Nov 6, 2018

ஞானம்

நரகாசுரனைத் தமது ஆளாக ஏற்றுக் கொண்டு ‘திராவிட விருந்து’ ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக சுவரொட்டி கண்ணில்பட்டது. அநேகமாக ஆரியத்துக்கு எதிரான விருந்தாக இருக்கும். இன்னொரு குழு ‘முப்பாட்டன் நரகாசுரன்’ என்று போஸ்டர் அடித்திருந்தார்கள். அவர்களுக்கு எல்லோருமே முப்பாட்டன்தான். அடித்து விட வேண்டியதுதானே? இன்னொரு போஸ்டரில் நரகாசுரனைப் பறையர் இனத்தில் சேர்த்திருந்தார்கள். அடுத்தடுத்த வருடங்களில் இன்னும் சில சாதியினர் தமது சாதியில் சேர்த்துச் சாதிச்சான்றிதழ் வாங்கிவிடுவார்கள். இப்படி வகை தொகையில்லாமல் அலசிவிடுவதில் நம்மவர்களுக்கு நிகர் நம்மவர்தான். பார்க்கிறவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட வேண்டும். அவ்வளவுதான் நோக்கம். 

சீனி.வேங்கடசாமியின் ஆய்வுக் களஞ்சியத்தில் ஒரு குறிப்பு வருகிறது. அந்தக் குறிப்பின்படி சமண சமயத்தின் மகாவீரர் அந்தக் காலத்தில் ஒரு நாட்டின் அரண்மனையில் அமர்ந்து பிரசங்கம் செய்கிறார். விடிய விடியப் பேசிக் கொண்டிருக்கிறார். அதனை அந்த ஊர்க்காரர்கள் சிரத்தையாகக் கேட்டுவிட்டு ‘இனி இங்கேயே தூங்கிக்கலாம்...விடிந்து வீட்டுக்குச் செல்லலாம்’ என்று உறங்கிவிடுகிறார்கள். விடிந்து பார்த்தால் மகாவீரர் அந்த இடத்திலேயே வீடு பேற்றை அடைந்துவிடுகிறார்.  அதனைத் தெரிந்து கொண்ட அரசன் மகாவீரர் வீடுப் பேற்றை அடைந்ததன் நினைவாக இன்றைய தினத்தை ‘தீப வரிசை’ வைத்து நினைவில் நிறுத்தியிருப்போம் என்கிறார். அதுதான் தீபாவலி. (ஆவலி என்றால் வரிசை). 

நரகாசுரன் முப்பாட்டன், நரகாசுரன் பறையன் என்பதையெல்லாம் விட சீனி.வேங்கடசாமி சொன்னதுதான் ஓரளவு பொருத்தமானதாகவும் இருக்கிறது. அவர் வரலாற்று ஆய்வாளர். பொருத்தமாகத்தான் சொல்வார். 

தீபாவலி என்பது ஆரியப்பண்டிகை, தமிழ் மண்ணுக்குச் சம்பந்தமில்லாதது என்பதையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. அந்தப் பண்டிகை இங்கேயும் கொண்டாடப்பட்டதுதான். சமணம் செழித்திருந்த பகுதிகளில் நம் பகுதியும் ஒன்று. கொங்கு நாட்டில் இன்னமும் சமணக் கோவில்கள் நிறைய இருக்கின்றன. சமணர்களின் அடையாளங்கள், சமணச் சின்னங்களை பல இடங்களில் காண முடியும். விஜயமங்கலம், திங்களூர் ஆகிய கோவில்கள் சமணர்களின் கோவில்கள். மங்கலம், பள்ளி என்று முடிகிற ஊர்கள் பெரும்பாலும் சமணத் தொடர்பு கொண்ட ஊராக இருக்கும். கொஞ்சம் துருவிப் பார்த்தால் நமக்கே தெரியும்.  அப்படி சமணர்கள் செழித்திருந்த காலத்தில் இங்கும் தீபாவளி கொண்டாடப்பட்டிருக்கும். பிறகு நாயன்மார்கள், ஆழ்வார்கள் வலுவடைந்து சமணமும், சைவமும் இன்னபிற பிரிவுகளும் செழித்து நம் மண்ணில் சமணம் வீழ்ச்சியடைந்த போது தீபாவலிக்கும் ஒரு புராணக் கதையை இணைத்துவிட்டிருக்கக் கூடும். 

