கோவையிலிருந்து சென்னைக்கு வருவதானால் ரயில்தான் வசதி. அதுவும் காலையில் ஆறேகாலுக்குக் கிளம்பும் வண்டியில் ஏறி அமர்ந்தால் மதிய உணவுக்குச் சென்னை வந்துவிடலாம். நூற்றியறுபத்தைந்து ரூபாயில் பயணம் முடிந்துவிடும். கிளம்பும் போதே பழைய சோறு இரண்டு சட்டியை நிரப்பிக் கொள்வேன். ஆனால் இரவு நேர வண்டிகளில் பெரும்பாலும் டிக்கெட் கிடைப்பதில்லை. பேருந்துதான் சரிப்பட்டு வருகிறது. டிக்கெட் விலை அதிகம். இந்த முறை ஐநூற்றுச் சில்லறையில் டிக்கெட் கிடைத்தது. ஏ.சி.ஸ்லீப்பர். வேணியிடம் பந்தாவாகச் சொன்னேன். ‘அடேயப்பா! எப்படி மனசு வந்துச்சு?’ என்றாள்.
பேரு பெத்த பேரு- ஏ.சி பேருந்துகளில் ஏறியவுடன் அடிவயிறு கலங்கத் தொடங்கிவிடுகிறது. ஜன்னல் வசதியெல்லாம் பார்த்துக் கொள்கிறேன். கைவசம் லேப்டாப் இருக்கிறது அதை வைத்து ஓங்கி அடித்தால் இந்தக் கண்ணாடி உடையுமா? இந்த ஜன்னல் வழியாக எட்டிக் குதித்துவிட முடியுமா என்றெல்லாம் மனம் கணக்குப் போடத் தொடங்கிவிடுகிறது. ஜன்னலை எல்லாம் இறுக அடைத்து வைத்துவிடுகிறார்கள். எங்கேயாவது மோதித் தீப்பிடித்தால் குபுகுபுவென்று பற்றுவதற்குள் அவசர அவசரமாக இதையெல்லாம் செய்தாக வேண்டும். எவ்வளவு பயம் இந்த உயிர் மீது?
பேருந்தில் கடைசிப் படுக்கை. ஒற்றை ஆள் படுக்கும் படியானது. நேரெதிரில் ஒரு ஜோடி படுத்திருந்தார்கள். எனக்கு முன்பே ஏறிப்படுத்திருந்தவர்கள் சற்றே விலகியிருந்த திரைச்சீலைகளில் பின்னூசி குத்தினார்கள். எனக்கும் வெட்கம் இருக்கிறது என்று காட்டிக் கொள்வதற்காக என்னுடைய திரைச்சீலையை சந்தில்லாமல் இழுத்துவிட்டு ஒரு முடிச்சும் போட்டுவிட்டு படுத்துக் கொண்டேன். எப்பொழுது உறக்கம் தழுவியதோ தெரியவில்லை. இடையில் பேருந்தை எங்கோ நிறுத்திய போதுதான் எழுந்தேன். கலங்கிக் கிடந்த அடிவயிறு ஏ.சி. குளிரில் நிரம்பியிருந்தது. இறங்கிப் பார்த்தால் அய்யங்கார் பேக்கரி. உலகில் இருக்கும் அத்தனை அய்யங்கார்களும் தமிழகத்தில் பேக்கரி கடைகளைத் தொடங்கினால் மட்டுமே இது சாத்தியம்- தமிழகத்தில் அத்தனை அய்யங்கார் பேக்கரிகள். தொப்பூர் வனத்தைத் தாண்டிய இடம் அது. அந்தக் காட்டுக்குள் Jens ஒண்ணுக்கடிக்க ஐந்து ரூபாய் என்று போர்டு வைத்திருந்தார்கள். அமெரிக்காவிலேயே சாலையோரத்தில் ஒண்ணுக்கடித்த வகையறாவைச் சார்ந்தவன் நான். தொப்பூரில், அதுவும் காட்டுக்குள் ஐந்து ரூபாய் கொடுப்பதா?
