பிரபலமான இயக்குநர் அழைத்திருந்தார். இது நடந்து சில மாதங்களாகிவிட்டன. அவர் தனது அடுத்த படத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு வரச் சொல்லியிருந்தார்கள். காலையிலேயே சென்றுவிட்டேன். நல்ல குளுகுளு அறை. சென்னை வெயிலுக்கு இதமாக இருந்தது. நடிகர், தயாரிப்பாளர் விவரங்களையெல்லாம் சொல்லிவிட்டு ‘நீங்க இந்தப் படத்துல வேலை செய்யணும்ன்னு எதிர்பார்க்கிறேன்...உங்ககிட்ட இருக்குற சட்டையர் எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்றார். எங்கேயோ படித்திருக்கிறார். அவர் அப்படிச் சொன்னதும் எனக்கு வெகு சந்தோஷம்.
‘கதையைச் சொல்லிவிடுகிறேன்’ என்று ஆரம்பித்து வெகு நேரம் சொன்னார். அன்றைய தினம் முழுக்கவும் கதை தொடர்ந்தது. அவருடைய கதைதான். ஒவ்வொரு காட்சியாகக் கோர்த்து திரைக்கதையையும் தயார் செய்து வைத்திருந்தார். வசனம் மட்டும் நான் எழுத வேண்டும். அவர் சொல்லச் சொல்லக் கதை முழுவதையும் செல்போனில் பதிவு செய்து கொண்டோம். ஊரிலிருந்தபடியே எழுதி அனுப்புகிறேன் என்று அதை வாங்கிக் கொண்டு வந்து பத்து பத்துக் காட்சிகளாக வசனம் எழுதி அனுப்பினேன். அவர் என்ன நினைக்கிறார் என்று அவ்வப்போது அழைத்துப் பேசுவதுண்டு. அவருக்குப் பிடித்திருந்தது. சிலவற்றில் மாறுதல்களைச் சொல்வார். மாற்றிக் கொடுப்பேன். சம்பளம் பற்றியெல்லாம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நமக்குத்தான் சம்பளம் வருகிறதே. உழைப்புக்கேற்ற கிரெடிட் வந்தால் போதும் என்கிற மனநிலைதான் எனக்கு.
இப்படியே போய்க் கொண்டிருந்த போது படத்தின் நாயகன் தன் பங்குக்குக் கதையில் சில மாறுதல்களைச் சொல்லியிருக்கிறார். அதற்கு இயக்குநரும் சம்மதித்திருந்தார். அந்தச் சமயத்தில் என்னையும் சென்னை வரச் சொல்லியிருந்தார்கள். அவரது அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அன்றைய தினம் அங்கேயே தங்கி அந்தத் திரைக்கதையில் வேலை செய்வதுதான் திட்டம். இரவு உணவை முடித்துவிட்டு லுங்கி, டீஷர்ட்டுக்கு மாறியிருந்தேன். தனது வீட்டுக்குச் சென்றுவிட்டு அரை மணி நேரத்தில் வருவதாக இயக்குநர் கிளம்பினார். அவர் கிளம்பிச் சென்ற பிறகு மேசையின் மீதிருந்த சில காகிதங்களில் ஒன்றில் படத்தில் பணியாற்றுபவர்களின் பட்டியல் இருந்தது. மனம் குறுகுறுக்க அதை எடுத்து ஒவ்வொரு பெயராகப் பார்க்கப் பொறுமையில்லாமல் ‘வசனம்’ என்ற வார்த்தையைத் துழாவினேன். வசனம் என்ற இடத்தில் வேறு ஒருவரின் பெயரை அச்சடித்து வைத்திருந்தார்கள். அவரும் பெயர் தெரியாத ஒருவர்தான். திக் என்றானது.
அப்பொழுதே இணை இயக்குநரை அழைத்து ‘இந்தப் படத்தில் எனக்கு என்ன கிரெடிட் வரும்?’ என்றேன். அவர் பதறினார்.
‘டைரக்டர்கிட்டயே கேட்டுடுங்க’ என்றார்.
