Oct 28, 2018

வேலையும் தொழிலும்

‘வேலை பற்றிய பயமிருக்கா?’- வேலைக்குச் சேர்ந்து சில ஆண்டுகளாகியிருந்த அந்த இளைஞனிடம் கேட்ட போது இல்லையென்றான். திருமணத்திற்கு முன்பு வரை எந்தப் பயமும் இருக்காது. திருமணத்திற்குப் பிறகு இருபதாண்டுகள் வரைக்கும் யாரைக் கேட்டாலும் நடுக்கம் இருக்கும். வீட்டுக்கடன் பாக்கியிருக்கும். குழந்தைகளின் படிப்பு கண் முன்னால் வந்து போகும். அவர்களது திருமணம், வீட்டுச் செலவுகள் என எல்லாமும் சேர்ந்து ஒரு மனிதனை பயமூட்டுவது முப்பது வயதிலிருந்து ஐம்பது வரைதான். எவ்வளவு லட்சம் செலவானாலும் அரசு வேலை வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்பதன் மனோவியல் இதுதான். ‘அரைக்காசுன்னாலும் அரசாங்கச் சம்பளம்’.நெட்டையோ குட்டையோ- எந்தக் காலத்திலும் தடைபடாது.

மென்பொருள் துறையில் இப்போதைக்கு பெரிய பங்கமில்லை. குழுக் குழுவாக வெட்டுவது வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஆனால் மேல்மட்டத்து ஆட்களைச் சத்தமில்லாமல் வெளியில் அனுப்புவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நண்பரை அனுப்பிவிட்டார்கள். பதினேழு வருட அனுபவம். கிட்டத்தட்ட முப்பது லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவார் போலிருக்கிறது. நொய்டாவில் தொடங்கியிருக்கும் புதிய அலுவலகத்துக்கு இடமாற்றலில் சென்றே தீர வேண்டும் என அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். வீடு, குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் என எல்லாமும் சென்னையில் அமைந்திருக்கிறாது.  பெங்களூரு, ஹைதராபாத் என்றாலும் கூட பிரச்சினை இருக்காது. ‘அவ்வளவு தூரம் போவது சாத்தியமில்லை’ என்று சொல்லியிருக்கிறார். அப்படியானால் ராஜினாமா செய்வதைத் தவிர வழியில்லை என்று சொல்லிக் கழுத்தை வெட்டுவதை நாசூக்காகச் செய்திருக்கிறார்கள். 

‘ஏதாச்சும் வேலை இருந்தால் சொல்லுங்கள்’ என்றார். அனுபவஸ்தர்களுக்கு வேலைத் தேடிச் சொல்வது சிரமமான காரியம். சில நண்பர்களுக்கு ரெஸ்யூமை அனுப்பி வைத்திருக்கிறேன். யாருமே பதில் சொல்லமாட்டார்கள் எனத் தெரியும். 

பொதுவாக, வேலையில் இருக்கும் போதே வேறு வாய்ப்புகளைப் பற்றி யோசித்து வைத்துக் கொள்வதுதான் உசிதம். அது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி வரும். ஆனால் அரைகுறையாகவாவது எதையாவது மென்று கொண்டேயிருப்பதுதான் பயமில்லாமல் இருக்க உதவும். ஒரு நண்பர் ஐஸ்கிரீம் கடை வைத்திருக்கிறார். எப்படி வியாபாரம் என்று கேட்டால் ஓஹோ என்றில்லையென்றாலும்  ‘ஏதோ போகுது’ என்கிற அளவுக்குச் சொல்கிறார். அவராக வேலையை விடவில்லை. அவர்களாகத் தள்ளுகிற வரைக்கும் அப்படி இப்படி ஓட்டிக் கொண்டிருந்தார். அதேசமயம் தொழில் தொடங்குவதற்கான பொருளாதாரம், இடவசதிகள், நுட்பங்கள் போன்றவற்றையெல்லாம் தெரிந்து வைத்திருந்தார். வேலை போனதும் தொழில் தொடங்கினார்.

