Jan 15, 2019

இப்படித் தொடங்கியிருக்கிறோம்..

2019 ஆம் ஆண்டின் பொங்கல் - தமிழர் புத்தாண்டை- வானம் பார்த்த குக்கிராமத்தில் கொண்டாடினோம். ஐஐடியில் முனைவர் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் ராஜேந்திரனின் சொந்த ஊர் தெற்குப்பதி. கடந்த வருடத்தின் சூப்பர் 16 மாணவர்களில் ஒருவர் ராஜேந்திரன். ‘எங்க ஊருக்கு ஏதாச்சும் செய்யணும் சார்’ என்கிற மனநிலை கொண்ட மாணவன்.

தெற்குப்பதி வறண்ட பூமி. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக பசுமையாக இருந்ததாக இன்றைக்குக் கூட ஒருவர் பேசினார். ஆனால் இப்பொழுது பசுமை எதுவுமில்லை. காய்ந்து கிடக்கிறது. அந்த ஊரில்தான் இன்று பொங்கல் விழா.

மொத்தம் நூற்றைம்பது வீடுகள் இருக்கின்றன. பந்தல் அமைத்து, மைக் செட் கட்டி, இளைஞர்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி இரண்டு நாட்கள் திருவிழாவாக நடத்துகிறார்கள். வழக்கமான பொங்கல் திருவிழாதான். ஆனால் அதனுடன் சேர்த்து ஐம்பது மரக்கன்றுகளை நட்டுவிட வேண்டும் என்பதுதான் அந்த ஊர் இளைஞர்களின் திட்டம். நண்பர் கார்த்திகேயன் வழியாக அவர்கள் பேசி கடந்த பதினைந்து நாட்களாகவே மரக்கன்றுகளைக் கொண்டு வந்து, அவற்றுக்கான தடுப்புகளைத் தயார் செய்து- நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து அதற்காக உதவி செய்திருக்கிறோம்- குழிகளைத் தோண்டி வைத்திருந்தார்கள்.

இன்று காலை எட்டு மணிக்கெல்லாம் தெற்குப்பதிக்குச் சென்று சேர்ந்திருந்தோம். தடபுடலாக மரக்கன்றுகளை நட்டுவிட்டு வருவதில் அர்த்தமேயில்லை. உள்ளூர் இளைஞர்கள், பெரியவர்கள் வட்டமாக அமர அவர்களிடம் ஓர் உரையாடல் நிகழ்ந்தது. வழக்கமாக எந்த ஊருக்குச் சென்றாலும் தொடக்கத்தில் உள்ளூர் மக்களிடம் சிறு தயக்கம் இருக்கும். ‘இவன் யாரு புதுசா’ என்னும் தயக்கம்.  அதை எப்படி உடைக்கிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது.

தத்துவமெல்லாம் பேசுவதில்லை. மிகச் சாதாரண விஷயங்கள்தான். இன்று, அரசியல் விழிப்புணர்வுக்கும், ஓட்டு அரசியலுக்குமான வித்தியாசம் என்பதை மையப்படுத்திப் பேசினேன்.  பொதுக்காரியங்கள் என்று பொதுவெளியில் செய்யப்படும் போது மேற்சொன்ன இரண்டில் ஒன்று இருக்கும் அல்லது இரண்டுமே இருக்கும். அதைப் புரிந்து கொள்வதில்தான் மக்களின் வெற்றி இருக்கிறது. சரியான புரிதல் வந்துவிட்டால் தகுதியான தலைமையை நாம் தேர்ந்தெடுத்துவிடுவோம். 

இளைஞர்களும் நிறையப் பேசினார்கள். உள்ளூரில் படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள். படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என விருப்பம் இருப்பவருக்கு இந்தியாவில் எவ்வளவு மாநிலங்கள் இருக்கின்றன என்று தெரியவில்லை. இதுதான் நிதர்சனம். பெரும்பாலான கிராமப்புறத்து இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். பதினைந்து நாட்களில் மீண்டும் வந்து அவர்களுடன் விரிவான உரையாடல் நிகழ்த்துவதாகச் சொல்லியிருக்கிறேன். அவர்களிடம் நிறையப் பேச வேண்டியிருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு தீக்குச்சியை உரசி வீசுவதுதான். அவர்கள் பற்றிக் கொள்வார்கள். 

