Feb 28, 2019

திருமணச் சீர்கள்

பெங்களூரில் இருக்கும் வரைக்கும் நெருங்கிய உறவுகளில் திருமணங்கள் என்றாலும் கூட ஏதோவொரு தருணம் தலையைக் காட்டிவிட்டு ஓடுவதாகத்தான் இருக்கும். கோயமுத்தூர் வந்த பிறகு அப்படியில்லை. சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு திருமணத்தில் இரவு முழுக்கவும் சீர் செய்தார்கள். கொங்கு வேளாளர் (கவுண்டர்) இல்லத் திருமணம் அது. கொங்கு வேளாளர்களில் நூற்றுக்கும் அதிகமான கூட்டங்கள் உண்டு. அதில் சீர்களைச் செய்வதற்கென்றே முழுக்காதன் அல்லது சீர்க்காரர் கூட்டம் என்றொரு கூட்டமிருக்கிறது. அந்தக் கூட்டத்தைச் சார்ந்த அருமைக்காரர் (சீர் செய்கிறவர்களுக்கு அருமைக்காரர் என்று பெயர்) முந்தின நாள் மாலையில் தொடங்கி விடிய விடிய சீர்களைச் செய்தார். காதுகளை மறைத்தபடி உருமால் கட்டிக் கொண்டு கொஞ்சம் கூட சலிப்பில்லாமல் இரண்டு மூன்று உதவியாளர்களை வைத்துக் கொண்டு அவர் செய்த சீர்களை தூங்கி விழுந்து பிறகு எழுந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

சங்க காலத்தில் சீர்கள் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. சங்க இலக்கியங்களில் திருமணச் சீர்கள் குறித்தான குறிப்புகள் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனால் கால ஓட்டத்தில் திருமணம் மற்றும் வாழ்வியலில் சில வரைமுறைகளை உருவாக்க வேண்டியிருந்திருக்கும். திருமணங்களில் சாட்சிகளை உருவாக்கவும் மணமகன் மற்றும் மணமகளின் உறவுகளுக்குமான உரிமைகளை பகிர்ந்து கொடுக்கவும் சீர்களை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கக் கூடும். 

திருமணம் செய்யலாமா வேண்டாமா என்பது கூட ஜாதகத்தில் ‘குருபலன்’ பார்த்துத் தொடங்குவதில்லை. அப்படியே திருமணக் காரியங்களைத் தொடங்குவதில் சந்தேகமிருந்தால் கோவிலில் பூ கேட்டுத்தான் தொடங்கியிருக்கிறார்கள். சாமி சிலையின் மீது சிவப்பு வெள்ளை பூக்களை வைத்து மனமுருகி வேண்டும் போது மனதுக்குள் நினைத்த பூ விழுந்தால் சம்மதம் கிடைத்துவிட்டது என்று அர்த்தம்.

கொங்கு வேளாளர் திருமணச் சடங்குகளில் பெண் பார்க்கச் செல்வது என்பது வீட்டுக்குச் சென்று பாட்டுப்பாடச் சொல்வதெல்லாம் இல்லை. அநேகமாக தமிழகத்தின் பெரும்பாலான இனங்களில் இப்படித்தான் இருந்திருக்கக் கூடும். இன்றைக்கும் கூட கோவிலில் வைத்துத்தான் பார்க்கிறார்கள். கடந்த தலைமுறையில் ‘இந்நேரத்துக்கு சனிக்கிழமைச் சந்தைக்கு வருவா...பார்த்துக்கச் சொல்லுங்க’ என்பார்களாம். அந்த நேரத்தில் இவர்களும் சந்தைக்கோ கோவிலுக்கோ சென்று பார்த்துக் கொள்வார்கள். பெண்ணுக்கு அது சரியில்லை; இது சரியில்லை என்று நிராகரித்து அவளைப் புண்படுத்தி விடக் கூடாது என்பது கூடக் காரணமாக இருக்கலாம்.

