Feb 7, 2019

பதினைந்தாவது...

நிசப்தம் வலைப்பதிவு தொடங்கி இன்றோடு பதினான்கு வருடங்கள் முடிந்து பதினைந்தாவது வருடம் தொடங்குகிறது. திருமண நாள், பிறந்தநாளுக்கெல்லாம் வாழ்த்து வருகிறதோ இல்லையோ- ஒவ்வொரு வருடமும் இன்றைய தினத்தின் முதல் வாழ்த்து அழைப்பு திருப்பதி மகேஷூடையதாக இருக்கும். காபி கடையில் நின்றிருந்தேன். மகேஷ் அழைத்த போது ஏதாவது சுவாரசியமான காதல் கதையைச் சொல்வார் என நினைத்தேன். அவரிடம் அத்தனை கதைகள் இருக்கின்றன. வாழ்த்துச் சொன்னார். எதற்கு வாழ்த்துகிறார் என்று குழப்பமாகத்தான் இருந்தது. அவர் சொன்ன பிறகு வெகு சந்தோஷமாகிவிட்டது. மனதுக்கு நெருக்கமான நான்கைந்து பேர்களிடம் ‘இன்னைக்கு பதினஞ்சாவது வருஷம்’ என்று சொல்லிக் குதூகலித்தேன். 

பதினைந்து வருடங்களில் 2418 பதிவுகள். இது 2419 வது பதிவு. 

இந்த வருடம் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது. எதிர்பாராத தனிச்சிறப்பு அது. ஒரு புத்தகம் வெளியாகிறது. நிசப்தம் அறக்கட்டளை சார்ந்த செயல்பாடுகள் பதிவுகளைத் தொகுத்து ஜீவகரிகாலனும், அகிலா அலெக்ஸாண்டரும் ஆவணமாக்கியிருக்கிறார்கள். 

‘நிசப்தம்- நம்பிக்கையின் கதை’ என்பது தலைப்பு. 

இப்படியொரு புத்தக வேலை நடைபெறுகிறது என்பது எனக்கு இந்த வாரத் தொடக்கம் வரைக்கும் தெரியாது. ரகசியச் செயல்பாடு. அட்டை வடிவமைப்பை அனுப்பி வைத்த போதுதான் தெரியும். அரசு தாமஸ், ‘செய்கிற செயல்களையெல்லாம் சரியாக ஆவணப்படுத்துங்கள்’ என்று அடிக்கடி சொல்வார். ஆனால் என்னிடம் உருப்படியான நிழற்படங்கள் கூட இல்லை; அறக்கட்டளை குறித்தான சரியான பவர்பாய்ண்ட் எதுவுமில்லை. அத்தகையதொரு நிலையில் இந்தப் புத்தகம் முக்கியமான ஆவணப்படுத்துதலாக இருக்கும். 

மிகப் பொருத்தமாக, பதினைந்தாவது வருடம் தொடங்கும் இன்றைய தினத்தில் புத்தகம் அச்சுக்குச் செல்கிறது. அகிலாவும், கரிகாலனும் பதினைந்தாவது வருடம் என்பதை நினைவில் வைத்து இந்தப் பணியைச் செய்யவில்லை. பொருந்தி வந்துவிட்டது. புத்தகத்தைப் பார்த்துவிட்டு அதன் உள்ளடக்கம், வெளியிடுவதற்கான காரணம் என எல்லாவற்றையும் விரிவாக எழுதுகிறேன். அட்டை வடிவமைப்பு எப்படி இருக்கிறது?


எழுத்து வழியாக வரக் கூடிய நிதி பொதுக்காரியத்துக்கு என்பதால் இந்தப் புத்தக விற்பனையை ஒழுங்குபடுத்தி அதை ஏதேனும் ஒரு பள்ளிக்கூடத்துக்கு முழுமையாகக் கொடுத்துவிடலாம் என்று யோசனை ஓடுகிறது. திட்டமிட்டுவிட்டு விரிவாக எழுத வேண்டும்.