இப்பொழுது ‘பட்டாசு அதிகமா வெடிக்காதீங்கய்யா’ என்று நல்லெண்ணத்தில் ஒருவர் சொன்னால் கூட ‘நீ செத்துடு’ என்று மனசாட்சியே இல்லாமல் சொல்கிறார்கள். இவர்கள்தான் மதத்தைக் காக்க வந்தவர்கள் என்று கொடி பிடிக்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவுமில்லை. எல்லாவற்றையும் அரசியலாகவும், வாக்குகளாகவும், மதமாகவும் பார்க்கத் தொடங்கியதன் விளைவுகளைப் நேரடியாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். தீரன் சின்னமலையில் தொடங்கி வ.உ.சி வரைக்கும் எல்லோரையும் சாதியில் அடைத்துவிட்டோம். தீபாவலிக்கு இந்துக் கடைகளில் மட்டுமே துணி எடுங்கள் என்பது வரை கீழ்த்தரமான பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.

ஒரு விழாவைக் கொண்டாடும் போது அதன் ஆதி அந்தத்தைத் தெரிந்து கொள்வதில் தவறில்லை.  அது அவசியமும் கூட. ஒரு பண்டிகையை நேரடியாக நிராகரிக்காமலும், அப்படியே ஏற்றுக் கொள்ளாமலும் அதனைப் புரிந்து கொள்வதுதான் நமது சகிப்புத்தன்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும். இதுவரை நாம் கைக்கொண்டிருக்கும் சமத்துவத்தையும் நிலை நிறுத்தும். எல்லாவற்றையும் கண்களை மூடிக் கொண்டு ‘இது இல்லைன்னா அது’ என்று பேசினால் Polarizationல் தான் போய் முடியும். கொண்டாடுகிறவன் என் ஆள்; மறுக்கிறவன் எதிரி என்கிற வாதம் இப்படித்தான் வலுப்பெறுகிறது. 

ஒரு பண்டிகை குறித்து எப்படித் தெரிந்து கொள்வது? சில ஆய்வுகளைப் படிக்கலாம். விவாதங்களை நடத்தலாம். இது தொடர்ச்சியாக நடக்கும் போது சில ஆய்வுகள் நிராகரிக்கப்பட்டு புதிய கருத்துருவாக்கம் உண்டாகலாம். சீனி.வேங்கடசாமி சொன்னது முற்றிலும் தவறானதாகக் கூட இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம். தவறொன்றுமில்லை. இப்பொழுதெல்லாம் வரலாற்றை எழுதினால் கூட  ‘இவன் நம் எதிரி’ என்று முத்திரை குத்தி கும்மி எடுத்துவிடுவார்கள். காவியோ பச்சையோ- ஒருவன் வண்ண ஆடை உடுத்தி எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். கேள்வியும் ஆகாது. விசாரணையும் ஆகாது. அதை மீறிப் பேசுகிறவர்கள், விவாதங்களை மேற்கொள்கிறவர்கள், ஆராய்ச்சிகளை முன் வைப்பவர்கள் எதிரிகளாக நிலை நிறுத்தப்படுகிறார்கள்.

ஒரு விழாவோ அல்லது பண்டிகையோ வேறொரு மதத்திலிருந்து இரவல் வாங்கப்பட்டிருக்கலாம். அதை இன்னொரு மதம் தன்னுடையதாக முழுமையாக சுவீகரித்துக் கொண்டு தனது அடையாளமாக மாற்றுவதிலும் தவறு எதுவுமில்லை. வரலாறு அப்படித்தான் நகரும். வல்லவன் கபளீகரம் செய்வான். ஆனால் அதை தம்முடைய உரிமையாக நிலை நிறுத்தி, மக்களைப் பகுப்பதற்கான ஆயுதமாக பயன்படுத்தும் போது அது பற்றிய சலனம் உண்டாக வேண்டியது அவசியம்.

தீபாவலி இந்த மண்ணில் கொண்டாடப்பட்ட பண்டிகைதான். தயக்கமில்லாமல் அதனைக் கொண்டாடலாம். சகமனிதனை பாதிக்காமல், அடுத்தவனை வீழ்த்தாமல், மனிதர்களைப் பகுக்காமல் கொண்டாடும் பண்டிகையாக அது இருக்கட்டும். இசுலாமியன் இந்துக் கடைகளிலும், கிறித்துவர்கள் இசுலாமியர்களின் கடைகளிலும் பொருட்களை வாங்கட்டும். யாரும் குறைந்து போய்விடுவதில்லை. நரகாசுரனை சாதியில் அடைத்தும் அதைக் கொண்டாட வேண்டியதில்லை. 

நிறைய விவாதிக்க இருக்கிறது. பண்டிகைகள் என்பவை சந்தோஷத்திற்குரியவை. சந்தோஷமானதாக மட்டுமே இருக்கட்டும்.

அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள். ஞானம் பரவட்டும்.

9 எதிர் சப்தங்கள்:

Saravanan Sekar said...