வேறொரு நண்பர் ‘நல்லா ஃபில்டர் காபி போடத் தெரியும்ண்ணா’ என்று ஒரு நாள் பேசினார். அவருக்குத் தனியாகத் தொழில் தொடங்க ஆர்வம். நல்ல தொழில்தான். ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் என நினைக்கிறேன்- கிருஷ்ணகிரி அடையார் ஆனந்தபவனை இரவு பதினொரு மணிக்கு மூடிவிடுவார்கள். அதன் பிறகு வண்டியில் தேநீர் விற்பார் ஒரு மனிதர். அவருடைய தொழிலே அதுதான். இரவுகளில் மட்டும்தான் விற்பனை. தேநீர் தீரும் போது மனைவிக்கு அழைத்துச் சொன்னால் அவர் இன்னமும் நூறு தேநீர் தயார் செய்து வைத்துவிடுவார். இவர் சென்று எடுத்து வருவார். ஆனால் அவருடைய வாழ்க்கைத் தரம் வேறு. பெங்களூரிலும் சென்னையிலும் நல்ல வேலையில் இருந்தவர் அந்தளவுக்கு இறங்கி அடிக்க வாய்ப்பில்லை. ஆனால் வேறு சில சூட்சமங்களைச் சொன்னார். அதையெல்லாம் களத்தில் செயல்படுத்துவதற்கான பூர்வாங்க தயாரிப்புகளைச் செய்ய வேண்டும். வேலை இருக்கும் வரைக்கும் வேலை;  நேரமும் சூழலும் ஒத்து வரும் போது தொழிலைத் தொடங்கிவிடலாம். 

வேலையில் இருப்பவர்கள் எல்லோருமே அடுத்து தொழில் தொடங்கத்தான் வேண்டும் என்றில்லை. வேறு வேலைக்குக் கூட மாறிவிடலாம். நிலைமை சரியில்லை என்று தெரியும் போதே நம்முடைய பலம்/பலவீனங்களை எடைப்போட்டு வேறு வேலையைத் தேடத் தொடங்குவதுதான் நல்லது. பல ஆண்டுகளாகத் தேடியும் வேறு நல்ல வேலை கிடைக்காமல் புலம்புகிறவர்கள் இருக்கிறார்கள். ‘ஏன் வேலை கிடைக்கவில்லை’ என்று யோசித்து அதற்கான காரணங்களைக் களைந்து கொண்டேயிருக்க வேண்டும். அதைச் செய்கிறவர்கள் வெகு சொற்பம். ‘இதனால்தான் வேலை கிடைக்கவில்லை’ என்று தெரிந்தாலும் அதை நிவர்த்தி செய்யத் துணிகிறவர்கள் வெகு வெகு சொற்பம். 

கல்லூரி முடித்த போது அல்லது முடிக்கும் தருணத்தில் நமக்குள் இருந்த ‘வேலை பிடித்துவிட வேண்டும்’ என்ற வெறியில் இருபது சதவீதம் கூட அனுபவம் கூடும் போது இருப்பதில்லை என்பதுதான் பெரும்பாலானவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினை. நிறைய கவனச் சிதறல்கள். பழைய வேகம் இருந்தால் புதிய வேலைக்குத் தயாராவது சாத்தியம்தான். சமீபகாலமாக பல நண்பர்கள் இது பற்றியே பேசுகிறார்கள். நிறைய உரையாடி, நிறைய எழுத வேண்டும் என நினைக்கிறேன். பொதுவாகவே நமக்கு சம்பளம் வந்து கொண்டிருக்கும் போது பெரிய அழுத்தம் இருக்காது. நன்றாக பேரம் பேசலாம். கடைசிக்கட்டத்தில் வெறித்தனமாகத் தேடினால் நேர்காணல்களில் எளிதாகக் கண்டறிந்துவிடுவார்கள். அவர்கள் சொல்லும் நிபந்தனைகளுக்கெல்லாம் ஒத்துப் போக வேண்டும். 

1 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//‘இதனால்தான் வேலை கிடைக்கவில்லை’ என்று தெரிந்தாலும் அதை நிவர்த்தி செய்யத் துணிகிறவர்கள் வெகு வெகு சொற்பம்.//
ம்