எங்கள் சொந்தக்காரர் ஒருவர் இருக்கிறார். எட்டாவது மட்டுமே ஏழெட்டு முறை படித்தார். பள்ளிக்காலங்களில் அவரது அப்பா குனிய வைத்துக் கும்மியதை பார்த்திருக்கிறேன். சுட்டுப் போட்டாலும் படிப்பு ஏறாத மண்டை அவருக்கு. திடீரென்று வீட்டை விட்டு காணாமல் போய்விடுவார். விஷமருந்தி உயிர் பிழைப்பார். இப்படியான பல வித்தைகளுக்குப் பிறகு இப்பொழுது உள்ளூரில் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறார். கெட்ட நேரத்திலும் நல்ல நேரம்- தண்ணீர் வற்றாத பூமி அது. பெரிய மனுஷ தோரணைதான். ஆனாலும் ஐடி, பெங்களூரு, சென்னை என்றால் காதில் புகை வரும் மவராசனுக்கு. எதையாவது சொல்லிக் கடுப்பேற்றுவார்.
சுற்றி வளைத்து ‘சம்பளம் ஒரு லட்சம் வருதா?’ என்பார். இது வரைக்கும் முப்பது தடவையாவது பதில் சொல்லியிருப்பேன். அடுத்த முறை பார்த்தாலும் அதையேதான் கேட்பார். ‘என்னதான் சம்பாதிச்சு என்ன பண்ணுறது?’ என்று முடித்து நம் முகத்தை சோகமாக்கிப் பார்க்க வேண்டும். அதிலொரு சந்தோஷம் அவருக்கு. இருபது வருடங்களுக்கு முன்பு பரவலாக நிலவிய வன்மம் இப்பொழுது ஐடி துறையினர் மீது இல்லை. ஐடி துறையினர் மீதான வயிற்றெரிச்சல் முழுவதும் இப்பொழுது அரசுத்துறை மீது விழுந்துவிட்டது. ஐடிக்காரர்களைப் பார்த்தால் பாவப்படுகிறவர்கள்தான் அதிகம். ஆனால் இப்படியான அரை மண்டைகளும் கணிசமாகத் தேறுவார்கள்.
சில நாட்களுக்கு முன்பாக, குடும்பத்தோடு அவரது தோட்டத்துக்கு சென்றிருந்தோம். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது ‘கோழிக்கூட்டுக்குள்ள அடைச்சு வெச்ச மாதிரி வெச்சிருப்பீங்க...பசங்க வானத்தையாவது பார்த்திருப்பாங்களா?’ என்றார். சுள்ளென்றாகிவிட்டது. ‘வக்காரோலி..வானத்தைக் கூட பார்த்திருக்கமாட்டாங்களா?’ என்று வாய் வரைக்கும் வார்த்தைகள் வந்துவிட்டன. விழுங்கிக் கொண்டேன். நம்மைக் குற்றவுணர்ச்சிக்குத் தள்ளுவதில் அவ்வளவு சந்தோஷம். பற்களை வெறுவிக் கொண்டிருந்தேன்.
கொஞ்ச நேரத்துக்குப் பிறகு குழந்தைகளை விட்டுவிட்டு நம்மிடம் வந்து ‘இனி ஐடி அவ்வளவுதானாமா’ என்றார். அவர் சொல்வதை ஏற்றுக் கொண்டால் உள்ளூரச் சந்தோஷம். அவனுக்கு ஏன் சந்தோஷம் கொடுக்க வேண்டும்? ‘அப்படியெல்லாம் இல்லைங்க..ஆட்களுக்கான தேவை இருந்துட்டேதான் இருக்குது’ என்று சொன்னால் ‘ஆனா என்ன வாழ்க்கைங்க அது..நாலு சுவத்துக்குள்ள? சொந்தபந்தம்ன்னு எதுவுமில்லாம’என்றார். அதற்கு மேலும் வம்பிழுக்க விரும்பினால் இழுக்கலாம். ஆனால் வாயைக் கொடுத்துவிட்டு நாம்தான் கடி வாங்க வேண்டும். ‘ஆமாங்க...விதி’என்று சொல்லிவிட்டு முகத்தைத் தொங்கப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான். அப்படித்தான் தப்பித்துக் கொள்வேன். ஆனால் அவருக்குள் இருக்கும் வில்லன் என்றைக்கும் ஓய்வெடுப்பதேயில்லை.