அது என்ன அமெரிக்கக் கதை என்று யாராவது மின்னஞ்சலில் கேட்பார்கள்- டென்வரில் இருந்த போது மாலை நேரங்களில் ஊர் சுற்றச் செல்வதுண்டு. மெட்ரோவில் பயணித்து ஏதாவதொரு நிறுத்தத்தில் இறங்கி இரவு வரைக்கும் அந்தப் பகுதியில் சுற்றிவிட்டு இரவு உணவை முடித்துக் கொண்டு மெட்ரோ பிடித்துக் கிளம்பி வந்துவிடுவேன். நடை மட்டுமேதான். நடந்து கொண்டேயிருப்பேன். அப்படியொருநாள் ஏதோவொரு குடியிருப்புப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த போது வெகு அவசரம். எங்கேயாவது இடம் கிடைக்குமா என்று துழாவத் துழாவ அவசரம் அதிகரிக்கிறது. கண்ட பக்கம் அடித்து அதை சிசிடிவி வழியாகக் கண்டறிந்து பிடித்துக் கொண்டுபோய் குண்டனாமோ சிறையில் தள்ளிவிடுவார்களோ என்ற பயம் வேறு. ஆனால் விட்டால் டேங்க் வெடித்துவிடும் போலிருக்கிறது. அந்தி சாய்ந்து இரவு கவிந்திருந்தது. பேருந்து நிறுத்தத்தின் பின்புறமாகச் சென்று அங்கேயிருந்த தடுப்புக்குப் பின்னால் நின்ற மேனிக்கு எங்கேயோ வேடிக்கை பார்ப்பது போல காதுக்கு அருகில் செல்போனை வைத்துக் கொண்டு சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு காலி செய்தேன். அமெரிக்காவிலிருந்து விமானம் ஏறும் வரைக்கும் பயம் இருந்து கொண்டேயிருந்தது. அப்பேர்ப்பட்டவன் தொப்பூரில் காசு கொடுப்பேனா?
ஆனால் பிரச்சினை என்னவென்றால் இரவு நேர மோட்டல்களில் நம்மை மாதிரியான ஆட்களைக் கட்டணக் கழிப்பறைகளை நோக்கி மிரட்டித் துரத்துவதற்காகவே ஒருவன் கையில் குண்டாந்தடியை வைத்துக் கொண்டு விசிலடிப்பான். அவன் கண்களில் படாமல் இடம் கண்டறிய வேண்டும். பட்டுவிட்டால் அசிங்க அசிங்கமாகத் திட்டுவான். ‘பெரிய மனுஷன்னு சொல்லிட்டுத் திரியறோம்...இவன்கிட்ட எல்லாம் திட்டு வாங்க வேண்டியிருக்குது’ என்று குற்றவுணர்ச்சி வந்துவிடும். அதனால் விசிலடிச்சானிடமிருந்து கொஞ்ச தூரம் நகர்ந்து ஆசுவாசமாகப் பாட்டுப்பாட ஆரம்பித்த போது திரும்பிப் பார்த்தேன். வண்டி நகரத் தொடங்கியிருந்தது. சொம்பும் போச்சுடா கோவிந்தா கதை ஆகிவிட்டது. பேருந்திலிருந்து யாருமே இறங்கவில்லை என்ற போதே சுதாரித்திருக்க வேண்டும். அவன் எதற்கோ பேருந்தை நிறுத்தியிருக்கிறான் போலிருக்கிறது; தெரியாத்தனமாக இறங்கி காத தூரமாக வந்துவிட்டேன். இதையெல்லாம் இப்பொழுது யோசித்து என்ன செய்வது? கையில் செல்போன் இல்லை; பர்ஸ் இல்லை-உறங்குவதற்கு முன்பாக எல்லாவற்றையும் பைக்குள் போட்டிருந்தேன். டீ குடிக்கவா போறோம்? ஒண்ணுக்கடிக்கத்தானே என்று எதையும் எடுத்து வரவில்லை. அவசர அவசரமாக எடுத்து உள்ளே போட்டுக் கொண்டு ஓடி வரும் போது முகமெல்லாம் அதிர்கிறது. தப்புரு தப்புரு என்று இப்படி ஓடி பல வருடங்கள் ஆகிவிட்டன. பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை- பேருந்தைச் சொல்கிறேன். நீங்கள் எதையோ நினைத்துக் கொள்ள வேண்டாம். ஓடுகிற ஓட்டத்துக்கு ஏதாவது கல் கொஞ்சம் தூக்கிக் கொண்டு நின்றால் தட்டி விழுந்து பற்கள் தெறித்துவிடும்.
கண் மண் தெரியாமல் ஓடி வந்தால் இன்னொரு ஓட்டுநர் கீழே நின்று சிரிக்கிறான். ‘என்னடா என்னைக் காமெடியன் ஆக்கிட்ட’ என்று நினைத்தபடியே அவனைப் பரிதாபமாகப் பார்த்தால் இன்னொரு ஓட்டுநர் வண்டியை ஓரமாக நிறுத்திக் கொண்டிருக்கிறானாம். தூக்கக் கலக்கத்தில் இருந்த எனக்கு அது தெரியவில்லை. ‘ஹார்ன் அடிக்காம வண்டியை எடுக்க மாட்டோம்ண்ணா...போய்ட்டு வாங்க’ என்றான். இனி போய் நின்றாலும் வராது. அடங்கிவிட்டது. முன்பின் செத்திருந்தால் சுடுகாடு தெரியும். ஹார்ன் அடித்துத்தான் வண்டியை நகர்த்துவான் என்று எனக்கு எப்படித் தெரியும்? சில வினாடிகளில் அல்லு கழண்டுவிட்டது. முகத்தில் தசைகள் துடித்துக் கொண்டிருந்தன.
