Oct 24, 2018

அசாரூதீன்

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்திய பயிற்சி வகுப்பில்தான் அசாரூதினை முதலில் பார்த்தேன். ஓயாமல் சேட்டை செய்து கொண்டிருந்தான். எரிச்சல் வரும்படியான சேட்டை. ஆசிரியரிடம் சொன்ன போது ‘அவன் அப்படித்தான் சார்..ஆனால் படிக்கிற பையன்’ என்றார். ஒன்பதாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டுச் சுற்றிக் கொண்டிருந்தவன். அவனது குடும்பச் சூழல் அப்படி. பாட்டியின் பாதுகாப்பில்தான் இருந்தான். உள்ளூர் கிராம நிர்வாக அலுவலர் என்று நினைக்கிறேன் -அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்திருந்தார். அதன் பிறகு பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் தடையில்லாமல் வந்துவிட்டான்.

‘பத்தாவுதுல நல்ல மார்க்’ என்று சொல்லிவிட்டு அசாரிடம் ‘எத்தனை மார்க்டா நீ?’ என்றார்.

‘436’ என்றான். பத்தாம் வகுப்பில் என்னுடைய மதிப்பெண்ணும் அதுதான் என்பதால் மனதில் பதிந்து போனது. ‘குறும்பு பண்ணாம ஒழுங்கா படி’ என்றேன்.


தலைமையாசிரியர் சொன்னது சரிதான். பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அவன்தான் பள்ளியிலேயே முதலிடம். 1120 மதிப்பெண்கள். கட் ஆஃப் 196க்கு மேலாக இருந்தது.  தலைமையாசிரியர் அவனைப் படிக்க உதவும்படி ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அசாரூதினிடம் பேசிய போது அடுத்த என்ன படிப்பு என்று அவன் முடிவு செய்திருக்கவில்லை. நண்பர்கள் பலரிடமும் கருத்துக் கேட்டு அவனுக்கு கால்நடை மருத்துவப்படிப்பு சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தோம். ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு சேர்ந்தான்.

கடந்த ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினாறு மாணவர்களுக்கு ஒரு வருடமாகப் பயிற்சியளித்துக் கொண்டிருந்தோம். அந்த மாணவர்களில் அவனும் ஒருவன். ஐ.ஏ.எஸ் ஆகப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் அவனது மனம் உறுதியானதில்லை. ஒரு நாள் மிகத் தெளிவாக வருவான். ஆளே மாறிவிட்டது போலத் தோன்றும். அடுத்த வகுப்புக்கு வரும் போது ஏதோ அவனை நிலை கொள்ளாமல் அலைவுறச் செய்யும். தலை கூட வாரியிருக்கமாட்டான். Genetically something wrong. அப்படித்தான் எண்ணத் தோன்றியது. ஆனால் போகப் போக சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் தங்கப்பாண்டியன் அவனை கவனித்துக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் கல்லூரி பற்றி அசாருக்கு பெரிய சந்தோஷமிருந்தது. 

‘சார்..சூப்பரா இருக்கு’ என்பான். 

‘தங்கப்பாண்டியன் சார் பேசறாரா?’ என்று கேட்டால் ‘அவர்தான் சார் எல்லாமே சொல்லித் தர்றாரு’ என்று சொல்லியிருக்கிறான். 

கல்லூரியில் முதலாண்டில் தோல்வியுற்றிருந்தான். மீண்டும் முதலமாண்டிலேயே படிக்கச் சொல்லியிருந்தார்கள். அதில் அவன் மிகவும் சோர்ந்திருந்தான். அவனிடம் நேரில் பேச வேண்டும் எனத் தோன்றியது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக புன்செய்புளியம்பட்டி புத்தகக் கண்காட்சியில் என்னை பேச அழைத்திருந்தார்கள். அசாரை அங்கு வரச் சொல்லியிருந்தேன். கல்லூரிக்கான காசோலையைக் கொடுத்து அனுப்புவதுதான் திட்டம்.  ஆனால் பேசும் போது அவனை மேடையேற்றி பாராட்ட வேண்டும் என யோசித்து வைத்திருந்தேன். சோர்வுற்றிருக்கும் அவனுக்கு அதுவொரு உத்வேகமாக இருக்கக் கூடும் என்று தோன்றியது. ஆனால் அவன் அமைதியற்றவனாக இருந்தான். ‘சார் போறேன்’ என்றபடியே இருந்தான். நிறையக் காரணங்களைச் சொன்னான். மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்; நண்பரோடு வந்தேன் அவர் காத்திருக்கிறார் என்று வரிசையாக அடுக்கினான். அதற்குமேல் அவனை இருக்க வைக்க விருப்பமில்லை.