ஏழெட்டுப் பேர் வட்டமாக அமர்ந்திருந்தார்கள். ‘நாம இங்க கறக்கற பால்ல எல்லாச் சத்தும் இருக்குது..ஆனா பாருங்க..இருக்கற சத்தைப் பூரா உறிஞ்சி பாக்கெட்ல அடைச்சு கோயமுத்தூர்ல இவங்க கைக்கு வெறும் சக்கையா போவுது..அதைத்தான் இவங்க குழந்தைகளுக்குக் கொடுக்கறாங்க...’ இதோடு நிறுத்தினால் தொலையட்டும் என்றுவிட்டு விடலாம். என் முகத்தையே பார்த்தபடிக்கு ‘அதான் நம்ம பசங்க தெம்பா இருக்குதுக..இவங்களை மாதிரி இருக்கிறவங்க பசங்க நோஞ்சானுகளா இருக்குதுக’ என்றார். கடுப்பாகாமல் என்ன செய்யும்? மகியை அழைத்து ஓங்கி மூக்கு மீது ஒரு குத்துவிடச் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.
வீடு திரும்பும் போது அம்மாவிடம் ‘இனி எப்பவாச்சும் இந்த ஆகாவழி மூஞ்சில முழிக்க சொன்னீங்கன்னா எனக்கு கோவம் வந்துடும் பார்த்துக்குங்க’ என்று எரிந்து விழுந்தேன். ஆனால் அம்மாவுக்கு அதெல்லாம் பிரச்சினையில்லை. ‘நீ என்னமோ பெரிய இவங்குற...அவன் வாயை அடக்கத் தெரியாதா? என்ரகிட்ட வந்து லொள்ளு பேசிட்டு இருக்கிற’ என்றார். முன்னால் போனால் கடிக்குது. பின்னால் போனால் உதைக்குது கதை.
சாலையில் போகிறவனையெல்லாம் பார்த்து யாருக்கும் பொறாமை வருவதில்லை. அம்பானி எத்தனை ஆயிரம் கோடி சம்பாதித்தாலும் நமக்கு பெரிய பிரச்சினையில்லை. ஆனால் நாம் பார்க்கும்படி வளர்ந்த மனிதர்கள் நன்றாக இருக்கும் போது அல்லது நன்றாக இருப்பதாகக் கருதிக் கொள்ளும் போதுதான் பொறாமை வருகிறது. அது உறவுக்காரனாக இருக்கலாம், எதிர்வீட்டுக்காரனாக இருக்கலாம், உடன் படித்தவனாக இருக்கலாம். தாம் பொறாமைப்படுகிறவர்களோடு தம்மையுமறியாமல் தம் நிலையை ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். அவர்களை ஏதாவதொரு வகையில் நேரடியாகவோ அல்லது அடுத்தவர்களிடமோ மட்டம் தட்டி மனம் குதூகலிக்கிறது. ‘உன்னைவிட ஏதாவதொருவகையில் நான் நன்றாக இருக்கிறேன்’ என்று இறுமாப்பு எய்தி ஒரு ஜஸ்டிஃபிகேஷன் கொடுத்துக் கொள்கிறார்கள். இந்த உளவியல் பிரச்சினைதான் பலரையும் அமைதியற்றவர்களாக்குகிறது.
