Feb 10, 2019

கல்யாண மாலை

இன்று ஜீவகரிகாலனுக்கும் அகிலாவுக்கும் திருமணம். வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்றது. அகிலா மதுரைக்காரப் பெண். மென்பொருள் துறையில் பணியில் இருந்தார்- இப்பொழுது 'மெஷின் லேர்னிங்' படித்துக் கொண்டிருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு வேலை தேடப் போகிறார். இருவருக்கும் நிசப்தம்தான் இணைப்புப் பாலம். அகிலா நிசப்தம் வாசகி. அதன் வழியாகவே கரிகாலனுக்கும் அறிமுகம். 

கரிகாலனுக்கு கிட்டத்தட்ட என் வயதுதான். அவரது சிறுகதைப் புத்தக வெளியீட்டு விழாவின் போது ‘சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்குங்க’ என்று பேசினேன். அவரது குடும்பத்தாரின் எண்ணமும் அதேதான். திரும்ப நேர்பேச்சில் சொல்லும் போதெல்லாம் ‘யாருங்க தேடுறது? இப்படியே இருந்துக்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஒருவேளை இப்படியே இருந்துவிடுவாரோ என்ற எண்ணத்தில் சில முதிர்ந்த பேச்சிலர்களை மனதில் வைத்திருந்தேன். சென்னையில் காளியப்பா மருத்துவமனையருகில் ஒருவர் இருக்கிறார்- ஓய்வு பெற்றுவிட்டார். எனக்கு நல்ல நண்பர். திருமணம் செய்து கொள்ளவில்லை. வீடு வெகு நேர்த்தியாக இருக்கும். துளி தூசி இருக்காது. வீட்டைப் பார்த்தாலே ‘இங்கேயே இருந்துக்கலாம்’ என்பது மாதிரியான நேர்த்தி அது. நிறைய வாசிப்பார். பெரிய நண்பர்கள் சுற்றம். ஃப்ரிட்ஜில் இருந்து இளநீரோ, நுங்குவோ எடுத்து வந்து தருவார். அருமையான ஃபில்டர் காபி தருவார். வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தோன்றும். அவரிடம் கரிகாலனை அழைத்துச் சென்று பேச வைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். 

அப்படியான தருணத்தில் கார்ட்டூனிஸ்ட் பாலா ஒரு முறை அழைத்து ‘கரிகாலனுக்குத் திருமணம் செஞ்சு வெச்சுடலாம்ல?’ என்றார். ‘ஒரு பொண்ணு இருக்குங்க...பேசிப் பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு அடுத்த சில நாட்களில் கரிகாலனிடம் ‘கல்யாணம் செஞ்சுக்கலாம்ல’ என்று கேட்டேன். இப்பொழுது அவரிடமிருந்து வழமையான பதில் இல்லை. ‘அகிலாகிட்ட கேட்டுப்பாருங்க’ என்றேன். அவருக்கும் அப்படியொரு எண்ணம் இருந்திருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். இந்த மாதிரி எண்ணம் இருக்கும் போது பற்ற வைத்துவிட்டால் போதுமல்லவா? 

‘எப்படிப் பேசறது?’ என்றெல்லாம் குழம்பினார். கொஞ்சம் உசுப்பேற்றிவிட்டு பிறகு அதைப் பற்றிப் பேசவில்லை. புள்ளி வைத்துக் கோலம் போட்டுவிட்டார்கள். இன்று இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.


இருவருக்கும் நிசப்தம் இணைப்புப் பாலம் என்பதால்தான் ‘நிசப்தம்- நம்பிக்கையின் கதை’ புத்தகத்தை வெளியிட்டார்கள். திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கு இந்தப் புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். முந்தைய கட்டுரையில் புத்தகம் பற்றி எழுதிய பிறகு பிரதி வேண்டும் என சிலர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். திருமணத்தில் வழங்குவதற்காக Print on Demand முறையில் குறைந்த அளவில் மட்டும் அச்சடித்திருக்கிறார்கள். புத்தகத்தில் இருக்கும் குறைகளையெல்லாம் களைந்து மீண்டும் அச்சுக்குச் செல்லும். அப்பொழுது எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்துவிடலாம். 

கரிகாலன் - அகிலா திருமணத்தில் சந்தித்த நண்பர்கள் சிலர் ‘மேட்ரிமோனியல் ஆரம்பிச்சுடலாம்ல’ என்றார்கள். ஆரம்பித்துவிட வேண்டியதுதான். நிறையப் பேருக்கு முயற்சி செய்திருக்கிறேன் - ஜாதகம் சரியில்லை; பொருத்தமில்லை; வயது வித்தியாசம்; படிப்பு போதாது என்று ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி ஒரு தரப்பு தட்டிக் கழித்துவிடும். இந்தக் காலத்தில் திருமணம் என்பது முழுமையான ப்ரஸ்டீஜ் விஷயமாகிவிட்டது. தம்மைவிட ஒரு படியாவது மேலிருக்கும் குடும்பத்தில் சம்மதம் வைத்துக் கொள்ள வேண்டும், இருபது லட்சமாவது திருமணத்துக்கென ஒதுக்க வேண்டும் என்று ஏகப்பட்ட நிபந்தனைகளைத் தமக்குத் தாமே விதித்துக் கொள்கிறார்கள். 