ஒருவேளை பெண் பிடித்துவிட்டால் அதன் நிச்சயதார்த்தின் போது இருவீட்டாரும் எதிரெதிரில் அமர்ந்திருக்க மணமகள் வீட்டார் ‘என்ன சமாச்சாரமா வந்தீங்க?’ என்று கேட்கிறார்கள். மணமகன் வீட்டார் ‘பொண்ணு கேட்கலான்னு வந்தோம்’ என்று சொல்ல ‘எங்களுக்கு சம்மதம்’ என்று சொன்ன பிறகு இரு தரப்பும் வெற்றிலை மாற்றிக் கொள்கிறார்கள். ஒரு செம்பில் நீரெடுத்து ஊற்றிக் கொடுக்க அவர்கள் குடிக்கிறார்கள். அதே போல் மணமகள் தரப்பு நீர் ஊற்றிக் கொடுக்க மணமகன் வீட்டார் குடிக்கிறார்கள். இதுதான் நிச்சயதார்த்தம்.

அதன் பிறகு தாலிக்குத் தங்கம் கொடுப்பது, உப்பு சர்க்கரை மாற்றிக் கொள்ளுதல் - சந்தோஷத்திலும் துக்கத்திலும் இரு வீட்டாரும் கலந்துவிடுகிறோம் என்று அர்த்தம், கூறைப்புடவை எடுத்தல், சுற்றத்தாரைத் திருமணத்துக்கு அழைத்தல் என்று தொடர்கிறது. திருமணத்துக்கு முந்தின நாள் பட்டினிசாத விருந்து. மணமகனையும் மணமகளையும் அவரவர் இடங்களில் குளிக்க வைத்து உணவு உண்ண வைக்கிறார்கள். அதன் பிறகு இருவரும் தாலி கட்டிய பிறகுதான் சாப்பிட வேண்டும். ஆனால் இந்தக் காலத்தில் அது சாத்தியமில்லை. இந்தக் காலத்து திருமண வரவேற்பின் போது கோட் சூட், புடவை, பெரிய மாலை, மாலையின் மணம் என்று இருவரும் திணறிவிடுவார்கள் என்பதால் பட்டினியும் கிடக்கச் செய்தால் தாலி கட்டுவதற்கு முன்பாக இருவருக்கும் குளுக்கோஸ் ஏற்ற வேண்டியதாகிவிடும். 

திருமண நாளின் போது சீர் தண்ணீர் கொண்டு வருவது தொடங்கி, கணபதி வணக்கம், மணமகனுக்கும் மணமகளுக்கும் காப்புக் கட்டுதல்- ‘என்னதான் பிரச்சினை வந்தாலும் திருமணத்தை முடித்தே தீருவோம்’ என்று காப்புக் கட்டி உறுதி ஏற்றுக் கொள்கிறார்கள். ஆக்கை சுற்றிப்போடுதல்- புளிய மரத்துக்குச்சியை ஒரு தடுப்பு மாதிரி செய்து அதற்குள் மணமகனை நிறுத்துகிறார்கள்- இனிமேல் நான் இவளுக்காக வாழ்க்கையில் கட்டுக்கோப்புடன் இருந்து கொள்வேன் என்று அர்த்தம் என்று இரவு பனிரெண்டு மணி ஆகிவிடுகிறது.

அதன் பிறகு செஞ்சோறு அடை கழித்து, உருமால் கட்டி, குப்பாரி கொட்டி- இந்தச் சடங்கின் போது பறை அடித்து, கொம்பூத மணமகன் திருமண அறிவிப்பை ஊருக்குச் செய்கிறான், நிறை நாழி சீர் செய்து- நிறை நாழி என்பது படி நிறைய நெல் நிரப்பி, ஒரு ஊசியில் நூல் கோர்த்து அதை நெல்லுக்குள் நட்டு வைத்திருப்பார்கள். படியைப் போல வாழ்க்கை நிறைந்திருக்க வேண்டும், ஊசி நூலைப் போல மணமகனும் மணமகளும் பிணைந்திருக்க வேண்டும்- டபுள் மீனிங்தான் என்றும் அர்த்தம். 

நாட்டுக்கல் வழிபாடு- எங்கள் ஊரில் இந்தக் கல் என்னவென்றே தெரியாமல் இன்னமும் இருக்கிறது.  வீரக்கல் என்பதுதான் நாட்டுக்கல். வீர தீரச் செயலில் இறந்து போனவர்களின் நினைவாக ஊரில் நட்டப்பட்டிருக்கும் கல்  இது. இதை மணமகனும் மணமகளும் வணங்குகிறார்கள். 