மேற்சொன்ன உறவுக்காரர் மீது பரிதாபம்தான் வர வேண்டும். அப்படி பரிதாபப்பட்டுவிட்டால் நாம் பக்குவமடைந்துவிட்டோம் என்று அர்த்தம். ம்க்கும். எரிச்சல்தான் மிகுகிறது. இன்னொரு உறவுக்காரர் இருக்கிறார். ஆசிரியர். தொழில்தான் ஆசிரியர். நானும் தம்பியும் சிறுவர்களாக இருந்த போது அம்மாவிடம் வந்து ‘வேலைக்குப் போற பொம்பளைங்க வளர்த்தும் குழந்தைகள் உருப்படுவதற்கான வாய்ப்பு ரொம்பக் குறைவு’ என்று பேசிவிட்டுச் சென்றுவிட்டார். வெகு காலத்திற்கு எங்களைத் திட்டும் போதெல்லாம் ‘அந்த வாத்தியார் சொன்னது மாதிரியே நடந்துடும் போலிருக்கே’ என்று அம்மா மூக்கால் அழுவார். இன்றைக்கும் அந்த மனுஷன் திருந்தவில்லை. ஏதாவது குசலம் பேசிக் கொண்டிருக்கிறார்.
எதிரிகளாக இருந்தால் பிரச்சினையே இல்லை. கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். இப்படியான உறவுக்காரர்கள்தான் பெரும் தலைவலி. முகத்தில் அடித்த மாதிரி பேசவும் முடிவதில்லை. முதல் அரைவேக்காட்டுக்குத்தான் ஒரு பாம் வைத்துவிட்டு வந்திருக்கிறேன். மகி அருகில் வரும் போது என்.டி.டி.வி செய்தி தளத்தை மொபைலில் எடுத்துக் கொடுத்தேன். இதை ஏன் அப்பன்காரன் இப்பொழுது கொடுக்கிறான் என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. நாடாளுமன்றக் கூட்டணி பற்றிய செய்தி அது. அவனுக்கு நாடாளுமன்றம், சட்டமன்றம் குறித்தெல்லாம் அரைகுறையாகத் தெரியும். ஏதோ முக்கியமான செய்தி போல இருக்கிறது எனத் தலைப்புச் செய்தியை மட்டும் வாசித்துவிட்டு ‘பார்லிமெண்ட்டுக்குத்தான் மே மாசம் எலெக்ஷனா? பிஜேபிக்கு அதிக எம்.பி வந்தா மோடி பிரதமர்..இல்லன்னா ராகுல் காந்தி...சரிங்களாப்பா?’ என்றான். அரைவேக்காட்டுக்கு காதில் விழுந்தது உறுதியானவுடன் ‘ஆமாம்ப்பா..நீ போயி விளையாடு’ என்று அனுப்பிவிட்டேன்.
முகத்தை பாறை மாதிரி வைத்துக் கொண்டு ‘பையன் என்ன படிக்கிறான்?’ என்றார்.
‘நாலாவது’
‘எந்த ஸ்கூலு?’ என்பது அடுத்த கேள்வி.
இது போதும். இனி குழந்தைகளை விட்டுவிடுவான். நம்மை மட்டும்தான் வம்புக்கு இழுப்பான். அதற்கும் ஒரு பாம் தயாரிக்க வேண்டும். அயோக்கிய ராஸ்கல்!
17 எதிர் சப்தங்கள்:
Intha article ah avar padiparo(antha araivekkadu)!???!!!!!
அருமையான ஐடியா அண்ணா...
sontham, pakkathu veetukaran ivarkalai thannudan compare seydu thanudaiya inferiarity complex maraipatharku ippadi maddam thattuvathu ivarkalathu neelai. nam than ivarkalai ignore seyavendum
//அதற்கும் ஒரு பாம் தயாரிக்க வேண்டும்//
நாட்டு மக்களின் நலன் கருதி கூட்டணியை மறு பரிசீலனை செய்யும் நேரம் வந்துடுச்சு.
