Nov 4, 2018

கனவின் முதற்புள்ளி

இரண்டு நாட்களுக்கு முன்பாக வேணிக்குப் பிறந்தநாள். நான் ஊரில் இல்லை. வழக்கமாக நடப்பதுதான். நேற்றுதான் கேக் கடைக்கு அழைத்துச் சென்றேன். அதுவும் கூட திட்டமிட்டதெல்லாம் இல்லை. ஊருக்குச் செல்லும் வழியில் வேணியின் நண்பர்களின் கேக் கடை இருக்கிறது. ‘அங்க போலாமா?’ என்று கேட்டாள். அதையும் மறுப்பது மனசாட்சிக்கே விரோதம். 

கேக் கடைக்காரர் சுதாகருடன் எனக்கு அறிமுகமுண்டு. பெங்களூரில் இருந்த போது கொஞ்சம் பேசியிருக்கிறேன். அவரது மனைவி பூர்ணிமாவும் வேணியும் நல்ல நண்பர்கள். வகுப்புத் தோழிகள். சுதாகரும் அதே வகுப்புதான். காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். பெங்களூரில் இருந்த போது சுதாகர் ‘மைண்ட் ட்ரீ’ மென்பொருள் நிறுவனத்தில் பணியில் இருந்தார். அதன் பிறகு கணவனும் மனைவியும் குழந்தையை எடுத்துக் கொண்டு சிங்கப்பூர் சென்றார்கள். அங்கே ஒன்றிரண்டு வருடங்கள் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். திடீரென்று மென்பொருள் வேலையை விட்டுவிட்டு வந்து கேக் கடை ஆரம்பித்துவிட்டார்.

வேணி சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது. எல்லோராலும் இப்படி முடிவெடுத்துவிட முடியாது. ஒன்றாம் தேதியானால் சம்பளம் வந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கை அமைதியாகப் போய்க் கொண்டிருக்கும் போது விட்டுவிட்டு வந்து வீதிக்கு வீதி கடையைத் திறந்து வைத்திருக்கும் மலையாளிகளுடன் சண்டை போடுவது லேசுப்பட்ட காரியமா என்று நினைத்தேன்.

நிலா’ஸ் கேக். 

டீக்கடை மாதிரியான அமைப்பு இல்லை. கே.எம்.சி.எச்சுக்குப் பின்னால் காளப்பட்டி செல்லும் சாலையில் வீடு ஒன்றை வாடகைக்குப் பிடித்து அலங்காரம் செய்து அட்டகாசமான கேக் கடையாக மாற்றியிருக்கிறார்கள். அதற்கே சில லட்சங்கள் செலவு பிடித்திருக்கும். 

‘உங்களுக்கு முன்னாடியே கேக் செய்யத் தெரியுமா?’ என்று நேற்று சுதாகரைக் கேட்டேன். 

‘இன்னைக்கு வரைக்கும் தெரியாது’ என்றார். முரட்டுத்தனமான தைரியம். அவர் கோயமுத்தூர் கூட இல்லை. வேறு ஏதோவொரு மாவட்டம். எப்படி கோவையை முடிவு செய்தார்கள் என்று தெரியவில்லை. ஊர் பற்றித் தெரியாது; தொழில் பற்றித் தெரியாது; கேக் பற்றித் தெரியாது. எல்லாமே துணிச்சல்தான். சுதாகரின் உறவுக்காரர் ஒருவர் கேக் கடையில் பணியாற்றியிருக்கிறார். அவருக்கு கேக் தயாரிக்கத் தெரியுமாம். இருவரும் இணைந்து தொழிலை ஆரம்பித்திருக்கிறார்கள். கேக் தயாரிப்பது உறவுக்காரரின் வேலை. கடை நிர்வாகம் தொடங்கி டெலிவரி பாய் வேலை வரைக்கும் சுதாகர் பார்த்துக் கொள்கிறார். 

பணம், காசு, உழைப்பு, இத்யாதி இத்யாதி கூட இரண்டாம்பட்சம். ஒரு தொழிலைத் தொடங்கினால் ‘நல்ல வேலையை விட்டுட்டு இப்படித் திரியறான் பாரு’என்று சொல்கிறவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள். பிற எல்லாவற்றையும் விட இந்த எள்ளலுக்கு பதில் சொல்வது அல்லது அவர்கள் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் தூர எறிவதுதான் பெரிய காரியம்.