இப்படி இரவு முழுக்கவும் சீர்கள் நடந்தது. மொத்த சீர்களிலும் பாதிதான் இவை. இதன் பிறகு இணைச் சீர், தாயுடன் உண்ணல் என்று இன்னமும் பல சீர்களை நடத்தினார் அருமைக்காரர். ஒவ்வொரு சீர் பற்றியும் தனித்தனியாக எழுதலாம் என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றிலும் அர்த்தமிருக்கிறது.

தாலியைக் கூட அருமைக்காரர்தான் எடுத்துக் கொடுத்தார். கிழக்கு நோக்கி நின்று சூரியனை வணங்கி அவர் எடுத்துக் கொடுக்க, மணமகன் கட்டினார். 

முகூர்த்தம் முடிந்து  முடிந்து சீர்க்காரர் ஆசுவாசமாக அமர்ந்திருந்த போது ‘அடுத்த கல்யாணத்தை நீங்க எங்க நடத்தி வெச்சீங்கன்னாலும் சொல்லுங்க..நான் வந்து பார்க்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறேன். அவர் பெயரும் மணிதான். செம்புளிச்சாம்பாளையம், சீர்க்காரர் மணி என்றால் தெரியும் என்றார். திருமணத்தை நடத்தி வைக்க காசு எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை என்றார். பெரும்பாலான அருமைக்காரர்கள் இலவசமாகத்தான் செய்து வைக்கிறார்களாம்.  மீறிக் கொடுத்தால் ஏதாவதொரு கோவில் உண்டியலில் போட்டுவிடுகிற அருமைக்காரர்கள்தான் அதிகம்.

‘இந்துக்களின் திருமணங்கள்’ என்று பொத்தாம் பொதுவாக இந்துத்துவம் பேசுகிற நண்பர்கள் தயவு செய்து அவரவர் சாதியத் திருமணங்களின் சீர்களை ஒருமுறை ஆழ்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்துத்துவம் நமக்குச் சொல்லித் தந்திருக்கும் திருமண முறையும் அங்கு ஓதப்படுகிற மந்திரங்களும் நம் தமிழர் வாழ்வியலிலிருந்து நிறைய முரண்பாடுகளைக் கொண்டவை. இடையில் புகுந்தவை.

சீர்க்காரரிடம் ‘அய்யர்களை வைத்து மந்திரம் ஓதுற பழக்கம் எப்ப இருந்து வந்துச்சு?’ என்றேன். 

‘அது எனக்குத் தெரியலீங்க..நீங்கதான் கண்டுபுடிச்சு சொல்லோணும்’ என்றார். 

ஜாதகம், மந்திரங்கள், அய்யர்கள் எல்லாம் எப்பொழுது திருமணச் சடங்குகளுக்குள் நுழைக்கப்பட்டன என்று தேடினால் கடந்த சில நூறு வருடங்களுக்குள்தான் நிகழ்ந்திருக்க வேண்டும். அதுவே கூட சந்தேகமாகத்தான் இருக்கிறது. நூற்றுக்கணக்கான வருடங்கள் அய்யர்களை வைத்துத் திருமணங்களைச் செய்து கொண்டிருந்தால் இன்னமும் இந்தச் சீர்கள் வழக்கத்தில் இருக்க வாய்ப்பில்லை. அழிந்து போயிருக்கக் கூடும். ஆனால் இன்னமும் இவை வழக்கத்தில் இருக்கின்றன என்பதால் மேற்சொன்ன இந்துத்துவ சமாச்சாரங்கள் மிகச் சமீப உள்ளீடுகளாகவே இருக்க வேண்டும் என நினைக்கத் தோன்றுகிறது.

‘ராத்திரி பூராவும் யார் முழிச்சுட்டு இருக்கிறது?’ என்று சீர்களுக்குப் பயந்துதான் அய்யரை வைத்துத் தாலியைக் கட்டிவிடலாம் என்று மக்கள் மாறிவிட்டார்கள். நான்கு மணிக்கு முகூர்த்தம் என்றால் மூன்று மணிக்கு வந்து தாலி எடுத்துக் கொடுக்கும் அய்யர்களுக்கு பல்லாயிரம் ரூபாயை தட்சணையாகவும் கொடுக்கிறார்கள்.

