Oct 30, 2018

ஏழரை மணி நேரச் சந்தோஷம்

‘சென்னை போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’ கோவை எக்ஸ்ப்ரஸில் எதிரில் அமர்ந்திருந்த அந்தப் பையன் கேட்கும் வரையில் கவனம் அவள் மீதுதான் இருந்தது. இசுலாமியப் பெண். பச்சை நிறப் புடவை. அதன் மீது பர்தா அணிந்திருந்தாள். அதுவரை அவனருகில் அவ்வளவு அன்னியோன்யமாக இருந்தவள் அவன் திடீரெனக் கேட்டவுடன் சற்று சிணுக்குற்று என்னைப் பார்த்தாள். 

கவனத்தை அவன் பக்கம் திருப்பி ‘ஏழரை மணி நேரம் ஆகும்’ என்றேன். அதன் பிறகு வலுக்கட்டாயமாக ஜன்னலுக்கு வெளியில் பார்க்கத் தொடங்கியிருந்தேன். ஆனாலும் அவளது செய்கைகள்தான் தூண்டில் வீசிக் கொண்டிருந்தது. 

புதிதாகத் திருமணமாகியிருந்த புது ஜோடி. அப்படித்தான் இருக்க வேண்டும். திங்கட்கிழமை மதியம் என்பதால் வண்டியில் பெரிய கூட்டமில்லை.  டீ,காபி விற்பவர்கள் மட்டும் குறுக்கும் நெடுக்குமாக போய் வந்தார்கள். தம்பதியின்  மீதிருந்த கவனத்தை முழுமையாக திசை மாற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அவன் தனது செல்போனைத் தடவியபடி அவளுக்கான அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்திருந்தான். வாழ்க்கையின் எல்லாவிதமான சந்தோஷத்தையும் இந்த ஏழரை மணி நேரத்தில் அனுபவித்துவிட முடியும் என்கிற உற்சாகத்தில் இருந்தாள் அவள். 

எல்லை மீறாத சீண்டல்கள். சிரிப்புகள். ஒரு கட்டத்துக்கு மேல் ‘நல்லா இருக்கட்டும்’ என்று மூன்றாம் மனிதன் நினைக்கத் தோன்றும்படியான முகபாவனைகள்.

வண்டி சேலம் தாண்டிய போது சிறு தூக்கம் களைத்து எழுந்திருந்தேன். அப்பொழுதும் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். ‘உங்களைத்தான் கிண்டலடிச்சுட்டு இருந்தா’ என்றான் அவன். சம்பந்தமேயில்லாத ஒரு பெண் நம்மைப் பார்த்து நகைக்கும் அளவுக்கு என்னவாக இருக்கும் என அதிர்ச்சியாகியிருந்தேன். 

‘எதுக்கு?’

‘வாயைத் தொறந்து தூங்கிட்டு இருந்தீங்க அங்கிள்’ என்றாள். அவளைவிட அநேகமாக பத்து அல்லது பனிரெண்டு வயதுதான் எனக்கு அதிகமாக இருக்கும். 

‘அங்கிளா?’

‘இப்பவெல்லாம் எல்லா அங்கிளும் இதையேதான் கேட்கிறாங்க...உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுல்ல’

‘ஆச்சு...’

‘குழந்தை இருக்குல்ல?’

‘இருக்கு..’

‘அப்படின்னா அங்கிள்தான்’ அவள் மீண்டும் சிரித்தாள். கொஞ்சம் தொண்டை கட்டியது போன்ற சற்றே கரடுமுரடான அதேசமயம் ஈர்க்கும்படியான சிரிப்பு.

‘உனக்கும் கல்யாணம் ஆகிடுச்சுல்ல’

‘அப்படி நினைச்சுட்டீங்களா?...ஏமாந்துட்டீங்க’- திருமணம் ஆகாமல் எதற்காக இவ்வளவு அன்னியோன்யமாக இருக்கிறாள் என்று குழம்பத் தொடங்கிய போது அவன் பேசினான்.

‘லவ்வர்ஸ் ப்ரோ...வீட்டுக்கு போய்ட்டு இருக்கோம்’. 

