்திருக்கக் கூடும். தொகுதிக்கு பொருத்தமானவர், வெல்ல வாய்ப்பிருப்பவர் என்பதெல்லாம் பிரச்சினையே கிடையாது; தமக்கு எதிரி உருவாகிவிடக் கூடாது என்பதுதான் அரசியலாக இருக்கிறது.

5 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

நல்ல பெயரோடு இருக்க ஒரு வாய்ப்பு.

tirupurashok said...

Red fort is in Delhi?

Anonymous said...

Hope Subbarayan wins. Honest politician, at the least.

சோம. சிவ சங்கரன் said...

தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டால் சவரக்கத்தியின் கூர்மை போல இருக்க வேண்டும் போல.
//தமிழகம் பாதிப்புக்குள்ளான பொதுவான விவகாரங்களில் கட்சியை மீறி தம்முடைய குரலை எந்தவிதத்திலும் பதிவு செய்யவில்லை என்று அவர் மீது குற்றச்சாட்டு உண்டு.// இந்த காரணத்துக்காக தான் ஒரு சாரார் வேட்பாளரை வைத்து மட்டும் வாக்களிப்பது சரியல்ல என்கின்றனர். எப்படி பார்த்தாலும் வேட்பாளர் மக்கள் பிரதிநிதியாக ஆன பின் தனி மனிதராக செயல்பட்டதாக சரித்திரம் இல்லை. கட்சி தாவல் தடைச் சட்டத்தில் நமது சட்டத்தின் பார்வையும் அதுவாகவே உள்ளது. தேர்தலில் ஆள் பார்த்து வாக்களிப்பதா கட்சி பார்த்து வாக்களிப்பதா என்பது ஒரு நீண்ட விவாதமே .

Anonymous said...

When discussing politics, people use their lowest possible IQ.. So I decided not to discuss politics..