எழுத்து, அதன் வழியாக நம்மை நெருங்கும் மனிதர்கள், அறக்கட்டளை - இம்மாதிரியான காரியங்களில் ‘இதைத்தான் செய்ய வேண்டும்; இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்று உறுதியாக இருக்கக் கூடாது என்பதுதான் பதினைந்து வருடத்தில் கிடைத்த அனுபவம். நமக்கு திருப்தி கிடைக்கிறதா என்பது மட்டும்தான் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். மற்றபடி அது போகிற போக்கில் போகட்டும் - எதை எழுத வருகிறதோ அதை எழுதி, எதைச் செய்ய முடிகிறதோ அதைச் செய்து, எதைப் பேச விரும்புகிறோமோ அதைப் பேசி என. 

மற்றபடி, நமக்கான இடம் என்ன? அடுத்தவனுக்கு மட்டும் அவ்வளவு புகழ் கிடைக்கிறது என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தால் அதில் மட்டுமேதான் கவனம் இருக்கும். நிறையப் பொறாமை இருந்தது. அடுத்தவர்கள் பற்றி தவறான அபிப்பிராயங்களைச் சொல்வேன். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் வெகு அபத்தமாக இருக்கிறது. கொஞ்சம் திருந்தியிருக்கிறேன். அவரவர் பணிகள் மட்டுமே அவரவருக்கான இடத்தை உறுதிப்படுத்துகிறது. தலைகீழாக நின்றாலும் இன்னொருவரின் இடத்தை நாம் ஆக்கிரமித்துவிட முடியாது. 

தொடர்ந்து பக்குவப்படுதலே மனித வாழ்வுக்கான முக்கியமான அர்த்தம். எந்தக் காலத்திலும் ‘நான் முழுவதும் பக்குவமடைந்துவிட்டேன்’ என்று சொல்லிவிட முடியாது. அதுவொரு முடிவிலியான பயணம். அந்தப் பயணம் வாழ்வின் கடைசிக்கணம் வரைக்கும் அமைய வேண்டும். வன்மமில்லாமல், பொறாமைப்படாமல், பிற சித்தாந்தங்கள் மீதான வெறுப்பு என்பது தனிமனிதர்கள் மீது திரும்பாமல், நாம் ஏற்றுக் கொள்ளும் அடையாளங்களுக்காக இன்னொரு மனிதனை வசைபாடாமல் - ‘எல்லோரும் நல்லா இருக்கட்டும்’ என்பதை நோக்கிய பயணம்தான் ஆத்மார்த்தமானது கூட. 

பதினைந்து வருடங்களாக உறுதுணையாக இருக்கும் அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றி. ஒவ்வொருவரையும் இந்தத் தருணத்தில் நினைத்துக் கொள்கிறேன்!

32 எதிர் சப்தங்கள்:

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

மிக்க மகிழ்ச்சி..பதினாங்கு வருடங்கள் உங்களை நன்கு பக்குவப்படுத்தி உள்ளன என அறிந்து மனம் நிறைவான வாழ்த்துக்கள்.
#பதினைந்து வருடங்களாக உறுதுணையாக இருக்கும் அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றி#
-அடுத்த ஆண்டு வர வேண்டிய நன்றி..

Anonymous said...

super thalaiva

சேக்காளி said...

தன்னைப் பின் தொடரும் வாசகர்கள் மூலமாக ஓர் எழுத்தாளனால் இச்சமூகத்துக்கு என்ன செய்து விட முடியும் ?

என்றிருந்த கேள்விக்குறியின் வளைவு, நெளிவு, சுளிவுகளை எல்லாம் நிமிர்த்தி இதையெல்லாம் செய்ய முடியும் என்று ஆச்சரியக்குறியாய் மாற்றிய இந்த எழுத்தாளனின் மகத்தான சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.

Anonymous said...

noorandu kaana vazhthukkal

தேவா said...

வாழ்த்துக்கள் சகோதரா.
தேவா

Unknown said...

வாழ்த்துக்கள் .

Muthu Rathinam said...

வாழ்த்துக்கள் , முத்து ரத்தினம்

Anand Viruthagiri said...

வாழ்த்துக்கள் மணி ! மிக மிக மகிழ்வை தருகிறது இந்த பதிவு.

Asok said...