‘உங்க பேரு என்ன தம்பி?’ என்றேன். ‘நீ என்ன ஆளுன்னு சார் கண்டுபிடிக்க அங்கிள் ட்ரை பண்ணுறாரு’ சொல்லிவிட்டு அவளே சொன்னாள்.

‘ரிலீஜியனெல்லாம் ப்ராப்ளம் இல்லை அங்கிள்...இவன் பேரு அபு...நான் யாஸ்மின்’

‘ரெண்டு பேரும் சென்னையா?’

அபுதான் சொன்னான். ‘இவ சென்னை...நான் கொடைக்கானல்’

‘டேய் லூசு...இப்படிச் சொன்னீன்னா எப்படி ரெண்டு பேரும் லவ் பண்ணுனாங்கன்னு அங்கிளுக்கு சந்தேகம் வரும்ல..உனக்கு கதையே சொல்லத் தெரியல’ அவனைத் துண்டித்துவிட்டு யாஸ்மின் தொடர்ந்தாள்.

‘சென்னையில் படிச்சுட்டு இருந்தான் அங்கிள்...கேட்டரிங் டெக்னாலஜி..அப்போத்தான் என்னைப் பார்த்தான்..இவனைப் பாருங்க..ஆளும் அவன் மூஞ்சியும்...நான் இவனை விட அழகுதானே? நான் இவனைக் கண்டுக்கவே இல்லை...ஆனா இவன் என்னைத் துரத்திட்டே இருந்தான்....’

‘டேய் மணிக்கட்டை காட்டு’ என்று அவள் உத்தரவிடவும் அபு வலது கை மணிக்கட்டை நீட்டினான். ப்ளேடினால் கிழிக்கப்பட்ட தழும்புகள் இருந்தன. 

‘இப்படியெல்லாம் செஞ்சு வசப்படுத்திட்டான் அங்கிள்...நல்ல பையன்’

ஜோலார்பேட்டையில் வண்டி நின்றது. இறங்கி தோசை வாங்கிக் கொண்டு வந்தேன். அவர்களுக்கும் சேர்த்து வாங்கியிருந்தேன். நீட்டிய போது ‘நீங்க ட்ரெயின் கொள்ளையரா...இது மயக்க மருந்தா?’என்று சிரித்தாள். 

‘மொக்கை ஜோக்கு அடிச்சுட்டு ரிங்டோன் மாதிரி சிரிக்காதடி’ என்று அபு யாஸ்மினைக் கலாய்த்தான். அவள் மீண்டும் மீண்டும் அதே போலச் சிரித்துக் காட்டியபடியே தோசையை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டார்கள்.

‘தேங்க்ஸ் அங்கிள்...பரிதாபப்பட்டு வாங்கிட்டு வந்தீங்களா? என்கிட்ட நிறைய காசு இருக்கு...வீட்ல இருந்து அடிச்சுட்டு வந்துட்டேன்’. தனது கைகளிலிருந்த தங்க வளையல்களைக் காட்டினாள். எண்ணிப்பார்க்கவில்லை. ஆனால் நிறைய இருந்தன. 

படித்து முடித்த பிறகு கொடைக்கானலில் வேலை வாங்கிவிட்டான் அபு. 

‘இவன் அடுத்த ஸ்டெப் எடுக்கவேயில்லை...ஆனால் வீட்டில் விடுவாங்களா? மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சிட்டாங்க.. அதான் நானே கொடைக்கானல் போய்ட்டேன்..’

அபு சொன்னான். ‘இவங்க வீட்டில் என்னைப் பத்தித் தெரியும் ப்ரோ..தேடி கொடைக்கானல் வந்துட்டாங்கன்னா பெரிய பிரச்சினை ஆகிடும்..அதான் இவளைக் கூட்டிட்டு கோயமுத்தூர் வந்துட்டேன்...சுந்தராபுரத்துல ஒரு ஜிம் மாஸ்டர் இருக்காரு..அவர் வீட்டுலதான் இருந்தோம்...ஒரு வாரம் ஆச்சு’

இரண்டாம் நாள் யாஸ்மின் அப்பா அபுவை அழைத்திருக்கிறார். தெரியாதது போல பேசியிருக்கிறான். ‘அவ எங்கேன்னு தெரியல அபு...உன் கூட வந்துட்டாளா?’ என்று கேட்டிருக்கிறார். அவன் மறுத்திருக்கிறான். தான் கொடைக்கானலில் இருப்பதாகச் சொன்னதை அவர்கள் நம்பியிருக்கிறார்கள். அடுத்த இரண்டு நாட்கள் தேடாத இடமில்லை. வெளியே தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்று காவல்துறைக்கும் செல்லவில்லை. அதன் பிறகு யாஸ்மின் அப்பாவை அழைத்துப் பேசியிருக்கிறாள். 