// பரிதாபம்தான் வர வேண்டும். அப்படி பரிதாபப்பட்டுவிட்டால் நாம் பக்குவமடைந்துவிட்டோம் என்று அர்த்தம். ம்க்கும். எரிச்சல்தான் மிகுகிறது.//
அப்புறம் எப்படி இன்னொருத்தரை "அரைவேக்காடு" ன்னு சொல்லுறீங்க?
There used to be a relative, who wished me well for going abroad. And when asked about his grand kids, in a sincere tone said, "No". Who will live outside india.
May his soul rest in peace. Though i didn't get angry, smiled at the situation.
Mostly, it happens with the Pangaali's. we can't ignore them, as they have to be invited for rituals. etc.
One of my relative's son got in to Guindy Engg. While my mark's went south. Couldn't even get in to the Engg (those olden days).
Literally, no one asked his expert opinion. He just gave a passing remark, "Indha markuku engg. kidaikathu".
Naame kadupula, oor oora Arts collegeku apply pannitu irukom.. waiting for the
waiting list to show some luck...
இந்த அனுபவம் என் மிக நெருங்க உறவிடமே உண்டு பேசும் வரை பேசிவிட்டு உன் பையன் பாவம் எத்தியோப்பியால போயி என்னத்தையோ படிக்கான். என்ன இருந்தாலும் நம்ப ஊரு பள்ளிகூடமாட்டம் இருக்காதே அப்படினு ஒவ்வொரு வருடமும் டயலாக்தான் என்ன பண்ணனு தெரியல
தன்னால் செய்ய முடியாத அடைய முடியாத ஒன்றை இன்னொருவன் செய்துவிட்டால், அதைப் பொறுக்காமல், செய்தவன் மீது ,அவன் செயல் மீது, குறை கண்டு மகிழ்ச்சி அடைவது மனித இயல்பு. பொறுத்துக் கொண்டு ,நகைத்து விட்டுப் போக வேண்டியது தான். வேறென்ன செய்வது.
பழனிச்சாமி செங்கோடு அடைந்த உச்சங்களை அடைய இயலாத ,நாம் அவர்களைக் குறை கண்டு மீம்ஸ் எழுதி மகிழ்ந்து கொள்கிறோமே....அது போல.
// ‘நீ என்னமோ பெரிய இவங்குற...அவன் வாயை அடக்கத் தெரியாதா? என்ரகிட்ட வந்து லொள்ளு பேசிட்டு இருக்கிற’ //
அதான் பர்மிசன் குடுத்துட்டாங்களே .. அப்புறம் என்ன பிரிச்சி மேய்ங்க ..
//முகத்தில் அடித்த மாதிரி பேசவும் முடிவதில்லை.//
மூஞ்சிய சிரிச்சா மாதிரி வச்சிக்கிட்டு உள்குத்தா எடுத்து விட்ருங்க .. அப்புறம் பாருங்க .. உங்கள பாத்தாலே .. பின்னங்கால் பொடனில அடிக்க தெறிச்சி ஓடுவாங்க
How I see them is, they express openly as they feel. They do not hide, sugar coat the words. Yes, such words will irritate not because of we earn so much. But its because they work hard and ear peanuts and we sit in AC and earn in lakhs. :)
உள்ளூரிலேயே வாழ வாய்ப்பு கிடைக்கபெற்றவர்களில் ஒருசிலர் 'ஏதோ தாங்கள் மட்டுமே வாழ்க்கையை அனுபவிப்பது போன்றும் வெளியூரில் வேலைசெய்பவர்கள் எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காதவர்கள்' போன்றும் பேசுவது தங்களை தாங்களே திருப்தி படுத்திக்கொள்வதற்காக மட்டுமே...
தாம் பொறாமைப்படுகிறவர்களோடு தம்மையுமறியாமல் தம் நிலையை ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். அவர்களை ஏதாவதொரு வகையில் நேரடியாகவோ அல்லது அடுத்தவர்களிடமோ மட்டம் தட்டி மனம் குதூகலிக்கிறது. ‘உன்னைவிட ஏதாவதொருவகையில் நான் நன்றாக இருக்கிறேன்’ என்று இறுமாப்பு எய்தி ஒரு ஜஸ்டிஃபிகேஷன் கொடுத்துக் கொள்கிறார்கள்.