நிகழ்ச்சி தொடங்கியிருக்கவில்லை. மேடைக்குக் கீழாக நாற்காலி ஒன்றில் அமரச் சொல்லி ‘ஒரு வருஷம்தானே..போனா போகட்டும்...சரியா படிச்சுடு..நீ மேல வந்தா எல்லாருக்குமே நல்லது’ என்று பேசிவிட்டு அமைதியாக இருக்கச் சொன்னேன். ‘எதைப்பற்றியும் யோசிக்காமல் பத்து நிமிஷம் இரு’ என்று சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவனுக்கு அது சாத்தியமாகவில்லை.  காசோலையை எழுதி அங்கிருந்த பேராசிரியர் வெற்றிவேலிடம் கொடுத்துக் கொடுக்கச் சொன்னேன். கடந்த வாரம்தான் காசோலையைக் கல்லூரியில் சமர்ப்பித்திருப்பான் போலிருக்கிறது. அடுத்த ஓரிரண்டு நாட்களில் எலி மருந்தைக் குடித்துவிட்டான். நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்தவனின் உயிர் இன்று அதிகாலை பிரிந்துவிட்டது. 

அழைத்துச் சொன்னார்கள். ஒரு மாதிரியான பதற்றம் பற்றிக் கொண்டது. 

ஒருவன் தற்கொலை செய்து கொள்ளும் போது ‘சாவட்டும் விடுங்க...அவனேதானே செத்தான்’ என்று பேசுவதுதான் பெருவாரியானவர்களின் மனநிலை. யாருமே மாதக்கணக்கில் திட்டமிட்டுச் சாவதில்லை. அந்தக் கணம். அதில் முடிவெடுத்துவிடுகிறார்கள். தனது இரண்டு குழந்தைகளையும் நிலத் தொட்டியில் போட்டுக் கொன்றுவிட்டு தன் மீது தீ பற்ற வைத்துக் கொண்ட பெண் மரண வாக்குமூலத்தின் போது ‘தெரியாமல் செஞ்சுட்டேன்..மன்னிச்சுடுங்க’ என்று சொல்லியதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். மரணப்படுக்கையில் ‘என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கெஞ்சுகிறவர்கள்தான் அதிகம். மரணம் என்பது கணச் செயல். அதை நோக்கிய மனச்சாய்வு ஒரு மனிதனுக்கு வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள குடும்பமும் சமூகமும்தான் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டுமே அவனுக்கு எதிராக இருக்கும் போது அவனையும் மீறி முடிவெடுத்துவிடுகிறான். அதன் பிறகு ‘அவன் சாவட்டும்..தப்பில்லை’ என்று பேசுவது அவன் மீதும், அவன் உடல் மீதும், அவன் மரணத்தின் மீதும் நாம் செலுத்துகிற வன்முறைதான்.

ஒருவன் இறந்துவிட்டால் வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு அது ஒரு தனி மனித இழப்பு மட்டும்தான். ஆனால் அவன் குடும்பத்திற்கும், அவனது தலைமுறைக்கும், அவனை நம்பியிர்ந்தவர்களுக்கு அது பெரும் கனவின் சிதைவு. அசாரூதீன் வென்றிருந்தால் அவனது தலைமுறை வென்றிருக்கும். அக்கம்பக்கத்தில் பல மாணவர்களுக்கு ரோல்மாடல் ஆகியிருப்பான். அப்படியான கனவுகளில்தான் நானுமிருந்தேன். சிதறடித்துவிட்டான். 

