தைப்பூசத்துக்கு முந்தைய வார இறுதியில் பாளையங்கோட்டை சென்று கொண்டிருந்தோம். தாராபுரம் தாண்டிய பிறகு வண்டி நகரவே இல்லை. சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நடந்து கொண்டேயிருக்கிறார்கள். பழனி செல்லும் கூட்டம் அது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்ற எந்த வேறுபாடுமில்லை. செருப்பு கூட அணியாமல் நடந்து செல்கிறார்கள். ஒரு வரியோ அல்லது ஒரு பத்தியோ எழுதுவதால் அந்தக் கூட்டம் உருவாக்கும் ஆச்சரியத்தை விவரிக்க முடியும் என்று தெரியவில்லை. திண்டுக்கல்லை நெருங்குகையில் கூட்டம் பெருகிக் கொண்டேயிருந்தது. எப்படியும் பல லட்சம் பேர்கள் சேர்ந்திருப்பார்கள். பழனியைத் தாண்டி நூறு கிலோமீட்டர் சென்றிருப்போம். மீண்டும் நடந்து செல்லும் பக்தர்கள் கண்படத் தொடங்கினார்கள். இறங்கி விசாரித்தால் அவர்கள் திருச்செந்தூர் செல்கிறவர்கள். சென்னையிலிருந்து நானூறு கிலோமீட்டர் நடந்து பழனியை அடையும் பக்தர் கூட்டத்தையும் இந்த வருடம் பார்த்தேன்.
மனதில் இருக்கும் அத்தனை பாரத்தையும் ஏதோவொரு ஆற்றலிடம் இறக்கி வைத்துவிடுவது எவ்வளவு ஆசுவாசமானது? மனிதன் ஏன் கடவுளுக்காக தன்னை இவ்வளவு வருத்திக் கொள்கிறான்? அமெரிக்க வங்கியொன்றில் பணிபுரிந்த நண்பர் காலையில் தனது ஷூ கயிற்றை இறுக்கிக் கட்டிக் கொள்வாராம். அலுவலகத்தின் வேலை அழுத்தம் ஆளைப் பிழிந்து சக்கையாக வெளியில் வீசும். வீட்டுக்கு வந்த பிறகு அந்தக் கயிற்றை இளக்கும் போது ரத்தம் ஓட்டம் பாதங்களில் பரவுகையில் தனது மொத்த பாரமும் இறங்குவதைப் போல உணர்வாராம். கடவுளை மனதில் நினைத்தபடி எளிய மனிதர்கள் தம்மை வருத்திக் கொண்டு தம் நேர்த்திக்கடனை முடித்த பிறகு வரும் சாந்தமும் கூட அப்படியானதுதான். எல்லாவற்றையும் அவனிடம் இறக்கி வைத்தாகிவிட்டது. இனி அவன் பார்த்துக் கொள்வான் என்கிற மனநிலை.
பழங்காலத்திலிருந்தே கொங்கு நாட்டின் தென் எல்லை பழநிதான். பொதினி- சங்ககாலத்தில் பொதினிதான். பிறகுதான் பழநி என்றானது.
1944 ஆம் ஆண்டில் அப்பொழுது பழனி தேவஸ்தானத்தின் பொறுப்பாளராக இருந்த ஜெ.எம்.சோமசுந்தரம் பிள்ளை என்ற வழக்கறிஞர் எழுதியிருந்த தல வரலாறு ஒன்றை ஒட்டன்சத்திரம் விக்னேஸ்வரன் அனுப்பியிருந்தார். கடந்த முறை பழநி சென்றிருந்த போது அவர் உடன் வந்திருந்தார். பழநி பற்றி பேசியபடியே மலை ஏறினோம். எந்தவோர் இடத்தின் வரலாற்றையும் ஒரே நாளில் முற்றாகப் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பில்லை. அதுவும் சம்சாரிகளுக்கு அது சாத்தியமுமில்லை. தேடல் இருந்து கொண்டேயிருக்கும் போதும் கிடைக்கும் செய்திகளையெல்லாம் உள் வாங்கிக் கொண்டால் மெல்ல மெல்லத் தெளிந்து கொள்ளலாம்.
