Oct 27, 2018

புன்னகை

வள்ளியப்பன் சில நாட்களுக்கு முன்பாக ஃபேஸ்புக்கில் செய்தி அனுப்பியிருந்தார். இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரைக்கும் பணம் அனுப்புவதாகவும் அதை பெண் குழந்தைகளுக்கான ஆடைகளுக்கு என செலவிட முடியுமா என்று கேட்டிருந்தார். இப்படியெல்லாம் கேட்டால் சரி என்று சொல்லிவிடுவேன். ஒரு விடுதி எண்ணத்தில் தோன்றுகிறது; விசாரித்துவிட்டுச் சொல்கிறேன் எனச் சொல்லியிருந்தேன். 

தக்கர் பாபா வித்யாலயா, ஜி.எஸ்.லட்சுமணய்யரால் தொடங்கப்பட்டது. இன்றைக்கும் ஹரிஜன் சேவா சங்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சற்றேறக்குறைய இருபது பள்ளிகள் இயங்குகின்றன. அவற்றில் மிகச் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளில் இதுவும் ஒன்று. 

விடுதியில் இருக்கும் பெரும்பாலான குழந்தைகள் பெற்றோர் இல்லாதவர்கள்; மலைவாழ் மக்கள்; தலித் என விளிம்பு நிலைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள். 

நிர்வாகத்தின் செயலர் ஆறுமுகம் அவர்களிடம் பேசினோம். மொத்தம் எழுபது பெண் குழந்தைகள் இருப்பதாகவும் அவர்களில் சிலருக்கு வேறொருவர் துணி எடுத்துக் கொடுப்பதாகச் சொல்லியிருப்பதாகச் சொன்னார். இருபத்தைந்தாயிரம் ரூபாய் தருவதாக இருந்தால் மீதமிருக்கும் அத்தனை பெண் குழந்தைகளுக்கும் ஆடை வாங்கிவிட முடியும் என்றார். விவரங்களை வள்ளியப்பனிடம் தெரிவித்திருந்தேன். அவருக்கு முழுமையான சம்மதம். தமது சகோதரி வள்ளியம்மையிடம் சொல்லி பணத்தை அனுப்பி வைக்கச் சொல்லியிருக்கிறார்.




நேற்று ஆசிரியர் அரசு தாமசும் நானும் விடுதிக்குச் சென்று குழந்தைகளின் வயது விவரங்களை வாங்கி, மம்மி டாடி துணிக்கடைக்காரரிடம் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலையைக் கொடுத்துவிட்டு வந்தோம். இன்று ஆடைகள் தயாராகிவிட்டன. நாளைக்கே கொடுத்துவிடலாம். யாராவது ஒரு பெரிய மனிதரை வைத்துக் கொடுத்துவிடலாம் என்பதால் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் இனியன்.அ.கோவிந்தராஜூ அவர்களை அழைத்திருக்கிறோம். என்னுடைய ஆதர்சம் அவர். நாளை மாலை நான்கு மணிக்கு தக்கர் பாபா பள்ளியில் குழந்தைகளுக்கு புத்தாடைகளை வழங்கிவிடலாம். எளிய நிகழ்வு. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்கான அழைப்பு இது. 

இருபத்தைந்தாயிரம் ரூபாய் எப்படி வந்தது என்பதுதான் முக்கியம். வள்ளியப்பனின் மகள் லட்சுமி வள்ளியப்பன் அமெரிக்காவில் எட்டாம் வகுப்பு மாணவி. தமது வகுப்புத் தோழிகளிடமும் உறவினர்களிடமும், வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கென பெண் குழந்தைகளுக்கு ஆடை வாங்கித் தருவதுதான் திட்டத்தின் நோக்கம் என ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறார். அவரது வேண்டுகோளை ஏற்று சேர்ந்த நன்கொடைதான் இந்த இருபத்தைந்தாயிரம் ரூபாயும். தமது மகளின் நன்கொடையை யாரிடம் கொடுப்பது என யோசித்த போது வள்ளியப்பனுக்கு எனது நினைவு வந்திருக்கிறது. வள்ளியப்பன் என்னிடம் பேசிய போது எனக்கு தக்கர்பாபா பள்ளியின் நினைவு வந்திருக்கிறது. ‘இது இன்னாருக்குச் சேர வேண்டியது’ என விதிக்கப்பட்டிருந்தால் அது அவர்களை அடைந்தே தீரும். லட்சுமியிடம் அளிக்கப்பட்ட தொகை இந்தக் குழந்தைகளை அடைந்திருக்கிறது.


இப்படி நிறையக் குழந்தைகள் இருக்கிறார்கள். இன்னொரு தமிழ் மாணவர் சிரியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறி அகதிகளாக வாழும் குழந்தைகளுக்கு பாடம் நடத்துகிறார். ‘இந்தியா வரும் போது சில பசங்களுக்கு கம்ப்யூட்டர் சொல்லித் தர விரும்புகிறேன்’என்று பேசினார். எல்லாச் செலவுகளையும் அவரது தந்தையே பார்த்துக் கொள்வதாகச் சொன்னார். இளம்பிஞ்சுகள்தான் ஆனால் தமது மண்ணை நினைத்துப் பார்க்கிறார்கள். அப்படி நினைத்துப் பார்க்க வைக்கும் பெற்றோருக்கும் நன்றியைச் சொல்ல வேண்டும். பிழைப்பைத் தாண்டி சமூகத்திற்குக் கொடுக்க என்னவோ இருக்கிறதல்லவா?