அவனது ஆன்மா அமைதி கொள்ளட்டும். 

7 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

hi.....i was verysad after reading ur article..may Azruddin's soul rest in peace.

Unknown said...

ஆன்மா அமைதி கொள்ளட்டும்.

Murugan R.D. said...

இன்றைய காலகட்டத்துக்கு இதுபோன்ற இளைஞர்களுக்கு கவுன்சிலிங்க அவசியம் என்றே கருதுகிறேன்,
அவர்கள் கல்வி கற்க செல்லும் இடம், வேலை பார்க்க செல்லும் இடங்களில் உள்ள சூழலையும், அங்கிருப்பவர்களையும் சமாளிக்க கூடிய அல்லது அனுசரித்து செல்லக்கூடிய ஒரு மனவலிமையை முதலிலேயே அவர்களுக்கு ஏற்படுத்திவிடுவது நல்லது,, இப்பையனை போன்ற சூழலில் இருந்து மேலேறி வந்தவர்கள்தான் பெரும்பாலும் இன்று ‌நல்லநிலைமையில், வேலையில், பொருளாதாரத்தில், சமூக அந்தஸ்தோடு இருக்கிறார்கள் என்பது உண்மை,, அவர்கள் காலம் வேறு,,, அந்தக்காலத்தில் கிட்டதட்ட எல்லோரும் பொருளாதார சூழலில் பின்தங்கியவர்களாக இருந்தவர்கள் என்பதால் அவர்களுடன் பயணிப்பது மனஉளைச்சலையோ, ஏக்கத்தையோ, தாழ்வுமனப்பான்மையையோ ஏற்படுத்தியதில்லை,, தவிர வீட்டிலும், பள்ளிகளில் சொல்லிதரப்படும் நல்லொழுக்கங்கள், அறிவுரைகள் , நண்பர்களுடன் பழகி பேசி அரட்டையடித்து, மகிழ்ந்து வாழக்கூடிய சூழல் இருந்தது,

இப்போது நல்லொழுக்கம், அறிவுரைகள் பள்ளிகளிலும் கிடைப்பதில்லை, டிவி, போன் இருப்பதால் பெற்றோர்களிடமிருந்து அரவணைப்பும் கிடைப்பதில்லை, நட்புகளுடன் நேரம் செலவழிக்கவும் வாய்ப்பு இருப்பதில்லை என்பதால் எல்லா இளைஞர்களும் தனிமைப்பட்டே வாழ்கின்றனர்,, அதில் அசாருதீன் போன்ற மாணவர்களுக்கு பெற்றோர், பணம், போன்றவவைகள் அமையாததால் அவன் மனதின் சமநிலையை குலைந்திருக்கிறது என்றே நினைக்கிறேன்,,

ஏற்கனவே ஒரு மாணவனை பற்றி குறிப்பிடும் போது முதலில் அச்சூழலை அவன் எதிர்கொள்ள கவுன்சிலிங்க கொடுங்கன்னு ஒரு முறை கருத்திட்டிருந்தேன், அதே தான் இப்பவும் சொல்கிறேன்,, இப்படி ஆரம்பத்தில் கண்டறியப்படும் மாணவர்களுக்கு உடனே கவுன்சிலிங் கொடுங்க,, பிறகு தோழமையோடு தனியாக அவனை அமர வைத்து தன்னம்பிக்கை கொடுக்கும் விதமாக பேசுங்கள்,,,மேடையில் பேசுகிற தன்னம்பிக்கை வார்த்தைகள், பேச்சுகள் எல்லாம் சராசரி மாணவர்களை சென்றடைவதே கடினம், எனவே நீங்கள் தேர்நதெடுக்கும் மாணவர்களுக்கு அவனுக்கு இயல்பான சூழலில் அமரவைத்து பேசி தன்னம்பிக்கை கொடுங்கள்,, அவர்களுடன் அவர்களின் நண்பர்களுக்கும் அனுமதி கொடுத்தால் அவன் கொஞ்சம் ரிலாக்சான மனநிலையில் உங்களின் அறிவுரைகளை கவனமாக கேட்டு மனதில் ஏற்றிக்கொள்வான்,சேக்காளி said...