அன்பு மணிகண்டன் அண்ணா,

//ஒரு பண்டிகையை நேரடியாக நிராகரிக்காமலும், அப்படியே ஏற்றுக் கொள்ளாமலும் அதனைப் புரிந்து கொள்வதுதான் நமது சகிப்புத்தன்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும். இதுவரை நாம் கைக்கொண்டிருக்கும் சமத்துவத்தையும் நிலை நிறுத்தும்.//

மிக தெளிவு. 100% உடன்படுகிறேன்.

ஒன்று இப்படி இல்லைனா அப்படி என்கிற மனநிலையை திரும்ப திரும்ப உருவாக்கி கொண்டே இருக்கிறார்கள்... இடைப்பட்ட விவாதங்களுக்கே இடமில்லை .. வாட்ஸாப்ப் செய்தி படிச்சாலே வரலாற்று ஆய்வாளர் ரேஞ்சுக்கு பேசுறாங்க. தேடலும் விவாதங்களும் முக்கியமில்லை இங்கே.
நிசப்தம் பதிவின் மூலம் அறிமுகமான- புலவர் ராசு அவர்கள் எழுதிய "கொங்கு நாடும் சமணமும்" படித்து விட்டு, திங்களூர் செல்ல வாய்ப்பிருந்த போது, அங்கே அருகேயுள்ள சில சமண கோவில்களை நேரில் பார்த்தேன். சமணம் மற்றும் கொங்கு பகுதி வரலாற்றை மேலும் தெரிந்து கொள்ள ஆவல். அது பற்றிய புத்தகங்களை பரிந்துரையுங்கள் நன்றி. இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள சீனி.வேங்கடசாமி அவர்களின் ஆய்வுகள் குறித்தும் கூட.

உங்களுக்கும் , குடும்பத்தாருக்கும், நிசப்தம் வாசகர்களுக்கும் எனது தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
சே சரவணன்

மதன் said...

மற்ற சிறுபான்மையினர்கள் ஆரம்பித்த பிரச்சாரம்தான் அதே மத கடைகளில் வியாபாரம் பண்ண சொல்வது. இத நான் 90 களிலும் 2000 லுமே பார்த்தாயிற்று. இந்துக்கள்தான் அதுல கடைசியாக பிரச்சாரத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.இது சரியென்று சொல்லல,எதிர்வினை பிரச்சாரம்.. அவ்ளோதான். இத மாற்றுவது கடினம்.

Anonymous said...

ஆவளி என்றால் வரிசை. ஆவலி என்றால் கொட்டாவி விடுதல். குழப்பத்தில் ஆவலி என்று எழுதியுள்ளது போலத் தெரிகிறது!

செல்வகுமார் said...

வடநாட்டில் ராமர் அயோத்திக்கு திரும்பும் நாளில் அதை ஊரே விளக்கேற்றி வைத்து வரவேற்பதே தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது. இதற்கும் சமணத்துக்கும் தொடர்பு உண்டா?

Siva said...

"தீபாவளி" தானே. தீபாவலி என்று எழுதியிருக்கிறீர். எழுத்துப்பிழை

Vaa.Manikandan said...

https://ta.m.wikipedia.org/wiki/நிறக்கோலம்

Pls refer பெயர்கள் section.

Anonymous said...

மணி... தீபாவலி என்பதுதான் சரி என்று தோன்றுகிறது. ஏனென்றால் ஆவலி என்பது சம்ஸ்கிருத வார்த்தை. அந்த மொழியில் ‘ளி’ என்ற உச்சரிப்பு இல்லையாதலால் ஆவலி என்றுதான் உச்சரிக்க வேண்டும். ஆனால் ’தீபாவலி’ எனும்போது அது எங்கே தீபாவின் வலி என்ற அர்த்தத்தில் போய் முடியுமோ என்று பயந்து நம் முன்னோர்கள் ‘தீபாவளி’ என்று மாற்றி இருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது! ஆதலால், சுத்த தமிழில் நாம் ’தொடரொளித் திருநாள்’ அல்லது ‘விளக்கணித் திருநாள்’ என அழைக்கலாம் எனத் தோன்றுகிறது!

Anonymous said...

The level of intolerance to other people view should have been the content. Not just Diwali , any celebration without saffron orders are anti Indian or anti Hindu . Slowly we are moving to barbarism.. Thanks for atleast to underline in lighter vein in this post... We are facing a avalanche of emotional exuberance exhibited by even well read people towards caste and religion. Religion which was a individual option to hold or leave being imposed on people and expected to obediently follow the so called Hindu savours. Many of the readers of your blogs will find it hard to leave the religion outwardly to save the poor and oppressed. Wish the educated come forward to shed their religious and caste identity to be a global citizen. யாதும் ஊரே யாவரும் கேளீர

Anonymous said...

Fine way of telling, and good post to get information about my presentation subject matter, which i
am going to convey in academy.