‘அப்பா..நான் அபுவைக் காதலிக்கிறேன்...நீங்க சரின்னு சொன்னா நான் வர்றேன்..இல்லைன்னா வர மாட்டேன்’.

‘இவ வீட்டுக்கு ஒரே பொண்ணு ப்ரோ...இவ சொன்னவுடன் சரின்னு சொல்லிட்டாங்க....என்னைக் கூப்பிட்டு பேசினாங்க’

‘என்ன ட்ராமா போடுறீங்களான்னு கேட்டாங்க அங்கிள்...அப்போ நானும் இவன் பக்கத்துலதான் இருந்தேன்...ஆனா செமையா நடிச்சுட்டான்...இவன் கொடைக்கானல்ல இருக்கிற மாதிரியும் நான் கோயமுத்தூர்ல இருக்கிற மாதிரியும் நம்பிட்டாங்க’ யாஸ்மினுக்கு அவ்வளவு பூரிப்பு.  

பருவத்தின் காதலில் அவனுக்கு அவளும் அவளுக்கு அவனும் மட்டும்தான் கண்களுக்கு முன்பாக நிற்கிறார்கள். பிற எல்லாமும், எல்லோருமே இரண்டாம்பட்சம்தான். 

‘கோயமுத்தூர்ன்னா எனக்குத் தெரியும் அங்கிள்..நான் போய் கூட்டிட்டு வர்றேன்’ என்று யாஸ்மினின் அப்பாவிடம் சொல்லிவிட்டு அபுவும் யாஸ்மினும் ரயிலில் சென்று கொண்டிருக்கிறார்கள். இரண்டு மூன்று முறை யாஸ்மினின் வீட்டிலிருந்து அழைப்பு வந்துவிட்டது. அதன் பிறகுதான் எனக்கு பயம் பரவத் தொடங்கியது.

‘வீட்டுக்குப் போன பிறகு பிரச்சினை ஆகிடாதா?’

‘கொஞ்சம் பயமாத்தான் இருக்கு ப்ரோ..நான் இவளைக் கூட்டிட்டு ஓடல...இவதான் என்னைக் கூட்டிட்டு போறா’ என்றான் அபு. 

‘என்னை மீறித் தொடுங்கடான்னு சொல்லுவேன்’ என்றாள் யாஸ்மின். அவள் இன்னமும் விளையாட்டுத்தனமாகவே பேசிக் கொண்டிருக்கிறாள். 

வேலூர் தாண்டிய பிறகு ‘இன்னமும் பெரம்பூர் போக எவ்வளவு நேரம் ஆகும்?’ என்றான் அபு. சொன்னேன். 

‘என் நெஞ்சு படபடக்குது’ என்றான். 

யாஸ்மின் தந்தைக்கு வீடியோ அழைப்பைச் செய்தாள். ‘அப்பா... உங்ககூட யாரு இருக்காங்க?’ என்றதற்கு யாருமில்லை என்றார். 

அவள் சிரித்துக் கொண்டே ‘உங்களைச் சுத்தியும் காட்டுங்க’ என்றாள். அவள் சொன்னதையெல்லாம் அவர் செய்தார். ஆனால் அபுவுக்கு தைரியமில்லை.

எனக்கு அதன் பிறகு என்ன பேசுவதென்று தெரியவில்லை. ‘உங்க வீட்டுல இருந்து யாரும் வரலையா?’ என்று மட்டும் கேட்டேன்.