பொதுவாக, இப்படியான உரையாடல்கள் வழியாகவே இளைஞர்களிடம் நெருங்க முடிகிறது. தொடக்கத்திலிருந்தே பாவனையில்லாமல் பேசிவிட வேண்டும். ‘இதையெல்லாம் இவன் ஏன் செய்யுறான்?’ என என்னையும் சந்தேகப்படுங்கள் என்றுதான் தொடங்குகிறேன். பாசாங்கு செய்வதில்லை. வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசினால் அங்கேயிருக்கும் சில இளைஞர்களுக்காவது நம்மைப் பிடித்துவிடும். அவர்கள் நம் அலைவரிசைக்கு வந்துவிடுவார்கள். 

மாலையில் ராஜேந்திரன் அழைத்து ‘நீங்க வந்தது பசங்களுக்கு ரொம்ப சந்தோஷம் சார்’ என்ற போது உண்மையில் அவர்களைவிடவும் எனக்குத்தான் பெரிய சந்தோஷம் என்றேன். இவ்வளவு சிறிய கிராமத்தில் அவர்களில் ஒருவனாகப் பொங்கல் கொண்டாடுவதைவிடவும் வேறு என்ன சந்தோஷம் இருந்துவிடப் போகிறது? களப்பணி உருவாக்கித் தருகிற சந்தோஷம் அது.

உரையாடல் முடிந்த பிறகு ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று இனிப்பு வழங்கி, தேனீர் கொடுத்தார்கள். ஏதோ உள்ளூர்க்காரனைப் போல பாவித்தார்கள். இனிப்பு உண்டுவிட்டு வெளியில் வந்த போது கோவிலுக்கு முன்பாகப் பெண்கள் வரிசையாக அடுப்புகளை மூட்டி வைத்து எங்களைப் பற்ற வைத்துத் தரச் சொன்னார்கள். அவர்கள் அளித்த மரியாதை மிகுந்த உற்சாகமூட்டுவதாக இருந்தது. மன நிறைவோடு செய்தோம். எல்லோருக்கும் இப்படியான பொங்கல் கொண்டாட வாய்ப்புக் கிடைத்துவிடுவதில்லை. இதைத்தான் ஆசிரியர் அரசு தாமஸிடமும் சொன்னேன்.




2019 மிகச் சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது. களத்தில் செய்ய இன்னமும் எவ்வளவோ இருக்கிறது. தொடர்ந்து செயல்படுவோம். அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள். 

6 எதிர் சப்தங்கள்:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல முயற்சிகளுக்கு வாழ்த்துகள்

Selvaraj said...

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடும் விழாக்கள் என்றாலே அது ஒரு தனிச்சிறப்புதான்.
வானம் பார்த்த பூமி இனி மீண்டும் பசுமையாகும் ('கலைஞர்' முதலமைச்சராக இருந்தபோது தை பொங்கல்தான் தமிழ் (தமிழர்) புத்தாண்டு என்றார் அடுத்து முதல்வரான 'அம்மா' மீண்டும் சித்திரை ஒன்றுதான் தமிழர் புத்தாண்டு என்றார்).

Anonymous said...

அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என விருப்பம் இருப்பவருக்கு இந்தியாவில் எவ்வளவு மாநிலங்கள் இருக்கின்றன என்று தெரியவில்லை. இதுதான் நிதர்சனம். பெரும்பாலான கிராமப்புறத்து இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
NAGAR ப்புறத்து இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். NO BETTER. THEY DON'T KNOW EVEN LOCAL TAMIL LEADERS LIKE KAMARAJ ETCETERA . ONLY RAJINI , TASMAC AND NO MORE.
PETAH IS FULL OF YOUNGSTERS.
FIRST DAY FIRST SHOW CRAZE IS THERE FULLY. OUR MEDIA IS FULLY ENCOURAGING THEM.
IT SUITS MEDIA / POLITICIANS / ACTORS ETC.
MANY YOUNGSTERS CROWD BARS.
ALMOST ALL DRUNKEN DRIVING CASES ARE ONLY
NAGAR ப்புறத்து இளைஞர்கள். THEY INSULT EVERYONE PARTICULARLY ELDERS.
YOU MUST BE PROUD OF ராஜேந்திரன்.
அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
ANBUDAN,
M NAGESWARAN

Jaypon , Canada said...

2019 அனைவரின் வாழ்விலும் அற்புதமான விசயங்களைக் காணப்போகும் வருடம். ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

Jaikumar said...

அன்புள்ள மணி,
மறுமுறை தெற்குப்பதிக்கு செல்லும் போது என்னையும் அழைத்து செல்ல இயலுமா? நான் நண்பர் கார்த்திகேயனுடம் பேசிவிடுகிறேன்.

Anonymous said...

Should include women in the meetings.