சிறு புள்ளிவிவரம் எடுத்துப் பார்க்கலாம். பெரிய கணக்கீடு எதுவும் தேவையில்லை. இரண்டே கேள்விகள்- ‘நீங்கள் தமிழ் மீது ஆர்வம் கொண்டு வாசிக்கிறீர்கள். தமிழ் வழிக்கல்வியில் படித்தவரா’ பெரும்பாலானவர்களின் பதில் ‘ஆமாம்’ என்றிருக்கும். பதில் ‘இல்லை’ எனில் என்ன காரணத்தினால் தமிழ் வாசிப்பில் ஆர்வம் வந்தது?
இன்னொரு கேள்வி -‘உங்களுக்குத் தெரிந்தவர்களில் தமிழ் மீது ஆர்வம் கொண்டு வாசித்தும் எழுதியும் கொண்டிருப்பவர்கள் தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்களா?’.
இந்த இரண்டு கேள்விகளும் எதற்கு என்று புரிந்திருக்கும்.
தமிழைப் பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள்- படிக்கும் காலத்தில் ‘வந்துட்டான்டா தமிழய்யன்’என்று தமிழாசிரியரைக் கலாய்த்தவர்களாகக் கூட இருக்கலாம்-ஏதோவிதத்தில் தாம் படித்த மொழியோடு ஒன்றிப் போய்விடுகிறார்கள். தமிழ் படித்தவர்கள் அத்தனை பேருக்கும் தமிழ் மீது ஆர்வம் வந்துவிடுகிறதா என்றால் இல்லை என்றுதான் பதில் வரும். ஆனால் ஆங்கிலம் படித்து தமிழ் மீது ஆர்வம் கொண்டவர்களைக் காட்டிலும் தமிழ் படித்து தமிழ் மீது ஆர்வம் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகத்தானே இருக்கும்?
இன்றைக்கு எழுதுகிற, நிறைய வாசிக்கிறவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்கள்தான். இந்த சதவீதக் கணக்கு சற்று முன்பின் இருக்கலாம். ஆனால் முழுமையாகத் தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் ஆங்கில வழிக் கல்வியில் படித்துவிட்டு இன்றைக்கு தமிழ் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பவர்கள் எவ்வளவு பேர்? வெளிப்படையாகக் கணக்கு எடுத்துப் பார்த்தால் சொற்பமாக இருக்கும். எண்ணிக்கை குறைந்து கொண்டேயிருக்கும்.
புத்தகக் கண்காட்சிகளுக்குச் சென்று கேட்டால் ‘இப்பொழுது வாசிக்கிறவர்கள் அதிகம்’ என்பார்கள். ஒருவேளை சரியாக இருக்கலாம். முன்பு இருநூறு பிரதிகள் அச்சிட்டவர்கள் இன்றைக்கு ஐநூறு புத்தகங்கள் அச்சிடுகிறார்கள். ஆனால் ஆறரைக் கோடிப் பேர்களில் தமிழில் வாசிக்கிறவர்கள் என்று கணக்கெடுத்தால் அது எவ்வளவு இருந்துவிடக் கூடும்?
இன்றைக்கு புத்தகம் அதிகம் விற்கிறது என்பதற்காகச் சந்தோஷப்படுவதைக் காட்டிலும் அடுத்த முப்பதாண்டுகளில் எண்ணிக்கை அப்படியே தொடருமா என்று யோசித்துப் பார்த்தால் சற்று சங்கடமான பதில் வரலாம். கடந்த தலைமுறைகளில் பள்ளிகளில் தமிழ் படித்துவிட்டு அதே சமயம் நம் வீட்டில் அம்மாவோ அல்லது அப்பாவோ ஆனந்த விகடனோ அல்லது குமுதமோ வாசிப்பதை நாமும் வாசித்து தமிழ் வாசித்துப் பழகியவர்கள்தானே நம்மில் பெரும்பான்மையினர்? ஐநூறு பிரதிகள் அச்சடிப்பதன் காரணம் இதுதான். முப்பதாண்டுகளுக்கு முன்பை விடவும் இன்றைக்கு கற்றவர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை அதிகம். ஆனால் இன்றைக்கு கற்றவர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் வழிக்கல்வியில் அல்லது தமிழைப் படித்தவர்கள்.
இன்னமும் முப்பதாண்டுகள் கழித்துப் பார்த்தால் கற்றவர்களின் சதவீதம் இன்றைக்கு இருப்பதைக் காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் தமிழ் கற்றவர்கள் மிகக் குறைவாக இருப்பார்கள். அதைத்தான் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்றைக்கு எத்தனை வீடுகளில் தமிழ் வாசிக்கிறார்கள். எவ்வளவு குழந்தைகள் தமிழ் கதைப் புத்தகங்களை வாசிக்கிறார்கள். தொண்ணூறுகள் மற்றும் இரண்டாயிரங்களில் ஆங்கில வழியில் படித்தவர்கள் இளையராஜா, ரஹ்மான் பாடல்களைக் கேட்பார்கள். ஆனால் பாடல்வரிகள் தங்கிலீஷில் இருக்க வேண்டும்.