//அதன் பிறகு ‘அவன் சாவட்டும்..தப்பில்லை’ என்று பேசுவது அவன் மீதும், அவன் உடல் மீதும், அவன் மரணத்தின் மீதும் நாம் செலுத்துகிற வன்முறைதான்//
நேற்றைய "சலனம்" பதிவிற்கு நான் எழுதிய பின்னூட்டம் உங்கள் பார்வையில் இது போன்றதொரு செயல் தான்.
ஆனால் நடந்த சம்பவங்களின் பிண்ணனியை வைத்து தான் அதை எழுதியிருந்தேன்.
ஒரு பெண் தன் பதின்ம வயதில் இரு தற்கொலை முயற்சிகளில் தோல்வியுற்று உயிர் பிழைத்து திருமணமாகி கருவுற்றிருந்த வேளையில் மீண்டும் தற்கொலைக்கு முயன்று வெற்றியும் பெற்று விடுகிறாள்.
இப்போது அவளை சுற்றியிருந்தவர்கள் மனநிலை, அதனால் அவர்கள் வாழ்வில் தடைபட்ட முன்னேற்றங்கள் போன்றவற்றை பார்த்தே அப்படி எழுதியிருந்தேன்.
அசார் இறந்து விடுவான் என்று எண்ணவேயில்லை. அவன் எண்ணப்படி ஏதோ செய்து கொள்ளட்டும் என்றே நினைத்திருந்தேன்.
அவனுக்கு கிடைத்த "உங்களின் உதவி" கிடைக்காத மற்றவர்களை பற்றி நினைத்து பார்த்திருந்தானானால் தற்கொலை முடிவிற்கு சென்றிருக்க மாட்டான்.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

கோவையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பணி செய்த போது, எனது இருக்கைக்கு அருகில் எப்போதும் இருக்கும் ஒரு ஸ்டூலில் அமர வைத்து மணிக்கணக்கில் ஆறுதல் சொல்லி எத்தனையோ மாணவ,மாணவிகளை இறுக்கி த்தில் இருந்து மீட்டு வந்தது நினைவு கூர்ந்து வாய்ப்பளித்த இறையருளை நினைந்து நன்றி கூறுகிறேன். கொடுமையான, இங்கு வெளிப்படையாக பேச முடியாத எவ்வளவோ காரணங்கள். கற்பனை செய்து கொள்ள கூட முடியாது.. என்ன கொடுமை. மன அழுத்தத்தில் இருக்கும் குழந்தைகளை முதலில் அதிலிருந்து மீட்டு நம் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதே பெரிய செயல். அந்த நம்பிக்கை மாணவ சமுதாயத்தில் பரவிய பிறகு தானாகவே வர ஆரம்பித்து விட்டார்கள். முதலாண்டு முதல் இறுதி ஆண்டு வரை இறையருளின் துணை கொண்டு இவ்வாறு செய்ய முடிந்தது. முதலில் இரகசியம் காக்கப்படும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் குறைந்த அளவு ஒரு ஆசிரியரையாவது இவ்வாறு அறிவுரையும் ஆறுதலும் கொடுப்பதற்கு தனிப்பயிற்சி கொடுப்பது நலம் பயக்கும்.அஜாருதீன் இறைநிலையில் கலந்து அமைதி பெறட்டும் என வேண்டிக் கொள்வோம்.. வாழ்க வளமுடன்

Nandha said...

RIP Azhar.. really feeling bad to hear about this.

radhakrishnan said...

மணி,
அசாரின் முடிவிற்கு என்ன காரணமாக இருக்கும் என்று அனுமானிக்க முடியவில்லையா?மனம் பதறுகிறதே. உங்கள் முயற்சி விழலுக்கிறைத்த
நீராகப் போய்விட்டதே. மிகவும் துரதிஷ்டவசமான கோர முடிவு.