ஆரியம் திராவிடம் தமிழ்தேசியம் என்கிற அரசியலை எல்லாம் விட்டுவிடலாம்.  உண்மையில், பாரம்பரியத்தைக் கடைபிடிக்க விரும்புகிறவர்கள் பழைய திருமண முறைகளைத்தான் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு சீருக்கும் ஒரு அர்த்தமிருக்கிறது. மணமகன் மற்றும் மணமகளின் வாழ்வியல் நெறிகளை அந்த இரவு முழுக்கவும் சீர்களின் வழியாகச் சொல்லித் தருகிறார்கள். சீர்களையும் சடங்குகளையும் முறையாக ஆராய்ச்சி செய்த  ஆய்வுகள் ஏதுமிருப்பின் ஆழ்ந்து வாசிக்கலாம் என்று தோன்றுகிறது. தமிழர் பண்பாடு என்பது இன்றைக்கு இந்துத்துவம் சொல்லித் தந்திருக்கிற பண்பாடு இல்லை. அது தனித்த பண்பாடு. அர்த்தங்கள் நிறைந்தது.

9 எதிர் சப்தங்கள்:

பழனிவேல் said...

அண்ணா... மிக மிக அருமை அண்ணா...
கண்டிப்பாக சீர் வகைகளையும் அதன் காரணங்களையும் விரிவாக எழுதுங்கள்...
காத்திருப்போம் ஆவலுடன்...

ஜெ.உமா மகேஸ்வரன் said...

அருமை மணிகண்டன்... கொங்கு வேளாளர் திருமணச் சடங்குகளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது.

பேராசிரியர் ச.மாடசாமி அவர்களின் தமிழர் திருமணம் - அன்று முதல் இன்று வரை (பாரதி புத்தகாலயம்) படித்திருக்கிறீர்களா?

Unknown said...

Very nice .. Na if you are conducting any meet in cbe let us know Na. I am your blog fan...😃

தேவா said...

‘இந்நேரத்துக்கு சனிக்கிழமைச் சந்தைக்கு வருவா...பார்த்துக்கச் சொல்லுங்க’ என்பார்களாம். அந்த நேரத்தில் இவர்களும் சந்தைக்கோ கோவிலுக்கோ சென்று பார்த்துக் கொள்வார்கள். பெண்ணுக்கு அது சரியில்லை; இது சரியில்லை என்று நிராகரித்து அவளைப் புண்படுத்தி விடக் கூடாது என்பது கூடக் காரணமாக இருக்கலாம்.

யாழ்ப்பாணத்திலும் கோவிலில் சென்றோ பணியிடங்களில் சென்றோ பெண்ணுக்கு தெரியாமல் பார்த்து வருவார் மாப்பிள்ளை.

Varunan said...

Neenga endha Koottam.

சேக்காளி said...

குசும்பு குசும்பு ஒடம்பெல்லாம் குசும்பு.
பின்ன என்ன ய்யா தூங்கி விழுந்து பிறகு எழுந்து பார்த்துக் கொண்டிருக்குற ஆளுக்கு எதுக்கு அந்த நெனைப்பு

NSK said...

முன்னோர்கள் செஞ்ச திருமண செயல்களை பிசாதியவாதிகள்னு சொல்றீங்க பின்பற்றாமல் பொதுப்படையான பண்ணுனா இந்துத்துவவாதி என்று சொல்றீங்க உங்களுக்கு என்ன தான்யா பிரச்சினை முற்போக்குவாதிகளாக நீங்களாக ஒரு முடிவுக்கு வாங்க

vango said...

I am from Namakkal Dt,70 years old, Gounder. I have never seen a marriage
conducted by an Iyer, when it is solemnised in traditional way. But when marriages are conducted in temples,where priests are Iyers, they replace Arumaikkarars.

senthilkumar said...

கம்பரால் பாடப்பட்ட மங்கல வாழ்த்துப்பாடலை படிக்கவும் .