வண்டியை ஓரங்கட்டிய ஓட்டுநர் இறங்கி வந்த போது சிரித்த ஓட்டுநர் ‘அண்ணன் பயந்துட்டாரு’ என்றான். அவனும் சிரித்துவிட்டு ‘போய்ட்டு வாங்ண்ணா’ என்றான். கோயமுத்தூர்காரனுகளுக்கு மரியாதைக்கு மட்டும் குறைச்சல் இல்லை. ‘பொங்கச் சோறும் வேண்டாம்; பூசாரித்தனமும் வேண்டாம்...கோயம்பேட்டிலேயே டீல் செஞ்சுக்குறேன்’ என்று மறுபடியும் ஏறி படுத்துக் கொண்டேன். இப்பொழுது எதிரில் இருந்தவர்களின் திரைச்சீலை இறுகக் கட்டப்பட்டிருந்தது. முடிச்சுமிட்டிருந்தார்கள். காதுகளை மட்டும் அடைக்க முடியவில்லை.
11 எதிர் சப்தங்கள்:
ஹிஹிஹி... செம்ம
//இப்பொழுது எதிரில் இருந்தவர்களின் திரைச்சீலை இறுகக் கட்டப்பட்டிருந்தது. முடிச்சுமிட்டிருந்தார்கள். காதுகளை மட்டும் அடைக்க முடியவில்லை.//
கொறட்டை சத்தந்தானே?
நெருக்கடியான அனுபவம்
பஞ்சில்லயா தல?!
Final touch is 'sema'....So hilarious...
//நின்ற மேனிக்கு எங்கேயோ வேடிக்கை பார்ப்பது போல காதுக்கு அருகில் செல்போனை வைத்துக் கொண்டு சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு காலி செய்தேன்//
ஒரு செல்பி எடுத்து அத வால்போஸ்ட் டா அடிச்சு அமெரிக்காவெங்கும் வீதி வீதியா ஒட்டி அந்தூரு சனாதிபதி தேர்தலுக்கு ஓட்டு கேட்டோம்னா உங்கள மாதிரி சிரமப் பட்டவனெல்லாம் ஓட்டா குத்தி உங்கள செயிக்க வச்சிருவானுக. ஒரு நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டீங்களே.
அந்தக் கடைசி வரியை யாரு கேட்டா?
// பேருந்து நிறுத்தத்தின் பின்புறமாகச் சென்று அங்கேயிருந்த தடுப்புக்குப் பின்னால் நின்ற மேனிக்கு எங்கேயோ வேடிக்கை பார்ப்பது போல காதுக்கு அருகில் செல்போனை வைத்துக் கொண்டு சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு காலி செய்தேன்//
செல்லுக்கும் பெல்லுக்கும் லிங்க் கொடுத்த அறிவாளி மச்சான்!
"அறிவாளி மச்சான்"
இந்த பேர் கூட நல்லா இருக்கே
Mani, it's a shame that educated and people with social awareness end up urinating in public instead of utilizing the facilities provided. What kind of example are we setting writing the same in a blog read by hundreds of people. On a lighter note a disclaimer about urinating in public could have helped..
//Mani, it's a shame that educated and people with social awareness end up urinating in public instead of utilizing the facilities provided. What kind of example are we setting writing the same in a blog read by hundreds of people. On a lighter note a disclaimer about urinating in public could have helped..//
அண்ணாநிமோஸ் அய்யா, மச்சான் செஞ்சது ஒன்னும் தப்பில்லை. டாய்லெட்காரன் ஒன்னுக்க புடுச்சு கொழாய்யில கொண்டுபோய் அந்த டாய்லெட்டுக்கு கிழக்கால கீழ உடுவான். மச்சான் நேரடியா மேக்கால பொய் கீழ நேரடியா உட்டுட்டாரு.
இல்லனா டாய்லெட்காரன் ஒன்னுக்க புடுச்சு செப்புடிக்கு டான்க்குல உட்டு அடைப்பு எடுக்க யாரோ ஒரு ஏழையை கூட்டியாந்து கொல்லுவான்.
இதுக்கு மேல மச்சான் அந்த வீணா போன நாத்தபுடுச்சா டாய்லெட்டுக்கு போயி Urinary tract infection வந்தா யாரு பொறுப்பு? அந்த இடத்துல வலி தாங்குற ஒடம்பா அது?
Don't worry மச்சான். Happy Valentine's day.
Post a Comment