அடுத்தடுத்த தலைமுறைகளில் மொழி செழிக்க வேண்டுமானால் அதனை உண்மையான ஆர்வத்தோடு வாசிக்கிறவர்கள் பரவலாகிக் கொண்டேயிருக்க வேண்டும்.
சமூக ஊடகங்கள் பலம் பெற்றும் வரும் இந்தத் தருணத்தில் இது குறித்தான உரையாடல் அவசியமாகப்படுகிறது. அரசு தரப்பிலும் கல்வித்துறை தரப்பிலும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அவசியம். இப்பொழுதெல்லாம் தமிழை மூன்றாம் பாடமாகப் படிக்கிறவர்கள்தான் அதிகம். சமீபத்தில் கூட ஒரு பனிரெண்டாம் வகுப்பு மாணவியிடம் பேசும் போது அவளுடைய இரண்டாம் மொழி பிரெஞ்ச் என்று சொன்னாள். மூன்றாம் மொழிதான் தமிழ். நிறைய வாசிக்கிறாள். ஆனால் அத்தனையும் ஆங்கிலத்தில். ‘தமிழ் படிக்க மாட்டியா?’ என்று கேட்டால் ‘எனக்கு ஃப்ளூயன்ஸி பத்தாது’ என்கிறாள்.
படிப்பதில்லை சரி. ஏன் தமிழைத் தவிர்க்கிறார்கள்?
பெரும்பாலானவர்கள் தமிழைத் தவிர்க்கக் காரணம் சமஸ்கிருதத்திலும் ப்ரெஞ்ச்சிலும் மதிப்பெண்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்பதுதான். இன்னமும் தமிழாசிரியர்கள் மாறவேயில்லை போலிருக்கிறது. கணக்கில் நூறு, அறிவியல் நூறு என்பதெல்லாம் எப்பொழுதிருந்தோ சகஜமாகிவிட்டது. சமஸ்கிருதத்தில் தொண்ணூற்றொன்பது, நூறு கிடைக்கும். தமிழில் மட்டும் நூறு சாத்தியமில்லை என்கிறார்கள்.
கடந்த முப்பதாண்டுகளில் நிலைமை மாறியிருக்கிறதுதான். எழுபதுகளில் தமிழில் அறுபது சதவீத மதிப்பெண்கள் வாங்கினால் பெரிய கதை. எண்பதுகளின் வாக்கில் தமிழில் எழுபது சதவீதம் வரைக்கும் எளிதாக வாங்கிவிடலாம். பிறகு அந்த நிலை மெல்ல மாறி இன்றைக்கு தொண்ணூறு கூட எளிதாக வாங்கிவிடுகிறார்கள். ஆனால் நூறு கிடைக்காது.
தம் குழந்தை எல்லாவற்றிலும் நூறு வாங்க வேண்டும் என்கிற எண்ணமுடைய பெற்றோர்கள்தான் இங்கு அதிகம். அவர்கள் விடுவார்களா? மூன்றாம் வகுப்பிலேயே குழந்தையிடம் ‘தமிழில் மார்க் வாங்க முடியாது’ என்று உருவேற்றிவிடுகிறார்கள். அந்தக் குழந்தை தமிழை வேப்பங்காயாகவே எடுத்துக் கொள்கிறது. அப்படியென்றால் பிரச்சினையின் அடிநாதம் எங்கேயிருக்கிறது? தமிழாசிரியர்களுக்கு என்ன பிரச்சினை? அவர்கள் வீட்டுச் சொத்தையா எடுத்துக் கொடுக்கிறார்கள்? எவ்வளவுதான் ஒருவன் நன்றாக எழுதியிருந்தாலும் எழுத்துப்பிழையைத் தேடிப்பிடித்து அரை மதிப்பெண்ணையும் ஒரு மதிப்பெண்ணையும் குறைக்காவிட்டால் என்ன ஆகிவிடும்?