Happy to see your 15 years anniversary of Nisaptham!!! I am most inspired by you and your actions! Congratulations Mani!! God bless you and your family!!

Selvaraj said...

வாழ்த்துக்கள்

Jaypon , Canada said...

Best wishes.

Unknown said...

vazhthukkal sago

Baskar said...

my hearty congratulations for fifteen years journey its not a very easy. Also thanks tom your family for supporting still this journey.


Regards,
Baskar, S.

அன்புடன் அருண் said...

பட்டைய கிளப்புங்க!..வழக்கம் போல..!!

(கொஞ்சம் bore அடிச்சாலும் ) உங்கள வாழ்த்துறது மகிழ்ச்சியா இருக்கு!!

நாடோடிப் பையன் said...

Mani

I am very happy to read about this 15th anniversary. Congratulations!

Wishing you all the best to your continued journey.

raki said...

இன்னுமொரு நூறாண்டு இறும்

ராசெரா said...

உங்களை வணங்குவதைத் தவிர வேறு வேலை இல்லை. இறையருள் துணை இருக்கட்டும்.

Suresh said...

வாழ்த்துக்கள் ம‌ணி.......

Saravanan Sekar said...

கண்களின் ஓரத்தில் சிறிய ஈரத்தோடு , மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. உங்கள் பயணம் பல்லாண்டு தொடரட்டும்..

Yarlpavanan said...

நான் பத்தாண்டுகளாக
வலைப் பக்கம் உலாவுகிறேன்...
உலகம் (இலங்கையர் உட்பட) போற்றும் ஒருவர்
நேர்மையாகப் பிணக்கின்றிக் கணக்குக் காட்டி
தன்பங்கிற்குத் தானே முன்நின்று உதவி
சூழவுள்ள பலருக்கு நன்மை செய்வதற்காக
நிசப்தம் அறக்கட்டளை ஊடாகப் பணியாற்றும்
அறிஞர் வா.மணிகண்டன் அவர்களை
பாராட்டி வாழ்த்துகிறேன். - அவரை
எடுத்துக்காட்டாக / வழிகாட்டியாக / முன்மாதிரியாக
உள்ளத்தில் இருத்தி மக்கள் பணி செய்ய முன்வருமாறு
நாளும் பலருக்கு நான் வழிகாட்டி வருகிறேன்.
நிசப்தம் அறக்கட்டளை
உலகிற்கு முன்மாதிரியாக இயங்க வேண்டுமென வேண்டி
பாராட்டி வாழ்த்துகிறேன்.


Kalai said...

மிக்க மகிழ்ச்சி.மனம் நிறைவான வாழ்த்துக்கள்.

ram said...

வாழ்த்துக்கள்

ஜெ.உமா மகேஸ்வரன் said...

நிசப்தம் - நம்பிக்கையின் கதை புத்தகம் பற்றி அறிவதில் மிக்க மகிழ்ச்சி.

புத்தகத்தின் அட்டைப்படம் மிக அருமை... தொலை நோக்குப் பார்வை, சிந்தனை ஆகியவற்றை உணர்த்துவதாக நான் எடுத்துக்கொள்கிறேன்.

Unknown said...

Congrats Mani.

வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல நூறாயிரம் ..

Regards
Suresh

கருமலை நாகராஜ் said...

அருமை ஐயா!!!இந்தப் பயணம் தொடரட்டும்....

saravanan said...
This comment has been removed by a blog administrator.
பழனிவேல் said...

வாழ்த்துகள் அண்ணா...
இன்னும் பல படிகள் கடந்து விண்ணில் முட்ட வாழ்த்துகள்

Sivaraj said...

தங்களின் சேவை மென்மேலும் வாழ்த்துக்கள்.

Thirumalai Kandasami said...

வாழ்த்துகள்

கவிப்பூரணி said...

வாழ்த்துக்கள் சார். மஹேஷ் உங்களைப் பற்றி பேசாத நாளே இல்லை எனலாம்.

துபாய் ராஜா said...

வருடங்கள் தொடர வாழ்த்துக்கள்

Krishnamoorthy said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்,சார்.
அன்புடன்,
கிருஷ்ணமூர்த்தி.