‘இல்ல சார்...அவர்கிட்ட பேசல...நீங்களே சொல்லுங்க’ என்றேன்.
‘வசன உதவின்னு வரும்’ என்றார். படத்துக்கு தேவையான மொத்த வசனத்தையும் இரண்டு அல்லது மூன்று முறை எழுதிக் கொடுப்போம். எழுபது காட்சிகள் என்றால் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு காட்சிகளுக்குத்தான் எழுத முடியும். அதற்கு மேல் எழுதுவது கஷ்டம். அப்படியே எழுதினாலும் அதில் கூர்மை குறைந்திருக்கும். இப்படி பல நாள் உழைத்துக் கொடுத்தால் கடைசியில் ‘வசன உதவி’ என்றால் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. சினிமா அப்படித்தான். நமக்கு ஒத்து வந்தால் தொடர்ந்து பயணிக்கலாம். எப்பொழுதாவது நம் மீது வெளிச்சம் விழும் என்ற நம்பிக்கையைக் கையில் பிடித்துக் கொண்டு எல்லாவற்றுக்கும் ஒத்துப் போக வேண்டும்.
எனக்கு இந்தக் குழு சரிப்பட்டு வராது எனத் தோன்றியது. அப்பொழுதே பேண்ட் சட்டையை மாற்றிக் கொண்டு பையையும் எடுத்துக் கொண்டு ‘ஊரில் ஓர் அவசரப்பணி. வரச் சொல்லிவிட்டார்கள். சாவியை இன்னாரிடம் கொடுத்திருக்கிறேன்’ என்று ஒரு குறுஞ்செய்தியை இயக்குநருக்கு அனுப்பிவிட்டு கிளம்பிவிட்டேன். ஒரே ஓட்டம்தான். பிறகு அவரது அழைப்புகளை எடுக்கவேயில்லை.
வெகு நாட்களுக்குப் பிறகு இணை இயக்குநரைச் சந்தித்த போது ‘சார்...பாலகுமாரனே வசன உதவின்னுதான் சினிமா வாழ்க்கையை ஆரம்பிச்சார்’ என்றார். அவர் சொன்னது உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் அந்த முக்கால் வினாடி க்ரெடிட் வாங்க அவ்வளவு உழைக்க வேண்டியதில்லை எனத் தோன்றியது. இது அவரவர் தனிப்பட்ட விருப்பம்தான். சினிமாதான் வாழ்க்கை என்று முடிவு செய்தவர்கள் எப்படி வேண்டுமானாலும் உழைக்கலாம். ‘கோஸ்ட் ரைட்டராக’ இருக்கக் கூடிய எவ்வளவோ எழுத்தாளர்களைத் தெரியும். இந்த கிரெடிட்டுக்காக நாம் செலுத்தக் கூடிய உழைப்பில் வேறு பல வேலைகளைச் செய்துவிடலாம் என்ற மனநிலை வந்துவிட்டது. சினிமா அவ்வளவு உழைப்பைக் கோரக் கூடிய துறை. காலக் கெடு வைத்து நம்மிடமிருந்து உறிஞ்சக் கூடியது.
பொதுவாக சினிமாத்துறை ஆட்களிடம் பேசினால் தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு ஏகப்பட்ட தேவையிருக்கிறது என்பார்கள். அதற்குக் காரணம் இங்கு பல இயக்குநர்களுக்கு எழுதத் தெரியாது. அவர்களுக்கு எழுதித் தர ஆட்கள் தேவை. ஆனால் அதற்கேற்ற பலன்களை எழுதுகிறவனுக்குத் தர மாட்டார்கள். தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களை மதிக்கத் தெரிந்த இயக்குநர்கள் வெகு அரிது. எழுத்து பற்றிய அடிப்படையான புரிதலற்ற இயக்குநர்கள்தான் இங்கே அதிகம். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் இயக்குநர் சசி மாதிரியானவர்களிடம் பணிபுரிவது நல்ல அனுபவம். ஆனால் அத்தகைய இயக்குநர்கள் வெகு சொற்பம்.