விக்னேஷ் அனுப்பியதிலிருந்து புத்தகத்தை வரிவரியாக வாசித்துக் கொண்டிருந்தேன். பழநியில் இடும்பர் சந்நிதி உண்டு. பழங்குடியினருக்கான சந்நிதியாக இருக்கும் என நினைத்திருந்தேன். இடும்பாசுரனுக்கான சந்நிதி. அது யார் இடும்பாசுரன்? அந்தக் காலத்தில் அகத்தியர் இறைவனை வேண்டிக் கொண்டிருக்கிறார். கயிலாயத்தில் சிவகிரி, சத்திகிரி என்று இரண்டு மலைகளையும் தான் பொதிகைக்கு எடுத்துச் சென்று சிவனாகவும் சக்தியாகவும் கருதி வழிபட வேண்டும் என்பது அவரது விருப்பம். அந்தத் தருணத்தில் இடும்பாசுரன் தன் மனைவியுடன் வந்து அகத்தியரை வணங்குகிறான். தமக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமைசாலி என்று கருதிய அகத்தியர், ‘இந்த இரண்டு மலைகளையும் பொதிகைக்கு எடுத்துச் செல்’ என்று உத்தரவிடுகிறார். அந்த மலைகளைத் தூக்கிக் கொண்டு சென்ற இடும்பன் களைத்துப் போய் மலைகளை கீழே வைத்து ஓய்வெடுக்கிறான். சேட்டைக்கார முருகன் மலை மீது ஏறி இது தனக்கான இடம் என்று பிடித்து வைத்துக் கொள்கிறார். இடும்பன் சண்டைக்குச் செல்ல போரில் அவன் இறுதியில் மடிந்தும் போகிறான். அப்படி சுமக்க முடியாமல் வைக்கப்பட்ட மலைதான் அதுதான் இன்றைக்கு பழநி மலையாக இருக்கிறது.
பழநியின் வரலாற்றில் இந்தப் பகுதி நிச்சயமாக புனைவுதான் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆனால் புனைவுகளைத் தவிர்த்துவிட்டு ஆன்மிக வரலாறுகளை நாம் அணுகவே முடியாது. புனைவுகளைத் தெரிந்து கொள்வதும் அவை பற்றிய விவாதங்களை மேற்கொள்வதும்தான் நாம் சரியான வரலாறு நோக்கி நகர உதவும்.
சங்ககாலத்தில் பொதினியாக இருந்தது பிறகுதான் பழநியாக மாறுகிறது. சிவன், பார்வதி கதை, நாரதர் வருவது, ஞானப்பழத்தைக் கொடுப்பது, அதில் விநாயகர் முருகன் சிக்கல், முருகன் கோபித்துக் கோவணத்தாண்டியாக பழநி மலையேறுதல் என்பதெல்லாம் நிகழ்ந்து ‘உன்னைவிடவா பழம் சுவை? பழம் நீ...இங்க வா ராஜா’ என்று உமாதேவி விளிக்க பொதினி பழநியாக மாறியது என்பது தல வரலாறு.
திருவாவினன்குடி என்ற கோவில்தான் பழநியின் ஆதித்தலம். திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடப்படும் முருகன் அவர்தான். அப்படியானால் மலையில் முருகன் எந்தக் காலத்தில் இருந்து இருக்கிறார்? அந்தக் கோவில் எப்பொழுது கட்டப்பட்டது என்பதெல்லாம் தனிக் கேள்விகள்.
சேரப் பெருமான் கி.பி. 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டுவாக்கில் கோயில் கட்டியதாக வரலாறு. அதற்கு சாட்சியாக சேரப்பெருமான் குறித்த குறிப்புகள், சிலைகளை சாட்சியாகச் சொல்கிறார்கள். இந்தச் சேர மன்னன்தான் சுந்தரமூர்த்தி நாயனாரின் நண்பர். (இணைப்பில்) சுந்தரமூர்த்தி வெள்ளையானை ஏறி கைலாயத்தை அடைந்த போது அவரை பின் தொடர்ந்து குதிரையில் கைலாயம் சென்றவர் இந்தச் சேர மன்னன். பழநி மலையில் சேர விநாயகர் என்றே சிறு கோவில் உண்டு. சுந்தரமூர்த்தி நாயனார் காலம் சுமார் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு என்பதால் அப்பொழுதுதான் பழநியின் கோவில் சற்றேறக்குறைவான இன்றைய வடிவத்துக்கு வந்திருக்கக் கூடும். இன்றைய காலத்திலிருந்து கணக்கிட்டால் சுமார் ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்பாக.
அதற்கு முன்பாகவே கோவில் இருந்திருக்கலாம். ஆனால் மிகச் சிறியதாக இருந்திருக்கக் கூடும். கி.பி 12 ஆம் நூற்றாண்டு தொடங்கி கொங்குச் சோழர்கள், கி.பி. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பிற்காலப் பாண்டியர்களால் ஆளப்பட்டு பின்னர் மதுரை நாயக்கர்கள், மைசூர் சமஸ்தானம், ஆங்கில அரசு என்று கை மாறியிருக்கிறது. பழநி மலையின் படிகள் 1926 ஆம் ஆண்டில்தான் செப்பனிடப்பட்டிருக்கின்றன. அதற்கு கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். ஆனால் வழிபாடுகள் இல்லாமல் இல்லை- இடைப்பட்ட காலத்தில் கேட்பாரற்றுக் கிடந்தன என்றெல்லாம் சில கோவில்களுக்கான வரலாறுகளில் தகவல்கள் உண்டு. ஆனால் பழநி குறித்து அப்படியான செய்தி எதுவும் கண்ணில்படவில்லை.