#ஒருமுறை மதுரை பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் மொழியியல் ஆய்வு முடித்த நிலையில் பிரிவு உபசார நிகழ்வில் இங்கு உங்களுக்கு பிடிக்காதது என்ன என்று கேட்டபோது,
"பொறாமை குணம்"
"உங்கள் நாட்டிலும் தானே உள்ளது"
"ஆம். ஆனால் நீங்கள் வித்தியாசமான முறையில் பொறாமை படுகிறீர்கள்..இங்கு நம்மிடம் இல்லாதது அவனிடம் உள்ளது என்பதற்கு, விடவும் என் அளவிற்கு அவனும் உயர்ந்த நிலையை அடைந்து விட்டானென பொறாமை படுகிறீர்கள்"
ஆம்.. பெரும்பாலும் அப்படி தானே பொறாமை வெளிப் படுகிறது..
வாழ்க வளமுடன்
ஐடி துறையினரின் மீது பொதுவில் எப்போதும் வன்மமும் வயிற்றெரிச்சலும் இருந்ததில்லை. அவர்களை போல தன்னால் அதிகம் பொருளீட்ட இயலவில்லையே என்ற ஏக்கம் இருக்கலாம் , அதேநேரத்தில் ஐடி துறையினர் அதிக திறமையானவர்கள், கடின உழைப்பாளிகள் மற்றும் அதிக ஊதியத்திற்கு தகுதியானவர்கள்தான் என்ற எண்ணம் பொதுவில் எப்போதும் உண்டு
பொறியியலில் நான்கு வருடங்கள் தலைகீழாக நின்று படித்தும் மாதம் ஏழாயிரம் முதல் பத்தாயிரம் வரை (அதுவும் ஒரிஜினல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டு) என்று ஊதியம் கிடைக்கும் ஒரு தேசத்தில் அதுவும் அரசு வேலைவாய்ப்பு மங்கிய ஒரு கடின சூழ்நிலையில் அரசுஊழியர்கள் வாங்கும் முப்பதாயிரம் ஊதியமே மக்களுக்கு மிகப்பெரிதாகவே தெரியும். அரசூழியர்களுக்கு கொடுக்கும் அனைத்து ஊதிய உயர்விற்கும் ,சலுகைகளுக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொதுமக்களின் மீதுதான் வரிச்சுமை ஏற்றப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை. அப்படியிருக்கும் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு அரசூழியர்களின்மீது வயிற்றெரிச்சலும் ?பொறாமையும் ஏற்படுவது இயல்புதான். மாநில முதலமைச்சரே ‘அரசின் பெரும்பாலான வருவாய் அரசூழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்திற்கே செலவாகிறது இதனால்தான் மக்கள் நலத்திட்டங்களை அரசால் செயல்படுத்த இயலவில்லை’ என்று பொதுவில் கூறும்போது எளிய மனிதர்களின் மனநிலை பொதுவில் இப்படித்தான் இருக்கும்.
என்னப்பா மணி ...என்னப் பத்தி இப்படி அபாண்டமா எழுதி வச்சிருக்க? நேர்லயே சொல்லி இருக்கலாம்ல. இப்படி செருப்புல அடிச்ச மாதிரி ஏன் பொதுவில் எழுதணும்?
-நாந்தான் !
//அதற்கும் ஒரு பாம் தயாரிக்க வேண்டும்//
நாட்டு மக்களின் நலன் கருதி கூட்டணியை மறு பரிசீலனை செய்யும் நேரம் வந்துடுச்சு....
https://www.upexams.info/
மகியையும் ரௌடி ஆக்குறதுன்னு முடிவோடதான் இருக்கீங்க போல.
Post a Comment