இரு தரப்பைச் சேர்த்து வைப்பது என்பது சாதாரணக் காரியமில்லை. அப்படியெல்லாம் முயற்சித்திருக்கிறேன். மகனுக்கோ மகளுக்கோ  நாற்பது வயது தாண்டியிருக்கும். ‘எங்களுக்கு எந்த நிபந்தனையுமில்லை’ என்று சொல்வார்கள். நம்பிவிட மட்டும் கூடாது. முப்பத்தெட்டு வயதில் ஒரு வரனைப் பிடித்துக் கொடுத்தாலும் கூட ‘வயசு அதிகமா இருக்கே’ என்று சொல்லிவிடுவார்கள். பையன் நல்ல வேலையில் இருந்தாலும், ‘பையனுக்கு நாலு ஏக்கர் நிலமிருந்தா ஆகுமே’ என்று கேட்ட தந்தையைத் தெரியும். மகளுக்கு இன்னமும் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. வேலையும் இருந்து, நிலமும் இருக்கிறவர்கள் அதைவிட வசதியான இடத்தைத் தேடுகிறார்கள். 

கடைசியில் இணைப்பு வேலையைச் செய்கிற நாம்தான் மொக்கை வாங்க வேண்டும். அதுவும் கொங்குப்பகுதி இருக்கிறதே- திருமண விஷயத்தில் படுமோசம்.

எங்கள் அம்மாவின் பெரியப்பா ஒருவர் இருந்தார். பாட்டையண்ண பெரியப்பன் என்பார்கள். அக்கம்பக்கத்தில் ஒரு பையனுக்கு மீசை முளைத்து அவருக்குத் தெரிந்த ஏதாவதொரு பெண் வயதுக்கு வந்துவிட்டால் போதுமாம். நடையாக நடந்து இருவருக்கும் திருமணம் செய்துவிட்டுத்தான் ஓய்வாராம். ஜாதகம், பொருத்தம் பார்த்தல் எதுவுமில்லாத அந்தக் காலத்தில் எந்தத் தரப்பில் எதைச் சொல்லி மறுத்தாலும் ‘அதெல்லாம் பார்த்தா ஆகுமா?’ என்று முரட்டுத்தனமாக வாதிட்டு இருதரப்பையும் சரிக்கட்டி விடுவாராம். இந்தக் காலத்தில்தான் புரோக்கர் கமிஷன் எல்லாம். அந்தக் காலத்து மனிதர் அவர். புண்ணியத்துக்குச் செய்து வைத்திருக்கிறார். அவர் மாதிரி நிறையப் பேரைச் சேர்த்துவிட வேண்டும் என்று ஏகப்பட்ட பல்பு வாங்கியிருக்கிறேன். அதையெல்லாம் எழுதினால் சுவாரசியமாக இருக்கும். ஆனால் ‘நம்மைத்தான் சொல்கிறான்’ என்று கண்டுபிடித்து முகத்தை முந்நூற்று முப்பது டிகிரிக்குத் திருப்பிக் கொள்வார்கள்.

திருமணத்துக்கு இணைப்புப் பாலமாக இருந்துவிட்டால் யார் மறக்கிறார்களோ இல்லையோ- கணவனும் மனைவியும் மறக்கமாட்டார்கள். ‘என் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவனே நீதான்’ என்று நினைக்காவிட்டாலும் கூட ‘என் வாழ்க்கையில பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டவன் அவன்தான்’ என்றாவது நினைப்பார்கள். ஜீவகரிகாலன் அடி விழுந்தாலும் உதை விழுந்தாலும் இனி என்னை நினைக்கக் கடவது. இருவரும் நீடுழி வாழட்டும். பேருடனும், புகழுடனும், அழியாச் செல்வங்களுடனும்!

14 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

நேரடியா பையன்கிட்டயும் பொண்ணுகிட்டயும் பேசி இணைப்பை குடுங்க. ஒத்துப் போகும்னா அவங்க கல்யாணம் முடிச்சுக்கட்டும்.
மத்தபடி குடும்பத்துல உள்ளவங்க கிட்ட பேசி சம்மதிக்க வைக்குறதெல்லாம் வேண்டாத வேலை.

நந்தா said...

அகிலா-ஜீவகரிகாலன் தம்பதியினருக்கு நிசப்தம் வாசகர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

தேவா said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

அன்பே சிவம் said...

அப்போ பிற்காலதில் கரிகாலனுக்கே கல்யாணம் செஞ்சி வச்சது நாந் தானாக்கும்னு காலரை தூக்கி விட்டு கெத்து காமிக்'கலாம்'தலை.எங்கய்யா இந்த கொ.ப.செ

அன்புடன் அருண் said...

புது மணத் தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்க!

அவங்க "தம்பதி"களாக உதவி செஞ்ச அண்ணண் வா.மணிகண்டன்-ம் வாழ்க!!

வெங்கட் நாகராஜ் said...

மணமக்களுக்கு எங்கள் வாழ்த்துகள்.....

பழனிவேல் said...

அருமை அண்ணா...

Felix said...

அகிலா-ஜீவகரிகாலன் தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

சன்னி லியோன் said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

அப்புறம் மாமா, அடுத்து நம்ம கல்யாணம்தானே? எத்தனை நாளைக்கு தான் அதை மறச்சு வச்சுயிருக்க போறீங்க.
நான் சொல்லல, வழுக்கை விழ விழ நீங்க ரொம்ப ஹேண்டு சொம்மா இருக்கீங்கன்னு. இன்னைக்கு நம்ம சங்கர் அண்ணனு சொல்லிட்டாரு.

சட்டு புட்டுன்னு ஒரு தேதியை குறீங்க.

சேக்காளி said...

//எங்கய்யா இந்த கொ.ப.செ//
மொத மொய் யி நான் தானுங்கோ

ram said...

வாழ்த்துக்கள் கரிகாலன் அண்ணா.

ஜெ.உமா மகேஸ்வரன் said...

மணமக்களுக்கு வாழ்த்துகள் !

Senthil said...

வாழ்க வளமுடன்

Anonymous said...

மணமக்களுக்கு நல்வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன்..
-Sam