லட்சுமிக்கு தமிழ் வாசிக்கத் தெரியுமா என்று தெரியவில்லை. அவருக்குச் சொல்ல வேண்டிய செய்தி இதுதான். ‘நீங்கள் இந்த உதவியைச் செய்திருக்காவிட்டால் இந்த நாற்பத்து மூன்று பெண் குழந்தைகளுக்கும் நிச்சயமாக புத்தாடை கிடைத்திருக்காது. புத்தாடை கிடைக்கவில்லையென்றால் அவர்கள் குறைந்துவிடப் போவதில்லைதான். ஆனால் அவர்களின் முகங்களில் புன்னகையை வரவழைத்திருக்கிறீர்கள். அந்தப் புன்னகை விலை மதிப்பற்றது. தங்களின் வழியாக இந்தக் குழந்தைகளின் முகத்தில் புன்னகையைப் பார்க்கவிருக்கிறோம். பதினைந்து வயதுப் பெண்ணொருத்தி எங்கிருந்தோ இருந்து இந்த தேசத்தின் பெண்களை நினைத்துப் பார்ப்பது மகிழ்வாக உணரச் செய்கிறது. சிரம் தாழ்ந்த நன்றி- உங்களுக்கும், உங்களுக்கு உதவிய ஒவ்வொருவருக்கும்’.

7 எதிர் சப்தங்கள்:

Mahesh said...

ரொம்ப சந்தோஷமாக இருக்கு சார். உங்கலது ஆதர்சம்
இனியன்.அ.கோவிந்தராஜூ சார் என்பதை வாசித்தபோது.
அவரது கனடாநாட்டு சுற்று பயனம் பதிவுகள் அவரது எழுத்து பக்கம் என்னை ஈர்த்தது.

நேற்று அவரது கண்டேன் கனடா புத்தகமாக வெலியிட்டிருக்கிரார் என்பதை தெரிந்த போது ரெட்டிப்பு மகிழ்ச்சி.
விழாவில் பங்கு பெர ஆசைதான்.

ஆனால் முன்னதாக தெரிந்திருந்தால் வர முயர்ச்சித்திருக்கலாம் என்னவோ.

எனது வாழ்த்தை சாருக்கு தெரிவியுங்கள்.

***

வள்ளியப்பன் சார் மற்றும் லட்சுமி, இருவருக்கும் மன பூர்வ வாழ்த்துக்கள்.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

நீங்கள் இந்த உதவியைச் செய்திருக்காவிட்டால் இந்த நாற்பத்து மூன்று பெண் குழந்தைகளுக்கும் நிச்சயமாக புத்தாடை கிடைத்திருக்காது. புத்தாடை கிடைக்கவில்லையென்றால் அவர்கள் குறைந்துவிடப் போவதில்லைதான். ஆனால் அவர்களின் முகங்களில் புன்னகையை வரவழைத்திருக்கிறீர்கள். அந்தப் புன்னகை விலை மதிப்பற்றது. தங்களின் வழியாக இந்தக் குழந்தைகளின் முகத்தில் புன்னகையைப் பார்க்கவிருக்கிறோம். பதினைந்து வயதுப் பெண்ணொருத்தி எங்கிருந்தோ இருந்து இந்த தேசத்தின் பெண்களை நினைத்துப் பார்ப்பது மகிழ்வாக உணரச் செய்கிறது. சிரம் தாழ்ந்த நன்றி- உங்களுக்கும், உங்களுக்கு உதவிய ஒவ்வொருவருக்கும்’.
படிக்க படிக்க கண்ணீர் வந்து விட்டது. கொடையாளிகளும்,செயலாக்கம் செய்தவர்களும்,பயனாளிகளும் வாழ்க வளமுடன்

வெங்கி said...

அன்பும் வாழ்த்துகளும் மணி. லட்சுமிக்கும். ப்ரியங்கள் என் மகளைப் போன்ற லட்சுமிக்கு.

-வெங்கி

பழனிவேல் said...

அருமை ...

கொமுரு said...

அற்புதம், வாழ்த்துக்கள்

சேக்காளி said...

//பதினைந்து வயதுப் பெண்ணொருத்தி எங்கிருந்தோ இருந்து இந்த தேசத்தின் பெண்களை நினைத்துப் பார்ப்பது மகிழ்வாக உணரச் செய்கிறது. சிரம் தாழ்ந்த நன்றி- உங்களுக்கும், உங்களுக்கு உதவிய ஒவ்வொருவருக்கும்’.//

raki said...

dear sir
namasthe
i bow and salute to the intentions in ll the people involved
with love
radhakrishnan r hyd