கடந்த வருடம் நவம்பரில் கடையை ஆரம்பித்திருக்கிறார்கள். எப்படியும் கிறிஸ்துமஸ் வியாபாரம் காப்பாற்றிவிடும் என்று நம்பிக்கைதான். பத்து-பதினைந்து கிலோ கேக் செய்து வைத்துக் கொண்டு வழி மீது விழி வைத்துக் காத்திருந்தால் ஒரேயொரு ஆள் கூட வரவில்லையாம். நொந்து போனவர்கள் அடுத்த ஒரு வார காலத்தில் விளம்பரங்களைச் செய்து புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குள் ஓரளவு வாடிக்கையாளர்களை ஈர்த்திருக்கிறார்கள். எல்லாமே அனுபவம்தான்.

இந்த வருட தீபாவளிக்கு ‘கான்செப்ட் கேக்’ தயாரித்து வைத்திருக்கிறார்கள். பட்டாசு வடிவங்களில் சாக்லெட்கள் இருந்தன. சில நிறுவனங்கள் ஆர்டர் கொடுத்திருக்கின்றன. ஆன்லைன் வழியாக நிறையப் பேர் கேட்டிருக்கிறார்கள். கணிசமான விற்பனை போலிருக்கிறது. ‘நட்டமுமில்லாமல், இலாபமுமில்லாத ஒரு நிலைக்கு வந்துவிட்டோம்’ என்றார். அதற்கு ஒரு வருடம் தேவைப்பட்டிருக்கிறது. இந்த இடத்துக்கு வருவதுதான் தொழிலில் மிகப்பெரிய சூட்சமம். வட்டிக் கணக்கு, வாடகை, ஆட்களின் சம்பளம், மூலப்பொருட்கள் என எல்லாவற்றையும் சமாளித்து இனிமேல் கைக்காசு போட வேண்டியதில்லை என்கிற இடத்துக்கு வந்துவிட்டால் போதும். அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிடலாம். 

‘ஃப்ரான்ச்சைஸ் கேட்கிறார்கள்’ என்றார். இனி முன்னேறுவதில் பெரிய தடை இருக்காது எனச் சொல்லிவிட்டு வந்தேன். 

‘ஏதாவது தொழில் தொடங்க வேண்டும்’ என்று சிலர் சொல்வார்கள். ‘ஆனா எனக்கு ஒண்ணுமே தெரியாது’ என்றும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்வார்கள். கொஞ்சம் விசாரித்துப் பார்த்தால் இங்கே தொழில் தொடங்குகிறவர்களில் தொண்ணூற்றைந்து சதவீதம் பேர் அப்படித்தான். அடியும் தெரியாது; முடியும் தெரியாது. அதையும் இதையும் செய்து கடைசியில் ஒரு ரூட் கண்டுபிடித்து மேலேறி வருகிறவர்கள்தான் பெரும்பான்மையானவர்கள். சுதாகர் கதையைச் சொல்ல வேண்டும் எனத் தோன்றியது.

www.nilascake.com
+91 9952720554

7 எதிர் சப்தங்கள்:

நந்தா said...

சுதாகருக்கு வாழ்த்துக்கள்.. முடிந்தால் அவர்களது முகவரி, கடை முகப்பு போட்டோ, இணையதள முகவரியும் சேருங்கள். அவர்களுக்கு ஒரு விளம்பரமாக இருக்க கூடும்!!!

Vaa.Manikandan said...

ஃபோட்டோ எதுவும் எடுக்கவில்லையே! இணையதளம் மற்றும் அலைபேசி எண்ணை இணைத்துவிட்டேன்.

நந்தா said...

இணையதளம் போதுமானது. வாட்சாப்பில் எல்லோருக்கும் அனுப்பிவிட்டேன்.

Sniper Automation said...

வாழ்க்கையின் தேவைதான் நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கிறது. பொருளாதார ரீதியாக பெரிய மாற்றம் இல்லையென்றாலும் தொழில் முனைவோருக்கு ஒரு திருப்தி இல்லாமல் இல்லை

தனியாக ஆரம்பித்து இரண்டான்டுகள் ஓடிவிட்டன. எல்லாம் பெரிய நிறுவனங்களின் Capex projects. மாதம் குறைந்து ஐந்து லட்சங்களாவது ப்ராஜக்ட் வந்தால் தப்பிக்கலாம்

இந்த பதிவு மிகவும் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது

சுதாகருக்கு வாழ்த்துகள்

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

நிசப்தம் தளம் மூலம் உங்கள் முயற்சி மற்றும் தளராத நம்பிக்கை குறித்து அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.பேராசிரியர்.கோபாலகிருட்டிணன்
9994240629 9344053440
-சுதாகருக்கு அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தி

Selvaraj said...

வாழ்த்துக்கள்...துணிவே துணை னு சும்மாவா சொன்னாங்க.

Somesh said...

Your posts on your ride, office , locality regarding Bangalore would give a vivid picture of Bangalore. I was awaiting to hear similar lines on our Coimbatore, when you said you are moving to CBE. Here it starts. Thanks for sharing.. :)