‘வசன உதவி’ என்று கிரெடிட் கொடுப்பதாகச் சொன்ன இயக்குநர் மீது கூட எனக்கு பெரிய குற்றச்சாட்டில்லை. நேர்பேச்சில் நல்ல மரியாதை கொடுக்கத் தெரிந்த மனிதர் அவர். எனக்குத்தான் பேரம் பேசத் தெரியவில்லை. ஒருவேளை உறுதியாகப் பேசியிருந்தால் அவர் சரி என்று சொல்லியிருக்கக் கூடும். சினிமாத் துறை அப்படித்தான். நம் மீது வெளிச்சம் விழும் வரையிலும் துச்சமாகத்தான் மதிக்கும். அந்த வெளிச்சத்துக்குத்தான் உதவி இயக்குநர்கள் இவ்வளவு தூரம் போராடுகிறார்கள்.
‘அவர்கிட்ட பேசி சமாதானம் செஞ்சுக்கலாம்’ என்கிற மனநிலைதான் பெரும்பாலானோருக்கும். ‘அவரே பேசிட்டாரு’ என்று சரி என்று சொல்லுகிற மனிதர்களும் இங்குதான் அதிகம். வெளிச்சம் விழ விழத்தான் நமக்கான அந்தஸ்து வலுப்பெறும். ஆனால் அந்த வெளிச்சம் விழும் வரைக்கும் நாம் வளைந்து கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ‘எங்கே இருட்டில் விழுந்துவிடுவோமோ’ என்ற பயத்திலேயே வெளிச்சம் நிறைந்தவர்களைப் பார்த்து பலரும் பம்மிவிடுகிறார்கள்.
‘அவர்கிட்ட பேசி சமாதானம் செஞ்சுக்கலாம்’ என்கிற மனநிலைதான் பெரும்பாலானோருக்கும். ‘அவரே பேசிட்டாரு’ என்று சரி என்று சொல்லுகிற மனிதர்களும் இங்குதான் அதிகம். வெளிச்சம் விழ விழத்தான் நமக்கான அந்தஸ்து வலுப்பெறும். ஆனால் அந்த வெளிச்சம் விழும் வரைக்கும் நாம் வளைந்து கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ‘எங்கே இருட்டில் விழுந்துவிடுவோமோ’ என்ற பயத்திலேயே வெளிச்சம் நிறைந்தவர்களைப் பார்த்து பலரும் பம்மிவிடுகிறார்கள்.
4 எதிர் சப்தங்கள்:
ட்விஸ்ட் டு படத்துல தான் இருக்கணுன்னு இல்ல. பதிவுலருந்தும் இருக்கலாம்.
"எனக்குத்தான் பேரம் பேசத் தெரியவில்லை" ன்னு நினைக்காம எழுதுன வசனத்த பதிவா போடுங்க சின்னையா. அப்புறமா அவங்க பேரம் பேச அவங்க வருவாங்க.
அவங்க வேட்டையன் குரூப்புன்னா நாம சேட்டையன் குரூப்புன்னு காமிப்போம்.
உங்களுக்குதான் சினிமா அரசியல் புரியல அப்பிடியே கம்முனு இருந்துட்டு படம் வார நேரத்தில ஸ்டே வாங்கி லம்பா ஒரு தொகைகை வாங்கி பேர போடவைச்சி எவ்வளவோ பண்ணியிருக்கலாம். முக்கியமா சேக்காளிக்கு குடுக்கவேண்டிய கடன செட்டில் பன்னியிருக்கலாம் (தமாசுனு ரொம்ப ஓவரா போரமொ)
vic
(தமாசுனு ரொம்ப ஓவரா போரமொ)
எவ்ளோ அடிச்சாலும் தாங்குற குரூப்புய்யா நாங்க
கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்று நினைக்கிறேன், திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படி பதிலளித்திருந்தார் :
”என்னால் ஓரளவுக்குத்தான் வளையமுடியும். அதிகம் வளைந்தால் எனது முற்றிய முதுகெலும்பு சட்டென்று முறிந்துவிடும்”
Post a Comment