கி.பி. 1650 வரைக்கும் பழநி முருகனுக்கு அர்ச்சனை செய்து வந்தவர்கள் புலிப்பாணி வகையறாவைச் சார்ந்த சைவ மரபினர்கள்தான். 1650வாக்கில் பழநியானது திருமலை நாயக்கர் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. அப்பொழுது அவருடைய தளவாய், ராமப்ப அய்யர் என்பவர் பழநிக்கு வருகிறார். ‘பிராமணரல்லாத அர்ச்சகரிடம் தீர்த்த பிரசாதம் வாங்குவதா’ என்று மறுத்து பிராமணர்களை அர்ச்சகர்களாக நியமிக்கிறார். அதன் பிறகு இன்று வரை அவர்கள்தான் முருகனுக்கு பூசை செய்யும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். ஆண்டிப்பண்டாரங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டார்கள்.
பழநி தேவஸ்தானத்துக்கு நன்செய் நிலமாக 354 ஏக்கரும் புன்செய் நிலமாக 426 ஏக்கரும் இருக்கிறது என்று சோமசுந்தரம்பிள்ளை எழுதியிருக்கிறார். கோபிச்செட்டிபாளையத்தில் கூட சிறுவலூர் செட்டியார் என்றொருவர் தமது சொத்துக்களையெல்லாம் பழநி தேவஸ்தானத்துக்கு எழுதி வைத்திருந்தார். ஆனால் அதையெல்லாம் திருட்டுத்தனமாக விற்று திடீர் கோடீஸ்வரர் ஆனவர்கள் ஏகப்பட்ட பேர்கள் இருக்கிறார்கள். அந்த நிலமெல்லாம் இந்தக் கணக்கில் வருமா என்று தெரியவில்லை. எங்கள் ஊரான கரட்டடிபாளையத்திலேயே கூட பாதி ஊர் தேவஸ்தானத்துக்குச் சொந்தமாம். வழக்கு ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. இப்படி இன்னமும் எங்கெல்லாம் கோவணத்தாண்டிக்கு சொத்து இருக்கிறதோ! அவனுக்குத்தான் வெளிச்சம்.
8 எதிர் சப்தங்கள்:
மிக நன்றாக அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள். நன்று
சாந்தி தியேட்டர் எதிரே வேலுமணி நகருக்கும் மேற்புறமாக பழனி கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன்.
நிறைய இடங்கள் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான இடம் என்ற பேச்சு உண்டு.
செவ்வாய் கிரகத்தின் கதிர் வீச்சு நேரடியாக பழனி மலையில் விழுகிறது என்ற ஒரு ஐதீகம் உள்ளது. நவபாஷாண சிலையின் மேல் அடுக்கு அதை கிரகித்து, நடு அடுக்கு அதை பரவச்செய்து உள் அடுக்கு பக்தர்களுக்கு சீராக வெளியே விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் பழநி முருகன் செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்து அருள் புரிகிறார் என்பது ஆழ்ந்த நம்பிக்கை. வாழ்க வளமுடன்
கடவுள் சொத்தை அபகரித்தவர்களுக்கு கடவுள் என்ன தண்டனை கொடுத்தார்,.....
கடவுள் சொத்தை அபகரித்தவர்களுக்கு கடவுள் என்ன தண்டனை கொடுத்தார்,.....
//மனதில் இருக்கும் அத்தனை பாரத்தையும் ஏதோவொரு ஆற்றலிடம் இறக்கி வைத்துவிடுவது எவ்வளவு ஆசுவாசமானது? மனிதன் ஏன் கடவுளுக்காக தன்னை இவ்வளவு வருத்திக் கொள்கிறான்?//
உண்மை.
ஆனால் இந்த ஒரு நன்மைக்காக பெரியதொரு விலை வேறு விதமாக கொடுக்கிறோமா என எண்ணத் தோன்றுகிறது.
வாழ்க்கையின் வெற்றி தோல்விகள் பெரும்பாலும் நாம் எடுக்கும் முடிவுகளால் தான் தீர்மானிக்கபடுகிறது.
இறைவனிடம் இறக்கி வைக்கும் பாரத்துடன் பலர் எமது முடிவு எடுக்கும் பொறுப்பையும் கொஞ்சம் இறக்கி வைத்து விடுகிறோம்.
பெரும்பாலான வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ளவர்கள் இறை பக்தி குறைந்தவர்களாகவும், வறுமையான நாடுகளில் உள்ளவர்கள் பலர் மத பற்று கூடியவர்களாக இருபதற்கு இது காரணமாக இருக்கலாம்.
இந்த இனைய பக்கத்தில் உள்ள வரைபு இதை தெளிவாக காட்டுகிறது
http://bahairants.com/correlation-of-religiosity-wealth-pew-study-454.html
"The survey finds a strong relationship between a country’s religiosity and its economic status. In poorer nations, religion remains central to the lives of individuals, while secular perspectives are more common in richer nations."
இணைப்பில் இருந்து ..சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தின்படி...
//
என்னது சேக்கிழார் எழுதியது கம்பராமாயணம் இல்லையா???
---எடப்பாடி ஆர்மி
Post a Comment