‘நாளைக்கு காலையில் ப்ரெண்ட்ஸ் வருவாங்க ப்ரோ...நைட் இவங்க வீட்டுலதான்...அவளை பத்திரமா கூட்டிட்டு வந்துடு..நீதான் என் மருமகன்னு இவங்கப்பா சொன்னாரு’ என்று சொல்லிய போது அவள் அவனது நெஞ்சைத் தடவினாள். மாலை மங்கி இரவு முழுமையாகக் கவிந்திருந்தது.

இருவரும் நல்லபடியாக வாழ வேண்டும் எனக் கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டேன். யாஸ்மின் ‘தூங்குங்க அங்கிள்...நான் கிண்டலடிக்கமாட்டேன்’ என்றாள்.

‘பெரம்பூர் வரப் போகுது..நான் வேணும்ன்னா வரட்டுமா?’ என்றேன்.

‘அய்யோ ஒரு புருஷனுக்கே அடி விழும்ன்னு நினைக்கிறேன்..நீங்களும் வந்தா அவ்ளோதான்’ என்று சொல்லிவிட்டு வெடித்துச் சிரித்தாள். சிரித்து வைத்தேன்.

பெரம்பூர் நெருங்க நெருங்க அபுவுடன் சேர்த்து எனக்கும் திக் திக்கென்றானது. ‘அப்பா நிக்கிறாரு..கூடச் சித்தப்பா’ என்றாள் யாஸ்மின். அவர்கள் பெட்டியின் அருகிலேயே வந்து நின்றார்கள். இறங்கியவுடன் யாஸ்மின் சிரித்தாள். அவளது சித்தப்பா ‘சிரிப்பு வருதா சிரிப்பு’ என்றார். படியில் நின்று அவர்களைப் பார்த்தேன். அதே புன்னகையுடன் கையசைத்தாள். வண்டி கிளம்புவதற்கு முன்பாக ரயில்வே ட்ராக் நோக்கி நால்வருமாக நடந்தார்கள். விசில் ஊதப்பட்டது. ரயில் கிளம்பியது. மெல்ல நகர்ந்த ரயில் அவர்களைத் தாண்டிய போது அவர்கள் கிட்டத்தட்ட இருளுக்குள் நுழைந்திருந்தார்கள். அவர்களது அலைபேசி எண்ணை வாங்கியிருக்க வேண்டும் எனத் தோன்றியது. ரயில் வேகமெடுத்த போது இன்னமும் சிலர் அவர்களைச் சுற்றிக் கூடியிருந்தார்கள். எனக்கு வியர்த்துப் போனது. 

கடவுளை மீண்டுமொருமுறை பிரார்த்தித்துக் கொண்டேன்.

(மின்னல் கதைகள்)

9 எதிர் சப்தங்கள்:

பழனிவேல் said...

மிக அருமை அண்ணா...

Selvaraj said...

நல்ல கதை.

Mahesh said...

(மின்னல் கதைகள்)////// aiyyo aiyyo... nejamaalume nadantha anupavamaa ninaichittu vacichuttu vanthene:-( super sir. rompa naal kalichu minnal kathai vacichachuathil:)

சேக்காளி said...

குறுகுறும்புடன் ஆரம்பித்து பதைபதைப்போடு முடித்து விட்டீர்கள்.
// ரயில் வேகமெடுத்த போது இன்னமும் சிலர் அவர்களைச் சுற்றிக் கூடியிருந்தார்கள்.//
அவர்களனைவரும் ஆசீர்வதிக்க வந்தவர்களாக இருக்கக் கடவது

Anonymous said...

Nice captivating story! Well done bro!!

vic said...

எதுக்கும் 30 லச்சருபா ரேடி பண்ணி வையுங்க காதல் பட எழுத்தாழர் வழக்கு போட்டா குடுக்கனுமுல்ல

Unknown said...

இதுமாதிரி பதிவு வந்து பலகாலமாச்சு அருமை

Murugan R.D. said...

இது ஏதோ கதை நிஜம் இல்லை
ஆனா நல்லா ‌இருக்கு,
வசனம் மணிரத்னம் சாயல்ல இருக்குன்னு நினைச்சிகிட்டேதான் படிச்சேன்
உங்க எழுத்து அத்துபடி ஆயிடிச்சின்னு நினைக்கிறேன்

Sathyakiruba said...

அருமை பயப்பட வச்சுட்டீங்க.