‘தமிழில் மார்க் வாங்க முடியாது’ என்கிற பரவலான மனநிலையை மாற்ற வேண்டும். அது எப்படிச் சாத்தியமாகும் என்று யோசித்து, இது குறித்துப் பரவலான உரையாடல் நிகழ்த்தப்பட்டு அதன் வழியாக கல்வித்துறையில் அழுத்தம் உண்டாக வேண்டும். துறையின் மூலமாக தமிழாசிரியர்களின் மனநிலை மாற வேண்டும். சமஸ்கிருதத்துக்கு இணையாக அல்லது ப்ரெஞ்ச் மொழிக்கு இணையாக தமிழிலும் மதிப்பெண்கள் வாங்கலாம் என்று மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கினால் மட்டுமே அடுத்தடுத்த தலைமுறைகளில் தமிழ் பாடம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
சமஸ்கிருதம், ப்ரெஞ்ச்சை ஒப்பிடும் போது தமிழ் படிப்பது எளிது என்கிற மனநிலை உருவாக வேண்டும். அப்படியே தமிழ் படித்தாலும் அதில் மதிப்பெண்கள் வாங்குவதும் சுலபம் என்று மக்கள் நம்பத் தொடங்க வேண்டும். அப்படித்தான் நிறைய மாணவர்களைத் தமிழுக்குள் ஈர்க்க முடியும். அரசாங்கமும், தமிழ் வளர்ச்சித்துறையும், கல்வித்துறையும், தமிழாசிரியர் கூட்டமைப்பும் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது.
‘தமிழ் வழிக்கல்வியில் படிக்க வைக்க வேண்டும்’ என்று கூடச் சொல்லவில்லை. தமிழை இரண்டாம் பாடமாகப் படிக்க வைத்தால் கூடப் போதும் என்று கேட்கிற சூழல்தான் இருக்கிறது.
அடுத்தடுத்த தலைமுறையில் தமிழ் மீதான ஆர்வத்தை உண்டாக்காமல் மொழியைக் காப்பாற்றிவிடலாம் என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும்.
7 எதிர் சப்தங்கள்:
இந்த மாதிரி ஒரு தடவ பேசுனப்போ ஒரு ரெண்டு பேர் என்னை சீமான் க்ரூப் ஆனு கேட்டாங்க. இரண்டு வருடமாச்சு அவங்க நம்பர் அ அழிச்சு ☺️. இவர்களையும், தமிழ் தெரிந்தும் ஆங்கிலத்தில் பேசும் மக்களையும் ஏளனமாக ஒதுக்கி வைத்தால் போதும், தமிழ் இன்னும் கொஞ்சம் வாழும்...
எனது குழந்தைகள் படிக்கும் பள்ளியில் உள்ள தமிழ் ஆசிரியை தினமும் தமிழ் கதைப் புத்தகத்தில் ஒரு பக்கம் வாய்விட்டு படித்து காண்பித்துவிட்டு பெற்றோரிடம் கையொப்பம் வாங்கி வரச் செய்துள்ளார்.
நான் எப்படி குழந்தைகளுக்கு தமிழ் வாசிப்பை பழக்தப்படுத்தலாம் என மிகவும் குழம்பியிருந்த தருணத்தில் இது நல்லதொரு முன்னெடுப்பு.
துறையின் மூலமாக தமிழாசிரியர்களின் மனநிலை மாற வேண்டும்.
-நூறு விழுக்காடு உண்மை. மேலும் கணினி வழி பயன்பாட்டுக்கான மென்பொருள் வடிவமைப்பு பெருகுவதற்கு தமிழை எவ்வளவு அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள் என்பதை சார்ந்து உள்ளது.அதற்கு தமிழ் ஆர்வம் கொண்ட அனைவரும் செயல் பட வேண்டும். வாழ்க வளமுடன்
நம்ம ஊரின் ,பனிரெண்டாம் வகுப்பின் பிரெஞ்சு syllabus , அந்த ஊரின் ஐந்தாம் வகுப்பு syllabus வை விட குறைவாயிருக்கும் போல. பிரெஞ்சு தெரிஞ்சவன் எழுதத்தான் பிரெஞ்சு மொழியே தவிர , பிரெஞ்சுயை புதுசா கத்துகிறவனுக்கில்ல என்பது என் எண்ணம்.. இந்த syllabus யை தமிழ் அளவுக்கு உயர்த்த வேண்டும்.
@Jaikumar,
நல்ல ஐடியா :)
எந்த புத்தகம் என்று சொல்லுங்கள்
தமிழ் ஆசிரியை எந்த கதைப்புத்தகத்தையும் பரிந்துரைக்கவில்லை.
மொழிப்பாட மதிப்பெண்கள் உயர்கல்விக்கோ கல்லூரி படிப்பிற்கோ கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுதில்லை எனும் போது பெற்றோர்கள் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்று அர்த்தமில்லாமல் ஆசைபட வேண்டும்,,, சிறு எழுத்துப்பிழை தவறை சுட்டிக்காட்டி மதிப்பெண்ணை குறைப்பது என்பது ஒன்றும் தவறான செயல் இல்லையே,,,
மக்களின் அர்த்தமில்லா முட்டாள்தனமான பேராசை தான் தமிழ்மொழி பாடத்தை ஒதுக்குவது,, நிச்சயமாய் நம்ம ஊர் செய்திதாள் மீடியாக்களும் இதற்கு முக்கிய காரணம்
Post a Comment